இயேசு தம் பிரசன்னத்தை நினைவில் வைத்து, "நாங்கள், நாம்" என்று தம்மையும் சேர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார். தம் நித்திய அன்பையும், பிறரை மன்னித்து அன்பு செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார். தம் திருச்சபையைப் புதுப்பிப்பேன் என்றும், அதற்கு முன் சுத்திகரத்தின் துன்ப நாட்கள் வரும் என்றும் எச்சரிக்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 80. அக்டோபர் 16, 1988 நான் லாஸன்னில் உள்ள "சர்ச் ஆஃப் இங்கிலாந்து" கோவிலில் பரிசுத்த நன்மை உட்கொள்ள விரும்பி அங்கே சென்றேன். அங்கே முன்னே சென்று அனைவரும் முழந்தாளிடுவோம். குருவானவர் முதலில் அப்பத்தோடும், பிறகு இயேசுவின் திரு இரத்தத்தோடும் வருவார். நாங்கள் அதை உட்கொள்வோம். இந்த முறையே இயேசு விரும்புவது போல திவ்விய நற்கருணை உட்கொள்ள சரியான முறை என நான் நினைக்கிறேன். அங்கே அவர்கள் மங்கள வார்த்தை ஜெபம் ஜெபிக்க மாட்டார்கள். அதனால்தான் நான் அங்கு யாரும் அறியாமல் மங்கள வார்த்தை ஜெபம் ஜெபித்தேன். இது நாள் வரையில் முதல் மங்கள வார்த்தை ஜெபத்தை அந்தக் கோவில் பெற்றது. அக்டோபர் 18, 1988 என் ஆண்டவரா? நானே ஆண்டவர்; என் இறைவனா? நான்தான்; நண்பர்களால் எனக்குத் தரப்பட்ட வேதப் பொருட்களை ஆசீர்வதிக்க நீர் விரும்புவீரா? என் உதடுகளிடம் அவற்றை எடுத்து வா, நான் ஆசீர்வதிக்கப்பட வேண்டியுள்ள எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பேன்; குறிப்பு: இயேசு இதைச் சொல்லி, ஒருவர் எனக்கு வேதம் சாராத பொருட்களைத் தந்ததால், கிறிஸ்தவ பொருட்களோடு ஒரு பதட்டம் மந்திரிக்கப்படாது என்று நான் புரிந்து கொள்ளச் செய்தார். ஆண்டவரே, அவற்றில் சில செல்லோபனுக்கு உள்ளே உள்ளன, அவற்றிற்கு ஊடாக உம்மால் முத்தமிட முடியுமா? உன் மாசற்றத் தனத்தை நான் நேசிக்கிறேன்; அவை இருக்கிறபடியே அவற்றை எடுத்து வா, நான் எல்லாம் வல்லவர்; நீ எனக்குத் தருகிற சிறிதளவு விசுவாசத்தைக் கொண்டு, நான் அதை எடுத்து, என் புனித இதயத்தில் அதை வைத்துக் கொள்வேன், என் இதயம் அதைப் போஷித்து, அதிகப் பலமான ஒரு விசுவாசமாக அதை மாற்றும்; வா, இப்போது ஓய்வெடு; சரி, என் ஆண்டவரே. உமக்கு நன்றி, என் ஆண்டவரே. அக்டோபர் 19, 1988 இறைவனுக்கு மகிமை உண்டாவதாக; குறிப்பு: புனித மிக்கேலின் ஜெபத்திற்குப் பதில். நம் ஆண்டவர் புகழப்படுவாராக; குறிப்பு: புனித மாமரியின் ஜெபத்திற்கு பதில். நான் உனக்கு என் சமாதானத்தைத் தருவேன், வா; குறிப்பு: இயேசுவின் திரு இருதயத்தின் ஜெபத்திற்குப் பதில். ஆண்டவராகிய நான் இதை அவர்களுக்குச் சொல்கிறேன்; குறிப்பு: ஒன்று கூடும்படி நாங்கள் உருவாக்கிய சிறு குழுவுக்கு. நான் அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்; என் தெய்வீகச் செய்தியில் எனக்கு உதவும் அனைவரையும், குறிப்பாக தங்கள் ஓய்வு நேரத்தை எனக்காக பரித்யாகம் செய்பவர்களையும் நான் ஆசீர்வதிக்கிறேன்; என் அழைத்தல்கள் வீணானவையாக இருக்காது; நான் உங்களை நேசித்தது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள், உங்களை