வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 20. பிப்ரவரி 9, 1987 சமாதானம் உன்னோடு இருப்பதாக; குழந்தாய் நான் உன்னை நேசிக்கிறேன், நானே யாவே; நான் உன்னைத் தேர்ந்துகொள்ள முக்கியமான காரணம் எனது விருப்பமே; அத்தோடு உன்னுடைய இயலாமையும் இதற்குக் காரணமாகும்; தந்தையே, நான் உம்மை மிக அதிகமாக நேசிக்கிறேன். மகளே, எனக்குத் தெரியும்; நானும் உன்னை நேசிக்கிறேன், கவனி, என்னை நேசிப்பதற்கு முன் நீ இவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கிறாயா? இல்லை, ஒருபோதும் இல்லை! வசுலா, என்னை நேசி; என்னை எப்படி நேசிப்பதென்று நான்தான் உனக்குக் கற்றுக் கொடுத்தேன்; நீ முன்னேற சித்தமாயிருக்கிறாயா? ஆம், பிதாவே, நீர் மகிமைப்படுத்தப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன், ஆகவே, உம்மை மகிமைப்படுத்த என்னால் இயலுமாறு நீர் கேட்கிற எல்லாவற்றையும் நான் செய்ய விரும்புகிறேன். வசுலா, நான் உன்னை முன்னேற்றுவேன்; தீமைகளைப் பற்றி உன்னை எச்சரிக்க நான் விரும்புகிறேன்; குறிப்பு: பசாசுக்கள். அவை உன்னை வெறுக்கின்றன, இடைவிடாமல் உனக்குக் கண்ணிகள் இட்டு வைக்கின்றன; நான் உன்னைப் பாதுகாத்தபடி உன் அருகில் இருக்கிறேன்; ஆகவே, அஞ்சாதே; வசுலா, நான் உன்னையும், என் குழந்தைகள் எல்லோரையும் நேசிக்கிறேன், என் நேசம் இடைவிடாமல் பற்றியெரிகிற, சுட்டெரிக்கும் தீச்சுவாலை போன்றது; என் நேசம் பொறாமையுள்ள நேசம்; நான் நேசத்திற்காக தாகமாய் இருக்கிறேன்; சிறியவளே, அஞ்சாதே, ஏனெனில் நான் பேசிக்கொண்டிருப்பது நேசத்தைப் பற்றியே; நான் உன்னைச் சுமந்துகொள்கிறேன், உன் பலவீனம் என்னை மகிழ்விக்கிறது, சிறியவளே, உன் பெரும் பலவீனத்தின் வழியாக, நான் சமாதானம் மற்றும் நேசத்திற்கான என் வேண்டுகோளை வெளிப்படுத்துவேன்; என் வார்த்தைகளைக் கொண்டு நான் உன்னை நிரப்புவேன்; என் வெளிப்படுத்துதல்களை நான் உனக்குள் ஊதுவேன்; சிறியவளே, என்னைப் பற்றிக்கொள்; என்னை நம்பு, பக்திப் பற்றுதலோடு என்னை நேசி; நான் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை அவர்கள் தெரிந்துகொள்ளும்படி அதை அவர்களிடம் கூறு; பிப்ரவரி 10, 1987 வசுலா, அன்புமிக்கவளே, இயேசு கிறிஸ்துவாகிய நான் உன்னோடு இருக்கிறேன்; குறிப்பு: உத்தரிக்கிற ஸ்தலம். என் ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நாம் கடவுளை நேசிப்பதன் மூலம் ஆன்மாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கப்பட முடியும். ஜெபங்கள் கூட உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்! ஹாதேஸின் வழியாக நான் உன்னை நடத்திச் செல்கிறேன் என்பதை நீ அறிவாயா? அஞ்சாதே, என் ஒளி உன்மீது ஒளிர்ந்து, தீமையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது; ஹாதேஸுக்கு உன்னை அறிமுகப்படுத்துவதால், அநேக ஆன்மாக்கள் குணமாகிக் கொண்டிருக்கிறார்கள்; என்னை நேசிக்க நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; என்னை நேசி, என் பேரில் உனக்குள்ள நேசம் அவர்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறது; குறிப்பு: