வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 22. பிப்ரவரி 18, 1987. சமாதானம் உன்னோடு இருப்பதாக;வசுலா, நீ அவசரப்படத் தேவையில்லை; நான் மென்மையாக பணி செய்கிறேன் என்பதைக் கற்றுக்கொள்; எனக்கு நெருக்கமாகயிரு; நாம் ஹாதேசில் இருக்கிறோம் என்பதை நினைவில் வை; குறிப்பு: இயேசு ஆன்மாக்களைக் காண மீண்டும் என்னை ஞானமுறையில் உத்தரித்திருக்கிற ஸ்தலத்திற்குக் கூட்டிச் சென்றார். பிற்பாடு: என் ஒளி உன்னைச் சூழ்கிறது; உன்னை அணுகும் யாராலும் உன்னைத் தொடவோ... குறிப்பு: துன்புறுத்துகிற யாராவது ஒருவன். உனக்குத் தீங்கிழைக்கவோ முடியாது; என் ஒளி முழு இரட்சணத்தின் ஒளிவட்டத்தைப் போல உன்மீது இருக்கிறது; என் பேரில் உனக்குள்ள அன்பு, அழிவின் பாதையில் காணாமற்போன ஆன்மாக்களை மீட்டு இரட்சிக்கும்; வசுலா. குறிப்பு: நாம் காணாமற்போன ஆடுகளைப் போல் இருக்கிறோம். அவர்கள் தனியாக விடப்பட்ட சிறு குழந்தைகள் போல் எந்த வழியில் செல்வதென அறியாமல் இருக்கிறார்கள்; அவர்கள் தொலைந்து போகிறார்கள்; நான் அவர்களோடு இருக்கும்போது, என் அன்பைத் தந்து அவர்களைப் போஷிக்கிறேன், அவர்களில் சிலர் அதன்பின் என்னைப் பின் செல்கிறார்கள்; என்னை நேசிக்கவும், என்னைப் பின்செல்லவும் நீ அவர்களுக்கு உதவுகிறாய்; குறிப்பு: நம் அன்பைக் கொண்டு மக்களை இயேசுவிடம் கொண்டுவர நம்மால் முடியும். வசுலா, இந்த முறையில்தான் நான் உன்னைப் பயன்படுத்துகிறேன்; அப்படியானால் நான் அவர்களிடம் பொறுமையாக இருந்து, அனுதினமும் ஜெபிக்க வேண்டுமா? ஆம், அவர்களிடம் பொறுமையாய் இரு, ஏனெனில் அவர்கள் என் நேசத்திற்குரியவர்களாயிருக்கிறார்கள். வசுலா, அவர்களைக் குணமாக்கு; அவர்களை நேசி; நான் உனக்கு ஞானத்தைக் கற்றுத் தருகிறேன், பரலோகப் பணிகள் ஞானத்திலிருந்தே வருகின்றன, நான் உனக்குக் கற்பிக்கும் போது புரிந்துகொள்; வா, என்மீது சாய்ந்துகொள், இப்போது என்னை விட்டுச் செல்ல விரும்புகிறாயா? இல்லை, இயேசுவே, நாம் தொடர்ந்து வேலை செய்வோம். நேச மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; என்னோடு பணி செய், என்னை மகிமைப்படுத்து; நான் உன் சிறுமையை நேசிக்கிறேன்; குழந்தாய், நீ என்னை முழுமையாகக் கிரகித்து ஊறிப்போன என் மலராக இருக்கிறாய்; நான் உனக்கு எப்போதும் தேவை என்பதை உணர்ந்துகொள்; ஏனெனில் நான் இல்லாவிடில் நீ அழிந்து போவாய்; இறுதிவரை, உன்னில் குறைவுபடும் எல்லாவற்றையும் நான் தருவேன்; நான் உன்னிடம் முழு சுதந்திரமாக இருக்க விடு; ஏனெனில் உன் தேவைகள் என்ன என்பதை நான் அறிந்திருக்கிறேன்; கடவுளின் வழிநடத்துதலை எழுத என்னால் முடியாதிருக்கும் என்று நான் உணர்ந்தேன். ஏனெனில், முழுநேரமும் இடையூறுகளும் தீமையிடமிருந்து அவமானங்களும் எனக்கு வருவதால், அது கடினமாக இருக்கிறது. சில சமயங்களில் அவர்களுடைய விளையாட்டுப் பொருளாக இருக்கும்படி கடவுள் என்னைக் கைவிட்டு விட்டார் என்பது போல நான் உணர்கிறேன். இந்த உணர்வு எவ்வளவு மோசமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கு என் அவமானம் மிக மோசமாய் இருக்கிறது. ஒரு கணம் கடவுள் என்னை விட்டு விலகிவிட்டார் என நான் நினைத்தேன். திருப்பிச் சொல்ல கூசும் அளவுக்கு அந்த