ஏளனம் செய்பவர்களுக்கும் கூட என்னுடைய செய்தியைப் பரப்புங்கள், ஞான ஒளிர்வித்தலுக்காக ஜெபியுங்கள், ஒருவர் மற்றவரை சமமாக நடத்துங்கள்; அன்புக்குரியவர்களே, நான் எக்காலங்களிலும் பிரசன்னமாய் இருக்கிறேன்; இயேசுவாகிய நான் ஒரு நித்திய அன்பைக் கொண்டு, உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்; என்னிடம் வாருங்கள்; வசுலா, என் புனித இருதயத்தை அவர்களுக்குக் காட்டு; ஆண்டவராகிய நான் என்னோடு நடக்க அவர்களுக்குக் கற்பிப்பேன்; இறைவனின் உண்மையான வாழ்வு என்பதன் பொருளை அவர்களுக்கு காட்டுவேன்; அவர்கள் எல்லோரும் என் வித்து என்றும், எனக்குச் சொந்தமானவர்கள் என்றும் அவர்கள் புரிந்து கொள்ளச் செய்வேன்; சாத்தான் எப்படி அவர்கள் அனைவரையும் ஏமாற்றி இருந்தான் என்பதையும், அவன் எவ்வளவு வஞ்சகம் உள்ளவன் என்பதையும் நான் அவர்களுக்குக் காட்டுவேன்; சாத்தான் இருக்கிறான் என்று மீண்டும் மீண்டும் நான் அவர்களுக்குக் சொல்ல விரும்புகிறேன், அவனே தீயவன், அவனே தொடக்கத்திலிருந்து உங்களை ஏமாற்றியவன், அவன் இறுதியில் வெற்றிக் கொள்ளப்பட்டு, நசுக்கப்படுவான்; என் அன்பிற்குரியவர்களே, ஜெபியுங்கள், நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; ஜெபியுங்கள், என்னுடன் பேசுங்கள்; நான் இங்கே இருக்கிறேன், நான் உங்கள் பரிசுத்த தோழராக இருக்கிறேன், நான் எப்போதும் உங்கள் நடுவே இருக்கிறேன்; என் பிரசன்னத்தின் இந்தப் பரம இரகசியத்தை விசுவசியுங்கள்; நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு நித்தியமானது, நீங்கள் அதன் ஆழங்களையும், அதன் முழுமையையும், மோட்சத்தில் இருக்கும்போது மட்டும்தான் புரிந்து கொள்வீர்கள், என் பிரசன்னத்தை உணருங்கள்... நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; அக்டோபர் 23, 1988 என் குழந்தாய், நான் உன்னை எவ்வளவாக ஆதரித்திருக்கிறேன் என்பதை நீ உணர்கிறாயா? வசுலா, என்னை நேசிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து, குறிப்பு: இறைவனை ஆசிப்பது அவரை மகிமைப்படுத்துவதுமாகும். நீ பூமியில் இருக்கும்போது அவரை ஆசிக்கவில்லை என்றால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவரை ஆசிக்க நீ கற்றுக்கொள்வாய்; ஆசைக்கு மட்டுமான ஓர் உத்தரிக்கிற ஸ்தலத்தில். தண்ணீர் தேவைப்படுகிறோர் மலரைப் போல எனக்காகத் தாகம் கொள்... நீ ஏற்கனவே எனக்கு அதிக நெருக்கமாக இருக்கிறாய்; குறிப்பு: பூமியில் குறைவான நாட்கள். ஆம்! நான் நாட்களை ஆவலோடு எண்ணிக்கொண்டிருக்கிறேன்; உன் மனதைக் கொண்டு என்னைப் பார், உன் இதயத்தைக் கொண்டு என்னைப் பார், உன் ஆன்மாவைக் கொண்டு என்னைப் பார்; நான் என்னைப் பகுத்துணரும் கொடையை உனக்குத் தந்திருக்கிறேன், ஆகவே அதைப் பயன்படுத்து; என்னைப் பார்த்துப் புன்னகை செய்; ஒருபோதும் என்னை நோக்கிப் புன்னகைக்காமல், தங்கள் ஆவல்களுக்காக மட்டுமே என்னிடம் வருகிற ஆன்மாக்களுக்காகப் பரிகாரம் செய்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, நாங்கள், நாம். அக்டோபர் 24, 1988 