இயேசு தம் மீதான அன்பை மட்டுமே கேட்கிறார்; பரித்யாகங்களை உத்தரிக்க ஸ்தலத்து ஆத்துமங்களின் விடுதலைக்கும் பரிகாரங்களுக்கும் பயன்படுத்துவதாகக் கூறுகிறார். உதட்டளவு ஜெபத்தை விட்டு, இதயத்தால் இடைவிடாமல் தம்மை ஆசிக்கவும் தம்மிடம் திரும்பி வரவும் அழைக்கிறார். தாம் கோபத்தோடு அல்ல, அன்போடும் இரக்கத்தோடும் வருவதாகச் சொல்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 103. செப்டம்பர் 30, 1989. என் இயேசுவே, உம் மண்பில் நான் என்றென்றும், நாளின் ஒவ்வொரு மணி வேளையிலும் களைகூர்வேன். உம் அன்பையும் பிரமாணிக்கத்தையும் அறிக்கையிடுவதை நான் நிறுத்த மாட்டேன்; ஏனெனில் அன்பு என்றென்றும் நிலைக்கும்படி கட்டப்படுகிறது. அது மோட்சத்திலும் பூமியின் மீது உறுதியாக வேரூன்றியுள்ளது; இந்த அன்பை ஒருவரும் மறுதலிக்க முடியாதிருக்கும் ஒரு காலம் வரும். என் குழந்தாய், என் மீது சாய்ந்துகொள். நீ என் மீது கொண்டுள்ள அன்பை நான் சுவைக்கவிடு. ஆ, மகளே, நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே. என் அன்பை ஒப்புக்கொள்; உன் ஜெபங்கள் தூபத்தைப் போல் இருக்கட்டும். உன் இதயம் ஒரு தூபக் கலசமாக மாறி என்னை மகிழ்வித்து, என் நீதியையும், என் மிகச் சிறந்ததை, நண்பர்களிடமிருந்து நான் பெறும் காயங்களையும் ஆற்றுவதாக. உங்கள் அனைவரின் மீதும் நான் கொண்டுள்ள அன்பை உணர்ந்து பார்; குழந்தைக்குரிய விசுவாசத்தைக் கொண்டு விசுவசி. விசுவாசத்தை பகுத்தறிவால் அறிய ஒருபோதும் முயலாதே; ஏனெனில் அப்படி செய்யும்போது உன் கண்களை மூடியுள்ள குழந்தைத்தனத்தின் மூடுதுகளை மட்டுமே நீ அகற்றுவாய். என் பரம ரகசியங்கள் பரம ரகசியங்களாகவே மதிக்கப்பட வேண்டும். இந்த முறையில் நான் உனக்குத் தந்துள்ள என் பிரசன்னமும் கூட ஒரு பரம ரகசியமே. நீ உன் இருதயத்தில் என் மீது கொண்டுள்ள ஒவ்வொரு துளி அன்பையும் நீ எனக்குத் தர வேண்டும் என்பதே என் ஆசை. நான் என் பங்கிற்கு என் அன்பிலிருந்து உன் இதயத்தை தொடர்ந்து நிரப்புவேன். இப்போது சற்று நேரம் என் சிலுவையை சுமந்துகொண்டு என்னை ஓய்வெடுக்கவிடு. உங்கள் புலன்களையும் உங்கள் உடலையும் நீங்கள் உருக்கும்போது அவை எல்லாமே பரலோக வேலைகளில் என்னால் பயன்படுத்தப்படுகிறது என்பதை என் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். உன் பரித்யாகங்களை உத்தரிக ஸ்தலத்து ஆத்துமங்களை விடுவிப்பதற்கு நான் பயன்படுத்துகிறேன். பூமியில் உள்ள இதயங்கள் மனம் திரும்புவதற்காக அவற்றை நான் உஷ்ணப்படுத்துகிறேன். நான் உன் ஆன்மாவை சுத்திகரிக்கிறேன்; நீ எனக்குத் தருவதெல்லாம் பரிகாரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அது என் நீதி; பயங்கரமாகப் பற்றியறிந்து உங்களைத் தாக்காதபடி அதை சாந்தப்படுத்துகிறது. அது என்னை தயவு கொள்ள செய்கிறது. அது என் கோபத்தின் கடுமையைத் தணிக்கிறது; என் இரக்கம் பெரியது. பசாசு கோபவெறி கொள்வதையும் என்னைத் தாக்குவதையும் நான் உணர்ந்தேன். அஞ்சாதே, ஆண்டவராகிய நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் ஒரு வினாடி கூட உன்னை விட்டு விலக மாட்டேன். பசாசு கோபவெறி கொள்வது இயல்புதான். என் மகளே, நான் சிறப்பான முறையில் அன்பு செய்கிறவர்களை அவன் எவ்வளவு வெறுக்கிறான் என்பதை மட்டும் நீ அறிவாயானால், அவன் ஏன் உன்னைத் தாக்குகிறான் என்பதை புரிந்துகொள்வாய். நான் என் மேலங்கியின் கீழ் உன்னை பாதுகாக்கிறேன்; அவன் உன்னைத் தொட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இதன் காரணமாக, அதன் பின் அவன் இன்னும் அதிக கடுமதியோடு நான் சொல்வதைக் கேட்கும் ஆன்மாக்களை ஊடுருவி, தனக்குப் பலியாகிவிட்ட இந்த மனிதர்களை உன்னை வேட்டையாடும்படியாகவும், உன்னை முற்றிலும் மௌனமாக்கி விடுமாறு உன்னைத் துன்புறுத்தும்படியும் உன் வழியில் வைக்கிறான். குறிப்பு: 1989. ஜனவரி அன்று நான் கண்ட காட்சியை இது எனக்கு நினைவுபடுத்தியது. இந்த மனிதர்களைத் தன் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம் உன்னை மௌனமாக்கிவிட அவன் தீர்மானித்திருக்கிறான். ஏனெனில் நீ எல்லா வீடுகளின் கூரைகளின் மீதும் ஒரு எக்காலத்தைப் போல் இருந்து, என் முழு அதிகாரத்தோடும் உனக்குத் தரப்படும் உண்மையை உரக்கக் கூவி அறிவிக்கிறாய். என் குழந்தாய், தொடர்ந்து கூக்குரலிடு. தொடர்ந்து உன் உச்சபட்சக் குரலில் கூச்சலிடு. என் எதிரொளியாக இரு; ஏனெனில் உன் குரல் என்பது என் குரல்தான். நீ என் வாயினின்று வருகிறாய்; எனவே தொடர்ந்து கத்திக் கொண்டிரு. நாடுகளுக்கு என் உண்மையை உரத்த சத்தமாய் அறிவி. நீ அஞ்ச வேண்டியதில்லை. என்னைத் துன்புறுத்துபவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டு விடுவார்கள்; ஏனெனில் உண்மையில் அவர்கள் உன்னையல்ல, என்னையே துன்புறுத்துபவர்களாக இருக்கிறார்கள். பொய்மை உண்மையைத் துன்புறுத்துகிறது; இருள் ஒளியைத் துன்புறுத்துகிறது. ஆனால் இறுதியில் ஆண்டவராகிய நான் வெற்றி பெறுவேன். சிறியவளே, என் அருகில் தங்கியிரு; உன்னை எனக்காற்பணி, உன்னில் நான் எப்போதும் சுவாசிக்க என்னை அனுமதி. நான் தலைசாய்க்கும் இடமாக இரு; என் சமாதானத்தைக் கொண்டிரு. உன் விசுவாசத்தை அதிகரி; அது என்னை மகிழ்விக்கிறது. வா, நாங்கள் நாம். ஆம், இயேசுவே, நாங்கள் நாம். அக்டோபர் 2, 1989. இயேசுவா? நான்தான் என் குழந்தாய். வா, என் கையைப் பிடித்துக்கொள். நாம் சேர்ந்து வேலை செய்வோம். நான் உன் ஆசிரியரான ஞானமாக இருக்கிறேன்; ஆகவே என்னை மட்டும் சார்ந்திரு. ஆண்டவராகிய நான் உனக்குத் தருவதை விட சிறந்த அறிவை உனக்குத் தர யாராலும் முடியாது என்பதை அறிந்துகொள். படைப்பே, ஆன்மாவே, என்னை வாசிக்கிற நீங்கள், நான் சொல்வதைக் கேட்கிற நீங்கள், என்னைப் போற்றுங்கள். என்னை மகிமைப்படுத்துங்கள். காலை முதல் இரவு வரையிலும் என்னைப் போற்றுங்கள். இடைவிடாமல் என்னை ஏற்றிப் போற்றுங்கள். என்னை ஒருபோதும் போற்றித் துதிக்காதவர்களும், மகிமைப்படுத்தாதவர்களுமாகிய