வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 35. மே 24, 1987. நான் உன்னோடு இருக்கிறேன்; உமக்கு நான் ஊழியம் செய்ய வேண்டுமென விரும்புகிறீரா? குறிப்பு: கடவுள் இதைத்தான் என்னிடம் கேட்டிருந்தார் என்பதால் தான் நான் இப்படிக் கேட்டேன். நான் பலவீனத்தாலும், அச்சத்தாலும் அவரை எழுத விடாமல் தடுத்தேன். குறிப்பு: மே 23, 1987ன் செய்தியைக் காண்க. விரும்புகிறேன், நான் மிக அதிகமாக அதை விரும்புகிறேன்; வசுலா, வா, எப்படி, எங்கே நீ எனக்கு ஊழியம் செய்ய முடியும் என்று நான் உனக்குக் காட்டுவேன்; நான் உனக்குக் கற்பித்துள்ள எல்லாவற்றையும் நினைவு கூர்வாய்; என் ஆன்மப் புலன்கள் முழு எச்சரிக்கையோடு இருக்கும்படியாகவும், நான் அறிவு பெற்றவளாய் இருப்பதன் மூலம், அவர் சொல்வதைக் கேட்கவும், இன்னும் அதிகமாக அவரை உணரவும் என்னால் இயலும்படியாகவும் இந்தப் போதனைகள், காட்சித் தியான போதனைகள், எனக்குத் தரப்பட்டன. என் சமாதானத்தைக் கொண்டிரு; என் குரலைக் கேள்; நீர் சொல்வதைத் தெள்ளத் தெளிவாகக் கேட்க என்னால் இயல வேண்டுமென நான் விரும்புகிறேன்.... வசுலா, என் இருதயம் தன்னுள் கொண்டுள்ள எல்லாவற்றையும், என் இருதயம் ஆசிக்கிற அனைத்தையும் எழுதப் போதுமான அளவுக்கு நான் பேசுவதை நீ நன்றாகக் கேட்பாய்; நேசமே, எனக்கு ஊழியம் செய்ய உன்னால் இயலும்படி உன்னை விடுவித்துக் கொண்டு எனக்குப் பணி செய்; "சுதந்திரமாயிருத்தல்" என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா, வசுலா? நான் உனக்குச் சொல்வேன், நம்பிக்கையுள்ளவளாக இரு; அவர் எனக்குக் கற்பித்தது உதவாது என்றும், நான் அவரைக் கைவிட்டு விடுவேன் என்றும் நான் உணர்ந்தேன். விடுவித்தல் என்பது உலக நாட்டங்களிலிருந்து உன் ஆத்துமத்தை விலக்குதல்; உன் ஆன்மாவை விடுவித்துக் கொண்டு என்னையும், என் வேலைகளையும் நேசித்தல்; இம்முறையில் எனக்கு ஊழியம் செய்; உன்னை விடுவித்துக் கொள்; எனக்கு அதில் சிரமங்கள் இருக்கும், என் ஆண்டவரே! லோ; லோ என்றால் இல்லை என்பது பொருள். ஆம், என் ஆண்டவரே, என்னால் சிரமங்களைக் காண முடிகிறது. லோ, லோ, எனக்கு அருகிலேயே தங்கியிரு; நான் உம்மை ஏமாற்றிவிடப் போகிறேன், உம் ஆசைகளை நிறைவேற்றுவதில் தோற்றுவிடப் போகிறேன் என்று பயப்படுகிறேன்; பயப்படாதே, சகோதரி; அன்பே, என்னை நேசி; நான் அவரை உணர்ந்து நேசித்தேன். நேசத்திற்கு நேசம்; இப்போது போல் என்னை நேசி; இப்போது போல வேலை செய், எனக்கு ஊழியம் செய்; நீ இருக்கிறபடியே இரு; அன்பு மிக அதிகம் தேவைப்படுகிற இடத்தில் எனக்கு ஊழியம் செய்யக்கூடிய வேலையாட்கள் எனக்குத் தேவைப்படுகிறார்கள்; ஆகவே, கடுமையாக வேலை செய், ஏனெனில் நீ எங்கிருந்தாலும், தீமைக்கும், அவிசுவாசிகளுக்கும் மத்தியில் இருக்கிறாய்; நீ பாவத்தின் அருவருக்கத்தக்க