அவமானங்கள் மிகவும் கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன! வசுலா, நான் எப்போதாவது உன்னைக் கைவிடுவேனா? நான் முழு பிரமாணிக்கம் உள்ளவர், என் வார்த்தைகளை நீ மறந்துவிட்டாயா? அது என் தவறுதான். நான் பலவீனமானவள்! உன் பலவீனத்தை இப்போது என்னிடம் கொடு. என் பலம் அதைக் கரைத்துவிடும்; வா, நானே உன்னை அர்ச்சிப்பேன், உன்னோடு நான் என் மோட்சத்தை அடைந்திருக்கிறேன், ஏனெனில் உன்னில் நான் என் இளைப்பாற்றியைக் கண்டடைகிறேன்; நாம் இணைந்திருக்கிறோம் என்பதை நினைவில் வை, நம் பந்தங்கள், சமாதானம் மற்றும் நேசத்தின் பந்தங்களாக இருக்கின்றன; உன் மணிக்கட்டுகளையும் பாதங்களையும் என்னுடையவைகளோடு சேர்த்துக் கட்டியிருக்கிற இந்தக் கயிறுகள் நித்தியமானவை, ஏனெனில் நேசமே, நீ என்னுடையவள்; நானே உன்னை என்னோடு இணைத்து, உன்னைச் சுத்திகரித்திருக்கிறேன்; நானே உன்மீது வெற்றி பெற்றிருக்கிறேன்; நீ என்னை நேசிக்க வேண்டுமென நான் விரும்பினேன்; அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னைத் தாங்கி இருக்கிற இயேசு; நீ என்னோடு இருந்து என் பிரசன்னத்தை உணர வேண்டியவள்; நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; நீ என்னை நேசிக்கிறாயா? இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியுமே; அளவற்ற விதமாக என்னை நேசி; என்னைப் பார்; என் சமாதானத்தைக் கொண்டிரு; நீ எனக்குச் சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கிறதா? ஆம், இயேசுவே. இதை அவரிடம் சொல்வதில் நான் குற்றமுள்ளவளாக உணர்ந்தேன். இயேசுவே, இந்த வழிகாட்டுதலை எழுதுவதையும் உம்மோடு இருப்பதையும் நான் நேசிக்கிறேன், என்றாலும் நான் வேறு காரியங்களும் செய்ய வேண்டியிருக்கிறது! வசுலா, தங்கள் வேலைகளை விட்டுவிட்டு என்னைப் பின் செல்பவர்கள் பாக்கியவான்கள்; நீ உண்மையில் உன் நேரத்தில் பெரும் பகுதியை என்னோடு எழுதுவதில் செலவழிக்கிறாய்; ஆனால் மற்றொரு காரியத்தையும் நான் உனக்கு சொல்கிறேன்; நீ வேலை செய்து சிறிய கடமைகளை, குறைந்த முக்கியத்துவமுள்ள கடமைகளைச் செய்வதையும் நான் காண ஏங்குகிறேன்; ஒவ்வொரு சிறிய வேலையும் அது எவ்வளவு சிறியதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தாலும், இந்தச் சிறிய செயல்கள் நேசத்தோடு செய்யப்படும்போது அவை என் கண்களில் உயர்ந்தவையாக இருக்கின்றன, ஆசீர்வதிக்கப்பட்டவளாக இரு; மாலையில் விருந்தினர்கள் வந்திருந்தார்கள்; நான் தட்டுகள், சிறு துகில்கள் போன்றவற்றை எண்ணிக்கொண்டிருந்தேன். என் தட்டில் எல்லாமே இருக்கிறது என்று நான் நினைத்தேன். நான் தயங்கினேன். இயேசு என்னுடன் இருந்தார் என்பதை அறிந்தவளாக, "நமக்கு இன்னும் என்ன தேவை?" என்று நான் கேட்க, அவர் தயக்கமே இன்றி, "வசுலா, நமக்கு அன்பு தேவை" என்று பதிலளித்தார். பிப்ரவரி 19, 1987. வசுலா, துன்பப்பட உன்னையே அனுமதி; என் தெரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாக்கள் எல்லோருமே துன்பப்பட்டார்கள்; துன்பப்படுவதன் மூலம் உன் ஆத்துமம் நெருப்பில் பொன் புடமிடப்படுவது போல சுத்திகரிக்கப்படுகிறது; உன் துன்பம் உன் வழிகாட்டுதலில் இருக்கிறது; என் வழிகாட்டுதலில் எப்படி, இயேசுவே? இந்த