மனிதர்களுக்காக நீங்கள் பரிகாரம் செய்யுங்கள். என்னை வாழ்த்துங்கள்; என்னை வழிபடுங்கள்; என் மீது ஆசை கொள்ளுங்கள். மூன்று இளைஞர்களின் கீதத்தை யாரும் உங்களுக்கு கூறியதில்லையா? குறிப்பு: தானியேல் ஆகமம் 3ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 52 முதல் 90 வரை. அப்படியானால் அதைக் கற்றுக்கொண்டு அதை நாடுகளிடையே பரப்புங்கள். என் சிறு குழந்தைகளே, உண்மையின் ஆவியானவர் உங்கள் அனைவரோடும் இருக்கிறார். நீங்கள் வந்து சந்தித்து ஜெபிக்க வேண்டிய கடவுள் நானே என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்துவேன். நான் உயிருள்ள இறைவனாக இருப்பதால், நீங்கள் ஓர் உதட்டளவு ஜெபத்தோடு என்னிடம் வருவதாக நான் உணர்கிறேன். நீங்கள் என்னை ஆசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். என்னை ஆசியுங்கள். என்னை ஆசியுங்கள். என் மீது தாகம் கொள்ளுங்கள். ஆவலோடு என்னைத் தேடுங்கள். என்னை உணரவும், நான் சொல்வதைக் கேட்கவும் ஆசைப்படுங்கள். என் பிரசன்னத்தை ஆசியுங்கள். இந்த உலகத்தைச் சேர்ந்த எதுவும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் இந்த உலகம் உங்களை வெறுக்கிறது என்றால், உங்களுக்கு முன் அது என்னை வெறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். உங்கள் மந்த நிலையிலிருந்து விழித்தெழுங்கள். ஆனால் நான் ஆண்டவரை நேசிக்கிறேன்; அது அவருக்குத் தெரியும். நான் எப்போதும் அவரை அன்பு செய்து வந்திருக்கிறேன். ஆகவே என் மனசான்று சுத்தமாக இருக்கிறது என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். இன்று என்னிடம் திரும்பி வரும்படி நான் உங்களிடம் கூறுகிறேன். நாங்கள் எப்படித் திரும்பி வருவது என்று நீங்கள் என்னிடம் கேட்பீர்களானால், நீங்கள் மனம் திரும்புவதன் மூலம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நாங்கள் மனம் திரும்பிவிட்டோம்; மீண்டும் நாங்கள் எப்படி மனம் திரும்புவது என்று நீங்கள் சொல்வீர்களென்றால், அப்போது என்னை ஆசிப்பதன் மூலம், என் மீது தாகம் கொள்வதன் மூலம் என்று நான் பதில் சொல்வேன். பரிசுத்தராகிய என்னைத் தேடுங்கள். வந்து என்னை ஆராதியுங்கள். நானே உங்கள் பாகமாக, உங்கள் பரிசுத்தராக இருப்பேனாக. உங்கள் கண்கள் என் முன்னிலையில் அன்பின் கண்ணீரில் கரைவனவாக எச்சரிக்கையாய் இருங்கள். விழிப்பாய் இருங்கள். உங்கள் பாவங்களின் காரணத்தை அறியாமல் இருப்பதும், உங்கள் பாவங்களை உணராதிருப்பதும், எது நல்லது, எது தியதி என்ற உணர்வையே இழந்து போவதும் எந்த அளவுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றால், பசாசின் தந்திரங்களை எதிர்த்து நில்லுங்கள். உங்கள் ஜெபங்களில் விழிப்பாய் இருங்கள். என்னிடம் இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருங்கள். இடைவிடாமல் ஜெபியுங்கள். என் மீது நீங்கள் கொண்டுள்ள ஆசை இடைவிடாததாக இருக்கிறது என்பதை நான் உணர