இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 42, ஆகஸ்ட் 4, 1987 மீண்டும் சுவிட்சர்லாந்தில். நடந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கும் காரியத்தைப் பற்றி ஏறத்தாழ நான் பயப்படுகிறேன். இதுதான் சென்ற வாரம் கடவுள் பேசிய ஞான இரகசியங்களை அறியும் திறனாக இருக்குமோ? என் கடவுளா? என் நேசத்துக்குரியவளே, நான்தான்; ஆண்டவரே, நான் உம்மைச் சரியாகப் புரிந்து கொள்கிறேனா? புரிந்து கொள்கிறாய்! நேசமானது துன்புறும் எல்லோருக்கும் தக்கவிதமான எண்ணங்கள் மற்றும் அவஸ்தைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உன்னை உருவாக்கும்; உன் சொந்த அவஸ்தைகள் போலவும் துன்பங்கள் போலவும் அவர்களுடைய அவஸ்தைகளையும் துன்பங்களையும் நீ உணருவாய்; ஏதாவது துன்பங்களைப் பற்றி நீ கேள்விப்படும்போது, அல்லது காணும்போது, அல்லது யாராவது ஒருவர் பெரும் வேதனையில் இருக்கும்போது, வேதனைப்படுகிறவர் எவ்வளவாக அதை உணர்கிறாரோ, அவ்வளவாக நீயும் அதை உணரச் செய்யும் வரப்பிரசாதத்தை ஆண்டவராகிய நான் உனக்குத் தருவேன்; இதன் மூலம் அவர்களுடைய காயங்களுக்குள் முழுமையாக ஊடுருவி, அவர்களுடைய உணர்வுகளைப் பற்றிய ஒரு தெளிவான எண்ணத்தைக் கொண்டிருக்க உன்னால் முடியும்; வசுலா, அன்பே, நான் உனக்குத் தருகிற ஞான இரகசியங்களை அறியும் இந்தத் திறனைக் கொண்டு, நீ அவர்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருப்பாய்; அவர்கள் துன்புறும்போது நீயும் துன்பப்படு; நீ அவர்களுக்கு இதை மறுத்தால், நான் உனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருப்பேன், நீ அவர்களுடைய துன்பங்களைப் பகிர்ந்து கொள்வாய்; ஓ என் தேவனே, என் சரீரமானது இதை ஏற்றுக்கொள்ளுமா? என் ஆவி பயப்படுகிறது என்பதால் அல்ல, மாறாக என் சரீரம் பலவீனமானது என்பதால்தான்.... நான் உன் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் இறுதிவரை போதுமான பலத்தை உனக்குத் தருவேன் என்பதை மறவாதே; என்னை நம்பு, சிறியவளே, இது ஒரு வரப்பிரசாதம்; நான் என் குழந்தைகளை நேசிக்கும் அளவுக்கு நீயும் அவர்களை நேசி; என் பிரதிபலிப்பாக இரு; என்னோடும் அவர்களோடும் கலந்திரு; நான் உன்னை நேசிக்கிறேன், பக்திக்குரிய நேசத்தின் காரணமாக, நான் இந்த வரப்பிரசாதத்தை உனக்குத் தருகிறேன்; சோர்ந்து போகாதே, வா, நான் என் ஆணைகளை உனக்குத் தருவதன் மூலம் என் நேசத்தால் உன்னை நிரப்புவேன்; எல்லாத் துன்பங்களையும் உணர்வாய்; மகளே, நீ எனக்காக இதையெல்லாம் செய்வாயா? ஆம், என் தேவனே, இது உமது விருப்பமாக இருந்தால். வா, நேசம் உன்னை வழிநடத்தும்; நான் இதை சந்தேகப்பட்டிருக்கிறேன், ஏனென்றால்; மூன்று நாட்களுக்கு முன் தொலைக்காட்சி செய்தியில், நிலத்தடியில் சிக்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளைக் காட்டினார்கள். அந்த