ஆழங்களில் இருக்கிறாய்; இருள் படர்ந்திருக்கும் இடத்திலிருந்து நீ உன் கடவுளுக்கு ஊழியம் செய்யப் போகிறாய்; உனக்கு ஓய்வு இருக்காது, எங்கே எல்லா நன்மையும் தீமையாக உரு சிதைந்திருக்கிறதோ, அங்கே நீ எனக்கு ஊழியம் செய்வாய், ஆம், இழிநிலைக்கு மத்தியிலும், தீமைக்கும், உலகத்தின் அக்கிரமங்களுக்கும் மத்தியிலும் எனக்கு ஊழியம் செய்; கடவுளற்ற மனிதர்களுக்கு மத்தியிலும், என்னைப் பரிகசிக்கிற மக்களுக்கு மத்தியிலும், என் இருதயத்தைக் குத்தி துளைப்பவர்களுக்கு மத்தியிலும் எனக்கு ஊழியம் செய்; என்னைக் கசையால் அடிப்பவர்களுக்கு மத்தியிலும், என்னை மரணத் தீர்வை இடுபவர்களுக்கு மத்தியிலும் எனக்கு ஊழியம் செய்; என்னை மீண்டும் சிலுவையில் அறைபவர்களுக்கு மத்தியிலும், என் மீது உமிழ்பவர்களுக்கு மத்தியிலும் எனக்கு ஊழியம் செய்; ஓ, வசுலா, நான் எவ்வளவு துன்புறுகிறேன்! வந்து, எனக்கு ஆறுதல் தா; என் தேவனே, வாரும்! உம்மை நேசிப்பவர்களுக்கு மத்தியில் வாரும், குறைந்தபட்சம் சற்று நேரத்திற்காவது அவர்களிடம் வாரும், அங்கே நீர் நேசிக்கப்படுகிறீர். அவர்களது இதயத்தில் இளைப்பாறும், மறந்துவிடும்; குறைந்தபட்சம் சற்று நேரத்திற்காவது உம்மால் மறந்திருக்க முடியாதா? இயேசு மிகவும் வேதனைப்படுவதாகத் தோன்றினார்!! வசுலா, மறப்பதா? என்னால் எப்படி மறக்க முடியும்? அவர்கள் மீண்டும் என்னைச் சிலுவையில் அறையும்போது, எப்படி மறக்க முடியும்? குறிப்பு: நான் எழுத முடியாத வேகத்தில் அவர் செய்தியைச் சொல்லிக்கொண்டே சென்றார். என் ஐந்து காயங்களுக்குள்ளும் ஊடுருவிச் செல்ல விரும்புகிறவர்களுக்காக அவை திறந்து விடப்பட்டுள்ளன; இயேசு என் மீது சாய்ந்து கொண்டார். நான் வேதனைப்பட்டதாக உணர்ந்தேன்; அவர் ஆறுதலற்றவராகவும், தேய்ந்து போனவராகவும் தோன்றினார். வசுலா, வா, நீ என் சிறிய மலராக இருக்கிறாய், என் முட்களுக்குப் பதிலாக வைக்கும்படி உன்னிடமிருந்து வழவழப்பான மென்மையான மலரிதல்கள் எனக்கு வேண்டும்; இயேசுவே, உம்மை நேசிப்பவர்கள் உம் சுமையை இறக்கி வைப்பார்களாக, உம்மை நேசிப்பவர்கள் உமக்கு இளைப்பாற்றித் தருவார்களாக. அவர்கள் உமக்கு பதிலாக மீண்டும் சிலுவையில் அறையப்பட தங்களைக் கையளிப்பார்களாக. இப்படிப்பட்ட கடும் வேதனையை எப்படி ஆற்றித் தேற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. அன்பே, என்னை நேசிப்பவர்கள் என்னோடு கடுமையாக உழைக்கிறார்கள், என்னோடு துன்பப்படுகிறார்கள்; அவர்கள் என் சிலுவையை பகிர்ந்து கொள்கிறார்கள், அவர்கள் என்னை இளைப்பாற்றுகிறார்கள், ஆனாலும், அவர்கள் மிகச் சிலர் மட்டுமே; என்னோடு தங்களை இணைத்துக் கொள்ளவும், என் துன்பங்களைத் தாங்கவும் எனக்கு இன்னும் அதிக ஆத்துமங்கள் தேவைப்படுகிறார்கள்; பூவே, என்னை நேசி, ஒருபோதும் என்னை