செய்யுங்கள். என் அன்புக்குரியவர்களே, ஒரு நிலையான ஜெபம், உங்கள் இதயத்திலிருந்து வரும் ஒரு ஜெபம், கடவுளின் ஆசையாக இருக்கிறது. நீங்கள் என் அன்பில் வளர ஆசித்தீர்கள் என்றால், உங்கள் மந்த நிலையையும், உங்கள் உதட்டளவு ஜெபங்களையும் விளக்கி விடுங்கள். இடைவிடாமல் ஜெபிப்பது என்பது உங்கள் ஆண்டவராகிய என் மீது ஆசை கொள்வதாகும். முயற்சி செய்து என் செய்தியை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியோடு என்னை ஆசியுங்கள்; உங்கள் உதட்டால் அல்ல, உங்கள் இதயத்தால் என்னை ஆசியுங்கள். "அப்பா" என்று நீங்கள் கதறுவதை நான் கேட்க விடுங்கள். ஆகவே மீண்டும் சிறு குழந்தைகளைப் போல் என்னிடம் வாருங்கள். என்னிடம் திரும்பி வந்து உங்கள் இதயத்தோடு என்னைக் கேளுங்கள். உங்கள் இதயத்தோடு என்னைத் தேடுங்கள். என்னிடம் வந்து உங்கள் இதயத்தை எனக்கு ஒப்புக்கொடுங்கள். தேவபக்தி உங்கள் ஆன்மாவை அலங்கரிக்கும். உண்மையிலிருந்து விலகிப் போகாதீர்கள்; ஏனெனில் உண்மை என்பது அன்பாக இருக்கிறது. ஆகவே அன்பு நிறைந்தவர்களாக என்னிடம் வாருங்கள். என் இருதயத்திடமிருந்து அந்த அன்பை முகந்து கொள்ளுங்கள். உண்மையில் இருங்கள். இடைவிடாமல் என்னை ஆசிப்பதன் மூலம் உண்மையில் வாழுங்கள். இந்த காரியங்களை எல்லாம் நீங்கள் வாழும்படியாக செய்யுங்கள். இந்த இறுதி நாட்களில் நான் என் அருளின் ஆவியை மனிதகுலம் முழுவதன் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறேன். நான் மிகச் சிறியவர்களுக்கும் கூட அதைத் தருவதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்னை நேசிக்கும்படி உங்களுக்குக் கற்பிப்பதற்காக என் அருளின் ஆவி உங்கள் தலைமுறையின் மீது ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் என் வார்த்தையின் நினைவூட்டுதலாக வருகிறேன். நான் என் ஒளியைக் கொண்டு இந்த இருளை ஒளிர்விக்க வருகிறேன். நான் உங்களை எச்சரிக்கவும், உங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உங்களை எழுப்பவும் வருகிறேன். நான் கடும் கோபத்தோடு வரவில்லை. நான் அன்போடும், சமாதானத்தோடும், இரக்கத்தோடும் உங்கள் நாட்களை மூடியிருக்கிற மரணத் துகிலை உங்களிடமிருந்து அகற்ற வருகிறேன். நான் பரிசுத்தர் என்றும், நீங்களும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்றும் உங்களுக்கு நினைவுபடுத்தும்படி நான் வருகிறேன். எப்படி ஜெபிப்பது என்று உங்களுக்கு நினைவுறுத்தவும், உங்களுக்குக் கற்பிக்கவும் நான் வருகிறேன். உங்கள் ஆன்மாவை என்னிடம் உயர்த்தவும், என் அரசை நீங்கள் பகிர்ந்து கொள்ளவும் உங்களுக்கு எல்லாவற்றையும் நான் தந்திருக்கிறேன். நான் ஒரு பிச்சைக்காரனைப் போல உங்களிடம் வருகிறேன். உங்களிடம் கெஞ்சுகிறேன். நான் ஞானமாக உங்களிடம் வந்து பரிசுத்தத்தனத்தின் அறிவை மீண்டும் முழுமையாக உங்களுக்குக் கற்பிக்கிறேன். முன்னெப்போதையும் விட அதிக ஆர்வத்தோடு நான் உங்கள் இருதயத்தை உங்களுக்குத் தருகிறேன். முன்பெப்போதையும் விட