இறைவனில் உண்மையான வாழ்வு

வசுலா, சாத்தான் தன் பலவீன நிலைகளைத் தாக்குவதாகக் கூறுகிறார்; இயேசு, சாத்தானால் ஏமாற்றப்படாதே என்றும், எப்படிப்பட்ட போராட்டம் நடக்கிறது என்பதை அறிந்தால் நல்லது என்றும் சொல்கிறார். இயேசு அனைவரையும் "நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள்" என்று அழைக்கிறார். புனித மாமரி, ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்கிறார்.

Show Notes

அத்தியாயம் 82: என்ன போராட்டம் நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால் நன்றாக இருக்கும்

வசுலா, சாத்தான் தன் பலவீன நிலைகளைத் தாக்குவதாகக் கூறுகிறார்; இயேசு, சாத்தானால் ஏமாற்றப்படாதே என்றும், எப்படிப்பட்ட போராட்டம் நடக்கிறது என்பதை அறிந்தால் நல்லது என்றும் சொல்கிறார். இயேசு அனைவரையும் "நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள்" என்று அழைக்கிறார். புனித மாமரி, ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:16 16/11/1988 - சாத்தானின் தாக்குதலும் போராட்டமும்
10:27 21/11/1988 - என்னிடம் வாருங்கள்; ஜெபிக்க நிறுத்தாதீர்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #ஆன்மீகப்போராட்டம் #ஜெபமாலை #இயேசுவின்அழைப்பு

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 82. நவம்பர் 16, 1988 நேற்றிலிருந்து சாத்தான் ஆக்ரோஷத்தோடு என்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறான், இயேசு என்னை எச்சரித்திருந்தார்: "சாத்தான் என் பலவீன நிலைகளை அறிந்திருக்கிறான்; அவன் அந்த நிலைகளையே தாக்குகிறான்." என் மிகப் பலவீனமான நிலை, முக்கியமாக நான் யாராய் இருக்கிறேன் என்பதன் காரணமாக, இந்த வெளிப்பாட்டின் காரியத்தில் என்னுடைய உறுதியற்ற தன்மையே. நான் சம்மணசுக்கள் போன்றவள் அல்ல; பெரும் குற்றங்கள் பல செய்கிறேன். உண்மையில், எனக்கு எதுவும் தெரியாது. அதன்பின், வேறு காட்சித் தியானிகளிடம் இயேசு செய்வது போல எந்த ஒரு அசாதாரணமான, இயல்புக்கு மேற்பட்ட அடையாளங்களையும் அவர் என்னிடம் செய்வதில்லை என்று சில சமயங்களில் நான் உணர்கிறேன். ஆகவே, சாத்தான் அங்கே என்னை தாக்குகிறான்; அந்த பலவீனமான நிலைகளைத் தன் வசதிக்காக வலுவாக்குகிறான், அதனால் அவன் என்னை வாதிக்கிறான். வசுலா, இது ஆண்டவராகிய நான்தான்; நீ சந்தேகப்படும் ஒவ்வொரு முறையும், நான் ஒரு ஆழ்ந்த துயரத்திற்குள் மூழ்குகிறேன், என் இதயம் வலிக்கிறது.... என் வேலையைத் தொடர்ந்து செய்ய நீ மனதாயிருக்கிறாயா? 'கடவுளுக்கு மகிமை. நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக' என்று சொல்லும்; குறிப்பு: நான் சந்தேகப்பட்டேன். கடவுளுக்கு மகிமை, நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக, வசுலா!... குறிப்பு: இயேசுவின் குரல் மிக மென்மையாகவும், கனிவோடும் இருந்தது. நான் உருகிவிட்டேன். வசுலா, என் குழந்தாய், சாத்தானால் ஏமாற்றப்படாதே; அவன் ஆலோசனைகளைக் கொண்டு உன்னோடு போராடிக் கொண்டிருக்கிறான், அவன் என் திட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறான்; உன் பாதம் ஒரு படி மேலே போகும் ஒவ்வொரு முறையும் அவன் கடும் கோபத்தால் கொந்தளிக்கிறான்; சிறியவளே, நான் உன்னை எச்சரிக்கும்படி, உன் அருகில் இருக்கிறேன்; வசுலா, இந்த வெளிப்பாட்டைப் பொறுத்தவரை, இந்த