முறையில் எப்பொழுது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடவும், அதன் மூலம் என்னோடு சேர்ந்திருக்கவும், நான் உன்னை அனுமதிக்கிறேன் என்றாலும், தீமையின் கதவுகளும் திறந்திருக்க நான் அனுமதித்திருக்கிறேன்; உன் வழிகாட்டுதல் எளிதான வேலை அல்ல; ஏனெனில் தவறான வார்த்தையை உனக்குத் தந்து உன்னை அதைரியப்படுத்துவதன் மூலம் தீமை உன்னோடு போராடிக் கொண்டிருக்கும்; ஆனால் ஆண்டவரே, உம் வழிகாட்டுதல் என்னைத் தவறாக வழிநடத்த முடியுமா! இல்லை, உன்னையும் மற்ற யாவரையும் ஒருபோதும் என் வார்த்தை தவறாக வழிநடத்தாது; வசுலா, என்னை அடையாளம் கண்டுகொள்ள நான் உனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்; எந்த மொழியிலும் புலமையற்றவளும், என்னால் தரப்படும் வார்த்தைகளையே சார்ந்திருப்பவளுமாகிய ஒருத்தியை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; நான் சொல்வதைக் கேட்க உனக்கு நான் கற்பித்திருக்கிறேன்; உன் செவிக்கு நான் பயிற்சி தருகிறேன்; வா, பொறுமையாய் இரு; ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்; என்னிடமிருந்து கற்றுக்கொள்; நான் கவலைப்படத் தொடங்கினேன். வசுலா, எல்லாமே உத்தமமாக இருக்கும்! வசுலா, தொகுத்து எழுது! குறிப்பு: நான் பயன்படுத்தி இருக்கக்கூடிய வார்த்தையை இயேசு பயன்படுத்தினார். கடவுள் ஒரு ஆன்மாவின் திறமைக்கேற்ப எப்படித் தம்மை மாற்றி அமைத்துக் கொள்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன். இது நான்தான், இயேசு; மீண்டும் சந்தேகங்கள். வா, நான் உன்னிடம் ஒன்று சொல்ல ஏங்குகிறேன்; என் மோட்சம் உன்னில் உள்ளது, ஏனெனில் நான் மகிமைப்படுத்தப்படுவதாகவும், இளைப்பாறுவதாகவும் உணர்கிறேன்; இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்; ஆம், மிகவும் நேசிக்கிறேன், ஒரு நாளில் 24 மணி நேரமும் நேசிக்கிறேன்; இரவில் விழித்தெழும்போது என் முதல் சிந்தனை நீர்தான். நான் உண்டால், அது நீர்தான்; நான் வீட்டில் வேலை செய்தால் அது நீர்தான்; நான் வாகனம் ஓட்டினால், அது நீர்தான்; நான் டென்னிஸ் விளையாடினாலும் நீர் என் மனதில் இருக்கிறீர், உம் பேரிலான என் நேசம் என் இரத்தத்தில் இருக்கிறது, ஏனெனில் என் உடல் அன்பால் வலிக்கிறது. ஆயினும் உமக்கு ஓய்வு தர என்னால் முடியும் என்பதையோ, நீர் என்னில் மோட்சத்தை கண்டடைகிறீர் என்பதையோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நான் யார்? ஒரு தூசித் துகள். இயலாமை நான். இதை நீர் என்னிடம் சொல்லும்போது, நான் உம் பிரசன்னத்தில் இன்னும் மோசமாகவும், வெட்கமுற்றவளாகவும் உணர்கிறேன். உன்னைப் பற்றி நீ சொன்ன எல்லாமே உண்மைதான், ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன், உன்னில் நான் இளைப்பாற்றியைக் கண்டடைகிறேன்; என் இரத்தத்தைக் கொண்டு உன் இருதயத்திற்கு நீர் பாய்ச்சி, அதை என் இருதயத்தில் வைத்திருக்கிறேன்; அன்புக்குரியவளே, அதை நான் சுத்திகரித்து, என் சமாதானத்தையும் நேசத்தையும் அதற்குத் தந்திருக்கிறேன்; வசுலா, உன்னிடம் வந்த நான் எப்போதும் உன் நேசத்தை விரும்பினேன்; இப்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன்; நான் உன்னில் மகிழ்ச்சி அடைகிறேன்; கட்டுப்பாடு ஏதுமின்றி என்னை நேசித்து, என்னை