வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 56. டிசம்பர் 11, 1987 இயேசுவா? நான்தான்; இயேசுவே, குருக்கள், மறைவல்லுநர்கள் போன்றவர்களை விட, ஊடகங்கள் அதிக எளிதாக நம்புவது எப்படி நிகழ்கிறது? ஆண்டவரே, இந்தக் கேள்வியை நீர் என்னிடம் கேட்ட நேரம் உமக்கு நினைவிருக்கிறதா? எனக்கு நினைவிருக்கிறது; அவர்கள் முதல் நூலை வாசிக்கும் போது, மீதமுள்ளவைகளையும் வாசிக்க விரும்புகிறார்கள். அதன்பின் அவர்களில் பெரும்பாலானோர் முதல் புத்தகத்தை வாசித்த பிறகு முழந்தாளிட்டு ஜெபிக்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் இதற்கு முன் ஜெபித்தே இராதவர்களும் கூட ஜெபிக்கிறார்கள். இது அற்புதமாய் இருக்கிறது! வசுலா, என் குழந்தைகள் பசியாய் இருக்கிறார்கள்; என் அப்பத்தை அவர்கள் காணும்போது, தங்கள் பசியை ஆற்றிக் கொள்ளும்படி அவர்கள் அதைத் தட்டிப் பறிப்பார்கள்; அவர்களுக்கு அதிகம் வேண்டியிருக்கும் என்றால், இன்னும் அதிகமாகப் பெறும்படி அவர்கள் என்னிடம் வருகிறார்கள்; நானும் என்னிடம் உள்ளதையெல்லாம் அவர்களுக்குத் தருகிறேன்; குறிப்பு: அவரிடம் செய்யும் ஜெபத்தில். ஆனால் ஆண்டவரே, இந்தச் செய்தியை வாசித்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியின் காரணமாக, ஒரு குருவோடு அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். அவரும் அதனால் மகிழ்ச்சி அடைவார் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் அவர்கள் ஏமாறும் விதமாக அவர் அதில் ஆர்வமே காட்டவில்லை. உண்மையில், இவர்கள் அவர்களை அதீரியப்படுத்தினார்கள். இது ஒன்றிரண்டு தடவைகள் நடந்திருக்கிறது. வசுலா, என்னைக் காயப்படுத்துகிறவர்களும், மேலும் மேலும் என்னை ஊடுருவக் குத்துபவர்களும் இவர்கள்தான்; எனக்குச் சொந்தமானவர்களே என்னை நிராகரிப்பதைக் கண்டு நான் சகிக்க முடியாத அளவுக்கு துன்புறுகிறேன்; என் ஆட்டுக்குட்டிகளுக்குத் தர அவர்களிடம் எதுவும் இல்லை; அப்படி இருந்தும், ஆண்டவரே, குருக்கள் கொண்டுள்ள எதிர்மறையான மனநிலை மற்றும் ஆர்வக்குறைவு ஆகியவற்றையும் மீறி அவர்கள் அதைரியப்படுவதில்லை. ஏனெனில், உம்மை மறுபடியும் கண்டடைவதில் அவர்கள் சமாதானத்தைக் கண்டடைகிறார்கள். ஆனால் இது இப்படி இருப்பது கண்டு அவர்கள் மனக்கசப்பை உணர்கிறார்கள். குறிப்பாக, காட்சிகளைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று அறிய வரும்போதும், திருச்சபை ஏன் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை என்பது பற்றி வியக்கும்போதும் அவர்கள் இப்படி உணர்கிறார்கள். இந்தக் காரியங்கள் முக்கியத்துவம் எதுவுமின்றி தங்கள் வட்டாரங்களில் மட்டும் வைத்துக் கொள்ளப்படுகின்றன என்று அவர்களில் ஒருவர் விமர்சித்தார். ஆம், வசுலா, என் குருநிலையினர் என் இன்றைய பணிகளை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்; மகளே, அவர்கள் அறிவின் திறவுகோலை வைத்திருக்கிறார்கள்; அவர்களும் உள்ளே போவதில்லை; போக விரும்புகிற யாரையும் அவர்கள் போக விடுவதும் இல்லை என்று நான் முன்பே உனக்குச் சொல்லியிருக்கிறேன், இப்போது மறுபடியும் சொல்கிறேன்! அவர்கள் பகுத்தறிவு வாதத்தையும் சந்தேகங்களையும் தங்கள் பிடிவாதமான நம்பிக்கைகளையும் கொண்டு வழியை