குழந்தைகளுக்காகவும், பெற்றோருக்காகவும் நான் வருத்தப்பட்டேன். அந்தப் பெற்றோருக்காக நான் ஜெபித்தேன். மறுநாள் கனடாவில் ஒரு சூறாவளியைக் காட்டினார்கள். திகிலடைந்த மக்கள் இன்னும் பயப்பட்டபடி அதைப்பற்றி பேசினார்கள். அதே இரவில் நான் அவர்களுக்காகவும் ஜெபித்தேன்; அவர்களுக்காக நான் வருத்தப்பட்டேன். ஆனாலும் அவர்கள் அதை அனுபவித்த அதே அளவுக்கு அல்ல. திடீரென கடவுள் தமது ஊடுருவும் ஒளிக்கதிரை என் மீது வீசினார். அது என் நெஞ்சைத் துடைத்து, என் முதுகின் வழியாக வெளியேறியதாக நான் உணர்ந்தேன். அது என்னைச் சுட்டெரித்து, எத்தகைய அவஸ்தையை எனக்குத் தந்தது என்றால், நான் பற்றி எரிவது போல உணர்ந்து, ஓடிப்போய்த் தண்ணீர் பருக விரும்பினேன்! அதன்பின் நான் உறங்குகையில் நான் எப்படி உணர்ந்திருக்க வேண்டும் என்பது பற்றிய மிக உயிரோட்டமான ஒரு காட்சியை அவர் எனக்குத் தந்தார். என் கனவில் என் சொந்த மகனே இறந்து போனான். நான் கடும் வேதனையோடு விழித்தெழுந்தேன். நான் இந்த பயங்கரமான அவஸ்தையில் இருக்கும்போது, தங்கள் குழந்தைகளை இழந்து போன அந்தப் பெற்றோருக்காக நான் உடனடியாக ஜெபிக்க வேண்டும் என்று கடவுள் என்னிடம் கூறினார். அவர்கள் என் சொந்த குழந்தைகள் என்பது போல, நான் பக்தி பற்றுதலோடு ஜெபித்தேன். அதன்பின் நான் உறங்கினேன். உடனடியாக கடவுள் மறுபடியும் நானே ஒரு சூறாவளி காற்றில் சிக்கிக் கொள்வது போன்ற ஒரு காட்சியை எனக்குத் தந்தார். நான் மரணத்தின் அவநம்பிக்கையுள்ள அச்சங்களுக்கு உள்ளானேன். அவர் மீண்டும் என்னை எழுப்பி, இதை அனுபவித்தவர்களுக்காக ஜெபிக்குமாறு என்னிடம் சொன்னார். நான் இன்னும் அந்தப் பேரழிவின் உயிரோட்டமுள்ள காட்சியின் பாதிப்பில் இருந்தபடியே பக்தியார்வத்தோடு ஜெபித்தேன். ஆகஸ்ட் 5, 1987 இயேசுவா? ஏகோ, இமேயி; குறிப்பு: கிரேக்க மொழியில் "நான் இருக்கிறேன்" என்பது பொருள். இந்த வரப்பிரசாதத்திற்காக உமக்கு நன்றி. இது மற்றவர்களையும் போசிப்பதற்காகத்தான் தரப்பட்டது என்றாலும், இது என்னோடும் இருக்கிறது; நீயும் நானும் மணிக்கணக்காக ஒன்றாக இருப்போம்; வசுலா, ஆவியானவரிடமிருந்து வருவதை உலக ஞானிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா? அதிகாரத்தில் இருக்கிற அனைவரும் தங்களை ஞானிகள் என்று கூறிக்கொள்வோரும் உன்னை ஏளனம் செய்வார்கள், உன்னை நிந்திப்பார்கள், உன்னை மனச்சோர்வடையச் செய்வார்கள், உன்னை விமர்சிப்பார்கள்; தத்துவவாதம் ஆன்மீகத்தோடு ஒப்பிடப்பட முடியாது என்ற முக்கியக் காரணத்தினால்; ஆகவே, நேசமே, உன்னை வேட்டையாடு வரும் ஓநாய்களுக்காக ஆயத்தமாயிரு; அஞ்சாதே, நான் உன் அருகில் இருப்பேன்; நான் பெருமூச்சு விட்டேன். வசுலா, எல்லாமே கடந்து போகிற ஒரு நிழலே; அதைரியப்படாதே; நான் உன் அருகில் இருப்பேன்; அதன்பின் இந்த பரதேசத்தில் இருப்பதில் நான் எவ்வளவு பொருத்தமற்றவளாக உணர்கிறேன் என்றும், அதை நான் எவ்வளவு வெறுக்கிறேன் என்றும் நினைவுபடுத்திக் கொண்டேன். என் கடந்த கால வாழ்வில் எனக்கு உல்லாசமாக இருந்ததாக, நான் நினைத்த காரியம் இப்போது ஒரு வேதனையாக இருக்கிறது, இந்தக் காரியங்களை இதற்கு மேலும் என்னால் விரும்ப முடியாது. என்னால் அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது. நான் இங்கே பொருத்தமற்றவளாக இருக்கிறேன். எனக்குத் தெரியும். என் மீது சாய்ந்து கொள்; நான் திக்கற்றவளாக உணர்ந்தேன். வசுலா, வசுலா, இந்த உலக இன்பங்களை முன்பு போல உன்னால் துய்த்து அனுபவிக்க முடியாது, ஏனெனில் இது என் சித்தம்; அந்தக் காரியங்கள் உன்னிடம் தங்கி விடுவதை நான் விரும்பவில்லை; இயேசுவா? நான்தான்; என் கரங்களுக்குள் பார்; பார் வசுலா, அவை இரத்தம் வடிக்கின்றன; வசுலா, என் திருச்சபைக்கு புத்துயிர் ஊட்டு; நான் சொல்வதைக் கேள், இந்த இரத்தம் முழுவதும் என் கரங்களில் வழிந்து இறங்குவதை நீ பார்க்கிறாயா? நான் துன்பப்படுகிறேன்; ஆண்டவரே, இதையெல்லாம் எனக்குக் காட்டி, ஏன் எனக்கு இவ்வளவு அதிகமாக வேதனையைத் தருகிறீர்? அந்தக் காட்சி மிக உயிரோட்டமானதாக இருந்தது. அவருடைய திரு இரத்தம் இந்தக் குறிப்பேட்டின் மீது துளிர்ந்து விடும் என்று நான் நினைத்தேன். அன்பே, இவ்வளவு அதிகமான ஆத்துமங்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதைக் கண்டு நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பதை நீ உணர்ந்து கொள்ளச் செய்யும்படி நான் இறுதிவரை உன்னைப் பயன்படுத்த விடு; நான் உம்மை நேசிக்கிறேன். என்னோடு இரு; "எங்களோடு." நான் எப்போதும் உனக்கு நினைவுபடுத்துவேன்; நாங்கள், என்னை நேசி; குறிப்பு: "நாங்கள்" என்று சொல்வதில் அவர் ஓர் ஆசிரியர் பேசுவது போல தம் சுட்டு விரலால் அதைச் சுட்டிக்காட்டினார். ஆகஸ்ட் 7,1987 இயேசுவா? நான்தான்; இயேசு மீண்டும் தாம் கசையால் அடிபடும் காட்சிகளை எனக்கு காட்டிக் கொண்டிருந்தார். அவருடைய திருமுகத்தின் வலது பக்கம் வீங்கி இருந்தது. மீண்டும் நான் நொறுங்கிப் போவதாக உணர்ந்தேன். வசுலா, நான் உங்கள் எல்லோரையும் மிக அதிகமாக நேசிக்கிறேன்! சீக்கிரம்..... சீக்கிரம்..... குறிப்பு: நான் சொல்ல வந்தது என்னவெனில், "நீர் இன்னும் அதிகம் துன்பப்படாதபடி உம் சித்தத்தை துரிதமாக நிறைவேற்றும் என்பதுதான். அவர் துன்புறுவதை என்னால் தாங்க முடியவில்லை." என் வல்லமையைக் கொண்டு நான் இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; வசுலா, நான் என்னுடைய சென்ற வாரச் செய்தியைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்; என் ஒளியில் ஒரு சிறிதளவை மட்டும் நான் விலக்கிக் கொண்டேன் என்பதை நீ அறிவாயா? இதை நீ உணர்கிறாயா? உணர்கிறேன். நல்லது; மிகக் கொஞ்சமாக விலக்கிக் கொள்வதன் மூலம், காட்சி தியான நிலையை நீ வாழ்ந்து