மறப்பவர்களும், என் காயங்களை அதிகரிப்பதை மட்டும் செய்பவர்களுமாகிய மனிதர்களுக்கு ஈடு செய்; வசுலா, என் நேசத்துக்குரிய ஆன்மாக்களை குணப்படுத்துமாறு என்னை நேசி; என் மோட்சமாக இரு; பிற்பாடு: என் தேவனே, நீர்தான் என்று நான் உணர்கிறேன். எனினும், முழுமையாக உணர்வதாக நான் நினைக்கவில்லை! வசுலா, ஒருநாள் நீ உணர்ந்து கொள்வாய்; அப்படி உணர்ந்தால், நான் மயக்கம் போட்டு விடுவேன் என்று நினைக்கிறேன்! வசுலா, என் வார்த்தை ஸ்தாபிக்கப்பட்டவுடன், தம் வார்த்தையைக் காப்பாற்றுகிறவர் என்று நான் எப்போதும் அறியப்பட்டிருக்கிறேன்; யாவேயாகிய நான் மேலிருந்து வருகிறேன்; குறிப்பு: இப்போது பிதா பேசிக் கொண்டிருந்தார். விண்ணகம் என் அருளால் ஆக்கப்பட்டது; நான் என் வார்த்தையை நிறைவேற்றுவேன்; வசுலா, என்னை நம்பு; என் நேசமே, அதிகமாக கவலைப்படாதே; என் அருகில் இரு; என்னை உணர்ந்து பார்; என்னை நேசித்து மகிமைப்படுத்து; மீதியை என்னிடம் விட்டுவிடு; சமாதானத்தில் வாழ முயற்சி செய்; நான் ஞானத்தைக் கொண்டு உன்னை உருவாக்குகிறேன், என் அருளைக் கொண்டிரு; ஆன்மாக்களைக் குணமாக்குவதில் சோர்ந்து போகாதே; இப்போது என்னோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? ஆம், ஆண்டவரே, உம்மோடு இணைந்திருக்கிறேன் என்று உணர்வதில் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதைப்பற்றி நினைக்க நான் துணிய மாட்டேன் என்றாலும் கூட. ஏன், வசுலா? ஏனா? நான் உமக்குத் தகுதி இல்லாதவள் என்பதால். வசுலா, உன்னோடு இணைந்திருக்கவும், அன்யோனியமாக உனக்கு நெருக்கமாக இருக்கவும் நான் எப்போதும் ஏங்கினேன், இருந்தாலும் நான் உன் தேவனும், பரிசுத்தமாய் இருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறவாதே; வசுலா, இன்னமும் கூட எனக்காக நீ பணிபுரிவாயா? நான் ஏற்கனவே என் சம்மதத்தைத் தந்துவிட்டேன். யாவேக்காக தொடர்ந்து பணி செய்ய நான் சித்தமாய் இருக்கிறேன். நான் யாவே; ஆசீர்வதிக்கப்பட்டவளாக இரு; பிற்பாடு: நான் புனித மரியாயின் ஜெபத்தை வாசித்தேன்: புனித பெர்னார்த்தின் மிகவும் இரக்கமுள்ள தாயே,
மகளே, இயேசு உன்னை வழிநடத்துகிறார், என் மகளே, வசுலா, அஞ்சாதே; உன் பரிசுத்த மாதாவுக்கு செவிக்கொடு, நான் உன் அருகில் இருக்கிறேன்; நான் உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; உன்னை நேசிக்கிறேன்; இயேசு செயலாற்றும் முறையைப் புரிந்து கொள்ள உனக்கு உதவுவேன்; கவலைப்படாதே; இயேசு இப்போது தம்மோடு உன்னை ஒன்றித்திருக்கிறார்; களிகூரு, வசுலா; உன் ஆன்மா ஹாதேசில் உள்ள ஆன்மாக்களை குணமாக்குகிறது என்று நான் சொல்லும்போது என்னை நீ நம்ப வேண்டும்; குறிப்பு: நான் உத்தரிக்கிற ஸ்தலத்தை ஹாதேஸ் என்னும் பெயராலேயே அறிந்திருந்தேன்.
