இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 46. செப்டம்பர் 12, 1987 பிரமாணிக்கம் என்னோடு இருக்க எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறது; குழந்தாய், என்னை நேசித்து, எனக்குப் பிரமாணிக்கமாய் இரு; என் பணிகள் ஞானிகளின் கண்களால் காணப்படாதவை; நான் அவர்களிடமிருந்து அவற்றை மறைத்து வைத்திருக்கிறேன்; என் மறைவான ஞானத்தை நான் தாழ்ச்சியுள்ளவர்களுக்கும், சாதாரண சிறு குழந்தைகளுக்கும் தருகிறேன்; மகளே, நான் அரூபியாக இருக்கிறேன்; குறிப்பு: 2 கொரிந்தியர் 3: 17, மற்றும் 1 ராயப்பர் 3: 11. அரூபி, அரூபிக்கு கற்பிப்பதுபோல, நான் உன்னை அணுகி வந்து, உனக்குக் கற்பித்திருக்கிறேன்; என் போதனைகள் ஞான முறையில் உனக்குத் தரப்பட்டன; தத்துவவாதம் கற்பிக்கப்படுவதுபோல அவை கற்பிக்கப்படவில்லை; வசுலா, வரவிருக்கிற காரியத்தைப் பற்றி அறிந்திரு; ஏனெனில் ஞான ரீதியாக இல்லாத மனிதன் இந்த செயல்கள் கடவுளின் ஆவியானவரிடமிருந்து வந்ததாக ஏற்றுக்கொள்ள மாட்டான்; அவன் அவற்றை மறுதலிப்பான்; ஏனெனில் அவை அவனுடைய புத்திக்கு எட்டாதவையாக இருக்கின்றன; ஏனெனில் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு மட்டும்தான் மனிதர்கள் இதைப் புரிந்துகொள்ள முடியும்; ஆண்டவராகிய நான், உலக ஞானிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறேன்; நான் உண்மையாகவே உனக்கு சொல்கிறேன், அவர்கள் என்னைத் திருப்திப்படுத்தவில்லை; அன்று மாலையில், என் ஆன்மா ஓர் அறியப்படாத காரணத்திற்காகத் துன்பப்பட்டது. நான் கடவுளுக்காக ஏங்கினேன்; நான் மனஸ்தாபப்பட்டேன். நான் சொல்வதை அவர் கேட்க விரும்புகிறாரா என்று நான் அவரிடம் கேட்டேன். என் மனஸ்தாபத்தைக் கேட்க அவர் ஒரு சில கணங்கள் ஒதுக்குவார் என்றால், மீண்டும் பாவங்களின் சுமையோடு நான் கடவுளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.... செப்டம்பர் 13, 1987 இயேசு எட்டாம் தேதி அன்று திவ்ய நன்மை வாங்க என்னை அழைத்தார். நான் இன்று போய் அவரைப் பெற்றுக்கொண்டேன். பரலோகத்தில் உள்ள பிதாவே, என் அழிவுக்கு மனிதர்கள் காரணமாக இருக்க அனுமதிக்காதீர்; நீர் ஏற்கனவே எனக்குக் கொடுத்ததை பறித்துக் கொள்ள அவர்களை அனுமதிக்காதீர். அவர்களுடைய உணர்ச்சியற்ற நிலை என் அச்சமாய் இருக்கிறது. உம் பரலோக வேலைகளின் மீது அவர்கள் தங்கள் இருதயங்களை மூடிக்கொள்ளும் போதும், தங்கள் காதுகளை மூடிக்கொள்ளுகிற போதும், நான் மிகப் பலவீனமாகவும், அவர்களால் எளிதில் தாக்கப்படக்கூடியவளாகவும் இருக்கிறேன். ஒருவன் ஒரு நாணலை முறிப்பதுபோல், ஒரே வார்த்தையைக் கொண்டு அவர்கள் என்னை எளிதாக முறித்துவிட முடியும். ஓ வசுலா, வசுலா, என் கரத்தைப் பிடித்துக்கொள்; அவர்கள் உன்னைத் துன்புறுத்துகிறார்கள் என்றால், அவர்கள் என்னைத்தான் துன்புறுத்துகிறார்கள்; அவர்கள் உன்னை ஏளனம் செய்கிறார்கள் என்றால், உண்மையில் அவர்கள் என்னைத்தான் ஏளனம் செய்கிறார்கள்; நேசம் துன்புறுகிறது; தந்தாய், இந்த மக்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். நேசம் உனக்கு உதவும்; பரிசுத்த தனத்தால் என்னை அலங்கரி, என் பலிபீடமாய் இரு; என்னோடு என் சிலுவையைச் சுமந்துகொள்; பலிபீடமே, வேதனைப்படாதே; நான் உம்மை