வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 66. ஏப்ரல் 5, 1988 கடவுளுக்கு மகிமை உண்டாவதாக, நீ இயேசுவோடு இணைந்து பணி செய்வாயா? ஆம், புனித மாமரியே. தயவுசெய்து என் விசுவாசத்தையும், அன்பையும், நம்பிக்கையையும் அதிகரித்து, அவருக்கு கீழ்படிய எனக்குக் கற்பியுங்கள். அப்படியே செய்கிறேன்; குழந்தாய், இளக்கமாய் இருக்க முயற்சி எடு; என் சமாதானத்தைக் கொண்டிரு; ஞானம் உனக்குப் போதிக்கும்; எல்லாவற்றையும் அவர் கரங்களில் விட்டுவிடு, அவர் உன்னைக் கைவிடமாட்டார்; இதோ, இயேசு; இயேசு என் இடது பக்கத்தில் நின்று கொண்டு, என் பாதத்தோடு கட்டப்பட்டிருந்த தமது திருப்பாதத்தை எனக்குக் காட்டிக் கொண்டிருந்தார். இந்த பந்தங்கள் நித்தியத்திற்கும் நீடிப்பவை என்பதை நினைவில் கொள், நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; வா, ஆன்மாக்களின் மீட்பிற்காக ஜெபி; என் பாடுகளை நீ தியானிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன், நான் இந்த வாரத்தில் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், ஒருபோதும் சந்தேகப்படாதே; என் வெள்ளைப் போளமே, என் திருச்சபையை அழகுபடுத்து; நான் உனக்குத் தந்தக் கொடையை யாரும் எடுத்து விடாதிருக்கட்டும்; உன் விளக்கு எண்ணெய் இல்லாமல் போக நான் ஒருபோதும் விட்டு விடமாட்டேன்; திருச்சபைக்கு நீ தேவையாயிருக்கிறாய், இன்று என் இல்லம் அழிவுக்கு உட்பட்டிருக்கிறது; வசுலா! நீ என்னுடைய இந்த பழைய ஸ்தாபனத்தின் சுவர்களைப் புதுப்பித்து, அதை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியவளாக இருக்கிறாய்; என் தேவாலய பலிபீடப் பகுதியைப் புதுப்பி; நான், ஆண்டவர், என் பலத்தைக் கொண்டு இந்தப் பண்டைய சிதிலங்களை நீ மீண்டும் கட்டியெழுப்பி, என் பழைய ஸ்தாபனத்தை அழகுபடுத்துவாய்; அதன் சுவர்களைப் புதுப்பி, நான் மரித்தவர்கள் எல்லோரையும் மீண்டும் உயிரோடு எழுப்புவேன்; நான் அந்தப் பிணங்களை விழித்தெழச் செய்து, மீண்டும் அவர்கள் உயிர்பெறச் செய்வேன்; இது மாபெரும் திரும்பி வருதலாக, வாழ்வுக்கு மீண்டும் திரும்பி வருதலாக இருக்கும், ஏனெனில், படைப்பே, என் பிரகாசமுள்ள பனித்துளி உன்னை அழகுபடுத்தும்! நான் என் அரசை விரிவுபடுத்துவேன். மோட்சம் முழுவதும் அக்களிக்கும்! நீங்கள் என் தோட்டத்தை அலட்சியப்படுத்தி விட்டீர்கள், ஆனால் அதன் காவலாளியான ஆண்டவராகிய நான், பைத்தியமாகும் அளவுக்கு உங்களை நேசிக்கிறேன், எஞ்சி இருக்கிற என் ஒரு சில மலர்களை, முட்களும் காட்டுப் புதர்களும் நெறிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் தாங்க முடியாது; அந்த முட்களையும் காட்டுப் புதர்களையும் வேரறுத்து, சுத்தப்படுத்தி, என் மலர் மொட்டுக்கள் மலர அனுமதித்து, என் தோட்டத்தை அழகுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது; நீதி வெற்றி பெறும்; ஆண்டவராகிய நான், என்னோடு சமாதானம் செய்துகொள்ள அவர்களை அனுமதிப்பேன்; உண்மையுள்ளவர்கள் மனஸ்தாபத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்; என்னைத் தேடுபவர்களும், என் நேர்மையான வழிகளை அறிந்துகொள்ள ஏங்குபவர்களுமாய் நீங்கள் எல்லோரும் வாருங்கள்; நீங்கள் சிலுவையிலிருந்து நான் இடும் கூக்குரல்களைக் கேட்பீர்கள்; எனக்கு அன்பு, அன்பு, அன்பு தேவையாய் இருக்கிறது; படைப்பே, உங்கள் இருதயங்களைத் திறங்கள், நான் உங்களைக் குணமாக்கி, உங்களைத் தேற்றுவேன்; இராயப்பா, இராயப்பா, எல்லா மக்கள் இனங்களையும் ஒன்று கூட்டி, அவற்றை என் இதயத்திற்குள் ஈர்த்துக் கொண்டு வா; என் சிலுவையிலிருந்து நான் அழைக்கிறேன், என் ஆடுகள் எல்லாவற்றையும் மேய்; இராயப்பா, நான் மீண்டும் உன்னிடம் கேட்கிறேன்; இந்த மற்றவர்கள் என்னை நேசிப்பதை விட நீ அதிகம் நேசிக்கிறாயா? நேசிக்கிறாய் என்றால், காயின்கள் உன்னை சம்மதிக்கச் செய்ய அனுமதிக்காதே, அசைவுறாமல் நிலையாய் இரு; அவர்கள் ஒவ்வொரு ஆன்மாவையும் தங்கள் இஷ்டப்படி நடத்தும்படியாக, நீதி உள்ளவை போல தோன்றுகிற சட்டங்கள் இயற்றும்படி உன்னிடம் கேட்பார்கள்; மனிதர்களிடமிருந்து வருகிற இதே சட்டங்கள், இவை உன்னை வற்புறுத்த நீ அனுமதியாதே; ஆண்டவராகிய நான் எப்படி இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்; நான் சாந்தமும், தாழ்ச்சியும் உள்ளவனாக இருக்கிறேன்; என் பிரதிபலிப்பாக இரு; நான் அவர்களுக்கு அருகில் வர வேண்டும் என்று அவர்கள் ஏங்குகிறார்கள் என்றால், பிறகு ஏன் அவர்கள் என் குரலைக் கேட்பதில்லை? நான் அவர்களுடைய வாசல்களின் அருகிலேயே இருந்து அவற்றைத் தட்டுகிறேன், அவர்கள் ஏன் கேட்க மறுக்கிறார்கள்? அவர்கள் எனக்காக ஏங்கியும், நான் சொல்வதைக் கேட்காமல் இருக்கிறார்கள் என்றால், சேற்றைப் போல அடர்த்தியாகிவிட்ட அவர்களுடைய விசுவாச மறுதலிப்புதான் அதற்குக் காரணம்; இப்போது அவர்கள் தங்கள் இதயங்களைத் திறக்கும்படி அவர்களுக்காகக் காத்துக்கொண்டு, நான் இப்போது இங்கே இருக்கிறேன்; ஆனால் அவர்கள் என்னை ஒரு பக்கமாக தள்ளிவிட்டு என்னை ஒடுக்குகிறார்கள்; உங்கள் கண்களை உயர்த்துங்கள், உங்கள் மீட்பரைக் காண்பீர்கள், என்னை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்! என் தேவ பராமரிப்பின் வேலைகளை மிதித்து நசுக்கி, என் குழந்தைகளுக்கு எந்த சமாதானமும் தராமல் இராதீர்கள், இதன் காரணமாக, அவர்களில் யாரும் உங்கள் சொந்த பாரம்பரியங்களோடு உங்களைப் பின் செல்வதில்லை; அவர்களுக்கு என் சமாதானத்தைத் தாருங்கள்; நான் என்னை வெளிப்படுத்த யாரைப் பயன்படுத்துகிறேனோ, அந்தப் பலவீனமான கருவிகளைக் கண்டு வியப்படையாதீர்கள்; நான் இறைவன், எனக்குப் பிரியமானவர்களை