வசுலா, இயேசு உன்னிடம் கேட்கிறபடி செய்; அவர் உன் தேவைகளை அறிவார்; அவர் உன்னிடம் விரும்புவதெல்லாம் நேசம் மட்டுமே; எந்த கட்டுப்பாடும் இன்றி அவரை நேசி, அவரை மகிமைப்படுத்து, அவரைக் கசப்புறச் செய்பவர்களுக்குப் பரிகாரம் செய், அவரை கூப்பிடு, எப்போதும் அவரை நேசிப்பதாக சொல்; அவரைக் கைவிடாதே; உன் மற்ற எல்லா கடமைகளையும் நேசத்தோடும் நேசத்திற்காகவும் செய், ஏனெனில் நேசத்தின் செயல்களையே எல்லாவற்றிலும் அதிகமாக அவர் மதிக்கிறார்; அவை உனக்கு எவ்வளவு சிறியவையாகவும், அற்பமானவையாகவும் தெரிந்தாலும் சரி, அவை அவருடைய கண்களில் பெரும் மதிப்புள்ளவை, அதனால் அவை மேலானவையாகின்றன; அவரைப் பின் செல், அவரை அசட்டை செய்வோருக்காகப் பரிகாரம் செய்; மகளே, இப்போது நீ அவரோடு இணைந்திருப்பதன் மூலம், அவருடைய சிலுவையை நீ உணர்வாய்; அவரது திரு இதயத்தை நீ உணர்வாய்; அவர் தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உன்னிடம் கேட்பார்; தமக்கு உதவுமாறு உன்னிடம் கேட்பார்; இளைப்பாற்றியை உன்னிடம் கேட்பார்; தமது சிலுவையை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்பார்; அவர் துன்புறும்போது துன்பப்படு; அவர் அக்கலிக்கும் போது நீயும் அக்களி; உன் துன்பங்கள் அவருடையவைகளாகவே இருக்கும்; அவர் கடவுளாய் இருப்பதால், அவரது விருப்பத்திற்கு இணங்கு; அவரை அடையாளம் காணக் கற்றுக்கொள், அவர் உனக்கு கற்பித்த எல்லாவற்றையும் நினைவில் கொள், ஏனெனில் அவர் அன்புள்ள கடவுள்; முழு இரக்கமுள்ளவர்; வாக்கு கெட்டாத கனிவோடு அவர் உங்களை நேசிக்கிறார்; உனக்கு தீங்கு செய்கிற எதையும் அவர் உன்னிடமிருந்து ஒருபோதும் கேட்க மாட்டார்; அவர் மென்மையானவர், நல்லவர்; வசுலா, அவரை அடையாளம் காண கற்றுக்கொள்; அவர் நேசம் நிறைந்த கடவுள்; ஒருபோதும் கடுமையாய் இருப்பதில்லை; அவர் உன்னை கண்காணித்து, எல்லா தீமைகளில் இருந்தும் உன்னை காப்பாற்றுவார்; அவர் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டார்; வசுலா, தைரியம் கொள்; மகளே, நீ விரும்பும்போது என்னைக் கூப்பிடு; நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உங்களை நேசிக்கிறேன். மாதாவே, உங்களை அதிகமாக நேசிக்க எனக்குக் கற்றுத் தாருங்கள்! இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். என் அன்பு மிக்கவளே, நான் இதோ இருக்கிறேன், நான்தான் இயேசு; நான் மீண்டும் என்னை முழுமையாக அர்ப்பணிக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்; உன் சிறு இதயத்தை எனக்குக் கொடு; நான் அதில் சமாதானம் மற்றும் அன்பின் விதைகளை விதைப்பேன்; என் விருப்பப்படியே உன்னை உருவாக்குவேன்; எதுவும் வீணாகாது; எல்லாமே என் குழந்தைகளை இரட்சிப்பதற்குப் பயன்படும்; அஞ்சாதே, மகளே, நான் உன்னை வழிநடத்தவிடு; இயேசுவின் பெயரில் எனக்குள்ள அன்பு இன்று காலையில் தன் முழு அளவை அடைந்திருந்தது, அவர் என்னைக் கைவிட்டு விடுவார் என்று நான் அஞ்சினேன், ஏனெனில் நான் ஒன்றுமில்லாமையாக இருக்கிறேன்; கடவுளை நேசிக்கும் ஓர் ஒன்றுமில்லாமை, அவரது திருப்பெயரை நோகச் செய்கிறது என்று நான் அஞ்சுகிறேன்; ஓ, மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; என்னோடு இரு. நான் ஒருபோதும் உன்னை விட்டு விலக மாட்டேன்; என் சிறியவளே, உன்னைப்போல் என்னை மகிமைப்படுத்துவோர் ஒரு சிலரே; வசுலா, என் வசுலா, நான் உன்மீது அக்கறை கொள்கிறேன்; என் வழிகாட்டுதலைத் தந்துவிட்ட பிறகு, நான் மேற்கொண்டு காத்திருக்க மாட்டேன்; என் இதயம் உன் சிறிய ஆன்மாவிற்காக ஏங்குகிறது; உன் சிறிய ஆன்மாவிற்காக என் ஆன்மா வேட்கை கொண்டுள்ளது; நீ இந்த உலகத்தில் இருப்பதைக் குறித்து நான் வருந்துகிறேன்; குறிப்பு: இன்றைய இந்த