பார்க்கும்படியும், அதில் செழிப்புறும்படியும், அதன் மூலம் கனி தருபவளாக ஆகும்படியும் காட்சித் தியான நிலைக்கு உன்னை உயர்த்தி, நீ என்னை அதிகமாகத் தேடும்படி செய்து, நான் உன் அறிவுக்கு ஊட்டமளிக்கிறேன்; இதற்குள் என்னைக் கொண்டு வருவதற்கு முன் நீர் எனக்கு எப்படி உணவளித்தீர்? நான் உன் மோசமான சூழ்நிலைகளில் உனக்குப் புகலிடங்கள் தந்தேன்; அவை உன் அறிவுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன; இப்போது தியானத்தின் இன்னும் உயர்ந்த ஒரு நிலைக்குள் நீ ஊடுருவிச் செல்லும்படி செய்ய நான் விரும்புகிறேன்; வசுலா, நீ முன்னேற வேண்டும்; இந்த மிகச்சிறிய மாற்றத்தைக் கொண்டு, நான் உன் உணவை அதிக சக்தியுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்; இதை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; எல்லாவிதத்திலும் நான் உன்னைப் பற்றற்றவளாக்குவேன் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன், இல்லையா? ஆம், சொல்லியிருக்கிறீர், ஆண்டவரே. நீ பற்றற்றவளாய் இருப்பதால் நான் உன் ஆன்மப் புலன்களுக்குப் புத்துயிர் ஊட்டுவேன்; நீர் கூறிய, இரகசியங்களைக் கண்டறியும் உள்ளொளியை எனக்கு தருவீரா? ஆம், இரகசியங்களைக் கண்டறியும் உள்ளொளியை இந்த ஞான வரப்பிரசாதத்தை உனக்கு தருவது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்; ஆண்டவரே, மற்றவர்களுக்கு எப்படி? என் குழந்தைகளைப் புரிந்து கொள்ள உன்னால் இயலும்; இதனால் அவர்களுக்கு உதவி செய்ய உன்னால் இயலும்; என் ஒளியை நான் மிகக் கொஞ்சமாக உன்னிடமிருந்து விலக்கிக் கொள்வதைக் கைவிடுதல் என்று கூறாதே; வசுலா, நான் பரிசுத்த தனத்திற்குள் உன் ஆன்மாவை முன்னேற்றுகிறேன். அவ்வளவுதான்; ஆண்டவரே, நீ எனக்குக் கற்பித்திருக்கிற எல்லாவற்றையும் நான் இழந்து, துடுப்புகள் இல்லாத ஒரு படகைப் போல் ஆகி, பின்னோக்கி அடித்துச் செல்லப்பட்டு விடுவேனோ என்று பயந்து கொண்டிருந்தேன்! நான் மிகுந்த பதட்டம் அடைந்திருந்தேன்! வசுலா, நான் உன்னைச் சுத்திகரிக்க வேண்டியுள்ளது. ஓர் ஆத்துமத்தை சுத்திகரிக்கும் போது, அந்த ஆத்துமம் பயங்கரமான அச்சங்கள் மற்றும் கடும் வேதனைகளைக் கடந்து செல்லும் என்பதை அறிந்துகொள்; என் மீது நாட்டம் கொள்வதால், இந்த ஆசீர்வாதத்தின் நிலைக்கு நீ உயர்த்தப்படுகிறாய் என்று உனக்குச் சொல்கிறேன்; அது என்ன ஆசீர்வாதம்? அது காட்சி தியான வரப்பிரசாதம்; நீ உன்னை முழுமையாக எனக்குத் தருவதன் மூலம் உன் நேசம் உத்தம நிலையை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இயேசுவே, என் ஆத்துமம் உமக்காக ஏங்குகிறது. சிறியவளே, நானும் உனக்காக ஏங்கவில்லையா? நாம், நாங்கள்; வா, நாம் போவோம்; குறிப்பு: நாம், நாங்கள், இந்த இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தி தம்மோடு பேசும்படி அவர் எனக்கு நினைவூட்டுகிறார். இயேசு ஒரே