மறுக்காதே; இயேசுவா? நான்தான்; உம்மை இன்னும் அதிகமாக நேசிக்க எனக்கு நீர் உதவுவீரா? உதவுவேன், அன்பே; நான் பேச்சற்றவளாக உணர்கிறேன். என்னால் என்ன சொல்ல முடியும்; இவ்வளவு நொந்து போனவராக அவரைக் காண்பது எவ்வளவு வேதனையாக இருந்தது என்பதை ஒருவன் அறிவானென்றால்! அவர் மீண்டும் ஒருமுறை மரித்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. காயங்களால் மரித்துக் கொண்டிருக்கிற ஒருவரைத் தேற்ற ஒருவனால் எப்படி முடியும்? மேலும் அவரிடம் என்ன சொல்வது? எல்லாம் சரியாகிவிடும் என்றா? அதுவும், அவர் மரண காயப்பட்டிருக்கிறார் என்று ஒருவன் அறியும்போது? மே 25, 1987. நான் எந்தவித சந்தேகமும் அவநம்பிக்கையும் இல்லாமல் கடவுளை அணுகினால், கடவுளைச் சந்திக்க, உணர, பார்க்க, அவரை எழுத அனுமதிக்க, அவர் எனக்குத் தந்த இந்த வரப்பிரசாதத்தால் எவ்வளவு எளிதாக உள்ளது என்பதை நான் உணர்ந்து கொள்ளத் தொடங்குகிறேன். முழுமையான விசுவாசம் எல்லாப் பேய்களையும் பறந்தோடச் செய்கிறது. அவை நிலைகுலைந்து, சக்தியற்றவையாக உணர்கின்றன. அவை பயப்படுகின்றன, மிகுந்த எரிச்சல் படுகின்றன! நான் தயக்கத்தோடும் சந்தேகத்தோடும் வரும்போது, அவை பலமுள்ளவை ஆகின்றன. தங்கள் அவமானங்களை நான் எழுத விடாமல், அவை என்னைத் தாக்குகின்றன. முழுமையான விசுவாசமும், கடவுளை வரவேற்கிற ஓர் இதயமும் மலைகளை நகர்த்த வல்லவை! ஒரு மின்சார உணர்வைப் போல் நான் அவரை என்னில் உணர்கிறேன்; இது அற்புதமானது, கடவுளையோ, அவருடைய விரல் என் மீது இருக்கும் இந்த கணத்தையோ விட்டு விலக நான் ஒருபோதும் விரும்பவில்லை.... அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்! என்னை நேசி, என்னை நேசி, என்னை உணர்ந்து பார், உன்மீது எனக்குள்ள தனியாத நேசத்தை உணர்ந்து பார்; உன் அன்பிற்காக நான் தாகமாய் இருக்கிறேன்; வசுலா, உன்னிடமிருந்து எனக்கு அதிக நேசம் தேவைப்படுகிறது; என் இருதயத் துடிப்புகளைக் கேள்; இயேசு பாசம் நிறைந்தவராக இருந்தார். நான் போட்டியாளர்களைத் தாங்கிக் கொள்வதில்லை, கொஞ்சமும் தாங்கிக் கொள்வதில்லை; போட்டியாளர்களை நான் கண்டாலோ, அல்லது சந்தித்தாலோ, அவர்களை நான் சூறையாடுவேன்; எதுவும் என் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது, நான் எஜமானராகவே நிலைத்திருப்பேன்; என்னை மகிமைப்படுத்தியபடி புறப்படு; இன்றிரவு நான் என் சமாதானம் மற்றும் நேசத்தின் பரலோக வேலைகளைக் கொண்டு உன்னைச் சுத்திகரிப்பேன்; குறிப்பு: ஒரு பரம இரகசிய முறையில் என்ற பொருளில் இயேசு இப்படிக் கூறுகிறார். ஜெபி, நேசமே, ஆசீர்வதிக்கப்பட்டவளே; நான் உனக்குத் தந்த அடையாளத்தை வரைவதன் மூலம் என் திருச்சபையை ஒன்றுபடுத்து, இப்போது வரை; ஆசீர்வதிக்கப்பட்ட அடையாளத்தைக் கொண்டு, ஆண்டவராகிய நான் என்னிடம் வரும் வழியை