அவர்களுடைய நெருப்புகளை அணைப்பதன் மூலம். உன் நேசத்தை அவர்களைக் குணப்படுத்தும் மருந்தாக நான் பயன்படுத்துகிறேன்; அவர்களைக் குணமாக்கு வசுலா, அவர்களைக் குணமாக்கு; நீ என்னோடு என் சிலுவையைச் சுமக்கிறாய், வசுலா; இந்தச் செயல்கள், என் பிதா, உனக்கு வெளிப்படுத்துகிற பரலோகச் செயல்கள், அநேக பரலோகச் செயல்கள் இன்னும் மறைவாயுள்ளன, அவை உனக்கு பரம இரகசியங்களாகவே உள்ளன; பலர் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இயேசுவே, அவர்கள் இதை என் கற்பனை என்று குற்றஞ்சாட்டுவார்கள். வசுலா, பூமியின் மீது என் பிதாவின் செயல்களை அவர்களில் எத்தனை பேர் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? பல செயல்கள் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கின்றன, அவை எங்களுக்கு இன்னும் பரம இரகசியங்களாகவே இருக்கின்றன. அப்பயிருக்க, பரலோகத்திற்குரியதை அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? வசுலா, எல்லா ஞானமும் குழந்தைகளுக்கே தரப்படுகிறது; என் பிதா குழந்தைகளில் மகிழ்ச்சி கொள்கிறார்; மகிழ்ச்சியாயிரு, மகளே, என் பிதா உன்னிடம் நல்லவராய் இருந்து கொண்டிருப்பதற்காக அவரை ஸ்துதித்துப் போற்று; மகளே, அவரது பணிப்பெண்ணாக இருந்து, அவரை மகிமைப்படுத்து; கவலைப்படாதே, நான் உன்னை வழிநடத்துகிறேன்; இந்த விதமாய்ப் பணியாற்று; நானே உன் ஆசிரியர்; அன்பே, நான் உன்னை தொடர்ந்து உருவாக்குவேன்; என் மற்ற பிள்ளைகளைப் போலவே உன்னையும் நான் உருவாக்குகிறேன்; சமாதானமாய் போ, நீ என்னால் வழிநடத்தப்படுகிறாய் என்பதை நினைவில் கொண்டிரு; நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; வசுலா, உன் விசுவாசம் அதிகரித்துள்ளதில் நான் மகிழ்கிறேன்; என்னை உண்டு பருகுவதன் மூலம் உன்னைத் தூய்மையாக்கிக்கொள்; இயேசுவே, நான் அவ்வாறே செய்வேன். நான் திவ்விய நன்மை வாங்கச் செல்வேன். என்னிடம் வா, என் அன்பு உன்னை முழுவதுமாக மூடும்; குழந்தாய், நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன், உமக்காகப் போராடுவேன். போராடுவதை நான் விரும்பவில்லை! ஏனெனில் நானே சமாதானம், நீ சமாதானத்தோடு சமாதானத்திற்காக வேலை செய்வாய்; முடிந்தவரை எனக்கு அருகில் நிலைத்திருந்து என்னை மகிழ்ச்சியால் நிரப்பு; நீ என் பாதங்களை முத்தமிடுவாயா? நான் இயேசுவின் படம் ஒன்றை எடுத்து அவரது பாதங்களை முத்தமிட்டேன். நான் உன்னை நேசிக்கிறேன், சமாதானமாய்ப் போ; பிப்ரவரி 11, 1987 வசுலா, நான் இயேசு கிறீஸ்து; மகளே, உன் துன்பங்கள் என்னுடையவையாகவும், என் துன்பங்கள் உன் உடையவையாகவும் இருக்கும்; நான் கொண்டிருக்கிற எல்லாவற்றையும், ஆம், என் துன்பங்களையும் கூட நீ பகிர்ந்து கொள்வாய்; உனக்கு நான் தேவையாய் இருக்கும்போது, உன்னை நான் தேற்றியபடி உன் அருகில் இருப்பேன்; ஆனால் நான் துன்பப்படும்போது, பதிலுக்கு உன்னால் தேற்றப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்; இயேசுவே, உமக்கு உண்மையாகவே யாரும், குறிப்பாக நானும், தேவையில்லை! இல்லை, எனக்கு