மறிக்கிறார்கள்; நான் குழந்தைகள் என்ற முறையில் அவர்களை இழந்துவிட்டேன்; அவர்களுடைய ஞானம் அவர்களைக் குருடாக்கி, என்னிடம் வரும் வழியை அவர்கள் இழக்கச் செய்துவிட்டது; அன்பே, இப்போது நீ கொண்டுள்ள எல்லாவற்றையும் பரித்யாகம் செய்து என்னோடு ஜெபி; குறிப்பு: மிகத் தாமதமாகிவிட்ட என் வீட்டு வேலைகளையும் என் மகனின் உணவையும் ஒருவேளை மஞ்சள் காமாலையாய் இருக்கக்கூடிய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற என் கணவரையும் கவனிக்கும்படி இந்த முறை போக வேண்டியிருப்பது. சரி, இயேசுவே. பிதாவே, அவர்களது விவாதப் பொருள் சமாதானமாக இருக்கட்டும். அவர்களது நேர்மையின்மையை மன்னித்தருளும். பிதாவே, அவர்கள் என்னைத் துன்புறுத்துவார்கள் என்றால் ஒதுங்கி நிற்காதீர். வாரும், எனக்கு ஆதரவாக வாரும். குறிப்பு: என்னை அல்ல, அவருடைய வார்த்தையை ஆதரித்து பாதுகாக்கும்படியாக. என் அருகிலிரும் அவர்களை உளர்வித்து, அவர்களுக்கு கற்பியும், அவர்கள் தங்கள் தவறுகளைக் காண்பார்களாக. நீர் நீதியுள்ளவராய் இருக்கிறீர். தம் குழந்தைகளைச் சமாதானத்தில் இருப்பதைக் காண விரும்புகிற மகா உன்னதராகிய நம் இறைவன் உயர்ந்தவர். நம்மை இணைக்கும்படி இறங்கி வந்திருக்கும் ஆண்டவரைத் துதியுங்கள். தமது இன்றைய வேலைகளை அறிவிக்க வருகிற ஆண்டவரைத் துதியுங்கள் என்று சொல்லி, அவர்கள் உம்மை துதிக்கும்படியாக அவர்கள் மீது ஒளிவீசியருளும்; ஆமென்; நேசமே, வா, பிற்பாடு என்னை வந்து சந்தி; இப்போது என் பிரசன்னத்தை நினைவில் கொள்; மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; சரி, ஆண்டவரே, நான் நினைவில் வைத்துக் கொள்வேன். டிசம்பர் 11,1987 மலரே, இது உன் இரட்சகரான இயேசுவாகிய நான்தான் என்பதை ஒருபோதும் சந்தேகப்படாதே; இதோ, நான் உன்னைக் கண்டுபிடித்த இடத்தைத் திரும்பிப் பார்; குறிப்பு: கடந்த காலத்தின் ஒரு விரைவான தோற்றம் எனக்குக் காட்டப்பட்டது. நான் என் குழந்தைகளில் மிக அநேகர் இன்னும் இருக்கிற ஈன நிலையில் உன்னைக் கண்டுபிடித்தேன்! வா, வசுலா, இந்த பாடுபட்ட சுரூபத்தை நீ காண்கிறாயா? ஜெருசலேமிலிருந்து வந்த ஒலிவ மரத்தில் செய்த பாடுபட்ட சுரூபத்தை இயேசு குறிப்பிட்டார். அது இப்போது என் அருகில் குறிப்பேட்டின் மீது இருந்தது. இது இரவில் என் கரத்தை விட்டு நீங்காத ஒன்றாக இருக்கிறது. ஆம், என் வசுலா, அதை இப்போது உன் கரத்தில் எடுத்துக்கொள்; என் உதடுகளிடம் அதை உயர்த்து; ஆம், அதை உயர்த்து; நான் அதை அவருடைய தெய்வீக உதடுகளிடம் உயர்த்தியபோது, இயேசு மிக இனிமையாக அதை முத்தமிட்டார். நீயும் அதை முத்தமிடுவாயா? நான் முத்தமிட்டேன். இப்போது அதை உயர்த்து; நான் அதை ஆசீர்வதித்தேன்.... அன்பிற்குரியவர்களே, நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; டிசம்பர் 12, 1987 என் இறைவா! ஆண்டவரே, நான் எதைப் பற்றிக் குற்றம் சாட்டப்படுகிறேன் என்பது உம் செவிகளை எட்டியிருக்க வேண்டும். ஜெகோவா சாட்சிகள் என்னை குற்றம் சாட்டுவது இது மூன்றாவது தடவை. இதற்கு முன் இரண்டு தடவைகள் இதை வாசிக்காமலே இது பசாசின் வேலை என்று சொன்னார்கள். இந்த முறை நான் கடந்த காலத்தின் வீழ்ச்சி அடைந்த சம்மனசுகளின் ஒரு சந்ததி என்று சொல்கிறார்கள்! ஆண்டவரே, ஏன், ஏன் கிறிஸ்தவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து