உனக்குக் காட்டுவேன்; விசுவாசி, விசுவாசி, விசுவாசி; செழித்து வளரு, மற்றவர்களுக்கு உதவு, நேசத்தைத் திரும்பக் கொண்டு வரும்படி செழித்து வளர்வாய், சமாதானத்தைக் கொண்டு வரும்படி செழித்து வளர்வாய், குறிப்பு: நான் மிகுந்த மனவேதனைப்பட்டேன். நான் உன்னை நேசிக்கிறேன், வசுலா; வசுலா, என் நேசமே, துக்கப்படாதே; ஆசீர்வதிக்கப்பட்டவளே, உன் பிதாவும், உன் மணவாளரும், உன் தேவனுமாகிய என்னிடம் வா, நான் உன்னை எப்போதாகிலும் கைவிடுவேனா? நேசத்தால் உன்னை நான் எடுத்துக் கொள்வேன், உயர்ந்ததும், தணிக்கப்பட முடியாததுமாகிய என் அன்பால் நான் உன்னை விடுவிப்பேன்; என்னோடு ஜெபி, "பரலோகப் பிதாவே, நான் உம்மை மகிமைப்படுத்துவேனாக, உம் பிள்ளைகளைத் தீமையிலிருந்து இரட்சித்துக் கொள்ளும், அவர்கள் உம் ஒளியில் இருப்பார்களாக, அவர்களது இருதயங்கள் திறந்திருப்பனவாக, அவை உம் இரக்கத்தைக் கொண்டு உம்மைப் பெற்றுக் கொள்வனவாக, ஆமென்;" வசுலா, என் பிரசன்னத்தை நீ முழுமையாக உணர்ந்து என் காயங்களை முத்தமிடுவாயா? ஆண்டவராகிய இயேசுவே, முத்தமிடுவேன். நான் அவரைப் பகுத்துணர்ந்தேன், முழு மகிமையில் அவரைக் கண்டேன். என் ஆன்மாவின் கண்களைக் கொண்டு அவரைக் கண்டு, இவர் இந்த முறை அழகாகவும், தம் சிரசில் ஓர் அழகிய கிரீடத்தோடும் இருப்பதை நான் கண்டேன். அவர் என்னிடம் ஓர் அரசரைப் போல வந்தார். ஆண்டவரே, எனக்கு உம் வலக் கரத்தைத் தாரும். நான் அவருடைய வலக்கரத்தை முத்தமிட்டேன். நான் உன்னை நேசிக்கிறேன்; நான் அவருடைய திருக்கரங்களையும், திருப்பாதங்களையும், திருவிலாக் காயத்தையும் முத்தமிட்டேன். நான் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே. உன்னை வழிநடத்துவது எனக்கு ஒர் இன்பமாக இருந்தது, நான் உணர்ந்தேன்... எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னோடு வா, நான் உனக்கு ஒன்றைக் காட்டுவேன்; பற்றி எரிந்து கொண்டிருந்த அவருடைய திருமார்பினின்று தீப்பொறிகள் வெளிப்படுவதை நான் கண்டேன். என் இருதயத்திலிருந்து புறப்பட்டு, உன் இதயத்தைத் தொடும் ஒவ்வொரு தீப்பொறியும், உன் இதயத்தைப் பற்றி எரியச் செய்து, அதைச் சுட்டெரிக்கும்; என் தீப்பொறி உன்னை தூண்டி எழுப்புகிறது; என் இருதயத்திலிருந்து பெற்றுக்கொள்; ஒருநாள் நான் உன் இதயத்தை முழுவதும் பற்றி எரியச் செய்வேன், என் தீச்சுவாலை உன் இதயத்தைச் சூழ்ந்து, அதை விழுங்கிவிட நான் அனுமதிப்பேன்; ஒரே ஒரு தீப்பொறியாலேயே கூட நான் இப்படி உணர்கிறேன் என்றால், உம் தீச்சுவாலை என் இதயத்தைச் சூழ்ந்து கொள்ளும்போது, எனக்கு என்ன ஆகும்? இயேசு என்னை வெற்றி கொண்டு விட்டதாக அறிந்து மகிழ்ச்சி அடைவதைப் போல இருந்தது. ஆம், உன் நேசத்தின் மீது வெற்றி கொண்டு, அதை நான் அடைந்து கொண்டதால், மகிழ்ச்சி