சமயத்தில் இரண்டு காரியங்களை எனக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்து கொள்கிறேன். அவை காட்சி தியானமும், ஞான இரகசியங்களைக் கண்டறியும் உள்ளுணர்வும். ஜூலை 26 அன்று கடவுள் இந்த மாற்றத்திற்காக என்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார் போல் இருந்தது. ஏனெனில் அடுத்த நாளே அவரது ஒளி என்னிடமிருந்து லேசாக விளக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். நான் கடுமச்சப்பட்டேன். உடனடியாக என் ஆன்மா இதற்கான காரணத்தைத் தேடத் தொடங்கியது. ஏனெனில் நான் குற்றம் உள்ளவளாகவும், பாவங்கள் நிறைந்தவளாகவும் இருக்கிறேன். தமது ஒளியை லேசாக என்னிடமிருந்து விலக்கிக் கொள்ளும் அளவுக்கு இவ்வளவு அதிகமாக அவரை கோபம் கொள்ளச் செய்த அந்தப் பாவங்கள் எவையாக இருக்கக்கூடும் என்று நான் தேடினேன். நான் அவரை நோகச் செய்துவிட்டேனா? அல்லது இதை எனக்குச் செய்வது சாத்தானாக இருக்குமோ? காரணம் எதுவாக இருந்தாலும், இதனாலேயே நான் என் இரட்சகரோடு இன்னும் இருக்கமாக ஒட்டிக்கொள்ள வேண்டும் என்றும், வழக்கத்தை விட அதிகமாக ஜெபிக்கவும், அதிகம் தியானிக்கவும் வேண்டும் என்றும் எனக்குக் கொடுக்கப்படும் மற்ற எல்லா வரப்பிரசாதங்களையும் முழுமையாகப் பயன்படுத்தவும், அவரது பிரசன்னத்தை உணரவும், முன் எப்போதையும் விட அதிகமாக அவரோடு பேசவும், அவருடைய பிரசன்னத்தை ஒருபோதும் மறவாதிருக்கவும், முன் ஒருபோதும் உழைத்திராத அளவுக்கு மிகக் கடுமையாக உழைக்கவும் வேண்டும் என்று நான் நினைத்தேன். இது சாத்தானாக இருந்தால், அவன் கோபத்தால் புகைந்தபடி ஓடிப்போவான். ஆகவே, நான் அவனைக் கடும் கோபம் கொள்ளச் செய்து, அவன் என்னை விட்டுச் செல்லும்படிச் செய்வேன். இது கடவுளிடமிருந்து வருகிற ஒரு பரிசோதனையாக இருந்தால், அதில் ஒரு நல்ல மாணவியைப் போல தேர்ச்சி பெற நான் விரும்புகிறேன். அவர் புன்னகைப்பதை நான் விரும்புகிறேன். பல நாட்கள் கடந்தன. எந்த மாற்றமும் இல்லை. என் பலம் என்னிடமிருந்து விலகத் தொடங்கியது. நான் இப்போது அவநம்பிக்கையின் அச்சத்திற்கு உள்ளாகத் தொடங்கினேன். அதிக ஆர்வத்தோடும் பக்தியோடும் அவருக்கு ஊழியம் செய்ய நான் விரும்பினேன். ஆனாலும், இதெல்லாம் ஏன் எனக்கு உதவவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம் நான் நம்பியது இதுதான். அதன்பின் என் இரட்சகரும் போதகருமானவர் என்ன நடந்து கொண்டிருந்தது என்று எனக்கு விளக்கினார். அவர் என்னை கைவிட்டு விட்டதாக நான் நினைத்தபோது, அவரோ என்னை தியானத்தின் இன்னும் மேலான ஒரு நிலைக்கு உயர்த்தி, என் அறிவை அதிகரித்து, ஒரு பரம இரகசியமான ஒளியைக் கொண்டு அதை எனக்குள் ஊற்றி, ஞான இரகசியங்களை அறியும் திறனால் என்னை போஷித்து, என்னை சுத்திகரித்துக் கொண்டிருந்தார். குறிப்பு: என் சொந்த உணர்வுகளை நான் விளக்கும் போதும் கூட, கடவுள்தான் எனக்காக அவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படை. இந்த ஒளியை விளக்குவது எப்படி என்று நான் தயங்கிக் கொண்டிருந்தபோது, "நுட்பமும், நேர்த்தியுமானது" என்ற பொருள் தரும் "சப்டில்" என்ற வார்த்தை எனக்கு உறக்கச் சொல்லப்பட்டது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று அகராதியில் தேடினேன். எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆகஸ்ட் 10, 1987 நேற்றிரவு ஆண்டவரால் நான் எழுப்பப்பட்டேன். அவர் என்னிடம் மீண்டும் என்னை முழுமையாக அவருக்கு அர்ப்பணிக்குமாறு கேட்டார். அப்போது நான் சொன்ன வார்த்தைகள்: "இந்த உலகத்தின் பாவங்களின் மனுவுருவாக மட்டுமே இருக்கிற என்னைத் தயை கூர்ந்து கண்ணோக்குவதற்காக, தந்தையே, உமக்கு நன்றி. நான் உம்மை மறுதலித்தபோது, நீர் எனக்குக் காண்பித்த இரக்கத்திற்காக உமக்கு நன்றி. நீர் என் மீது கொண்டுள்ள நேசத்திற்காக உமக்கு நன்றி. என் குற்றத்தை மீறி, நீர் என்னை உம் இதயத்தினுள் உயர்த்தி இருக்கிறீர். உம் அருகில் இருக்க, உம் பாதங்களின் அருகில் இருக்க என்னை அனுமதித்தருளும். ஏற்கனவே எனக்கு இதை அனுமதித்திருப்பது என் தகுதிக்கும் மேலானது. உம்மிடம் பேச என்னை அனுமதித்திருப்பது என் தகுதிக்கு மேலானது. என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை, தந்தாய். நான் என்னை முழுமையாகக் கையளிக்கிறேன். நான் ஒன்றுமில்லாமை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த ஒன்றுமில்லாமை உனக்குச் சொந்தமாய் இருக்கிறது. என்னை ஒரு மூலையில் வீசிவிட நீர் விரும்புகிறீர் என்றால், அப்படியே செய்யும். உம் இருதயத்தில் என்னை வைத்துக்கொள்ள விரும்புகிறீரா? அது என் தகுதிக்கு மேலானதாய் இருக்கிறது. நீர் என்ன விரும்பினாலும் சரி, ஆண்டவரே, நான் உமக்கு நன்றி மட்டுமே கூறுவேன். உம்மை நான் நேசிப்பேன். மற்றவர்களுக்கு உதவ என் கடைசி பலம் இருக்கும் வரை, நீர் விரும்பினால் என்னைப் பயன்படுத்தும். நீர் என்னை முழுமையாகப் பயன்படுத்த, உம்மால் இயலுமாறு என்னைத் தகுதி உள்ளவளாக்கும். நான் உம்முடையவள், உம்முடையவள் மட்டுமே, ஈனமானவள் என்றாலும், நான் உம்மை நேசிக்கிறேன். பிற்பாடு: இயேசுவா? நான்தான்; வசுலா, நான் உனக்குக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது ஆகஸ்டில்தான்; வசுலா, இதுவே நமக்கிடையே ஒரு விதமான ஆண்டு நிறைவாக இருக்கிறது; களிகூரு! நேசமே, இது நம் திருநாள்; நான் நேசத்தின் மலர்க் கிரீடம் ஒன்றை உன்மீது வைக்கவிடு; வா, என்னோடு கொண்டாடு; இப்போது நான் உன்னைப் போகவிடுவேன், ஆனால் என் ஆகஸ்டைக் கொண்டாட என்னிடம் வா; குறிப்பு: முன்னேற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக நான் அவசரமாகப் போக வேண்டி இருந்தது. இதை அவர் எனக்குச் சொன்னபோது, நான் ஓடிப்போய் என் பழைய