இவ்வளவு அதிகமாக மாறுபட்டிருக்கிறார்கள்? எது தவறாகிப் போனது? என் திருச்சபை ஒருபோதும் இப்படிப்பட்ட ஒரு குழப்பத்தில் இருந்ததில்லை; உன் பரிசுத்தத் தாயாரின் வார்த்தைகளை நினைவு கூர்வாய்; "என் இன்றைய திருச்சபை எந்த அளவுக்குக் குழப்பம் அடைந்துள்ளது என்பதைக் காட்டும்படி கரபந்தாலின் குழப்பம் ஓர் ஒப்புமையாகக் கொடுக்கப்பட்டது; அது குழப்பத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது;" என் தேவனே, நான் மிகவும் துயரமாக இருக்கிறேன். ஆண்டவரே, நான் மிக துக்கமாக இருக்கிறேன். நீ என்னை உணர்வதால்தான் துக்கப்படுகிறாய், நீ என்னை அறிந்து கொள்ளத் தொடங்குகிறாய்; நான் எதனால் துன்பப்படுகிறேன் என்பதை நீ கண்டுபிடிக்கும்போது நான் அக்களிக்கிறேன்; வசுலா, நானும் அவர்களை நேசிக்கிறேன், ஆனால் அவர்கள் சாத்தானால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்; அவன் அவர்களைக் குருடாக்கிவிட்டான்; அவர்கள் குருடாய் இருக்கும்போது அவர்களை வேறொரு பாதையில் இட்டுச் சென்றுவிட்டான், தங்கள் பொய்யான நம்பிக்கையில், அவர்கள் என் திருமாதாவை பரலோக இராக்கினியாக மதிக்காமல் இருப்பது மட்டுமன்றி, என் இராயப்பனையும், அவனுக்கு என் எல்லா ஆட்டுக்குட்டிகளின் மீதும் நான் கொடுத்த அதிகாரத்தையும் கூட மதிக்காமல் இருக்கிறார்கள்; அவர்கள் என் மலர்களையும் துன்புறுத்தி, என் இன்றைய பரலோக செயல்கள் எல்லாவற்றையும் கண்டனம் செய்கிறார்கள்; சாத்தான் அனைத்தையும் அவமதிக்கும்படி அவர்களை மாற்றி வைத்திருக்கிறான்; அவர்கள் புரிந்து கொள்வதில்லை; என் அன்பிற்குரியவர்களே, உண்மையை உணர்ந்து கொள்ள விடாமல் அவர்களைத் தடுத்த அவர்களுடைய கொள்கை இப்போது உங்கள் மத்தியிலும் ஊடுருவி இருக்கிறது; நான் உங்களை எச்சரித்தது இவர்களைப் பற்றித்தான்; குறிப்பு: பொய் மதங்கள். இவர்கள் உங்கள் பரிசுத்த மாதாவை மறுதலித்து, என் பிள்ளைகளுக்கு நான் தரும் வரப்பிரசாதங்களை பசாசின் கைவேலை என்கிறார்கள்; வசுலா, அவர்களை குற்றம் சாட்டுவது ஒருபோதும் உன் வேலையாக இருக்கக்கூடாது; அதற்குப் பதிலாக, "ஆண்டவரே, நீதிபதியாக இருந்து அவர்களைத் திருத்துவாராக" என்று சொல்லக் கற்றுக்கொள்; என் அன்பிற்குரியவளே, காலங்களின் முடிவு அண்மையில் உள்ளது; நான் அடையாளங்களையும் எச்சரிக்கைகளையும் தருவேன் என்று நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்; குறிப்பு: உரோமையில் உள்ள திருச்சபை. அவர்கள் என் அஸ்திவாரத்தை ஏளனம் செய்து நகைப்பதை கவனித்து நான் துன்புறுகிறேன்; குறிப்பு: ஜெகோவாவின் சாட்சிகள். அவர்கள் வேறு எதையும் அன்றி தங்கள் சொந்தக் கொள்கையையே பின்பற்றுகிறார்கள்; அவர்களே அந்தக் காயின்கள்; என் ஆபீல்களுக்கு ஆபத்தானவர்கள்; என் இல்லத்தில் வளர விரும்புவோருக்கு ஒரு தடை, என் மக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களைத் தருகிற ஒரு தீப்பந்தம், இறுகிப்போன ஒரு பாறை; அவர்கள் என் அஸ்திவாரத்திற்கு எதிராகக் கழகம் செய்திருக்கிறார்கள்; தங்களுக்குள் காயினிடமிருந்து வந்த கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும்போது, நான் பூமியின் மீது ஒரு இராஜ்யத்தை அவர்களுக்கு எப்படித் தருவேன்? நான் உன்னை