நான் தேர்ந்துகொள்கிறேன்; மகளே, என்னைச் சார்ந்திரு, என்னை நம்பியிரு, நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. வா; ஏப்ரல் 7, 1988 இயேசுவா? நான்தான்; வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; இப்போது உன்னைக் கைவிட்டு விடுவதற்காக நான் உன்னை இவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு வரவில்லை என்பதை உணர்ந்துகொள்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; இது ஆன்மாக்களைக் குணமாக்கி, அவர்களை இரட்சிக்கத் தேடுகிற ஆண்டவராகிய நானே; ஓ, ஆன்மாவே! ஆம், அன்புக்குரிய ஆன்மாவே, குறிப்பு: இது அவரை இப்போது வாசித்துக் கொண்டிருப்பவருக்கான கூக்குரல். உன்னைக் குணமாக்கும்படி உன்னிடம் வந்தவர் உன் இரட்சகராகிய நானே; குறிப்பு: இங்கே இயேசு தம் செய்தியை வாசித்துக் கொண்டிருப்பவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உன் வாசல் அருகில் வந்து கதவைத் தட்டுகிறவர் ஆண்டவராகிய நானே; ஓ, மிகவும் அன்புக்குரிய ஆன்மாவே, நான் உன்னை என்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்; நான் இப்போது உனக்கு உணவூட்டிக் கொண்டிருக்கிறேன், வா! குறிப்பு: உணவூட்டுதல் என்பது வாசித்து புரிந்துகொள்வதைக் குறிக்கிறது. என்னை அணுகி வா; நான் உன்னை அழகுபடுத்தி, உன்னைச் சுத்தமாக்குவேன்; நான் உன் எல்லா காயங்களிலிருந்தும் உன்னைக் குணமாக்குவேன்; என் குழந்தாய், நான் உன் பழைய நிலையில் மீண்டும் உன்னை ஸ்தாபிப்பேன்; உன்னிடம் வந்தவர் நானே, நான் உன் ஆன்மாவைத் தேடினேன்; வா, நான் உன்னைத் தேற்றுவேன்; ஆன்மாவே, வந்து என்னில் இளைப்பாறு; என்னிடம் வந்து என்னை உட்கொள்; என்னிடம் வந்து என்னைப் பருகு; உன் இரட்சகரின் அழைப்பைக் கேள்; உன் ஆன்மா உயிர் வாழும்; அன்புக்குரிய ஆன்மாவே, நான் உன்னை நேசிக்கிறேன்; என் இரத்தம் உனக்காக, உன் இரட்சிப்பிற்காக ஆறுகளாக சிந்தப்பட்டது; ஆன்மாவே, வந்து என் மேலாடையைப் பகிர்ந்துகொள், நான் உனக்குப் புகழிடம் தருவேன்; நான் உன் அடைக்கலமாக இருப்பேன்; நான் இயேசு. இயேசு என்றால் இரட்சகர் என்று அர்த்தம்; இயேசு தம் செய்தியை வாசிக்கிறவர் யாராய் இருந்தாலும், அவரிடம் பேசும் விதமாக இந்த செய்தியை தந்திருக்கிறார். அவருடைய சமாதானம் மற்றும் நேசத்தின் செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. உங்களைத் தேடினவரும், உங்களிடம் வந்து நீங்கள் வாசிக்கும்படி இந்த செய்தியை உங்களுக்கு தந்தவரும் இயேசுவே. நீ செய்வது போல, என் செய்தியை விநியோகித்து, என் அரசை விரிவாக்கு; என் இந்த வெளிப்பாட்டின் நூல்களை ஸ்தாபித்து, என் அரசை விரிவடையச் செய்பவர் நான்தான்; நான் எப்போதுமே என் குறிக்கோள்களை அடைகிறேன் என்பதை