வாழ்த்துகிறேன், பிதாவே. நான் உமக்காக ஏங்குகிறேன். பிற்பாடு, இந்த ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13 ஆம் நாள், இந்த வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை, என் ஆத்துமம் ஒரு முழுமையான வேதனையை உணர்ந்த இரண்டாவது தடவையாய் இருந்தது. விளக்கப்பட முடியாத ஒரு காரணத்தால், விளைந்த துயரமாக இது இருந்தது. என்னால் இதைத் தாங்கிக்கொண்டு உயிர் வாழவே முடியாது என்று நான் நினைக்க செய்த ஒரு பயங்கரமான கசப்பாக அது இருந்தது. உடல் ரீதியாகவும் அது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. என் நெஞ்சம் பாரமாய் இருந்தது. என் கரங்கள் முழுவதும் கடுமையாக வலித்தன. இயேசு என்னை அழைத்தார். வசுலா, என் ஒரு பாகமாக இணைந்து கொண்டு, என் வேதனையை உணர்ந்து பார்; அவர்கள் என்னை மீண்டும் சிலுவையில் அறைகிறார்கள்; ஏன், ஏன் அவர்கள் இதை உமக்குச் செய்கிறார்கள்? அன்பே, அவர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம், அவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்பதுதான்; இதைச் செய்பவர்கள் யார்? அநேக ஆத்துமங்கள்; நான் அவர்களை நேசிக்கிறேன், இருந்தும், அவர்கள் என்னை நிந்தித்து வெறுக்கிறார்கள்; வசுலா, என் வேதனையைப் பகிர்ந்துகொள், என்னோடு ஒன்றாய் இரு; நான், நாங்கள், ஆண்டவரே? ஆம்,மகளே, மனிதர்களின் பிரமாணிக்கமின்மை காரணமாக நாம் ஒன்று சேர்ந்து துன்பப்படுகிறோம்; என் கரத்தை சேர்த்துப் பிடித்துக்கொள், சேர்ந்து; சேர்ந்து, ஆண்டவரே. செப்டம்பர் 15, 1987 இயேசுவே, அவர்கள் தொடர்ந்து உம்மை காயப்படுத்திக் கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. வேகமாக அந்த முட்களை அகற்றும்! ஓ, மகளே, நான் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக உனக்குச் சுட்டிக்காட்டுவேன், அவை எங்கே குத்தப்பட்டுள்ளன என்று நான் உனக்குச் சொல்வேன்; என் பலத்தைக் கொண்டு நீ அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பிடுங்குவாய்; என்னைக் காயப்படுத்திய அந்த முட்களுக்குப் பதிலாக, என் பேரின்பங்களின் தோட்டத்திலிருந்து மலர்களை மட்டும் நீ எனக்கு ஒப்புக்கொடுக்க நான் உன்னை அனுமதிப்பேன்; ஏனெனில் அவை என் ஒளியின் கீழ் வளர்க்கப்பட்டு, பூமியின் மீது தங்கள் இனிய நறுமணத்தை வெளியிட்டு என் தோட்டத்தை அலங்கரிக்கின்றன; என் இருதயத்தினுள்ளும், அதன் மிக அன்யோனியமான ஆழங்களுக்குள்ளும் நான் இன்னும் ஈட்டியின் முனையைக் கொண்டிருக்கிறேன்; வசுலா, இதுவும் கூட அகற்றப்படும்; என் பலத்தைக் கொண்டு நான் அதை வெளியே இழுப்பேன்; இந்த முறை நான் அவர்களைத் தண்டியாமல் விடமாட்டேன்! என் ஆட்டுக்குட்டிகளை ஒன்று சேர்த்து அவற்றிடம், "ஆண்டவராகிய நான் அவற்றை ஆசீர்வதிக்கிறேன்" என்று சொல். செப்டம்பர் 17,1987 வசுலா, அவர் என் செய்தியைக் கேட்கும்படி நான் அவரிடம் உன்னை அனுப்புகிறேன்; குறிப்பு: கிரேக்க ஆர்த்தராக்ஸ் குரு அலெக்ஸாண்ட்ரோஸ். உன்னை ஏற்றுக்கொள்ளும்படி நீ அவரிடம் கேட்பாயா? உன்னை வழிநடத்தும்படி அவரிடம் கேட்பாயா? குறிப்பு: எனக்கு அறிவுரை தரும்படி இந்தக் குருவிடம் நான் கேட்க வேண்டும் என்பது இயேசு கூறுவதன் பொருள். ஆண்டவரால் தரப்பட்ட ஒரு