அடைகிறேன்; என் தீச்சுவாலை உன் இதயத்தை முழுமையாகச் சூழ்ந்து கொள்ளும்போது, நீ இனி ஒருபோதும் என்னிடமிருந்து பிரிக்கப்பட மாட்டாய்; நீ மோட்சத்தில் என் மணவாளியாக இருப்பாய்; நான் எனக்காகவே உன்னைப் படைத்திருக்கிறேன்; அப்படியானால் நான் ஏன் இங்கிருக்கிறேன்? எனக்குப் புரியவில்லை. இல்லை, உன்னால் புரிந்து கொள்ள முடியாது, வசுலா, ஆனால் ஒருநாள் நீ புரிந்து கொள்வாய்; நான் உன்னோடு இருக்கையில், நீ உன் கைக்கடியாரத்தைப் பார்க்கும்போது, நேரம் எனக்குப் போட்டியாக இருக்கிறது; நான் கைக்கடிகாரத்தைப் பார்த்ததால், அவரை நோகச் செய்திருந்தேன். வா மகளே, என் கரத்தைப் பிடித்துக்கொள், நாம் போவோம்; வா, நமக்கு நிறைய வேலை இருக்கிறது; இந்த வேலையா அல்லது வேறு வீட்டு வேலையா? இரண்டும் தான்; மகளே, நீ போகும் இடமெல்லாம், நான் இருக்கிறேன்; குறிப்பு: முன் ஒருபோதும் இல்லாதபடி நான் கடவுளுக்காக ஏங்கினேன். கடவுளின் மீது தாகம் கொண்டேன். பலிபீடமே, என் தீச்சுவாலை என்றென்றும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்; என்னில் அழிந்து போ; மே 26, 1987. இயேசுவே, "இயேசுவைச் சித்தரிக்கும் எந்த படங்களிலும் அவரை மகிழ்ச்சியானவராகவோ, நன்கு புன்னகைத்துக் கொண்டிருப்பவராகவோ நாம் ஒருபோதும் காண்பதில்லையே. ஏன்?" என்று என் தோழி ஒருத்தி கூறினார். நான் உம்மை பல தடவைகள் மகிழ்ச்சியானவராகப் பார்த்திருக்கிறேன் என்று நான் அவளிடம் சொன்னேன். நீர் எனக்குத் தந்த அந்த அகன்ற புன்னகையை என்னால் மறக்க முடியாது. அன்று காலையில் உன் முகம் முழுவதும் புன்னகைத்துக் கொண்டிருந்தது; நீர் என் இதயத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்ததாக என்னிடம் சொன்னீர். வசுலா, மாசற்ற ஆன்மாக்களில் நான் புன்னகைக்கிறேன்; தாழ்மையான மனிதர்களில் நான் புன்னகைக்கிறேன்; இன்பம் காண்கிறேன்; பரிசுத்த மனிதர்களில் நான் இன்பம் காண்கிறேன்; இயேசுவே, என் தேவனே, உடல் ரீதியான நிலையில் நான் ஒருபோதும் கண்டிராதவரும், சந்தித்திராதவருமான ஒருவரை நான் ஏன் நேசிக்கிறேன், எப்படி, ஏன் நான் உம்மை நேசிக்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. ஆ வசுலா! என்னை நேசிப்பது.... என்னிடமிருந்து வரும் எல்லாமே அன்பாக இருக்கிறது; என்னை நேசிப்பதற்காகவே நான் உன்னைப் படைத்தேன், அன்பினால் நான் உன்னைப் படைத்தேன், உன் ஆன்மா அன்பிற்காகத் தாகம் கொள்கிறது; ஆனால் இந்த வரப்பிரசாதத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்பவர்கள் எவ்வளவு சிறிய எண்ணிக்கையினராக இருக்கிறார்கள்; மே 27, 1987. உம்முடைய முழு வழிகாட்டுதலும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. ஆண்டவரே, இது ஒரு சிக்கலான மொழியாக இல்லை. இறுமாப்பு என்னைச் சோர்வடையச் செய்கிறது; என்னைப் போலவே