முறை என் அடையாளங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன; இந்த முறையில் இதைத் தருவதன் மூலம் நான் அதிகமாக மகிமைப்படுத்தப்படுகிறேன், இது ஏன் என்று நான் உனக்கு விளக்கி இருக்கிறேன்; இந்த வெளிப்பாட்டினுள் அளவுக்கு அதிகமாக அசாதாரண அடையாளங்களைக் கொண்டிராமல் விசுவாசம் முதலில் வர வேண்டுமென நான் விரும்புகிறேன்; இது எளிமையாய் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நீயும் முக்கியமான மனம் திரும்புதல்களாய் இருக்கிற உன் கனிகளுமே நான் தருகிற ஒரே அடையாளமாக இருக்கின்றன என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்; உன் காலத்தில் விசுவாசம் எப்படிக் காணாமல் போயிருக்கிறது என்பதை நான் அறிவேன்; இதனாலேயே நீ துன்புறுத்தப்படுவாய், ஆனாலும், நானும் துன்புறுத்தப்படவில்லையா? என் கனிகளையும் மீறி அவர்கள் என்னை நம்பவில்லை; வசுலா, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றாலும், நான் உனக்கு நிறைய வரப்பிரசாதங்களைத் தந்திருக்கிறேன்; உன்னை விட மிக அதிகத் தகுதியுள்ள ஊழியர்கள் எனக்குண்டு, இருந்தாலும் நான் வரப்பிரசாதங்களோடு அவர்களை கட்டுப்படுத்தி விடுகிறேன்; நான் உன்னைத் தீர்ப்பிடவில்லை; உனக்கு நினைவுபடுத்த மட்டுமே செய்கிறேன், உன்னிடமிருந்து நான் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; உன் இறைவனாகிய என்னை உன் முழு ஆன்மாவோடும், உன் முழு மனதோடும் நேசி, ஏனெனில் என்னை நேசிக்கும்படி ஒரு விசேஷமான, ஆழமான, ஆழம் காண முடியாத அன்பைக் கொண்டு என்னை நேசிக்கும்படியாகவே நான் உன்னைப் படைத்திருக்கிறேன்; நான் என் மோட்சத்தின் கதவுகளைத் திறந்து உன்னை உள்ளே அனுமதித்திருக்கிறேன்; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே காணப்படக்கூடிய என் மண்டபத்திற்குள் நான் உன்னை வரவேற்றிருக்கிறேன்; என் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு என் மீட்பின் திட்டத்தை நான் கூறியிருக்கிறேன்; என் அளவற்ற இரக்கத்தினால், நான் அதை இரகசியத்தில் ஆயுத்தம் செய்து வந்திருக்கிறேன்; என் மண்டபத்தில் நான் அவர்களுக்கு அதை அறிவித்தேன், நான் என் கண்களை உன்மீது பதித்திருந்தேன் என்று அவர்களிடம் சொன்னேன், என் மாபெரும் இரக்கத்தையும், என் அதிகாரத்தையும் காட்டும்படி, என் சிருஷ்டிகள் அனைத்திலும் மிகக் கீழானதை, அனைத்திலும் அதிக பலவீனமானதை, நித்தியம் முழுவதிலும் அனைத்திலும் அதிக ஈனமானதை நான் தெரிந்து கொள்வேன் என்று சொன்னேன்; நான் இறந்தோர் மத்தியில் உன்னைத் தேடி வந்து, உன்னை உயிரோடு எழுப்பி, என்னிடம் உன்னை உயர்த்தும்படியாகவே இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறேன், ஏனெனில் இதுவே என் சித்தமாய் இருந்தது; அதன்பின் நான் உனக்காக ஒரு மேஜையை இட்டு வைத்து, நானே உனக்கு என் உணவை உன் வாயில் என் கரத்தால் ஊட்டிவிட்டேன்; உன் இறைவனாகிய நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்!! நான் நேசப் பொறுமையோடு உன்னை நேசிக்கிறேன்! அதன்பின் நான் என் எண்ணெயைக் கொண்டு உன்னை அபிஷேகம் செய்து, உன்னை என்னுடையவளாக்கினேன்; நான் உன்னை எனக்கு மண ஒப்பந்தம் செய்து கொண்டு, உன் எஜமானர் ஆனேன்; நான் வரப்பிரசாதங்களால் உன்னை மூடினேன், என் ஆபரணங்களைக் கொண்டு உன்னை