என் ஆண்டவரும், கடவுளுமானவரா? நான்தான்; குழந்தாய், நான் என் சமாதானத்தை உனக்குத் தருவேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; மகளே, உன் ஜெபங்களைக் கொண்டு எல்லா ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா, அவர்களுடைய இரட்சிப்பை மன்றாடிக் கேள்; உன்னை மறுதலிப்பவர்களை மன்னிப்பதன் மூலமாக, என் புனித இருதயத்தை மகிழ்வி, ஒருபோதும் அவர்களைக் குறை கூறாதே, ஒருபோதும் அவர்களைக் குற்றம் சாட்டாதே; நான் அவர்களின் நடுவராக இருக்கிறேன், தீர்வையின் நாளில் நான் அவர்களை நடுத்தீர்ப்பேன்; ஆகவே, என் குழந்தாய், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்; தீமைக்குப் பதில் அன்பு செய்; இளைப்பாறும்படி என் மீது சாய்ந்து கொள், என் புனித இருதயத்தில் உன் ஆறுதலைக் கண்டடை, அதன் உள்ளாழங்களில் என் சீராட்டல்களைக் கண்டடைவாய்; வா, நாங்கள், நாம்; ஆம், என் ஆண்டவரே. அப்படியானால், நீ அதை சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன், என்னை மறந்து விடாதே! என் பிரசன்னத்தை நினைவில் வை; என் பிரசன்னத்தைப் பற்றிய இந்த தியானத்தை நான் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? என் பிரசன்னமும் உங்களில் மிகப் பெரும்பாலானோர் மறந்து போகிற ஒரு முக்கியமான பரம இரகசியமாக இருக்கிறது; என் பிரசன்னத்தைத் தியானியுங்கள்; ஒரு நித்திய அன்பைக் கொண்டு என்னால் நேசிக்கப்படுகிற குழந்தைகளே, என் நிஜமான பிரசன்னத்தை நினைவு கூறுவதன் மூலம் என்னை மகிழ்வியுங்கள்; நாங்கள், நாம், நீங்களும் நானும், நானும் நீங்களும், நாம் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்களையேப் பயிற்றுவியுங்கள்; உங்கள் செயல்பாடுகளிலும், உங்கள் விவாதங்களிலும், உங்கள் சிந்தனைகளிலும் என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; என் பிரசன்னத்தை மதியுங்கள், நாம் பரிசுத்தர் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்; என்னை நினைவு கூறுவதன் மூலம், நான் உங்களோடு இருக்கிறேன் என்பதை அறிந்து, அதை நினைவு கூர்ந்து, நீங்கள் குறைவாகப் பாவம் செய்வீர்கள்; நசரேனாகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்; அக்டோபர் 25, 1988 என் ஆண்டவரா? நான்தான்; மகளே! அகமகிழ்வாய்! ஏனெனில் நான் நித்தியத்திலிருந்தே உன்னை நேசித்திருக்கிறேன், இது உன்னால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத ஒர் அன்பு; ஒரு முன் குறிக்கப்படுதலின் அன்பு; என் ஆன்மாவை மகிழ்விக்கவும், உன் அன்பால் என் இதயத்தை நிரப்பவுமே நான் உன்னைப் படைத்தேன்; என் கோபத்தைத் தணிக்கவும், என் காயங்களை உன் கண்ணீரால் ஆற்றவுமே நான் உன்னைப் படைத்திருக்கிறேன்; நான் சோர்வாய் இருக்கும்போது என்னைக் களைப்பாற்றவும், நான் மறக்கப்படும்போது, என்னோடு பேசவும் நான் உன்னைப் படைத்திருக்கிறேன்; நான் பைத்தியமாகும் அளவுக்கு உன்னை நேசித்திருக்கிறேன்! அன்புக்குரியவளே, நீ என் புனித இருதயத்தின் ஆசைகளை அறியும்படி நான் உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறேன், நான் சொந்தமாகக் கொண்டுள்ள