உயிர்ப்பிப்பேன், உன் ஆன்மா என்னிடம் வரும்; என் கரங்களுக்குள்! நீ பூமியின் மீது கடந்து செல்லும் ஒரு நிழல்தான்; மழையின் முதல் துளிகளிலேயே கழுவப்பட்டு விடுகிற ஒரு வெறும் தூசித் துகல்தான்; என் பிதாவின் இல்லத்தில் அநேக அறைகள் உள்ளன என்றும், நான் இருக்கிற இடத்திலேயே நீங்களும் இருக்கும்படியாக, உங்களுக்காக ஓர் அறையை ஆயத்தம் செய்யப் போகிறேன் என்றும் நான் சொல்லியிருக்கவில்லையா? என்னிடம் என் இல்லத்திற்குத்தான் ஆத்துமங்கள் வருவார்கள்! குறிப்பு: ஜெகோவா சாட்சிகள் இவர்கள் குழப்பமடைந்தவர்களாக. ஒருவன் பூமியின் மீதுள்ள மோட்சத்தில் நித்தியத்திற்கும் வாழலாம் என்றும், நாம் இறக்கும்போது நம் ஆன்மாவும் இறந்து போகிறது என்றும் நம்புகிறார்கள். வசுலா, அவர்கள் என் அஸ்திவாரத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; என் ஆளுகையை வேரறுக்க முயற்சி செய்கிறார்கள்; நான் உன்னை நேசிக்கிறேன்; மலரே, அழாதே; இயேசு சோகமாய் இருப்பதை உணரும்போது, நானும் சோகமாகி விடுகிறேன். நான் உன்மீது என் முள்முடியை வைப்பேன்... ஈட்டி அதன் மத்தியில் இருக்கிறது; அவர்கள் என் இல்லத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; அவர்கள் மீண்டும் மீண்டும் ஒன்று கூடி, இராயப்பனுக்கு முடிவு கட்டத் திட்டமிடுகிறார்கள்! ஓ, கடவுளே, இல்லை! வேண்டாம், ஆண்டவரே! என் அன்பிற்குரியவர்களே, ஒன்றாய்க் கூடுங்கள்; என் திருச்சபையை வலுவுள்ளதாக்குங்கள்; ஒன்றுபடுங்கள், என் நேசர்களே, மீண்டும் ஒன்றுபடுங்கள், ஒன்றாயிருங்கள்; மலரே, விழிப்பாக இருந்துகொள்; என் பிரியத்துக்குரியவர்களே, நேசம் உங்களை இரட்சிக்கும்; வா, மலரே, திற; திற, நான் உனக்குள் என் உயிர்ச்சாறை ஊற்றக்கடவேன், அது உன்னை உயிர்ப்பிக்கும், என் எதிரிகளின் மீது ஏறி மிதித்துச் செல்ல, அது உனக்கு உதவும்படி உன்னைப் பலப்படுத்தும்; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் உனக்கு முன்பாக இருக்கிறேன் என்பதை நினைவில் வை; இந்தச் செய்தி என்னை மிக அதிகமாக எச்சரிக்கை செய்தது. அவர்கள் கவனிக்க வேண்டும் என்று நான் ஏங்குகிறேன். இது அவசரமானது! டிசம்பர் 19, 1987 நான் அன்பாக இருக்கிறேன்; வசுலா, நேர்மை தீமையை வெற்றி கொள்ளும் தாழ்ச்சி பசாசை பலவீனப்படுத்தும், நேசம் சாத்தானின் முகத்திரையைக் கிழிக்கும் என்று அவர்களிடம் சொல்; பிற்பாடு; பாத்திமாவின் தேவாலயம் பரிகாரங்களைக் கேட்டுக் கதறுகிறது! படைப்பே, என்னிடம் திரும்பி வா! படைப்பே, என்னை அறிந்துகொள்; படைப்பே, வந்து என்னிடம் ஜெபி, இனி பாவம் செய்யாதே; என்னில் விசுவாசம் கொள்; சந்தேகப்படாதே; வந்து மனஸ்தாபப்படு, வந்து என்னைப் பெற்றுக்கொள்; வசுலா, ஓ, வசுலா, பரிசுத்தமாய் இரு; என் படைப்பை என்னிடம் திரும்பக் கொண்டு வா! பலிபீடமே! நான் உனக்குள் என் தீச்சுவாலையை ஊற்றி, அன்பினால் நீ பற்றியெரியச் செய்வேன்; நீ என் ஆவல்களை தேடி என்னை மகிமைப்படுத்த வேண்டும்; தங்கள் மகிமைகளையும் மகத்துவ பிரதாபங்களையும் தேடுகிற மற்றவர்களைப் போல் இராதே; ஆண்டவரே, உம் ஆவல்களையும் உமக்கு அதிக மகிமையை கொண்டு வருவதையும் மட்டுமே தேடுவேன் என்று நான் சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், ஆண்டவரே, என் சித்தத்தை