காட்சியில், உலகில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் பசாசுக்கள் திடீரென வீசி எறியப்படுவதை நான் கண்டேன். அவை நின்ற வறண்ட திலம் அதிர்ந்து பிளந்தது போல தெரிந்தது. அது ஒரு முஷ்டியை போல தன்னையே உயர்த்தி, அவற்றை தூக்கி எறிந்தால், அவை ஆதரவற்றவையாக, பலமின்றி மீண்டும் பின்னோக்கி கீழே விழுந்தன. நான் என் பிள்ளைகளை ஒன்றுபடுத்தவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் வருகிறேன்; செப்டம்பர் 18, 1987 இந்த வெள்ளியன்று கிரேக்க ஆர்த்தராக்ஸ் கோவிலுக்குள் அந்த கிரேக்க குருவை நான் சந்தித்தேன். நான் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னேன். நான் சொன்ன எல்லாவற்றையும் கேட்டு ஏற்றுக்கொண்டார். இப்போது இந்த வெளிப்படுத்தலை ஆராய அவர் விரும்புகிறார். செப்டம்பர் 20, 1987 மகளே, இந்த நேரம் நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை நீ புரிந்து கொண்டிருக்க வேண்டும்; என்னை நம்பு, என் வசுலா, மிக அநேக வெளிப்பாடுகளை என் சுவாசமாக நான் உன்னில் ஊதுவேன்; உன்னை என்னிடம் முழுமையாகக் கையளித்துவிடு, என் விரல் உன்மீது என் வார்த்தையைப் பொறிக்கட்டும்; வா, சிறியவளே, வந்து என்னை சீராட்டு; சரி, ஆண்டவரே. இதன் மூலம் நான் வைத்திருக்கிற பரிசுத்த அடக்கத்துகளின் பெரிய புகைப்படத்தில், அவரை நான் வருடிச் சீராட்ட வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நான் தியானிக்கும் போதும், அவரிடம் பேசும்போதும், அவருடைய படத்தின் மீது என் கரத்தை நீட்டி, அவருடைய திருக்காயங்களை வருடுவதும், இரத்தத் துளிகளை கழுவி துடைக்க விரும்புபவளைப் போல், அவருக்கு வேதனையில் நிவாரணம் தருவதும் என் வழக்கமாகி இருக்கிறது. என்னை முழுமையாக கிரகித்துக் கொள்கிற என் ஞானத்தின் காரணமாக, இதை என்னை அறியாமலே நான் செய்கிறேன். வசுலா, கரபந்தாளில் என்னுடையவும், என் திருமாதாவினுடையவும் காட்சிகள் நம்பகமானவை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்; வசுலா, நான் சொல்வதைக் கேள்; என் தாயார் என் தேர்ந்து கொள்ளப்பட்ட ஆன்மாக்களுக்கு காட்சி தந்து, தனது வரப்பிரசாதத்தினால் அவர்களை ஒளிர்விக்கும் ஒவ்வொரு முறையும் நான் அவர்கள் பக்கத்தில் நின்றேன்; ஆனால் எந்த மனிதனாலும் என்னைப் பார்க்க முடியவில்லை; சில சமயங்களில் நான் என்னை மகிமைப்படுத்தியவர்களை ஆசீர்வதிக்கும்படி ஒரு பச்சிலம் குழந்தையாகத் தோன்றினேன்; மகளே, அந்த காட்சிகள் நடைபெற்ற இடங்கள் இன்னும் அதிகமாக மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அந்தப் புனித ஸ்தலங்களை ஆசீர்வதிப்பதன் மூலம் பாப்பரசரின் பரிசுத்த ஆசனம் என்னை மகிமைப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்; வசுலா, நான் லூர்தையும் பாத்திமாவையும் மட்டும் குறிக்கவில்லை; கரபந்தாலையும் தான் குறிப்பிடுகிறேன்; கரபந்தாலின் காட்சிகளை மகிமைப்படுத்த நான் வருகிறேன்; பாப்பரசர் அங்கே சென்று அந்த இடத்தை ஆசீர்வதிப்பதையும், அதன் மூலம் என்னைக் காயப்படுத்துகிற என் குருத்துவ ஆன்மாக்களால் திரித்துக் கூறப்பட்டவையும், தவறாக அறிக்கையிடப்பட்டவையுமான எல்லாவற்றையும் சரி செய்யவும், சந்தேகங்களை நீக்கவும், காட்சிகளை மறுத்தவர்களால் தரப்பட்ட அவதூறுகளை