அனைத்திலும் பங்கு பெறும்படி உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறேன்; என் ஒளியின் குழந்தையாக இரு; நானே உன்னை அனைவரிலும் அதிகமாக நேசிக்கிறவர், நானே அனைவரிலும் அதிகமாக உன்னை ஆசீர்வதிக்கிறவர்; உன் மீது நான் கொண்டுள்ள பொறாமையுள்ள அன்பு உன் சிறு இதயத்தை ஒளியின் தீப்பந்தமாகப் பற்றி எரியச் செய்யும், இதனால் உன் பங்கிற்கு, மற்ற இருதயங்களும் என்னை நேசிக்கும்படி, அவைகளை நீ பற்றி எரியச் செய்வாய்; என் அன்பால் பற்றி எரிகிற என் பலிபீடமாக இரு; இந்தச் தீச்சுவாலையைப் பரப்பு, கற்களையும் கூட என் அர்ப்பணமுள்ள சீடர்களாக மாற்று; நிற, சாதி, இன பேதம் பாராதே, நீங்கள் அனைவருமே என் சாயலாக உண்டாக்கப்பட்டவர்கள், என் பலி எல்லா இனத்தாருக்காகவும் நிறைவேற்றப்பட்டது; என் பரிசுத்த பெயரின் கீழ் ஒன்றாய் இருங்கள்; படைப்பே, பைத்தியமாகும் அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்! படைப்பே, மீண்டும் உயிர் பெறு! உங்கள் மத்தியில் உள்ள என் பிரசன்னத்தை விசுவாசியுங்கள், உங்கள் எல்லோரையும் நான் குணப்படுத்துமாறு, உங்கள் இருதயங்களில் நுழைய என்னை அனுமதியுங்கள்; மலரே, என்னை நேசி, என் சட்டத்தை மதி, என்னை மகிழ்வி; என்னை முதலாவதாகவும், அனைத்து காரியங்களுக்கும் மேலாகவும் வை; உலகத் தன்மையான அனைத்தையும் வெறு; இந்த உலகில் செய்யப்படுகிற அனைத்து தீமைக்கும் பரிகாரம் செய்வதற்கு மிகப் பிரம்மாண்டமான பரிகாரங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது, மற்றவர்களுக்காகப் பரிகாரம் செய்; வசுலா, நான் என்றென்றும் உன்னைக் கைவிடமாட்டேன்; என் போதனைகள் உன்னை என்னிடம் இட்டு வந்துள்ளன, நானும் நீயும், நீயும் நானும் நித்தியத்திற்கும் இணைக்கப்பட்டவர்கள், என் சமாதானத்தைக் கொண்டிரு; வா; அக்டோபர் 31, 1988 நான் நகரத்துக்குச் செல்ல ரோட்ஷில் பேருந்தில் ஏறினேன், நடத்துனர் வர, நான் அவரிடம் ஒரு பயணச் சீட்டு கொடுங்கள் என்றேன். அவரும் எனக்கு பயணச் சீட்டு தந்தார். இயேசு என் அருகில் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் திரும்பி நகைத்தபடி, நான் ஒரு பயணச் சீட்டு தான் கேட்டேன். ஆனால் நாம் இருவர் இருக்கிறோம். உண்மையில் அந்த மனிதனுக்கு நீர் இருப்பதே தெரியவில்லை என்றேன். இயேசு வியப்படைந்தவராக என்னிடம் திரும்பி இப்படிச் சொன்னார்; நீ என்ன சொல்கிறாய்! நாம் இணைக்கப்பட்டும், ஒருவராயும் இருக்கவில்லையா?... வா; நவம்பர் 2, 1988 வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; வா, நான் எங்கே வைத்தாலும், நீ என்னைப் புரிந்து கொள்ள முயல்கிறாய் என்பது பற்றி நான் மகிழ்கிறேன்; அன்புக்குரியவளே, என்னை நேசிப்பதன் மூலம் என் வேதனைகளைத் தணிப்பாய்; உன் கடவுளிடம் உன் குழந்தைக்குரிய விசுவாசத்தைக் காட்டு; இந்த விதத்தில் என்னை மகிழ்வி, முழுமையாக என்னைச் சார்ந்திரு; அப்படியே செய்வேன், ஆண்டவரே. என் சொந்த தந்தையிடம் அன்றி வேறு யாரிடம் நான் திரும்புவேன்? எனக்கு உம்மைத் தவிர வேறு யாருமில்லை. என் வித்தே, எப்போதும் என்னை