தாழ்ச்சியாகவும், எளிமையாகவும், அடக்கமாகவும் இருக்கக் கற்றுக்கொள். வசுலா, நான் உன் தந்தையாய் இருக்க வேண்டுமென நீ விரும்பினால், நான் உன்னை என் குழந்தையைப் போல் நடத்துவேன்; நான் உன் மணவாளராக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், என் மணவாளியாக நான் உன்னை நடத்துவேன்; நீ எனக்கு எதிராக கலகம் செய்தால், நீதிபதியாக நடந்து கொள்வேன்; நான் உன் இரட்சகராக இருக்கிறேன்; எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஆதரி; ஒருபோதும் என்னை மறுதலிக்காதே; அடிக்கடி வந்து என்னை உண்டு பருகு; நான் உன்னில் இன்பம் காண்கிறேன்; மே 28, 1987. ஆண்டவரே, உன் வழியாக நான் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக நீர் சொன்னீரே? வசுலா, ஆம், என் பலிப்பொருளாக இரு; என் தேவனே, பலி என்பதன் பொருள் எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவே இல்லை. அதன் பொருள் மாறலாம், ஆனால் அது ஒரு விதத் துன்பத்தை உள்ளடக்கி இருக்கக்கூடும் என்பது புரிகிறது. நான் ஒரு பலியாக இருக்க வேண்டுமென நீர் கேட்பதால், அப்படியே என்னை இருக்கவிடும். ஆயினும், கடவுளுக்கு ஒரு பலியாக இருப்பதற்கு, அவரை மகிமைப்படுத்த, ஒருவன் கொஞ்சமாவது மதிப்புள்ளவனாக இருக்க வேண்டும். நானோ ஒரு தூசித் துகளாக இருக்கிறேன் என்றும், நான்தான் அனைவரிலும் அதிக இழிந்தவள் என்றும் நான் அறிந்திருப்பதால், நான் எப்படி நல்ல பலியாக இருப்பேன். ஆகவே, கடவுளுக்கான ஒரு பலியாக இருப்பதற்கு கூட ஒருவன் அவரைக் கனப்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், அந்தப் பலி நிகழ்ந்து, அது கடவுளுக்கு சங்கை செலுத்தக் கூடியதாக இருப்பதற்கு, அந்தப் 'பலிப்பொருள்' ஏதோ ஒரு வகையான மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். என் தேவனே, உம் பலிப்பொருளாக இருக்கும்படி, நீர் என்னை நல்ல பலிப்பொருளாக ஆக்கி, இவ்வாறு மதிப்புள்ளவளாக ஆக்கினால் ஒழிய, அதையும் கூட என்னால் தர முடியாது, வசுலா, நான் எப்போது வந்து என்னை நேசிக்கும்படி உன்னிடம் கேட்டேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? உன்னை எதிர்பாராத விதமாகத் தூண்டி எழுப்பும்படி ஒரு சம்மணசானவர் எப்போது வந்தார் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? முதல் முறையாக என் கரம் எழுதியது, இது திடீரென்று நிகழ்ந்தது. அதுதான் நான் வரும் முறை, ஆகவே, விழிப்பாய் இரு, உறங்கி விடாதே; நான் எதிர்பாராத விதமாக உன்னிடம் வந்து, உன் நேசத்தைக் கேட்டேன்; நீ என்னைக் கனப்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன், உன் நேசத்தை சிறைபிடிக்கவும், உன் எஜமானராய் இருந்து, உன்மீது ஆட்சி புரியவும், நான் விரும்பினேன்; நான் உனக்கு தேவையாய் இருக்க