எடுத்துக்கொள்ளும் நான் கையளித்து விட்டேன். ஆம், வசுலா, என் தாகத்தைத் தணி; அரசராக என்னை நடத்து; உன் தேவனாகிய என்னை ஆராதித்து வணங்கு; ஒருபோதும் என்னை எதிர்க்காதே; உன்னில் என் பிரசன்னத்தை சங்கை செலுத்தும்படி உன் சரீரத்தை அர்ச்சிப்பாய்; நேசமே, வா, மறைந்திருக்கிற எல்லாமும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்; என் தெய்வீகக் கரம் திரையை உயர்த்தும்; நான் உனக்கு மறைக்கப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன்; கரபந்தால் பாத்திமாவின் தொடர்ச்சியாகும்; என் அரசாட்சி என்றென்றைக்கும் அரசாளும், ஏனெனில் நாமே இருக்கிறவர்; நானே ஆல்பாவும் ஒமேகாவுமாக, அகரமும் நகரமுமாக இருக்கிறேன்; படைப்பே, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்! எனக்குச் சொந்தமானவர்களே, என் குழந்தைகளே, என் அன்பிற்குரியவர்களே, வாருங்கள், என் திறந்த கரங்களுக்குள் வாருங்கள்; உங்கள் தந்தையிடம் திரும்பி வாருங்கள்! கடவுளின் குரல் நேசம் நிரம்பியதாக இருந்தது. அவர் கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்தார். நான் உன்னை நேசிக்கிறேன்; கேள், வசுலா, நீ என் ஆபேல்களுக்கு மத்தியில் இருக்கும்போது, நான் உங்கள் மத்தியில் இருப்பேன்; நான் என் உத்தரவுகளை உன் செவியில் தணிந்த குரலில் கூறுவேன்; தருவதற்கு அப்பம் என்னிடம் உண்டு; என் அப்பம் பரிசுத்தமானது; நான் என் சேமிப்பறைகளில் இருந்து ஒரு சிறிதளவு புளிக்காரத்தைப் பயன்படுத்தி இருக்கிறேன்; மாவு முழுவதையும் புளிக்க வைக்க அது போதுமானதாக இருந்தது; இந்த மாவு இப்போது என் புதிய அப்பமாக இருக்கிறது; ஆகவே, உங்கள் பழைய புளிக்காரத்தை விலக்குங்கள்; அது தன் சக்தியை இழந்துவிட்டது, என் அன்புக்குரியவர்களே, வந்து என் புதிய புளிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, உங்களை முழுவதுமாக புதிய அப்பங்களாக, என் ஆடுகளின் சுவை உணர்வை ஈர்த்து, அவற்றிற்கு உணவளிக்கிற புதிய அப்பமாக, உங்களையே முழுவதுமாகப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்; நான் அர்ச்சித்த என் அப்பத்தை, என் நேர்மை, உண்மை, அன்பு ஆகியவற்றின் அப்பத்தை மதித்து வணங்குங்கள்; அன்புக்குரியவர்களே, என்னை அக்களிக்க செய்யுங்கள்; என் ஆட்டுக்குட்டிகள், என் புதிய அப்பத்தை சுவைப்பனவாக, அவற்றினிடையே என் அப்பத்தை பகிர்ந்தளியுங்கள்; பசியாய் இருக்கும் மந்தைகள், உண்பனவாக, அவை வயிறார உண்ண, அவற்றை அனுமதியுங்கள்; ஞானிகளின் வாதங்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; அவர்கள் தங்கள் வாதங்களால் என்னை திருப்தி படுத்த மாட்டார்கள்; ஆகவே, மகளே, நீயும் அவர்களுடைய வாதங்களால் திருப்தி அடைந்து விடாதே; சிதறிப்போன என் ஆட்டுக்குட்டிகளைத் திரும்பக் கொண்டு வருவதே என் நோக்கம்; அன்பானவரிடம், அவற்றைத் திரும்பக் கூட்டி வா; என் பெயரைக் கையொப்பமிடு; டிசம்பர் 21, 1987 என் கடவுளே, நீதியுள்ளவரே, என் ஒன்றுமில்லாமையிலும், நான் கொண்டுள்ள இந்த பெரும் இயலாமையிலும் கூட, என் ஆசைகள் உம்மால் என்னில் ஊன்றப்பட்டுள்ளன. அவை உம்முடைய ஆசைகள், உம் திருப்பெயர் மகிமைப்படுத்தப்படவும், உம் ஆட்டுக்குட்டிகள் ஒன்று கூட்டப்பட்டு, உம்மை அடையாளம் கண்டுகொள்ளவும், நம் பரலோக