மகிழ்விப்பாயாக, என் மகிழ்ச்சியாக இரு; நான் உன் அப்பா; என் வித்தே, பலுகு, அலங்கரி, உன் கனிகள் பலருக்கு உணவாவதாக; நீ பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே என் திட்டங்களை நான் வகுத்துவிட்டேன், ஏனெனில் நானே அதிகாரம்; என் திருச்சபை எப்போதும் கீழிருந்து அல்ல, மேலிருந்தே வழிநடத்தப்படும் என்பதை மனிதர்கள் மறக்க முற்படுகிறார்கள், எல்லா அதிகாரமும் மேலிருந்தே அளிக்கப்படுகிறது என்பதை அவர்கள் மறக்க முற்படுகிறார்கள்; ஆகவே, நான் உனக்குச் சொல்கிறேன், என் திருச்சபைக்குள் ஊடுருவி விட்ட எந்த ஒரு உலக அதிகாரமும், எந்த ஒரு உலக அரசும் நீடித்திராது; நான் அதை சிதறடித்து, ஒரு புழுதிக் குவியலுக்குள் வீசி எறிவேன்; உங்களுக்கு இதெல்லாம் முன்பிருந்தே தெரியும், என்றாலும், நீங்கள் நான் சொன்னதைக் கேட்கவும் இல்லை, எனக்குக் கீழ்படியவும் இல்லை; நீங்கள் என்னைத் தடை செய்து விட்டீர்கள்; ஆனாலும், என் ஆளுகையில் என் ஆவி சுதந்திரமாய் சுவாசிக்கும்படி நான் உங்கள் எல்லாக் கதவுகளையும், உங்கள் ஜன்னல்களையும் கூட திறப்பேன்; நான் திறக்கிற பாதைகளைத் தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இருக்காது; நானே ஆல்ஃபாவும், ஒமேகாவுமாக, நான் பரிசுத்தரில் எல்லாம் அதிபரிசுத்தராக, ஒருவரில் அனைவரும் அடங்கிய பரிசுத்தத் தமத்திருத்துவமாக, நானே அதிகாரமாக இருக்கிறேன் என்பதை நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவேன்; நான் விரைவில் உங்களோடு இருப்பேன்; நான் என்னை நேசிப்பவர்கள் அனைவரையும் என் இதயத்தினுள் வைப்பேன்; என் இதயம் அவர்களுடைய புதிய இல்லமாக இருக்கும்; நான் மேலிருந்து வருகிறேன், மேலிருந்து உங்கள் புதிய இல்லம் இறங்கி வரும்; இதுவே என் கொடையாக இருக்கும், என் சொந்த புதிய பரிசுத்த திருப்பெயர் மீண்டும் ஒருமுறை என் அன்புக்குரியவர்களாகிய உங்களுக்குத் தரப்படும்; ஆகவே, அப்போது வந்து என்னைப் போற்றித் துதியுங்கள், வந்து என்னை ஏற்றிப் போற்றுங்கள், வந்து என்னோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கு என் இல்லத்தைத் திறந்து, என் சொந்த மக்களாக உங்களை வரவேற்பேன்; என்னிடம் வாருங்கள்; குறிப்பு: எப்படியோ சரியாக அந்த இடத்தில், என் காவல் தூதரான தானியேல், எழுத்திலும் கூட எப்படி என்னை தொடக்கத்தில் தொடர்பு கொண்டார் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். ஆம், ஆனாலும் இப்போது நான் உங்களை நேசிக்கிற ஆண்டவராய் இருக்கிறேன்; என் குழந்தாய், ஆசீர்வதிக்கப்பட்டவளாய் இரு; நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே, நாங்கள், நாம்; ஆம், புனித மாதாவே, நவம்பர் 8, 1988 இன்று நான் இயேசுவின் சிலுவையை உணர்ந்தேன், நான் அவரை உணர்ந்தேன், அவருடைய படத்திலும் கூட அவர் துயரமாய் இருப்பதைக் கண்டேன். என் அன்பிற்குரியவளே, நான்தான் என் சிலுவையை எடுத்துக்கொண்டு, என் சுமையிலிருந்து என்னை விடுவி, உன் கிறிஸ்து மிகவும் களைத்திருக்கிறார்; நான் என்னை விடுவித்துக் கொள்ளும்படி என் இரத்தத்தில் ஒரு சில துளிகளை