நினைவில் கொள்; உன் இரட்சகரைப் பார்த்துப் புன்னகை செய், என்னை வாழ்த்து; நான் திரும்பி இயேசுவை வாழ்த்தினேன். இயேசு கிறிஸ்துவே, நான் உம்மை வாழ்த்துகிறேன். நான் உம்மை வாழ்த்துகிறேன். நானும் உன்னை வாழ்த்துகிறேன்; இன்றிரவு என்னோடு இணைந்திரு; நான் என் சகோதரர்களால் கைவிடப்பட்டு, அவர்களில் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டேன்; என் கெத்சமனியின் கடும் வேதனைகளை என்னோடு பகிர்ந்துகொள், என்னை கைவிட்டு விடாதே; ஆண்டவரே, நான் கைவிடமாட்டேன். என்னை எப்போதும் உன் மனதில் வைத்திரு, இந்த முறையில் என்னைத் தேற்று; வசுலா, நீ என்னைக் கைவிடமாட்டாய் என்று எனக்குக் காட்டு; என் அவஸ்தையைப் பகிர்ந்துகொள், என் கிண்ணத்தைப் பகிர்ந்துகொள், இறுதி வரை என்னோடு இரு; என் பாடுகளை வாழ்ந்து பார், என்னை மகிமைப்படுத்து! எனக்கு அருகில் தங்கியிரு; சரி, இயேசுவே, அப்படியே செய்வேன். இயேசு அந்த நேரத்தை மீண்டும் வாழ்பவரைப் போலத் தோன்றினார். ஓ, வசுலா! என் பரிசுத்த இதயத்திற்குள் நுழை, அதன் உள்ளாளங்களுக்குள் நுழை, அங்கே நீ சமாதானத்தைக் காண்பாய்; ஆண்டவராகிய நான் உனக்காக அங்கே ஓரிடத்தை வைத்திருக்கிறேன், நீ எனக்குச் சொந்தமானவள், நான் உனக்குச் சொந்தமானவன்; நேசம் உன்னை வழிநடத்தும்; ஆண்டவரே, நான் என் இதயத்தை உமக்கு தந்திருக்கிறேன். என்னைக் கொண்டு நீர் விரும்புவதை செய்து கொள்ளலாம். அப்படியானால் என்னை நம்பு; என் கரத்தைப் பற்றிக்கொள், நான் உன்னைக் கைவிடமாட்டேன், ஒருபோதும்! ஆண்டவரே, என்னை வழிநடத்தும், ஏனெனில் நீரே என் வழிகாட்டியும் என் இறைவனுமாக இருக்கிறீர். வா, என்னை மறக்காதே; பியாட்ரிஸை ஆசீர்வதி; ஆண்டவராகிய நான் அவளை ஆசீர்வதிக்கிறேன்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, நித்தியத்திற்கும் ஒன்றாக. பரிசுத்த வாரம் பெரிய வியாழக்கிழமை. புதனன்று நான் கோவிலுக்கு போயிருந்தேன். குருவானவர் என்னையோடு கலக்கப்பட்ட வெள்ளைப் போலத்தால் ஒவ்வொருவரையும் மந்திரித்துக் கொண்டிருந்தார். திருச்சபையால் மந்திரிக்கப்பட்ட இந்த கலவிக்குள் ஒரு சிறு துண்டு பஞ்சை நனைத்து, அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். பெயாத்ரீசும் நானும் கோவிலுக்கு போகும்படியாக அவள் என் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவளை ஆசீர்வதிக்கும்படி இயேசு என்னிடம் கேட்டிருந்தார். ஆகவே, நான் வைத்திருந்த எண்ணெய் வெள்ளைப் போல கலவையால் நான் அவளை ஆசீர்வதித்தேன். ஆசீர்வதிக்கும் முறை இதுதான். ஆசீர்வதிப்பவர் இந்த கலவையைக் கொண்டு நெற்றியிலும், இடது மற்றும் வலது கரத்திலும், முகவாயிலும், உள்ளங்கைகளிலும், புறங்கைகளிலும் சிலுவை அடையாளம் வரைகிறார். குரு உடலையும் ஆன்மாவையும் குணமாக்குவது தொடர்பான சில வார்த்தைகளை