மாதாவை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவும், அவர்களுடைய அரசாட்சி தீமையின் மீது வெற்றி கொண்டு, என்றென்றும் நிலைத்திருக்கவும் வேண்டுமென நான் ஆசிக்கிறேன். உம்முடைய ஆவல்களை மட்டும் நான் தேடுகிறேன்.... ஆம், வசுலா, என் ஆவல்களை மட்டும் தேடு, உண்மையாக இரு, சிலர் இருப்பது போல, பரிசுத்த தனத்தின் வெறும் வெளித்தோற்றமாக மட்டும் இருக்காதே; ஆண்டவராகிய நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்கள் ஆபேலை போலத் தோன்ற, எவ்வளவுதான் கடினமாக முயற்சித்தாலும் சரி, அவர்கள் என்னை ஏமாற்றுவதில்லை; ஒரு முகமூடியை அணிந்து கொள்வது, அவர்களுடைய அடையாளத்தை மறைத்துவிட உதவாது, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், அந்த ஏமாற்றுக்காரர்களை இந்த முறை நான் உனக்குச் சுட்டிக்காட்டுவேன். எதிர்பாராத ஒரு நேரத்தில், நான் அவர்களிடம் வருவேன்; என் இல்லத்தில் காயின்களை ஏன் கொண்டிருக்கிறீர்கள்? என் ஆவல்களை அன்றி, தங்கள் ஆவல்களை நிறைவேற்ற மட்டுமே தேடுபவர்களை? நான் பரலோக பலத்தைக் கொண்டு, அவர்களின் முகத்திரையை கிழிப்பேன்; நான் மறைந்திருப்பதை வெளியாக்குவேன்; அஞ்சாதே, நேசமே, நான் என் திருச்சபையை சுத்தப்படுத்துவேன்; தேவ சிநேகத்திடம் செல்லும் வழியை மறிக்கிறவையும், என் திரு இருதயத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பவையுமான எல்லாவற்றையும் நான் பெருக்கித் தள்ளுவேன்; வசுலா, நீயே பார், என் கிண்ணம் கசப்பாக இருக்கிறது; நேசமே, உலகம் என்னை நோகடிக்கிறது; அந்தக் காயின்கள் வழியை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்; மிகப்பெரும் கற்பாளங்களைக் கொண்டு, அதை மறிக்கிறார்கள்; என் ஆட்டுக்குட்டிகள் என்னிடம் வரவிடாமல், வழியை அடைக்கிறார்கள்; அவர்களது கரங்கள் வெறுமையாய் இருக்கின்றன; என் ஆட்டுக்குட்டிகளுக்கு தர, அவர்களிடம் ஏதுவும் இல்லை; மேற்கொண்டு, எதுவும் இல்லை; வசுலா, என் ஆன்மாவின் ஆசீர் பெற்றவளே, என்னை பின் செல்; நான் உன்னை வழிநடத்துவேன், அவன் நம்பிக்கைக்கு உள்ளாகாதே; நான் உன்னை இப்போது கைவிடுவேனா? இல்லை, ஆண்டவரே, நேச பிதாவே, நான் உம்மோடு ஒட்டிக்கொள்கிறேன். இதோ, என் கரத்தைப் பிடித்துக்கொள், அதை ஒருபோதும் விட்டுவிடாதே, என்னிடமிருந்து வருகிற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்; டிசம்பர் 22, 1987 வசுலா, என் திருச்சபையை ஒன்றுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது; மீண்டும் ஒன்று சேர்ந்து வாருங்கள், நேசத்திற்குரியவர்களே, வந்து, இந்த புராதனமான சிதைவுகளை மீண்டும் கட்டி எழுப்புங்கள்; என் சொந்த கரத்தால் இடப்பட்ட அஸ்திவாரமாகிய என் பழைய அஸ்திவாரத்தை மீண்டும் கட்டி எழுப்புங்கள்; என் தாயை மதித்துத் கனப்படுத்துங்கள், வார்த்தையானவரும், எல்லாவற்றிற்கும் மேற்பட்டவருமாகிய நான், அவர்களை கனப்படுத்துவது போலவே, நீங்களும் அவர்களை கனப்படுத்துங்கள்; நானே அவர்களுக்கு சங்கை செலுத்தி இருக்க, புழுதியும் சாம்பலுமாய் இருக்கிற நீங்கள், அவர்களை பரலோக இராக்கினியாக அங்கீகரித்து, அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று நான் ஆசிக்க மாட்டேனா? அவர்களுடைய முக்கியத்துவத்தை