குறிப்பேடுகளில் ஆகஸ்ட் தேதியைத் தேடினேன்; என் சம்மனசானவர் தானியேல், காவல் சம்மனசானவர் எனக்குச் சொன்னதைக் கேட்டபோது, நான் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். அவர் என்னிடம்: தானியேலாகிய நான், பிதாவாகிய சர்வேசரனுடையவும், அவருடைய நேச மகனாகிய இயேசு கிறிஸ்துவினுடையவும், பரிசுத்த ஆவியார் உடையவும், திருப்பெயரால் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; இருதயத்தில் பரிசுத்தமானவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" என்றார். அதன்பின் என் சம்மனசானவர் என்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் யாவே எனக்குக் கற்பிக்கத் தொடங்கினார். "சர்வேசரனுக்கு மகிமையுண்டாவதாக, நான் செய்ய வேண்டுமென கடவுள் விரும்புகிற எல்லாவற்றையும் நான் செய்துவிட்டேன்" என்று சொல்லி தானியேல் முடித்துக் கொண்டார். நான் விரைந்தோடி என் ஒன்றிவிட்ட சகோதரியிடம் இதைக் கூறினேன். நான் மகிழ்ச்சியால் பறந்து கொண்டிருந்தேன்! நான் கடவுளோடு இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்! அவளும் மகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும், இதைப் புரிந்து கொள்ளாத மற்றவர்கள், நான் கடவுளிடம் காதல் கொண்டிருக்கிறேன், அதாவது தவறான முறையில் நான் அவரை நேசிக்கிறேன் என்று நம்பக்கூடும் என்று அவள் என்னை எச்சரித்தாள். அவள் சொன்னது என்னை வெகுவாக துயரப்படுத்தி, என்னை அச்சுறுத்தியது. அவள் சொன்னது சரியாக இருக்கக்கூடுமா? இயேசுவா? மகளே; இதைப்பற்றி நான் பயப்படுகிறேன். எனக்குத் தெரியும், வசுலா, என் அம்மாவை உன் கூட வைத்துக்கொள்; உன் எண்ணங்கள் எவ்வளவு தவறானவை என்று உனக்குப் புரிய வைக்க நான் விரும்புகிறேன்; உன் தேவனாகிய என்னை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்று விரும்புவது போலவே, நீயும் என்னை நேசிக்க நான் உனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன்; நான் ஒரு வருட நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்; நேசமே, நீ என்னுடைய சமாதானம் மற்றும் நேசத்தின் மகளாக இருப்பாயா? வெறுப்பினால் நிகழ்ந்த பல மனிதக் கொலைகளை நான் கண்டிருக்கிறேன்; நான் என் இராஜ்ஜியத்தை நித்திய சமாதானத்தால் நிரப்பி இருக்கிறேன்; என் படைப்பு சமாதானத்திற்காக பாடுபடுவதை நான் பார்க்கவே மாட்டேனா? சிறியவளே, உன் இழிநிலையையும், மறுதலிப்புகளையும், தோல்விகளையும் மீறி, நான் உன்னை அணுகி வந்திருக்கிறேன்; நான் நேசத்தின் தேவனாக இருக்கிறேன்; நேசமுள்ள கண்களோடு என் பிள்ளைகளை நான் கண்ணோக்குகிறேன்; நான் எல்லோரையும் விடுவிக்கும் வரையில், அவர்கள் என்னை அடையாளம் காண கற்றுக் கொள்வார்களாக; ஒவ்வொரு ஆன்மாவும் பயமின்றி என்னை நெருங்கி வருவதாக; நான் அவர்களை விரிந்த கரங்களோடு ஏற்றுக் கொள்வேன் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களாக; நான் ஒரு