உச்சரித்திருந்தார். இயேசு இந்த வார்த்தைகளை தாம் உச்சரிப்பதாக நான் புரிந்து கொள்ளும்படி செய்தார். காலம் செல்லச் செல்ல, சில சமயங்களில் என் மனம் மொழிப் பிரச்சனை காரணமாக அலைபாயும். கிரேக்க மொழி பண்டைய மொழியாக இருக்கிறது. அதில் நான் புரிந்து கொள்வது மிகக் கொஞ்சம்தான். இந்த மூன்று மணி நேரமாக என் மனதை அலைபாய விடாமல் தடுப்பது கடினமாக இருந்தது. ஆனாலும், இயேசு இது நிகழாது என்பதை உறுதிப்படுத்தினார். என் மனம் அலைபாய தொடங்கியபோதெல்லாம், இயேசு 'என் அருகில் இரு' அல்லது 'என் அருகில் தங்கியிரு' என்று சொல்வார். அவர் இப்படி சுமார் 10 தடவைகள் சொல்லி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏப்ரல் 8, 1988 பெரிய வெள்ளி. இயேசுவா? நான்தான்; நீ ஏன் சந்தேகப்பட்டாய்? குறிப்பு: 1988 மார்ச் 29 அன்று இயேசு சொன்ன வார்த்தைகள்: "மனிதகுலம் முழுவதின் மீதும் நான் என் ஆவியை ஊற்றுவேன்." வேதாகமத்தில் எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்று நான் தேடிக் கொண்டிருந்தேன். அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரம் 17 ஆம் வசனத்தில் அதை கண்டேன். அது வேதாகமத்தில் வேறொரு இடத்திலும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருந்தேன். ஏனெனில் ஒருமுறை இயேசு அந்த பகுதியை எனக்கு காட்டியிருந்தார். அது வேதாகமம் முழுவதிலும் எங்கே இருக்கிறது என்று எனக்கு காட்டும்படி நான் இயேசுவிடம் கேட்டேன். சற்று நேரம் தேடியும் அதை கண்டுபிடிக்க முடியாததால், நான் வைக்கோல் போரில் ஊசியை தேடிக் கொண்டிருந்ததாக எனக்கு தோன்றியது. இயேசு நான் சொன்னதை கவனிக்கவில்லை என்று நான் நினைத்தேன். ஆகவே, இன்னும் ஒரத்த குரலில்: "ஓ இயேசுவே, நான் கத்தியும் ஒருவேளை நான் சொல்வதை நீர் கேட்காமல் இருந்திருக்கலாம்" என்று நான் சொன்னேன். என் கடைசி வார்த்தையை நான் சொல்லி முடிக்கும் முன்பே, நான் தேடிக் கொண்டிருந்த சரியான பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டுதான் இந்த வார்த்தைகளை நான் சொல்லிக் கொண்டிருந்தேன் என்று கண்டுபிடித்தேன். அது நேரே இப்போது என் மூக்கடியில் இருந்தது. ஆகவேதான் அவர் என்னிடம்: "ஏன் சந்தேகப்பட்டாய்?" என்று கேட்டார். ஆ! நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்புதான்; என்னை நேசி, அப்போது என் தாகம் தணிக்கப்படுகிறது! என்னை நேசி, அப்போது என் காயங்களின் வேதனை ஆற்றப்படுகிறது! என்னை நேசி, அப்போது என் ஆவி உன்னில் அக்களிக்கும்! என்னை நேசி, அப்போது நீ என் எதிரிகளைத் தோற்கடிப்பாய்! என் குழந்தாய், என் ஆவி உன்மீது இருக்கிறது! நாங்கள், நாம்? நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே, ஆம், புனித மாமரியே, நாங்கள் நாம் என்றென்றும் சதாகாலமும். ஏப்ரல் 