அதிக தாழ்ச்சியோடு நானே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் உங்கள் அனுதின அப்பத்தை உங்களுக்குத் தருகிறேன். உங்கள் இதயம் திருப்தி கொள்ளும் வரை நீங்கள் திருப்தியாக உண்ணும்படி நான் உங்களுக்கு உணவளிக்கிறேன். ஆகவே என்னிடம் வாருங்கள். என்னிடம் திரும்பி வந்து உங்கள் கடவுளாகிய என்னைப் போற்றுங்கள். நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன். என் அன்பின் பெருமூச்சை உங்கள் நெற்றியின் மீது விட்டுச் செல்கிறேன். அன்பு உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறது. ஒன்றாய் இருங்கள். அக்டோபர் 5, 1989. என் இயேசுவா? நான்தான் என் குழந்தாய். சமாதானம். நாம் சேர்ந்து வேலை செய்வோம். என் வார்த்தையைக் கொண்டிரு; அதன் பின் அதை எழுது. குறிப்பு: வேதாகமங்களின் வழியாக என்று பொருளில் இயேசு இப்படி கூறுகிறார். நான் அருளப்பர் 10ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 14 முதல் 16 வரை உள்ள பக்கத்தைத் திறக்கிறேன். எழுது: நானே நல்ல ஆயன். பிதா என்னை அறிவது போலவும், என் பிதா என்னை அறிவது போலவும், நான் உனக்குச் சொந்தமானவர்களை அறிகிறேன். எனக்குச் சொந்தமானவர்களும் என்னை அறிகிறார்கள். நான் என் ஆடுகளுக்கு என் உயிரைக் கையளிக்கிறேன். இந்தக் கிடையைச் சேராத வேறு ஆடுகளும் எனக்குண்டு. அவைகளையும் நான் கூட்டிச் சேர்க்க வேண்டும். அப்போது அவையும் என் குரலைக் கேட்கும்; ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும் உண்டாகும். இதனால் பூமி அதிக ஒளியுள்ளதாகவும், நான் நேர்மையையும், சமாதானத்தையும் பரப்புவேன். பூமி முன்போல மீண்டும் புதிய காரியங்களைக் கொண்டு வளர்ச்சி அடையும். நான் எழுந்து இயேசுவை அவருடைய வலக்கணத்தில் முத்தமிட்டேன். என் முன்னால் இருக்கும் இயேசுவின் திரு இருதய சுரூபத்தின் மீது நான் இப்படி முத்தமிட்டேன். என் இதயத்தைக் கொண்டு இயேசு என் அருகில் அமர்ந்திருப்பதையும், தம் கரத்தை உயர்த்தி ஒரு மகிழ்ச்சியான குழந்தையைப் போல தம் கன்னத்தில் நான் சரியாக எங்கே முத்தமிட்டேனோ அந்த இடத்தை அவர் தொட்டுப் பார்ப்பதையும் நான் கண்டேன். இந்த நிகழ்ச்சியை எழுதும்படி இயேசு என்னிடம் கேட்டுக்கொண்டார். என் அன்புக்குரியவளே, நான் எப்படி எல்லாவற்றையும் உணர்கிறேன் என்று காட்டுவதற்காகத்தான் இது. என் குழந்தாய், வா, நாம் சேர்ந்து இருப்போம்; பிரிக்க முடியாதவர்களாய் இருப்போம். அக்டோபர் 7, 1989. தோரினோ, டியூரின். பரிசுத்த ஜெபமாலை அன்னையாலயம். சமாதானம் உன்னோடு இருப்பதாக நான் சொல்லச் சொல்ல திருப்பிச் சொல். இயேசுவே, நான் உம்மை அன்பு செய்கிறேன். இயேசுவே, என் பாவங்களை மன்னியும். இயேசுவே, என் சந்தேகங்களிலிருந்து என்னை விடுவியும். இயேசுவே, தீயவன் என்னை அணுக விடாதேயும். நம் பரிசுத்த அன்னை. மலரே, இயேசுவை நேசிப்பதால் அவருடைய காயங்கள் ஆற்றப்படுகின்றன. அன்பு உன்னை அன்பு செய்கிறது.