இருண்ட உலகில் உன்னை விரைவில் விடுவித்து மீண்டும் எடுத்துக் கொள்வேன்; என் இருதயம் மகிழ்ச்சி கொள்ளும்; மீண்டும் உன்னை என்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் என் இருதயம் பற்றி எரிகிறது; என் சமாதானத்தைக் கொண்டிரு, நான் விரைவில் உன்னோடு இருப்பேன்; வசுலா, என் அடுத்த செய்தியை எழுத விரும்புகிறாயா? ஆம், ஆண்டவரே, நீ தயாராய் இருக்கிறாயா? ஒரு சில நாட்களாக நான் இந்தச் செய்தியைத் தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது நான் அதற்குத் தயாராய் இருப்பதாக உணர்ந்தேன். இயேசு ஏற்கனவே சிறிது காலத்திற்கு முன் அதைப்பற்றி பேசியிருந்தார். ஆம், ஆண்டவரே, நீ என்னை நேசிக்கிறாயா? மிக அதிகமாக நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியுமே! மற்றவர்களும் என்னை நேசிக்க வேண்டும் என நீ விரும்புகிறாயா? ஆம், இதுவே இப்போது என் விருப்பம். அப்படியானால் என்னோடு செயலாற்று, நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எழுது; வசுலா, சரிதானே? ஆண்டவரே, இம்முறையில் வழிநடத்தப்படுவது ஒரு புதுமை போல் உள்ளது என்று சொல்ல நான் விரும்பினேன். சமாதானச் செய்தி, வசுலா, நான் இதை சித்தங்கொண்டேன்; எனக்கு அதிகாரமோ, பரிசுத்தமோ உள்ளவர்கள் தேவையில்லை என்று உலகிற்கு காட்டும்படி நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; ஆதரவற்றதும், பாவமுள்ளதும், எந்த அதிகாரமும் இல்லாததும், அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரையும் அறியாததுமாகிய ஒரு சாதாரண குழந்தையாகிய இந்த பலவீனமுள்ள கருவியின் வழியாக என் அருளோடு என் சமாதானத்தையும் உங்கள் அனைவர் மீதும் நான் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்தும்படி நான் உன்னைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்; இந்த இருண்ட உலகிற்கு என் செய்தியை வழங்கி, அதன் மூலம் இந்த உலகத்திற்கு நான் அளிக்கும் கொடைகளை காண்பிக்க விரும்புகிறேன்; ஏனெனில் என் இரக்கம் வாக்குக்கெட்டாதது; என் பாசம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது; தன் முழு மகிமையோடு மேலே உள்ள விண்ணகம் சமாதானத்திலும், நேசத்திலும் என்றென்றும் அரசாள்கிறது, பூமியின் மீதும் முழு சமாதானமும் நேசமும் தீமையின் மீது வெற்றி கொள்ளும்படி நான் பார்த்துக் கொள்வேன்; குறிப்பு: உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. என் சமாதானம் உயர்ந்த ஸ்தலங்களிலிருந்து ஆழங்களுக்கும் பூமிக்கோலத்தின் ஒரு முனை தொடங்கி மறுமுனை வரைக்கும் மூடுபனி போலப் பரவி பூமியை மூடுகிறது; உங்கள் எல்லோருக்கும் என் செய்தியை அறிவித்து, உங்கள் தீச்செயல்களில் இருந்து உங்களைத் திருப்பும்படி நான் வருகிறேன்; என் வார்த்தை ஒரு கேதுரு மரத்தைப் போல இருக்கும், அது தன் கிளைகளைக் கரங்கள் போலப் பரப்பி, உங்கள் தீய தன்மையைக் குணமாக்கும். உங்கள் நிர்பாக்கியத்தில் உங்களுக்கு உணவூட்டி, தீமையிலிருந்து உங்களை விடுவிக்கும்; இந்த இருண்ட உலகை ஒளிர்க்கவும், அணையும் தருவாயில் மினுமினுப்பாய் எரிகிற தீச்சுடரை உயிர்ப்பிக்கவும், என் சமாதானத்தால் உங்களை மூடவும், நான் மீண்டும் வருகிறேன்; குறிப்பு: என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. "ஆனால் இப்படிப்பட்ட மனிதர்களுக்காக இப்படி சிரமப்படுவதில் பலன் இல்லை. அவர்கள் கவனிக்க மாட்டார்கள்" என்று நான் நினைத்தேன்; வசுலா, நான் அவர்களை நேசிக்கிறேன், ஓ, நான் அவர்கள் மீது கொண்டுள்ள இந்த அன்பு! அவர்களை விடுவிக்கும்படி, ஒரு செம்மறிப் புருவை போல, நான் என்னைப் பலியாக்கவில்லையா? அவர்களுக்காக நான் பாடுபடுவேன்; என் பிரியத்துக்குரியவர்களே, என் இரத்தம் வீணாக சிந்தப்பட்டதோ? உங்கள் பாவங்கள் என் இரத்தத்தில் அமிழ்த்தப்படுமாறும், நீங்கள் சுத்திகரிக்கப்படும்படியாகவும், நான் என் இரத்தத்தைப் பொழிந்திருக்கிறேன்; நான் தீமையை வென்று, உங்களை மீட்க, என் இரத்தத்தின் தாரைகளில் உங்களைக் குளிப்பாட்டி இருக்கிறேன்; உங்கள் எல்லோர் மத்தியிலும் நான் இருக்கிறேன்; ஆயினும், சாத்தான் உங்களை நடத்திச் செல்கிறான், ஏனெனில், உங்களைக் கெடுக்கவும், தனது அவபக்தியுள்ள வலைகளில் உங்களை விழச் செய்யவும், அவன் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறான்; ஆண்டவராகிய என்னால், நீங்கள் அழிவை நோக்கி ஓடுவதைப் பார்த்தும் பாராமல் இருக்க முடியாது, சாத்தானின் தீய கன்னிகளில் நின்று, உங்களை விடுவிக்கும்படி நான் இங்கிருக்கிறேன்; இவ்வாறு, உங்கள் இரட்சகர் யார் என்று நீங்கள் அறிந்து கொள்ளுமாறு, நான் இதோ நிற்கிறேன்; என் இருதயத்தை என் கரத்திலேந்தி, அதை உங்களுக்கு கையளித்தபடி, மீண்டும் ஒருமுறை நான் உங்களிடம் வருகிறேன்; நீங்கள் அதை ஏற்க மறுத்து விடுவீர்களா? என் சமாதானத்தை நீங்கள் மறுத்து விடுவீர்களா? என் குழந்தைகளை இரத்தம் சிந்துதலுக்கு இணங்க வைப்பவர்களை அழைக்க நான் விரும்புகிறேன்; அவர்கள் என் அழைப்பின் குரலைக் கேட்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஏனெனில், என் வார்த்தை ஒரு சம்மட்டியைப் போல் வரும், அது பாறையைச் சிதறடிக்கும், ஒவ்வொரு இதயத்தையும் ஊடுருவும்; குறிப்பு: ஒருநாள், கடவுள் இந்தப் பாறை நம் இதயங்கள் தான், கல்லால் மூடப்பட்ட நம் இதயங்கள் தான் என்று நான் புரிந்து கொள்ளச் செய்தார். நான் உங்களிடம் கேட்கிறேன், நீங்கள் உங்கள் கடவுளை மறந்து விட்டீர்களா? அல்லது உங்கள் கண்களில் அவர் ஒரு பொருட்டாகவே இல்லாதிருக்கிறாரா? என் பேரில் உங்களுக்குப் பயமே இல்லையா? உங்கள் உயர்ந்த குறிக்கோள்களில் நான் சோர்ந்து போகிறேன்! நீங்கள் என்னை நேசிக்கும்படியாக மட்டுமன்றி, எனக்குப் பயப்படுமாறும் நான் உங்களுக்குக் கற்பித்திருக்கிறேன்; குறிப்பு: ஏற்றுக்கொள்ள மதிக்க, ஏனெனில் நான் சர்வ வல்லபராக இருக்கிறேன்; ஆக, என்ன செய்துவிட்டீர்கள்? தீக்குணத்தின் விதைகளை விதைத்து, உலகம் முழுவதிலும் அவற்றை பரப்பி, இப்போது அவற்றை அறுவடை செய்து, அதன் தீமையின் கனியைக் கொண்டு உங்களைப் போஷித்துக் கொள்வதன் மூலம், உங்கள் சொந்தக் கல்லறைகளை நீங்களே தோண்டிக் கொள்கிறீர்கள்; என் இராஜ்ஜியம் முழுவதும் சமாதானத்தில் அரசாள்கிறது என்பதையும், என் சிருஷ்டிப்பு முழுவதும், சமாதானத்திலும் நேசத்திலும் சிருஷ்டிக்கப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பதைக் கண்டு, என் கண்கள் சோர்ந்து போய்விட்டன; நான் உங்கள் மீது அக்கறை