வளப்படுத்தினேன்; நான் என் சிலுவைகளையும், என் ஆணிகளையும், என் முட்கிரீடத்தையும் உனக்குத் தரவில்லையா? ஒரு மணவாளர் தன் அன்பிற்குரியவளுக்கு இதைவிட அதிக மதிப்புள்ள பொக்கிஷமாக வேறு எதைத் தர முடியும்? அன்பின் ஆவியாய் இருக்கிற நான் என்னை எப்படி நேசிப்பது என்றும், இந்த அன்பில் வளர்வது எப்படி என்றும் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; நான் சுற்றிலும் என் சம்மணசுக்களுக்கு உன்னைக் காட்டியிருக்கிறேன்; என்னிடம் உள்ள எல்லாவற்றையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்; நீ என் இல்லத்தில் வாழ்கிறாய், நீ என் சொந்தக் கரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு, என் வரப்பிரசாதத்தால் அர்ச்சிக்கப்பட்டு, என் புனித இதயத்தில் வாழ்கிறாய்; சாத்தான் ஏன் உன்னைத் துரத்திக் கொண்டிருக்கிறான் என்பதை முயற்சி செய்து, புரிந்துகொள்; அவன் என் திட்டத்தைக் குலைக்கும்படி அதைப் பின்தொடர்கிறான்; எப்படிப்பட்ட ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நீ அறிந்தாயானால்! ஆனால் இந்தப் போராட்டத்தில் விளையும் அதிர்வுகளை பூமி உணர்கிறது; ஆகவே, அவனைப் பற்றி எச்சரிக்கையாய் இரு; அவன் உன்னை ஏமாற்ற அனுமதியாதே! நீ எனக்கு உதவி செய்யாவிடில், என்னால் எப்படி எதையாவது செய்ய முடியும்? தயவுசெய்து அவனை அனுமதியாதிரும்! தயவுசெய்து, அவனைத் தடுத்து நிறுத்தும்! நான் எப்படி உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நீ அறிவாயானால்... இங்கே, இதைக் கொஞ்சம் பார்; நான் நின்று கொண்டிருக்கக் கண்டேன். என்னைச் சுற்றிலும் சம்மணசுக்களின் வளையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது, அவர்கள் யாருக்கும் வழி கொடாதபடி ஒருவர் மற்றொருவருடைய கரங்களைப் பிடித்திருந்தனர். உன்மீது ஒரு விரலைக் கூட வைக்க சாத்தான் அனுமதிக்கப்படுவதில்லை, குறிப்பு: எனக்கு நோயையோ மரணத்தையோ விளைவிக்க. இதை நான் உனக்கு வாக்களிக்கிறேன்; நான் என் பங்கிற்கு உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன், உன்னை அலட்சியம் செய்யவும் மாட்டேன்; என்னோடு இருக்கும்போது, உனக்கு எதுவும் குறைவுபடாது; நான் என் சமாதானத்தை உனக்குத் தந்திருக்கிறேன், சிறிய ஆன்மாக்களுக்கென நான் கொண்டிருக்கிற என் முன் குறிக்கப்படுதலின் அன்பை உனக்குக் காட்டியிருக்கிறேன்; என் புனித இருதயத்தை நான் உனக்குக் காட்டியிருக்கிறேன்; ஆகவே, என் வசுலா, நீ அளவற்ற விதமாய் என்னை நேசிக்கவும், என் ஆன்மாவை மகிழ்விக்கவுமே உண்டாக்கப்பட்டிருக்கிறாய்; நீ என்னை எப்போதும் ஆசிக்க வேண்டும், எனக்குக் கீழ்படிய வேண்டும், என்னை மகிழ்விக்க வேண்டும்; நீ என் கோபத்தை அமர்த்த வேண்டும், என்னைத் தேற்றி, என்னை இளைப்பாற்ற வேண்டும்; நீ என்னை ஆராதிக்க வேண்டும், என்னில் நம்பிக்கை வைக்க வேண்டும், என்னில் முழுமையாகவும், கண்மூடித்தனமாகவும் விசுவாசம் கொள்ள வேண்டும்; இவை என் இதயத்தின் நடத்தை விதிகளாக இருக்கின்றன; என் பிரதிபலிப்பாக இருந்து, என்னைக் கனப்படுத்து, நான் உனக்குத் தருகிற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; மலரே, என் ஆவல்களுக்காகவும், என் மகிமைக்காகவும் மட்டுமே வாழு, நான் உனக்குத் தருகிற எல்லாவற்றையும் எப்போதும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்; சரி, என் ஆண்டவரே, நான் முயற்சி