9, 1988 பரிசுத்த வாரம் - பெரிய சனிக்கிழமை. நான் உன்னை நேசிக்கிறேன்; என் குழந்தாய், நீ இப்போது என்னோடு இணைக்கப்பட்டிருக்கிறாய், நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நான் ஆசீர்வதிக்கிறேன்; நான் உன் வாழ்வின் ஆதாரமாக இருக்கிறேன்; நானே உயிர்ப்பாக இருக்கிறேன்; ஆண்டவரே, இந்தச் செய்தி பல பொதுநிலை விசுவாசிகளை மனம் திருப்பியுள்ளது. அவர்கள் அகமகிழ்கிறார்கள் என்றாலும், குறைந்தது 33 திருச்சபை அதிகாரிகளுக்கு நான் இந்த செய்தியின் நகல்களை அனுப்பி இருந்தும், இருவரைத் தவிர வேறு யாருமே பதில் அனுப்பவில்லை என்பது பற்றி நான் வருந்துகிறேன். அவர்களில் ஒரு பெண் அதிகாரி இதில் தன் கருத்தை சொல்ல, தனக்கு கடமை இருப்பதாக தான் உணரவில்லை என்று கூறினார். மற்றவர் தமக்கு வேலைப்பளவு அதிகம் இருப்பதாலும், இதற்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டார். ஆண்டவரே, எனக்கு வருத்தமாய் இருக்கிறது! என் வசுலா, அது அப்படியே இருக்கட்டும்; வசுலா, அதை என் வழியில் நடத்த என்னைச் சுதந்திரமாக விட்டுவிடு; ஒருநாள் நான் உனக்கு தந்திருக்கிற என் பணிகளை நிறுவுவேன்; என் குழந்தாய், 'நீ அன்பின் பலி' என்ற அதே பெயரை உன்மீது தாங்கி இருப்பாய்; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன், ஒருபோதும் உன்னை ஏமாற்றவும் மாட்டேன்; காலங்களின் இறுதி வரைக்கும் ஆயிரக்கணக்கான தடவைகள் ஒவ்வொரு வார்த்தையும் எழுதப்படும்; நான் உனக்கும் எனக்கும் நடுவில் நித்திய பந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறேன்; இந்தப் பந்தங்கள் நமக்கு இடையே உள்ள அன்பின் கூட்டுறவாக இருக்கின்றன; இந்தப் பந்தங்கள் என் பெயரை தாங்கியுள்ளன, இவை என்றென்றைக்கும், நித்திய காலத்திற்கும் உரியவை; ஆண்டவராகிய நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; உண்மையை தேடுபவர்களின் நிமித்தமாக, உண்மையில் உண்மை என்றால் என்ன, அதன் பொருள் என்ன என்று அவர்களுக்கு காட்டுவதற்காக நான் வருகிறேன், ஏனெனில் அவர்கள் அதை மறந்துவிட்டார்கள்; நானே உண்மை, உண்மையே அன்பு, ஆழங்காண முடியாத அன்பு, பக்திக்குரிய அன்பு, நித்திய அன்பு; என் புத்தகம் அன்பின் புத்தகமாக இருக்கிறது; என் மணவாட்டியே, வந்து என்னை நேசிப்பாயாக. உன் அன்பால் நான் மகிமைப்படுத்தப்படுகிறேன்; குழந்தாய், இப்போது நான் ஏன் உன் வழியாக இறங்கி வந்திருக்கிறேன் என்பதை புரிந்துகொள்; என் நேசத்தை உனக்காக மட்டுமன்றி, என் எல்லா படைப்புகளுக்காகவும் வெளிப்படுத்துகிறேன்! குறிப்பு: இந்த எல்லா என்ற வார்த்தை எல்லா என்று நீட்டி உச்சரிக்கப்பட்டது! நான் அவர்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும்படி நான் வருகிறேன்; என் படைப்பில் இவ்வளவு அநேகர் சாத்தானுக்கு