வேண்டுமென விரும்பினேன்; உன் நேசத்திற்காக நான் எவ்வளவு ஏங்கினேன்; "லோமா சபக்தானி?" குறிப்பு: "ஏன் என்னை விட்டுச் சென்றாய்?" என்பதற்கான எபிரேய வார்த்தைகள்: நான் உன்னிடம் வந்தேன், ஆனால் நீ என்னை மறுதலித்தாய்; அவர்தான் என்று நான் அறிந்து கொண்டபோது, அவரை மறுதலித்தேன். வசுலா, நானே உன்னை பற்றற்றவளாக ஆக்கினேன்; இன்னும் அதிகமாக உன்னை நான் பற்றற்றவள் ஆக்குவேன்; என் சமாதானத்தைக் கொண்டிரு; அன்பே, பரிகாரம் செய், பரிகாரம் செய், பரிகாரம் செய்; என் திருச்சபையை ஒன்றுபடுத்த உன்னால் இயலும்படி, மரித்தோரிடமிருந்து உன்னை நான் உயிர்ப்பித்தேன்; நான் பெருமூச்சு விட்டேன். நான் உனக்கு வழியைக் காட்டுவேன்; உன் சந்தேகங்களையும் மீறி, நான் என் இருதயத்தின் ஆசைகளை உனக்கு வெளிப்படுத்துவேன்; எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; நான் உன்னில் வேலை செய்வேன், முழுவதுமாக என்னைச் சார்ந்திரு; இயேசுவே, நீர் இனி அடையாளங்கள் எதுவும் தரமாட்டீர் என்று கூறியதாக என்னிடம் ஒருவர் சற்றுமுன் குறிப்பிட்டார். நீர் இதை பரிசேயர்களிடம் கூறினீர். இந்த வழிகாட்டுதல் செய்தி உம்மிடமிருந்து வருவதாக நான் சொன்னபோது, அவர் இப்படிச் சொன்னார். வசுலா, நான் இதைப் பரிசேயர்களிடம் சொன்னபோது, நான் மாமிசத்திலும், அவர்களுக்கு மத்தியிலும் இருந்த காலத்தில் நான் செய்த புதுமைகளையே குறிப்பிட்டேன்; இப்போது என்னை தீர்ப்பிடுவது என் பரலோக வேலைகளை தீர்ப்பிடுவதாக இருப்பதால், அவர்களது இதயங்கள் எவ்வளவு வறண்டவையாகவும், இருகியவையாகவும் ஆகிவிட்டன என்பதைக் காட்டுகிறது; என் அடையாளங்கள் ஒருபோதும் முடியாது; என் பிரசன்னம் உலகில் உணரப்படும், நான் அடையாளங்களில் தொடர்ந்து என்னை வெளிப்படுத்துவேன்; விசுவசியுங்கள், ஓ அற்ப விசுவாசமுள்ள மனிதர்களே, விசுவசியுங்கள்; என் வார்த்தையைத் திரித்துக் கூறாதீர்கள், ஏனெனில் பாத்திமாவைப் பற்றிச் சொல்ல உங்களிடம் என்ன இருக்கிறது? இந்த அடையாளத்தைத் தந்தவர் நாமே என்பதை விசுவாசிக்க நீங்கள் பயப்படுகிறீர்களா? அற்ப விசுவாசம் உள்ளவர்களே, பரலோகத்தின் அடையாளங்கள் என்னிடமிருந்தே வருகின்றன என்பதை ஏற்றுக் கொள்வதை விட வேறு எதைத்தான் நீங்கள் பிரகடனம் செய்யாதிருப்பீர்கள்? என் வேலைகளை நேசியுங்கள்; என் வேலைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்; விசுவசியுங்கள், அளவற்ற செல்வமும் இரக்கமுமாய் இருக்கிற என்னில் விசுவாசம் கொள்ளுங்கள்; அன்பானவர் உங்களை மறந்து விடவில்லை என்பதை மனிதர்கள் அனைவரும் காணும்படியாகவே என் அடையாளங்கள் தரப்படுகின்றன; நேசம் விலகி விடவில்லை, அது அவருடைய மகிமையில் மகிமை கொள்கிறது; அன்பானவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகாமல் உங்கள் மத்தியில் இருக்கிறார்;