நேசமுள்ள தந்தையாக இருப்பதால், கற்களைக் கூட பக்தியோடு என்னைப் பின் செல்பவர்களாக மாற்ற என்னால் முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக; அவர்களது ஆன்மாக்களை நான் எப்படி விடுவித்து, அவற்றிற்கு உண்மையான சுதந்திரத்தைத் தருகிறேன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக; வசுலா, நான் உன்னைக் கைவிடமாட்டேன்; ஆனாலும், உன் பயத்தின் காரணமாக, நீ எவ்வளவு தவறாக நினைக்கிறாய் என்பதை என் தாயார் உனக்குக் கற்பிப்பார்கள்; நான் எப்போதும் உனக்கு அருகில் இருப்பேன்; நாங்கள், நாம்? சரி, ஆண்டவரே. நான் புரிந்து கொண்டேன். புனித மாமரி கொஞ்ச காலத்திற்கு எனக்குக் கற்றுத் தரப்போகிறார்கள். என் பயங்கள் தவறானவை என்று எனக்கு நிரூபிக்கப் போகிறார்கள். பத்தாம் தேதிக்கும் 14 ஆம் தேதிக்கும் இடையில், புனித மாமரி என் அருகில் இருப்பதையும், என்னோடு பேசுவதையும் நான் உணர்ந்தேன். என் உணர்ச்சிப் பூர்வமான உணர்வுகள் இயேசுவினுடையவை போல பலமானவையாக இருந்தன என்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். இரண்டும் ஒன்றே. ஆகஸ்ட் 14,1987 என் தேவனா, நான்தான்; என் இன்றைய வார்த்தைகளைப் பெற்றுக்கொள்; "என்னைத் தேடுவோர் கண்டடைவர்;" நேசமே, எப்போதும் பக்திப் பற்றுதலோடு என்னை நேசித்து, என்னை மகிமைப்படுத்து; ஆரியானிடம் என்னைப் பற்றி கூறி, அவனிடம் "விசுவசி... விசுவசி... விசுவசி... என்று கூறு; வா, அன்பனே, நான் நிஜமாகவே உன்னை அழைத்திருக்கிறேன், சகோதரனே! நான் எவ்வளவோ உன்னை நேசிக்கிறேன்! உன் இரட்சகராகிய நான், உனக்கு என் அன்பைத் தருகிறேன், நானே சமாதானம்; வா; என்னிடம் வந்து, என் காயங்களுக்குள் ஆழமாக ஊடுருவு, என் இருதயத்தை உணர்ந்து பார்; என்னை உணர்ந்து பார்.... என் காயத்திற்குள் வாழு, சகோதரனே." என் காயத்திற்குள் வாழு, சகோதரனே" என்று நான் சொல்வதாகச் சொல்; மலரே, நேசமே, இங்கேயே இரு; இதோ, என் தாயார்: குறிப்பு. நான் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆ வசுலா, என்ன நடக்கும் என்று நான் உனக்குச் சொல்ல அனுமதி; நீ என் திருமகனை மகிமைப்படுத்துவாய்; மகளே, அவரிடமிருந்து உட்கொள்; ஓ, புனித மாமரியே, நீங்கள் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறீர்கள்! தொடக்கத்திலிருந்தே, நீங்களே எனக்கு உறுதுணையாக இருக்கிறீர்கள். கடவுள் மீது எவ்வளவு நேசத்தை உணர்ந்தேனோ, அதே அளவு அன்பை நான் மாமரியின் மீதும் உணர்ந்தேன். அவர்கள் மிகுந்த தாயுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்! என் பதக்கத்தை எப்போதும் அணிந்துகொள், ஏனெனில் நான் அதை உன்மீது ஆசீர்வதித்திருக்கிறேன்; எங்கள் சமாதானத்தைக் கொண்டிரு; அதன்பின், நான் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜெபத்தில் அவர்களை வணங்கினேன்.