இடம் கொடுத்திருப்பதைக் கண்டு என் இருதயம் நொறுங்குண்டு கடும் வேதனைப்படுகிறது! என் குருக்களில் இவ்வளவு அதிகமானோர் அழிவின் பாதையில் இருப்பதைக் கண்டு நான் எவ்வளவாக துன்பப்படுகிறேன்; நான் வார்த்தையானவர், பரிசுத்தர்களில் அதிபரிசுத்தர், நித்திய இறைவன், இம்மானுவேல், மேலும் நான் பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஊடுருவ குத்தியவரும், தொடர்ந்து இடைவிடாமல் நிறுத்தாமல் ஊடுருவ குத்திக் கொண்டிருப்பவருமாகிய உங்கள் இரட்சகர்; ஏன் நான் உடலோடு இருந்ததும், சிலுவையில் அறையப்பட்டதுமான அந்த பழைய நாட்களுக்கும் இன்றைய நாட்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? உங்கள் சகிப்பின்மையினாலும், உங்கள் ஆணவத்தாலும், உங்கள் விசுவாச மறுதலிப்பாலும், கேட்க மறுப்பதில் உங்களுக்குள்ள பிடிவாதத்தாலும் நான் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்; என் அடையாளங்கள் பேரிலும், என் புதுமைகள் பேரிலும், என் தெய்வீகப் பணிகளின் பேரிலும் மந்த புத்தி உள்ளவர்களாகவே நிலைத்திருப்பதை நீங்கள் நிறுத்தவே இல்லை; நேற்றைப் போலவே இன்றும் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்; யாரிடம் கோடிக்கணக்கான ஆன்மாக்களை நான் ஒப்படைத்திருக்கிறேனோ, அந்த உங்களால் நான் பரிகசிக்கப்படுகிறேன், நீங்கள் என்னை மீண்டும் சிலுவையில் அறைகிறீர்கள், உங்கள் அலட்சியத்தைக் கொண்டு என்னை மரத்தில் புதிதாக ஆணிகளால் அறைகிறீர்கள்; ஓ, இன்னும் தரிசாகக் கிடக்கிற இதயத்தைக் கொண்டிருப்போரே! குறிப்பு: இயேசுவின் குரல் துயரமாகவும் கெஞ்சுவதாகவும் இருந்தது. கருங்கல்லாக மாறிவிட்ட இதயத்தைக் கொண்டிருப்போரே, நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்கள் என்னால் தொடப்பட்டு மென்மையாக்கப்படவும், திறக்கப்படவும், எப்போதாவது அவற்றை அனுமதிப்பீர்களா? குறிப்பு: மீண்டும் துயரமாகவும் கெஞ்சுவதாகவும். என்றாவது ஒரு நாள் என்னை குத்தி துளைப்பதை நீங்கள் நிறுத்துவீர்களா? குறிப்பு: மீண்டும் துயரமாகவும் கெஞ்சுவதாகவும்.
அன்பின் தாகத்தால் என் வாய் பார்ச்மென்ட் காகிதத்தை விட அதிகம் வறண்டதாக இருக்கிறது; நீங்கள் என் பலிபீடத்தின் மீது உங்கள் வார்த்தைகளை சிந்துவதை கவனித்து என் கண்கள் கலைத்துப் போய்விட்டன; நீங்கள் உங்கள் ஜெபங்களை எனக்கு ஒப்புக்கொடுக்கிறீர்கள், ஆனால் அவை என்னை வந்தடை முன்பே மூடுபனி போல காற்றில் கரைந்து போகின்றன; நான் என் கண்களை உங்களிடமிருந்து திருப்பிக் கொள்கிறேன், ஏனெனில் உங்கள் இதயங்களின் ஆழங்களில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன்; செத்த வார்த்தைகளால் என் விதை நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டு இவ்வளவு வெளிப்படையாக நீங்கள் அச்சமின்றி, எங்கள் தெய்வீக