அழிக்கவும் வேண்டுமென நான் விரும்புகிறேன், பாப்பரசர் இதை எனக்காகச் செய்வாரா? என் தேவனாகிய ஆண்டவரே, அவர்கள் இதையெல்லாம் எப்படி அறிவார்கள்? வசுலா, இந்தப் பணியை என்னிடம் விட்டுவிடு; அவர்கள் அறிந்து கொள்ளச் செய்யும் ஒரு வழியை நான் கண்டுபிடிப்பேன்; மகளே, நான் என் பிரசன்னத்தின் அடையாளத்தை அவர்களுக்குத் தரும் ஒவ்வொரு முறையும், அது எவ்வளவுதான் சிறியதாக இருந்தாலும், பாப்பரசர் என் அடையாளத்தை ஆசீர்வதிப்பதன் மூலம் அதை மகிமைப்படுத்த வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்; உலகம் என் பிரசன்னத்தைப் பற்றியும், என் செல்வங்களைப் பற்றியும், என் இரக்கத்தைப் பற்றியும், என் விண்ணகப் பணிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; பாப்பரசர் என்னால் தரப்படும் அடையாளங்களைப் பெரிய அளவில் பரப்பி, உலகத்திற்கு உணவளிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் நிலம் வளமிக்கதாக இருக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; எஞ்சியுள்ள ஒரு சில மலர்களை அவர்கள் பறிக்க அனுமதிக்காதே; இந்தப் பாலைவனத்திற்கு நீர் பாய்ச்சப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், யார் என் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவார்கள்? அவர்கள் ஏன் என் மலர்களை அலட்சியம் செய்கிறார்கள்? நேச இயேசுவே, நான் நினைப்பது சரிதான் என்றால், நான் ஒன்று சொல்வேன், உமது பாத்திமா புதுமையை உறுதிப்படுத்தவே, அவர்களுக்கு ஏழு வருடங்கள் பிடித்தன. என் தேவனே, மறுப்புகளையும் கண்டனங்களையும் ஏற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களையும் என்னால் காண முடிகிறது. மலரே, வேதனைப்படாதே; என்னை உனக்கு உதவ விடு; வசுலா, நான் எப்போதுமே என் குறிக்கோள்களை அடைவேன்; செப்டம்பர் 21, 1987 என் தேவனே, உம்மை எல்லோரும் நேசிக்க வேண்டும். உம்மை அடையாளம் கண்டுகொண்டு, உம்மை நோக்கித் திரும்ப வேண்டும் என்று நான் எவ்வளவோ அதிகமாக விரும்புகிறேன்! ஓ மகளே, நானும் இதை எவ்வளவு அதிகமாக விரும்புகிறேன்! கடவுள் இது நிகழ வேண்டுமென ஏங்குவதாகத் தோன்றினார்! நீர் எங்கள் மத்தியில் எப்போதும் எப்படி உண்மையாகப் பிரசன்னமாய் இருக்கிறீர் என்று உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளவு விரும்புகிறேன். எவ்வளவு அதிகமாக நீர் எங்களை நேசிக்கிறீர், நாங்கள் பூமியின் மீது கடந்து மட்டும் செல்கிறோம் என்பதையும், நீர் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர் என்பதையும் அவர்கள் உணர வேண்டுமென நான் எவ்வளவு ஆசிக்கிறேன். அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். தங்கள் விருப்பையும், தங்கள் சுய கர்வத்தையும் நிறுத்த வேண்டும். ஒருவர் மற்றவர்களுக்காக வாழ வேண்டும். ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ள வேண்டும். எங்கள் பிதாவாகிய உம்மை ஆராதிக்க வேண்டும். ஒன்றிணைய வேண்டும் என்று நான் எவ்வளவு ஆசிக்கிறேன்! உம்முடைய அடையாளங்களில் அவர்கள் விசுவாசம் கொள்ள வேண்டும் என்றும், உமக்கு தாங்கள் ஏதோ ஒரு உபகாரம் செய்வது போல நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒளிந்து கொள்ளக்கூடாது என்றும் நான் எவ்வளவு ஆசிக்கிறேன்! தாங்கள் எவ்வளவு தவறானவர்கள் என்பதை அவர்கள் உணரவும், உம் செல்வ வளங்களை அவர்கள் காணவும் வேண்டுமென நான் எவ்வளவோ அதிகமாக விரும்புகிறேன்! வசுலா, உன் ஆசைகள் என்னால்தான் உனக்குத் தரப்படுகின்றன; அவை உனக்குள் ஊடுருவி வருகின்றன, பலிபீடமே, என் நெருப்பு உன்னில் என்றென்றும் சுவாலை விட்டு எரியும்படி நான் பார்த்துக் கொள்வேன்; "ஆண்டவராகிய நான், கரபந்தாளில் உள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறேன்" என்ற என் வார்த்தையைப் பரப்பு; ஆண்டவரே, என் சக்திக்கு உட்பட்ட அளவில் நான் பரப்புகிறேன். அதைவிட அதிகமாக அதைப் பரப்புவதற்கு எனக்கு வசதி வாய்ப்புகள் தேவை. வசுலா, நான் உனக்கு சாட்சிகளைத் தந்திருக்கிறேன்; என் நண்பர்களைச் சொல்கிறீரா? மற்றவர்களையும் தான்; திருச்சபையில் உள்ளவர்களை, குருக்களைச் சொல்கிறீரா? ஆம், வசுலா, அவர்கள் உன் சாட்சிகளாக இருக்கிறார்கள்; சரி, ஆண்டவரே, என் வார்த்தைகளை உன்மீது நான் எழுதவிடு; இயேசுவே, இது, இந்த வெளிப்பாடு உம்மிடம் இருந்து தான் வருகிறது என்பதை இந்த மனிதர் நம்புவதே இல்லை என்பது எனக்கு இப்போதுதான் ஞாபகம் வருகிறது. எனக்குத் தெரியும்; ஆனால் ஏன்? அவர் ஞானம் உள்ளவர் என்ற எளிய காரணத்திற்காகத்தான்; ஓ என் தேவனே, எனக்கு ஏராளமான ஆசைகள் இருக்கின்றன! அதை சாதாரணமாக என்னிடம் கேள்; சாதாரணமாகக் கேட்பதா? ஆம், அன்பே, கேள்; எதை வேண்டுமானாலுமா? எதை வேண்டுமானாலும்; என் கடவுளே, ஒரு மாற்றம் இருந்தால் நல்லது என்று நான் ஆசைப்படுகிறேன். அவர்களுடைய இதயங்கள் உம் மீதுள்ள நேசத்தால் பற்றி எரிய வேண்டும் என்றும், கோடிக்கணக்கானோர் எல்லோருமாக தங்கள் முழங்கால்களில் நின்று உம்மை ஆராதித்து வழிபட வேண்டும் என்றும் நான் ஆசிக்கிறேன். நீர் எவ்வளவு அதிகமாக எங்களை நேசிக்கிறீர், எங்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர், நாங்கள் எவ்வளவுக்கு உமக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்று நான் உணர்வது போலவே, அவர்களும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு தந்தையாக, ஒரு நண்பராக, ஒரு கடவுளாக, ஒருவரில் எல்லாமுமாக உம் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து, என்னை நீர் எழுப்பினது போல, அவர்களையும் எழுப்ப உம்மால் முடியாதா? நான் உம்மோடு கொண்டுள்ள அதே மகிழ்ச்சியையும், நெருக்கத்தையும் அவர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். தந்தாய், அவர்களும் உன் பிள்ளைகள் தானே? தயை கூர்ந்து இதைச் செய்யும். வசுலா, இவை அனைத்தும் நடைபெறும்; அவர்கள் தீயவர்களாக இருந்தபோதிலும், நான் அவர்களுக்குத் துணைபுரிந்து, அவர்கள் மீண்டும் என்னிடம் வர வழிகாட்டுவேன்; உன் கடவுளோடு கடுமையாக உழைப்பதில் சோர்ந்து போகாதே; நாம் நாங்கள்? ஆம், ஆண்டவரே. செப்டம்பர் 22, 1987 சிறிதளவு விழிப்புணர்வு என்னை மகிழ்விக்கிறது! மகளே, நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; நான் அவர் எப்படித் தோற்றம் அளிக்கிறார் என்று பார்க்க முயன்றபடி, அவருடைய உண்மையான பிரசன்னத்தின் மீது என் கவனத்தைச் செலுத்தியதன் காரணமாகவே, அவர் என்னிடம் இப்படிக் கூறினார். இன்று, அவருடைய தலைமுடி பின்னோக்கி