யாரும் தேவையில்லை, எனக்கு நானே போதுமானவன்; ஆனாலும், நான் கொண்டுள்ள எல்லாவற்றையும் உன்னோடு நான் பகிர்ந்து கொள்வதில்லையா? நானே உன் இரட்சகராகவும், உன்னைக் குணமாக்குபவராகவும், உன் தந்தையாகவும்; குறிப்பு: இசை 9 ஆம் அதிகாரம், வசனங்கள் 5 முதல் 6 வரை. உன் மணவாளராகவும் இருக்கிறேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிடாத உன் கடவுளாக இருக்கிறேன்; மாலையில், கீழ்தளத்திலுள்ள கூடத்திலிருந்து, என் கைகளில் நிறைய கண்ணாடிக் குவளைகளோடு படிகளில் ஏற நான் எத்தனித்தபோது, படிக்கட்டின் உயர்மட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான இருண்ட சிலுவையை நான் தெளிவாகப் பகுத்துணர்ந்தேன். அது மிகப் பெரியதாக இருந்தது. இயேசு காயங்களாலும் இரத்தத்தாலும் மூடப்பட்டவராக, அவஸ்தையோடு முனகியபடி அதில் தொங்கிக் கொண்டிருந்தார். நான் அதன் அருகே போக வேண்டியிருந்தது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அதைக் கடந்து போன போது, "வசுலா, என் அருகில் வா, எனக்கு உதவி செய்" என்று சொல்லி இயேசு என்னை அழைப்பதை நான் கேட்டேன். நான் வேகமாக மேலே ஓடி, அந்தக் குவளைகளை மேஜையின் மீது வைத்துவிட்டு, ஓடிப்போய் என் குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வர, இயேசு எழுதினார்: "என் அவஸ்தை பெரியதாய் இருக்கிறது; என் துன்பங்கள் பலவாய் இருக்கின்றன; உனக்காக இறந்தவராகிய எனக்கு நீ உதவி செய்ய மாட்டாயா? நான் என் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன், என்னால் உன்னிடம் வர முடியாது; ஆகவே வா, நீ என் அருகில் வரவேண்டுமென நான் விரும்புகிறேன்; வசுலா, உங்கள் எல்லோரையும் நான் எவ்வளவாக நேசிக்கிறேன், என் குழந்தைகளைக் குணமாக்கு, அவர்களைக் கூப்பிடு, அவர்கள் என்னை நேசிக்கும்படி செய்; ஆசீர்வதிக்கப்பட்டவளாயிரு, என் அருகில் இரு, நான் உன்னை நேசிக்கிறேன்;" அவர் இதை எழுதியபோது, நான் முழு உணர்வோடு இருப்பதை உணரும்படி செய்தார். சில நொடிகளிலேயே நான் வியர்வையால் மூடப்பட்டிருந்ததை அறியாதிருந்தேன். வசுலா, இயேசுவாகிய நான் துன்பப்படுகிறேன், என் சிலுவையையும் அதன் மீது இருக்கும் என்னையும் நீ முழுவதுமாகப் பகுத்துணர்ந்தாய்; மகளே, நீ என் அவஸ்தையை உணர வேண்டும், என்னோடு துன்புற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என்னில் வாழு, ஈட்டியால் காயப்படுத்தப்பட்டதும், மிக அநேக நேசிக்கப்பட்ட ஆன்மாக்களால் காயப்படுத்தப்படுவதுமான என் ஊடுருவப்பட்ட இருதயத்தை நீ உணர நான் அனுமதிப்பேன்; நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை மறுதலிப்பாயா? உனக்காகப் பாடுபட்டு மரித்தவராகிய என்னைத் தடுக்கும் தைரியம் உன் இதயத்திற்கு இருக்கிறதா? நேசத்திற்காக நான் துன்பப்பட்டேன்; நேசத்தினால் நான் உன்னை அழைத்திருக்கிறேன்; நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நான் உனக்கு உணவூட்டினேன்; ஆகவே, இப்போது நான் உன்னைத் தேர்ந்தெடுப்பதில் நீ என்னைத் தேற்ற வேண்டும், என்னை ஆர்வத்தோடு நேசிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்; நீ என் அன்புக்கு பதில் அன்பு காட்ட வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேன்; வசுலா, அஞ்சாதே; உன்னை முழுமையாக என்னிடம் கையளி; ஆம், உன்னை முழுமையாக என்னிடம் அர்ப்பணித்து, நான் உன்னைக் கொண்டு விரும்பியதெல்லாம் செய்ய எனக்கு சுதந்திரம் தந்து, உன்னை என்னிடம் கையளித்துவிடு; ஆண்டவரே, உமக்காக வேலை செய்ய நான் ஏற்கனவே சம்மதித்துவிட்டேன். ஆகவே, ஆண்டவரே, இப்போது என்னைக் கொண்டு நீர் விரும்பியதைச் செய்யலாம். ஆம், உன்னைக் கையளித்துவிடு; நான் உன்னை நேசிக்கிறேன்; நீ கையளிப்பதாகக் கூறுவதைக் கேட்பது என்னை மகிழ்விக்கிறது; ஒருபோதும் என்னை மறுதலிக்காதே, ஏனெனில் உன்மீது எனக்குள்ள அன்பு மட்டற்றதாக இருக்கிறது; உனக்கு ஒரு இரகசியத்தைத் தருவதன் மூலம் என் போதனைகளை நான் தொடர்வேன்; வசுலா, உன் குறிப்புப் புத்தகத்தை எடுத்துக்கொள்; பயப்படாதே, ஏனெனில் என் போதனைகள் ஞானத்திடமிருந்து வருகின்றன; அனைத்து மறை பொருட்களும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை; என்னை நேசிப்பது எப்படியென அறிந்திருப்பவர்களுக்கு எல்லாப் பணிகளும் தரப்படுகின்றன; நான் இப்போது என் குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொள்வேன்.... இயேசு எனக்கு இரகசியத்தைத் தந்தார். அதன்பின் அவர்: "இன்னும் மிக அநேக இரகசியங்களை நான் உனக்குக் கூறுவேன்" என்றார். இது மூன்றாவது இரகசியம். கடந்து போகும் ஒவ்வொரு நாளும், நீ எனக்கு அதிக நெருக்கமாக வருகிறாய்; ஆண்டவரே, இதற்கு என்ன அர்த்தம்? சீக்கிரத்தில் நான் உன்னோடு இருப்பேன் என்று அர்த்தம்; மரணம் என்னைக் கொஞ்சமும் பயப்படுத்தவே இல்லை.
பிப்ரவரி 12, 1987 எல்லாம் வல்ல இறைவா, வீண் பெருமையிலோ, சுய நாட்டத்திலோ விழாமல் இருக்க எனக்குத் துணை புரியும்! ஓர் ஒன்றுமில்லாமையாக இருக்க நான் விரும்புகிறேன். ஒரு சாதாரணப் பெண்ணாகவே இருந்து கொண்டு, உமக்கே எல்லா மகிமையையும் அளிக்கவும் நான் விரும்புகிறேன்! வசுலா, நான் யாவே; நான் உன்னை நேசிக்கிறேன்: சிறியவளே, எல்லா அதிகாரமும் என்னிடமிருந்தே வரும்; உன் சிறுமையை நான் எப்போதும் உனக்கு நினைவுபடுத்துவேன்; நான் எப்படிப் பணியாற்றுகிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளச் செய்வேன்; வசுலா, சமாதானமாய் இரு, விரைவில் நான் உன்னோடு இருப்பேன்; கடவுள் என் ஒன்றுமில்லாமையை எப்போதும் எனக்கு நினைவுறுத்துவார் என்பதை அறிந்து, என் மனச்சுமை குறைந்ததாக உணர்ந்தேன்! இது எனக்கு ஓர் அச்சத்திற்குரிய நாளாக இருந்தது, இது முற்றிலும் சாத்தியமே இல்லை, இந்த முழு காரியமும் உண்மையில்லை என்ற சந்தேகங்கள், நடந்து கொண்டிருப்பது உண்மையில் நடக்கவில்லை என்று நான் உணர்ந்தேன், இருந்தாலும் கடவுள் என்னை அழைப்பதை நான் கேட்டேன், அது முற்றிலும் உண்மை என்றாலும், எதுவும் உண்மை இல்லை என்பது போல் இருந்தது. நான் திடீரென உண்மையாகவே மனிதரிடையே மிகவும் பரிதாபத்துக்குரியவள் என உணர்ந்தேன். உண்மையாகவே என்னதான் நடக்கிறது? வசுலா, ஒரு வருடத்திற்கு முன் நீ எப்படி இருந்தாய் என்பதை