இதயங்களை மிதித்தபடி வருவதைக் கண்டு நான் நசுக்கப்படுகிறேன்!.... மூச்சுத் திணறுகிறேன்! குறிப்பு: புனித மாமரி மற்றும் அவருடைய இதயங்கள் அப்படி இருக்க, என் ஆட்டுக்குட்டிகள் உங்களை நம்ப வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஆ, வசுலா, என் இதயம் ஏராளமாக இரத்தம் வடிக்கிறது; என் இதயத்திற்குள் நுழைந்து உன் கடவுளின் காயங்களை உணர்ந்து பார்; இயேசுவே, உம்மை இந்த நிலையில் உணர்ந்து என் இதயம் வேதனையால் அலறுகிறது. ஓ, என் அன்புள்ள இறைவா, அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?.. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என் அன்பின் வேலைகளை வெளிப்படுத்து; அவற்றை எல்லா மனிதர்களுக்கும் வெளிப்படுத்து; என் குழந்தாய், உன்னை ஒரு கோமாளியைப் போல நடத்த இருப்பவர்களுக்கும் கூட அதை வெளிப்படுத்து; அவர்கள் இறுதியில் என் மகிமையைக் காண்பார்கள்; நான் சிதறுண்டிருக்கிறேன், ஆண்டவர் அதை அறிவார். நான் ஏற்கனவே ஒரு கோமாளியைப் போலவும், ஒரு வஞ்சகியைப் போலவும், பேய் பிடித்தவளைப் போலவும், அந்திகிறிஸ்துவைப் போலவும், மனநோயாளி உள்ளவளைப் போலவும் நடத்தப்பட்டு வருகிறேன். மக்கள் என்னை காயப்படுத்த விரும்பும்போது, தங்கள் உணர்வுகளை மறைப்பது கூட இல்லை என்பதால் நான் துன்புறுத்தப்படுகிறேன். இந்நிலையில் தொடர்ந்து செயல்படுவதை என்னால் தாங்க முடியுமா? நான் பலவீனமாய் இருக்கிறேன். என் ஆன்மா சோர்ந்துள்ளது. என் இரண்டு சாட்சிகளுக்கும் கூட உண்மையில் எந்த அதிகாரமும் வல்லமையும் இல்லை. நான் போகிற அதே பாதையில்தான் நிந்திக்கப்பட்டவர்களாகவும், மனசோர்வடைந்தவர்களாகவும், நம்பப்படாதவர்களாகவும், அலட்சியம் செய்யப்படுபவர்களாகவும் அவர்களும் போகிறார்கள். நாங்கள் எல்லோரும் ஒரே கசப்பான கிண்ணத்தை இயேசுவோடு பகிர்ந்து கொண்டு, அதிலிருந்து தான் பருகுகிறோம். வசுலா, நீ உன் முன்பாக என்னைக் கொண்டிருக்கிறாய்; இறுதியில் என் முழு மகிமையையும் உனக்குக் காட்ட இருப்பவர் உன் கடவுளாகிய நான்தான்; நான் எதை தேர்ந்து கொண்டேன் என்பது எனக்குத் தெரியும்; நான் என் சிருஷ்டிகளில் எல்லாம் மிகவும் சிறியதைக் கண்டெடுத்திருக்கிறேன்; எல்லா அதிகாரமும் உன்னிடமிருந்து அல்லாமல், நேரடியாக என்னிடமிருந்து மட்டுமே இறங்கி வரும் என்பதை எல்லோரும் காணும்படியாகவே நான் உன்னைத் தேர்ந்து கொண்டேன்! வசுலா, நானே இந்தத் தோட்டத்தின் காவல்காரராக இருக்கிறேன், உயர்ந்த மரங்களை முறித்தெறிந்து, குட்டையான மரங்களை வளர அனுமதிப்பவர் நானே, அன்றி வேறு யாருமில்லை; படைப்பே, என் வார்த்தை ஓர் இடி முழக்கத்தைப் போல் உன்மீது இறங்கி வரும்! பிரமாணிக்க மற்றவர்களுக்கு ஐயோ கேடு! வசுலா, என்னை உன் இதயத்தில் வைத்துக்கொள், எங்கள் சமாதானத்தைக் கொண்டிரு;