வாரப்பட்டிருந்தது. என் பிரசன்னத்தைப் பற்றி அறிந்து கொள்ள நீ முயல்வதை நான் காணும்போது, அது என்னை மகிமைப்படுத்துகிறது; நாம் ஜெபிப்போம்; மகளே, இவ்வாறு தொடங்கு, ஓ, நேசமுள்ளவரே, எங்களைப் படைத்தவரே, பரிசுத்த ஆவியானவரே, என் மீது தேவரீர் புரிந்துள்ள இந்தப் பணிகளுக்காக, நான் உம்மை வாழ்த்துகிறேன்; நீர் என் மீது வீசிய ஒளிக்காக, நான் உம்மை வாழ்த்துகிறேன்; சர்வ வல்லப தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்;" இயேசுவுக்காக சரியான ஸ்துதி புகழ்ச்சியின் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது எனக்குச் சிரமமானது என்பதை இயேசு அறிந்திருந்தார்; இந்த ஜெபம் எனக்காக மட்டுமே. செப்டம்பர் 23, 1987 எனக்கு மன ஒப்பந்தமானவளே, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறவர்களைக் கவனிக்காதே, ஏனெனில் அவர்கள் ஏதும் அறிவதில்லை, எதையும் உணர்வதில்லை, எதையும் காண்பதில்லை, எதையும் கேட்பதில்லை; அவர்கள் உறங்கிக்கொண்டும், முழுமையான விழிப்புணர்வு இல்லாமலும் இருப்பதால், அவர்களால் இவையெல்லாம் எப்படி முடியும்! இயேசு இரண்டு உலகங்களைப் பற்றி நான் புரிந்து கொள்ளச் செய்தார். காணக்கூடிய, இயற்கையான உலகம் ஒன்று, கண்களுக்கு தெரியாத, ஞான உலகம் மற்றொன்று. பிற்பாடு, வெகு காலத்திற்குப் பின்னர், என் அப்போஸ்தலத்துவம் தொடங்கியபோது, கரபந்தாலின் காட்சிகளைக் கண்டவர்களில் ஒருத்தியைச் சந்திக்க நான் அழைக்கப்பட்டேன். கடவுள் விரும்பியபடி, நான் அவளை ஆசீர்வதிக்கும் படியாகவும், மற்றவர்களுக்கும் தொலைபேசி வழியாக ஆசீர்வாதங்கள் தரும்படியாகவும், கடவுள் தம் இறக்கைகளின் மீது என்னைச் சுமந்து சென்றது போல் இருந்தது. கடவுள் எப்படிச் செயல்படுகிறார் என்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். அவர் ஏறக்குறைய நமக்குச் சாத்தியமில்லாத ஒன்றை நாம் செய்யும்படி கேட்கிறார், ஆனால் தமது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கொண்டு அதைச் செய்ய நமக்கு உதவி செய்கிறார். வா, நான்தான், கடவுளின் பிரிய குமாரனாகிய இயேசு கிறிஸ்து; நான் விரும்பினால், உனக்கு இன்னும் அதிக சாட்சியங்களைத் தர என்னால் முடியும்; ஆனால் நான் கொண்டுள்ள சில காரணங்களுக்காக, உன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்; கண்மூடித்தனமாக உன்னை வழிநடத்துவது எனக்குப் பிடித்திருக்கிறது, அது என்னை மகிமைப்படுத்துகிறது; அதன்பின், தங்கள் ஞானத்தினால் குருடாக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பாடமாக ஆக வேண்டுமென நான் விரும்புகிறேன்; நீ மாசற்றவளாகவும், எளிமையானவளாகவும் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஆண்டவராகிய நான் அபரிதமாகத் தருகிறேன் என்பதை என் துறவற ஆன்மாக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தனிப்பட்ட வழியில் உன்னை நடத்துகிறேன்; மகளே, விண்ணகப் பணிகளில் நம்பிக்கை கொள்வது கடினமல்ல என்று அவர்களிடம் சொல்; ஏன், நான் கடவுளாகவும், ஆவியானவராகவும் இல்லையா? குழந்தைகளைப் போல் இரு, நம்பு; என் வேலைகளை நீ அவர்களுக்குக் காட்டும்போது, இந்த முறையில் எழுதுவதும், வழிநடத்துவதும் நான்தான் என்று குழந்தைகளில் யார்தான் சந்தேகப்படுவார்கள்? மாசற்றவளாய் இரு!