உன் இருதயத்தில் விட்டுவிட என்னை நானே அனுமதித்திருக்கிறேன்; சாத்தான் இப்போது உன்னை அதைரியப்படுத்தத் தீர்மானித்திருக்கிறான், ஆனாலும், உன்னைத் தொட நான் அவனை அனுமதிக்க மாட்டேன், என்னால் தொடங்கப்பட்டதும், ஆசீர்வதிக்கப்பட்டதும், என்னை மகிமைப்படுத்தும்படி செய்து முடிக்கப்படும்; இன்று நீ உன் சொந்தக் கையெழுத்தில் என் செய்தியை எழுதுவாய், குறிப்பு: இந்தச் செய்தியின் எஞ்சிய பாகம் வசுலாவின் சொந்தக் கையெழுத்தில் இருந்தது. இதனால், நான் என் வரப்பிரசாதங்களைக் கொண்டு உன்னை நிரப்பி இருக்கிறேன் என்று இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள், என் குரலைக் கேட்கும் வரப்பிரசாதத்தையும் நான் உனக்குத் தந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்; இன்று நீ எழுத வேண்டியதைச் சொல்ல என்னை அனுமதி, நான் சொல்வதைக் கேட்டு எழுது; வசுலா, இப்போது நாட்கள் எண்ணப்படுகின்றன, உங்கள் சுத்திகரத்தின் நாட்கள்; என் திருச்சபையின் புதுப்பித்தலுக்காக என்னை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தவர்களின் ஜெபங்களுக்கு நான் செவிசாய்த்து விட்டேன்; அவர்கள் என்னிடம் செய்த எல்லா ஜெபங்களுக்கும் நான் செவிசாய்த்திருக்கிறேன்; ஆண்டவராகிய நான் என் திருச்சபையைப் புதுப்பிப்பேன் என்று உங்களுக்கு வாக்குறுதி தருகிறேன்; அதனுள் இருந்த அசுத்த வாழ்வால் அதைக் கறைப்படுத்திய எல்லாக் கறைகளையும் நான் கழுவிப் போக்கி, நான் அதை மீண்டும் புதியதாகக் கட்டி எழுப்புவேன்; இருந்தாலும், அன்புக்குரியவர்களே, இந்த நாளுக்கு முன் அது இன்னும் எவ்வளவு மிக அதிகமாகத் துன்புற வேண்டி இருக்கும் என்பதைச் சொல்வதற்கு நான் அஞ்சுகிறேன்; அதை நான் முழுமையாகப் புதுப்பிக்க வருவதற்கு முன், அதன் இதயத்தின் மிகப்பெரும் துன்பங்கள் தொடங்கும்; இந்நாள் வேதாகமங்களை நிறைவேற்றும்படி வரவேண்டும்; ஆனாலும், அந்தத் துயர நாட்களில் என்னை நேசிக்கும் அனைவரையும் நான் தேற்றுவேன்; நான் எப்போதும் உங்கள் இதயங்களுக்கு மிக அருகில் இருப்பேன், நீங்கள் என்னை உணரும்படி செய்வேன், உங்கள் அனைவரையும் தேற்றும்படி சம்மணசுக்கள் மற்றும் புனிதர்களின் படையணி ஒன்றை நான் அனுப்புவேன், ஆகவே, தைரியமாக இருங்கள், அன்புக்குரியவர்களே, தைரியமாக இருங்கள்! நான் இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன், என்னை நேசிக்கிற நீங்கள் என்னை உணர்கிறீர்கள்; நீங்கள் என் காயங்களை உணர்கிறீர்கள், நீங்கள் துயரத்தால் நிரப்பப்பட்டுள்ள என் புனித இதயத்தை உணர்கிறீர்கள்; படைப்பே, என் பார்வை உன்மீது இருப்பதை நீ உணர்கிறாய்; இருளில் படுத்திருப்பவர்களே, என் கண்கள் இரத்தக் கண்ணீரால் நிறைந்துள்ளன; ஆம், உங்களில் பெரும்பாலானவர்கள் சாத்தானின் வலைகளுக்குள் நழுவிச் செல்வதை நான் காணும்போது, இன்று நான் வேறு எப்படி உணர முடியும்? ஆனால் கேட்க விருப்பமில்லாதவர்கள் தங்கள் தீமையை தொடர்கிறார்கள்; நான் இப்போது பல ஆண்டுகளாக அவர்களை எச்சரித்து வந்திருக்கிறேன், அவர்கள் மனஸ்தாபப்படும்படி நான் அவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னுடைய