மறந்துவிட்டாயா? என் நேசமே, என்னை உனக்கு நினைவுபடுத்தவிடு; யாவேயாகிய நான் மரித்தவர்களுக்கு மத்தியில் கடந்து சென்று கொண்டிருந்தபோது, குறிப்பு: ஆன்ம ரீதியாக இறந்தவர்கள் கொடியவர்களுக்கு மத்தியில் உன்னைக் கண்டேன்; அவர்கள் உன்னை பிடித்து வாதித்துக் கொண்டிருந்தார்கள்; நீ அங்கே கிடந்து தனியாய்ப் போராடிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்; உன் ஆன்மா மரணத்திற்கு மிக அண்மையில் இருந்தது; நான் உனக்காக மிகவும் பரிதாபப்பட்டேன்; பழங்காலங்களில் நான் செய்தவைகளை நீ நினைவு கூர்ந்தாய், அப்போது நானே உன் தஞ்சமாக இருக்கக்கூடும் என்பதை நீ புரிந்து கொண்டாய்; ஆகவே, பூமியிலிருந்து எழுந்த உன் மன்றாட்டை நான் கேட்டேன்; மகளே, நான் உன்னை எப்போதும் நேசித்தேன், ஆனால் நீ என்னை மறந்துவிட்டாய்; உன்னால் நேசிக்கப்படவும், உன்னால் 'தந்தாய்' என்று அழைக்கப்படவும் நான் ஏங்கினேன்; ஒருநாள் என் குரலை நீ கேட்பாய் என்ற நம்பிக்கையில் எத்தனை வருடங்களாக உன் கதவுக்கு வெளியே நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்... நான் கைக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தேன்; ஆம், நான் உனக்கு மிக அருகில் இருந்தேன்; அதன்பின் என் இருதயத்தால் உன் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை; மகிழ்ச்சி நிறைந்தவராக நான் வந்தேன்; இறுதியாக நீ என்னை அழைத்தாய்; மகளே, நான் உன்னைத் தூக்கி என் நெஞ்சோடு அணைத்தேன், உன் காயங்களை நான் குணமாக்கினேன்; என்னை எப்படி நேசிப்பது என உனக்கு நான் கற்பித்தேன்; உன்னை உயர்த்துவதன் மூலம் என்னை ஏற்றுக் கொள்வது எப்படியென நான் உனக்குக் கற்பித்தேன்; என் ஒளி உன்மீது சுடர் வீசி பிரகாசிக்க அனுமதித்தேன்.... என் மலரே, அவநம்பிக்கை கொள்ளாதே; நான் உனக்கு எளிதாகப் புரியும் வார்த்தைகளைக் கொண்டு படிப்படியாக உனக்குக் கற்பித்து வருகிறேன்; குறிப்பு: கடவுளே, இதை வலியுறுத்தினார். என் வழிகாட்டுதலின் ஒரு பகுதி, உன் உருவாக்கத்திற்கு முன் ஏன் எழுதப்பட்டு வருகிறது என்று நீ என்னிடம் கேட்கிறாய்; தொகுப்பாசிரியர் குறிப்பு: வசுலா, இந்தக் கேள்வியை 1987 ஜனவரி 31 அன்று கேட்டாள். என் கேள்விக்கு நீ பதில் கூறிய பின், நான் உன் கேள்விக்குப் பதில் கூறுவேன்; ஒரேயொரு ஆன்மா கூட எனக்கு எவ்வளவு விலையேறப்பட்டதாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? இறைவா, அது மதிப்பு மிக்கது என்று எனக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு என்பது எனக்குத் தெரியாது. அப்படியானால், ஆன்மாக்கள் எனக்கு எவ்வளவு மதிப்புள்ளவை என்று நான் உனக்குக் கூறுவேன், அதன் மூலம் உன் கேள்விக்கு நான் பதில் தருவேன், ஒரே ஒரு ஆன்மாவுக்காக, தான் இறக்கும் முன் வேறு எந்த வாய்ப்பையும் கொண்டிராத அந்த ஒரே ஒரு ஆன்மாவுக்காக மட்டும் நான் என் வழிகாட்டுதலின் எழுதப்பட்ட பகுதியைத் தரும் அளவுக்கு அதிக மதிப்புள்ளது என்பது இப்போது உனக்குப் புரிகிறதா? ஆம், புரிகிறது, நீர் யாரைக் குறிப்பிடுகிறீர் என்பதை நான் அறிவேன். மகளே, நான் உன்னை