என் படைப்புகள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்கள் என்பதைக் காண்பதுதான் இன்றைய என் துயரமாக இருக்கிறது; லூத்தரின் பெயரின் கீழ் இருப்பவர்களும், தங்களை முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொண்டவர்களும், இராயப்பனிடம் திரும்பி வரவேண்டும்; ஆண்டவரே, அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள்! வசுலா, என் தாயை அவர்கள் வணங்கும்படி, நான் அவர்களுடைய முழங்கால்களை மடக்குவேன்; பேசிக் கொண்டிருப்பவர், ஆண்டவராகிய நான்தான்; நான் அவர்களை மடக்குவேன்! அப்படி அவர்கள் செய்யும்போது, நான் என் ஒளியை அவர்கள் மீது சுடர் வீசச் செய்து, அவர்களை உயர்த்துவேன்; நான் உங்கள் அஸ்திவாரங்களைப் பலப்படுத்துவேன், நீங்கள் நீர் பாய்ச்சப்பட்ட ஒரு தோட்டத்தைப் போலவும், ஒருபோதும் வற்றாத நீரோடை போலவும் இருப்பீர்கள்; நான் என் அஸ்திவாரத்தை மீண்டும் கட்டுவேன்; அன்புக்குரியவளே, வா, நான் என் வார்த்தைகளை உன்மீது பொறிக்கும்படியாக, இப்போது போலவே இளக்கமாகவும், மென்மையாகவும் இரு; வா, என் பரிசுத்த பிரசன்னத்தை ஒருபோதும் மறக்காதே; சரி, ஆண்டவரே. டிசம்பர் 23, 1987 என் இறைவா, ப்ரோடெஸ்டன்ட்டினர் அதிர்ச்சி அடைவார்கள்! என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. வசுலா, அவர்கள் மாற வேண்டுமென நான் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறேன்; இப்போது என் ஆசைகளை எழுதி வைக்க என்னைச் சுதந்திரமாக விடு; ஆனால் அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள்! கேள், ஒருவன் தனக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, அதன் பிறகு அவனுக்குப் பொருந்தாததை நான் சொல்லும்போது, அவன் தன் காதுகளை மூடிக்கொள்ள முடியுமா? அப்படியானால், அவர்கள் இது முழுவதையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விடுவார்கள்! ஏனெனில் அவர்கள் இந்த வெளிப்பாட்டைப் பகுதிகளாகத் தேர்ந்தெடுக்க இயலாதவர்களாக இருப்பார்கள். பேசுவது நீரல்ல என்று அவர்கள் சாதிப்பார்கள். அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றால், அப்போது அவர்கள் தங்கள் கடவுளாக என்னை மறுதலித்துக் கொண்டிருப்பார்கள்;
ஆண்டவரே, இது அவர்களுக்குக் கடினமானதாக இருக்கும் என்று நான் சொல்லத் துணியலாமா? தாங்கள் உம்மை மறுதலிப்பதாக அவர்கள் நினைக்க மாட்டார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். ஆண்டவரே, அவர்கள் உம்மை வழிபடுகிறார்கள். வசுலா, நான் உங்கள் எல்லோரையும் இணைக்க வந்திருக்கிறேன்; என்னுடைய சீடர்களில் எவனாவது என் வேண்டுகோளை மறுப்பானா? இல்லை, ஆண்டவரே, அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால் மறுக்க மாட்டார்கள். நீ எனக்குத் தந்திருக்கிற, அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால்... அவர்கள் கேட்பார்கள் என்ற இந்த அறிக்கையில் சொல்ல வேண்டிய எல்லாமே அடங்கியுள்ளது; நான் உங்கள் எல்லோர் மீதும் பிரகாசிக்கவும், உங்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க என்னால் இயலும்படி உங்களை ஒளிர்விக்கவும் வருகிறேன்; ஆனால் வசுலா, நான் மிகவும் துயரப்படும்படியாக, தங்கள் செயல்கள் தீயவையாக இருப்பதால், ஒளிக்கு பதிலாக இருளையே தேர்ந்து