எச்சரிக்கைகளில் ஒன்றிற்கும் செவி கொடுக்கவில்லை; நான் களைத்துப் போய்விட்டேன், அவர்களுடைய குருட்டுத்தனத்தாலும், அவர்களுடைய பிடிவாதத்தாலும், முன் எப்போதையும் விட அதிகமாக நான் களைத்துப் போய்விட்டேன்; கலகம் மூடுபனியைப் போலப் பரவி, என் இல்லத்தையும் கூட ஊடுருவி விட்டது. இராயப்பர், அவர்களுடைய தலைவராகிய இராயப்பர் என்ன செய்ய வேண்டும் என்று அது அவருக்கு உத்தரவிடுகிறது; ஆம், அவர்கள் அவர் சொல்வதைக் கேட்பதில்லை, அவருடைய முதுகுக்குப் பின்னால், அவர் சபிக்கப்பட்டுக் கொண்டும், ஏமாற்றப்பட்டு கொண்டும் இருக்கிறார்; அவர்கள் அவர் சொல்வதைக் கேட்பதில்லை, அவரை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளுகிறார்; ஓ, அவர் இதையெல்லாம் அறிந்திருக்கிறார், என்றாலும், அளவுக்கு அதிகமானோர் அவரை எதிர்க்கிறார்கள், அளவுக்கு அதிகமானோர் அவருக்குத் துரோகம் செய்கிறார்கள்; என் இல்லம் கலகக்காரர்களின் இல்லமாகிவிட்டது; என்னை ஏற்றுக் கொள்பவர்களும், மகிமைப்படுத்துபவர்களுமான மக்கள் ஒரு சிலர்தான் அங்கே விடப்பட்டுள்ளனர். ஆண்டவராகிய நான், சுத்திகரத்தின் நாளில், சகல புனிதர்களோடும் என் சம்மணசுக்களோடும் இறங்கி வந்து, இந்த எல்லாத் தீமையையும் அகற்றி, சுத்திகரிப்பேன்; வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, என் நெருப்பு இறங்கும்! பொறுத்திருங்கள், நீங்கள் காண்பீர்கள்... இயேசுவே? குழந்தாய், கேட்பதை மட்டும் செய்வதால், நீ நன்றாகச் செய்திருக்கிறாய்; வசுலா, என்னால் உன் கரம் நகர்த்தப்படும் அதே வேளையில், நான் சொல்கிற எதையும் நீ கேட்கவில்லை என்று நினைப்பவர்களுக்காகத்தான் இதுவும் சொல்லப்படுகிறது; ஆண்டவராகிய நானே உன்னை ஏவிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர்களில் சிலர் நம்பி இருக்க மாட்டார்கள்; இப்போது, என் வசுலா, நான் விரும்புகிற வழியில் நாம் தொடர்ந்து செயல்படுவோம்; என் சமாதானத்தைக் கொண்டிரு, விழிப்பாய் இரு; ஆண்டவரே, தயவுசெய்து சி எழுத்தில் துவங்கும் பெயரைக் கொண்டவரை குணப்படுத்தும். நீர் திடமான விதத்தில் இங்கே என்னுடன் இருந்தாலும், நான் உம்மை அவளிடம் என் காரில் அழைத்துச் சென்றிருப்பேன் என்றால், உம்மைக் கரம் பிடித்து அழைத்துச் சென்று, அவளை உமக்குக் காட்டியிருப்பேன் என்றால், உம் இருதயம் எதிர்ப்புணர்வு கொண்டிருக்காது, நீர் அவளைக் குணமாக்கி இருப்பீர். என் குழந்தாய், அவள் உன்னை நம்பவில்லை, நீ அவளிடம் சொல்லுகிற அனைத்தையும், அவள் அந்த உடனேயே தள்ளிவிடுகிறாள்; அவள் தன் இதயத்தை எனக்குத் திறக்க மறுத்தாள் என்றால், நான் எப்படி நுழைந்து அவளைத் தேற்ற முடியும்? இன்னும் கூட, அவர்கள் நான் சொல்வதைக் கேட்காதபோதும், உம்மால் அவளைக் குணப்படுத்த முடியும் என்பது எனக்குத் தெரியும். அப்படியானால், வசுலா, அவளுக்காக ஜெபி; நான் அவளை நேசிக்கிறேன்; எனவே, உன் ஜெபங்களைத் தொடர்ந்து செய்; நான் உனக்கு என் புனித பிரசன்னத்தை நினைவுபடுத்துவேன்; நானும் நீயும், அன்பின் ஒன்றிப்பில்; நாங்கள், நாம்; ஆம், ஆண்டவரே, நாங்கள் நாம்.