கொள்கிறேன், ஏனெனில் நான் உங்களை நேசிக்கிற உங்கள் தந்தையாக இருக்கிறேன்; இதோ, என் முழு அரச தன்மையோடும் நான் வருகிறேன்; உங்கள் கடவுளாகிய நான், என் இருதயத்தை உங்களுக்குக் கையளித்தபடி, உங்களிடம் வருகிறேன்; இதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்; அது முழுவதும் உங்களுடையதே, என் இருதயம் பிளந்து, இரத்தம் கசிவதை உணருங்கள்; அது முழுவதும் ஒரு பெரிய காயமாக மட்டுமே இருக்கிறது; உங்கள் கடவுளின் இருதயத்தை நீங்கள் கிழித்து விட்டீர்கள்; மீண்டும் மீண்டும், நீங்கள் அதைத் துளைத்து விட்டீர்கள்; போரின் தலைவர்களே, நான் வந்து உங்களை மிதித்து, என் வல்லமையைக் காட்ட வேண்டுமா? கடும் கோபத்தோடு என்னை வெளிப்படுத்த வேண்டுமா? என் இரக்கத்தின் கிண்ணம் விளிம்பு வரை நிரம்பிவிட்டது, என் நீதியின் கிண்ணம் நிறைந்துவிட்டது! உங்களில் உயிர் மூச்சை ஊதியவரும், உங்களை அபிஷேகம் செய்தவருமாகிய நான், என் படைப்பின் இறைவனாகிய நான், என் பரிசுத்தத் தனத்தால் உங்களை குளிப்பாட்டிய நான், என் சமாதானத்தோடு உங்களிடம் வந்து, மனம் திரும்பி, என் சமாதானத்தில் வாழும்படி உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்; நான் பிரபஞ்சம் முழுவதையும் என் சமாதானத்தால் மூடி, அது உங்கள் மீது அரசாள செய்வேன்; ஏனெனில், நானே சமாதானமும், நேசமும், முழு ஞானமுமாக இருக்கிறேன்; என் விண்ணப்பம் என் எல்லா மக்களினங்களுக்கும் விரிக்கப்படுகிறது. என் இராஜ்ஜியத்தில் சமாதானமே அரசாள்கிறது என்பதை அவர்கள் அறிய வேண்டும்; அவர்களது தீக்குணத்தையும் மீறி, அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர்கள் மீது சுடர் வீசவும், நான் வருகிறேன், ஏனெனில், அவர்கள் என் பிரியமுள்ள மகன்களும், மகள்களுமாய் இருக்கிறார்கள்; இறைவன் உங்களுக்குக் கையளிக்கும் இருதயத்திற்குச் செவிசாயுங்கள், நீங்கள் மறந்து போன, அறியாமல் போன இருதயத்திற்குச் செவி கொடுங்கள்; உங்களை நேசிக்கும் இருதயத்திற்கு, உங்களுக்கு வாழ்வளிக்க நாடும் இருதயத்திற்குச் செவி கொடுங்கள்; தீமை செய்வதை நிறுத்துங்கள்! எனக்கு எதிராக கலகம் செய்வதை நிறுத்துங்கள்! என் சட்டத்திற்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? என் சட்டம் கலகத்தின் சட்டம் அல்ல, என் சட்டம் சமாதானம் மற்றும் அன்பின் சட்டம்; உங்களுக்கு தரப்பட்ட என் சட்டத்தை அனுசரியுங்கள்; அதற்கு கீழ்படிந்து நடங்கள், அப்போது மீட்பு உங்களுடையதாகும்; உங்கள் பலவீனம் என் சட்டத்தை அலட்சியம் செய்து, உங்கள் சொந்தச் சட்டத்தைக் கொண்டு, உங்கள் அயலாரைப் பகைவர்களாக்கி, மனுக்குலத்தை அழிவுக்கு இட்டுச் செல்கிறீர்கள்; உங்கள் சட்டங்கள் வன்முறையை அடித்தளமாகக் கொண்டுள்ளன; ஓ, குழந்தைகளே, உங்கள் ஆன்மாவில் நான் வெறுப்பை விதைத்து விட்டேனா? என் ஆன்மா அன்பு, மற்றும் வாழ்வின் ஊற்று, அதிலிருந்து தான் அனைத்தும் உண்டாயிற்று; வசுலா, இன்று இவ்வளவு போதும். நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை நம்பு; உன் நேசம் என் இருதயத்தை மூடட்டும், ஐக்கியப்படு, நேசி, என்னோடு இணைந்து செயலாற்று; அப்படியே செய்வேன், தந்தையே. உம்மை நான் மகிமைப்படுத்தும்படி, நான் தகுதி உள்ளவளாக இருக்க எனக்கு உதவும்;