கொள்கிறவர்கள் இருப்பார்கள்; அவர்கள் தங்கள் செயல்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தினால் என் ஒளியின் கீழ் வர மறுப்பார்கள்; ஆனால் எனக்கு பிரமாணிக்கம் உள்ளவர்களும், என் வேலைகளை உண்மையுள்ள மனதோடு அங்கீகரித்து என்னை பின் செல்பவர்களும், என் ஒளியின் கீழ் வந்து பயமில்லாமல் தங்கள் செயல்களை வெளிப்படுத்துவார்கள், ஏனெனில் தாங்கள் செய்வதை தங்கள் கடவுளாகிய என்னிலேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதை அவர்கள் காட்டுவார்கள்; என் வார்த்தையை நீங்கள் உங்கள் இல்லமாக ஆக்கிக் கொண்டால், நீங்கள் உண்மையிலேயே என் சீடராக இருப்பீர்கள்; ஓ, நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்வீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று நான் சொல்லியிருக்கிறேன்; இப்போது நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்; நீங்கள் என் இன்றைய வார்த்தைக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; நீங்கள் சத்தியத்தில் நேர்மையை கற்றுக் கொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கி, நேசத்தில் ஒன்றுபட உங்களுக்கு உதவி செய்து என்னை மகிமைப்படுத்தும்; நான் என் கரத்தில் என் இருதயத்தோடு உங்கள் எல்லோரிடமும் வந்து அதை உங்களுக்கு தருகிறேன்; ஆனால் என் வேண்டுகோள்களையும் மீறி அநேகர் என்னை நிராகரிப்பார்கள்; தங்கள் இதயங்கள் கடினமாகிவிட்டதால், அவர்கள் என்னை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்கள் என்னை நேசித்தார்கள் என்றால், என் வேண்டுகோள்களை கவனித்திருப்பார்கள்; கவனிக்க மறுக்கிறார்கள் என்றால், குழந்தைகள் என்ற முறையில் அவர்களை நான் இழந்து விட்டேன் என்பதுதான் அதன் காரணம்; அவர்களுடைய ஞானம் அவர்களை குருடாக்கி விட்டது; ஆனால் நான் உண்மையாகவே உனக்கு சொல்கிறேன், எனக்கு சொந்தமான ஆடுகள் என் குரலை அடையாளம் கண்டுகொள்ளும்; என் குரலை அடையாளம் கண்டுகொள்ளாதவை என் ஆடுகளாக இராது; ஏனெனில் அவை என் சர்வ வல்லபத்தில் விசுவாசம் கொள்ளவில்லை; என் ஆட்டுக்குட்டிகள் ஏன் சிதறடிக்கப்படுகின்றன? என் சரீரம் ஏன் கிழிக்கப்பட்டுள்ளது என்று உனக்கு தெரியுமா? என் திருச்சபையில் இணக்கமற்ற நிலை ஏன் அரசாளுகிறது என்று உனக்கு தெரியுமா? அது ஏனென்றால், அவர்கள் தங்களை வழிநடத்த எந்த ஒளியும் இன்றி இரவில் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான்; ஒளியாய் இருக்கிற என்னை தேடுங்கள்; நான் உங்களை வழிநடத்துவேன்; உங்கள் பிடிவாத நம்பிக்கைகளையும், உங்கள் இருகிய தன்மையையும் வீசி எறிந்து விடுங்கள்; சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய் இருங்கள்; உங்கள் இதயங்களை திறங்கள்; என் உயிர் சாறு உங்களை நிரப்புவதாக நான் உங்களை நேசிக்கிற உங்கள் நல்ல மேய்ப்பராக இருக்கிறேன்; வசுலா, என்னிடம் வா; உன் பரிசுத்தத் தோழனாக என்னை நடத்து; என் தேவனே, அப்படியே செய்வேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; நேசமே, என் திருப்பெயரை நான் மகிமைப்படுத்தி இருக்கிறேன்; நான் அதை மீண்டும் மகிமைப்படுத்துவேன்; என் அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்; மகளே, வா, தைரியமாய் இரு; நான் உன்னோடு இருக்கிறேன்;