நேசிக்கிறேன், இந்த வழிகாட்டுதல் என்னிடமிருந்தே வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளாதே; உன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பியது நானே என்பதை எப்போதும் உனக்கு நினைவுறுத்துவேன்; நான் உன்னை நேசிக்கிறேன், என் நேசத்தைப் பற்றி எப்போதும் நிச்சயமாயிரு; அமைதியில் செயல்படு, என்னை மறக்காதே; பிப்ரவரி 13, 1987 சமாதானம் உன்னோடு இருப்பதாக; உன்னை வழிநடத்தும் இயேசுவாகிய நான் இங்கே இருக்கிறேன்; அஞ்சாதே, வசுலா என்னில் இணைந்திரு; நான் உன்னிடமிருந்து தேடுவதெல்லாம் அன்பு மட்டுமே; செய்திகளைக் குறித்து எனது பொறுப்பு எனக்குத் தெரிகிறது, அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்று எனக்குப் புரியவில்லை! நான் சுய நிறைவுள்ளவர், உன் உதவியின்றி என் குழந்தைகளுக்கு என்னால் உதவ முடியும்; ஆனாலும், ஒரு மணவாளராக, நான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், நேச மகளே, கவலைப்படாதே, நானே ஆற்றல்; என் மீது சாய்ந்து கொள், நான் உன்னை வழிநடத்தவிடு; என்னைச் சந்திக்க இந்த வலிமையை உனக்குத் தந்தவர் நான்தான் என்பதை நினைவில் வை; என்னை பிரமாணிக்கத்தோடு நேசிக்கும்படி நான் உன்னிடம் கேட்கிறேன்; பக்தி ஆர்வத்தோடு என்னை நேசி; உங்கள் மத்தியில் என்னை காயப்படுத்துவோர் இருப்பதால், நான் ஆறுதலைக் கேட்கும்போது நீ என்னைத் தேற்று, அவ்வளவு ஏராளமான பாவங்கள் ஒவ்வொரு நாளும் கட்டிக்கொள்ளப்படுகின்றன, அவை என் ஆன்மாவைத் துயரப்படுத்தி, என் கிண்ணத்தைத் துயரத்தால் நிரப்பி, என்னைக் கசந்து போகச் செய்கின்றன; அவர்கள் எப்படி என்னை மறந்து போனார்கள்? வசுலா, ஒரு மணவாளர் துயருற்றவராக உணரும்போது, தம்மை நேசிக்கிற மணவாளியிடமின்றி வேறு யாரிடம் அவர் ஆறுதலைத் தேடுவார்? என்னால் முடிந்தால், நான் உம்மைத் தேற்றுவேன், ஆனால், தகுதியற்றவளும், விரும்பாமலே உம்மை நோகச் செய்பவளும், குறைவுள்ளவளும், உம்மோடு பேசச் சங்கடம் உள்ளவளும், கோழைத்தனம் உள்ளவளும், எரிச்சல் நிரம்பியவளும் ஆகிய நான் என்ன செய்வது? நீ சொன்னதெல்லாம் உண்மை என்று எனக்குத் தெரியும், ஆனாலும், உன் எல்லா பலவீனங்களையும் அறிந்தே, நான் உன்னைத் தேர்ந்து கொள்ளவில்லையா? நான் உன்னை நேசிக்கிறேன், வசுலா, உன்னிடம் நான் விரும்புவதெல்லாம் என் நேசத்திற்கு ஒரு பதில்தான்; நான் உம்மை மிகுதியாக நேசிக்கிறேன். நீர் இடையறாமல் என் மனதில் இருக்கிறீர். நான் உமக்காக வாழ்கிறேன், நான் உம்மை நேசிக்கிறேன், எந்த அளவுக்கு என்று என்னால் அளவிட முடியாது, ஆனால், உம்மால் முடியும்; என் நேசம் அளவற்றதாக ஆகும்படி, உம்மை அதிகமாக நேசிக்க எனக்குக் கற்றுத் தரும்படி, உம்மிடம் கேட்க மட்டுமே என்னால் முடியும். அன்பே, உன் தலையை என் மீது சாய்த்து, என்னை உறிஞ்சிக்கொண்டு, ஊறிப்போய் இருக்கிற என் மலர்களில் ஒன்றாக ஆகும்படி, பரிசுத்தத் தனத்தால் உன்னை அபிஷேகம் செய்ய என்னை அனுமதி; வா, நான் உனக்கு உணவூட்டுவேன், என் கரத்திலிருந்து நீ உண்பாய்; என்னை அதிகமாக நேசிக்க நான் உனக்குக் கற்பிப்பேன்;