செய்கிறேன். நான் எல்லாக் காலங்களிலும் பிரசன்னமாய் இருக்கிறேன்; நான் உன்னைக் காப்பாற்ற வந்திருக்கவில்லை என்றால், இப்போது என்னை, என்னை மட்டும் நீ நேசித்துக் கொண்டிருப்பாயா? இல்லை ஆண்டவரே. என்னில் உண்மையான வாழ்வு என்பதற்கு அர்த்தம் என்ன என்று நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; அடிக்கடி ஜெபி, ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஜெபமாலையை ஜெபி, ஏனெனில் இந்தச் சிறிய சங்கிலி, சாத்தானைக் கட்டி வைப்பதும், அவனை வெற்றிக் கொள்வதுமான சங்கிலியாக இருக்கும்! நான் உனக்கு என் சமாதானத்தைத் தருகிறேன், ஒருபோதும் சந்தேகப்படாதே; நாங்கள், நாம்? என்றென்றும் ஆமென். சாத்தான் சங்கிலிகளால் கட்டப்படுவான். திருவிளைப்பாட்டில் 20 ஆம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் வேதாகமம் கூறும்போது, மனித குலம் முழுவதும், இந்த பூமிக்கோலம் முழுவதும் ஜெபமாலை சொல்லும்போதுதான் அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த நாள் வரும்போது, ஜெபமாலையின் சங்கிலியால் சாத்தான் வெற்றிக்கொள்ளப்பட்டு நசுக்கப்படுவான். நவம்பர் 21, 1988 கடவுளுக்கு மகிமை, நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக! என் ஆண்டவரா? நான்தான்; என் புனித இதயம் எப்படி இருக்கிறது என்று உணர்ந்து பார்; இயேசுவின் புனித இதயம் அனைத்து இதயங்களிலும் அதிக மென்மையானதாகவும், அதிக நேச கதகதப்புள்ளதாகவும், மன்னிப்பதாகவும் இருக்கிறது. நான் எப்படி உம்மை எதிர்த்து நிற்க முடியும்? எங்கள் கூட்டத்திற்கான செய்தி; நான் அன்பாக இருக்கிறேன்; நானே அன்பின் உன்னத ஆதாரமாக இருக்கிறேன், ஆகவே, என்னை எதிர்த்து நிற்காதீர்கள்; என்னிடம் வாருங்கள், என்னில் மூழ்கி இருங்கள், ஏனெனில் நான் கனிவுள்ள அன்பினுடையவும், சமாதானத்தினுடையவும் ஒரு பெருங்கடலாக இருக்கிறேன்; உங்கள் இதயங்களை நிரப்பிக் கொள்ளும்படி என் புனித இதயத்திலிருந்து நீங்கள் எல்லோரும் முகந்து கொள்ளுங்கள்; நான் உங்களை அலங்கரிப்பேன், உங்களை உத்தமமானவர்கள் ஆக்குவேன்; வந்து என்னிடமிருந்து உண்ணுங்கள், அப்போது என்றென்றும் வாழ்வீர்கள், குறிப்பு: அருளப்பர் ஆறாம் அதிகாரம் 51வது வசனத்தை காண்க. ஏனெனில் நானே உயிருள்ள அப்பமாக, வாழ்வின் அப்பமாக இருக்கிறேன். குறிப்பு: அருளப்பர் ஆறாம் அதிகாரம் 35வது வசனத்தை காண்க. அன்புக்குரியவர்களே, என் தேவ பராமரிப்பின் அழைத்தல்களை சந்தேகிக்காதீர்கள்; நான் இன்னும் உங்கள் அனைவர் மத்தியிலும் இருக்கிறேன்; நான் உங்கள் கூட்டங்களில் இருக்கிறேன், அவற்றில் கலந்து கொள்கிறேன், அங்கு பிரசன்னமாக இருக்கிறேன்; நானே உங்கள் இதயங்களில் பேசுகிற தலைமை குருவாக இருக்கிறேன், நானே என்னை அணுகி வரும்படி உங்கள் எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறேன், நான் எப்போதையும் விட மிக அதிகமாக என் அருகில் உங்களை இழுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்; ஆ! என் கரங்களில் உங்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளவும், மிகுந்த கனிவுள்ள அன்போடு உங்கள் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளவும் நான் எவ்வளவு ஏங்குகிறேன்! நீங்கள் என்னை அணுகி வந்து, என்னோடு அன்யோனியமாக இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்காக எவ்வளவு ஏங்குகிறேன்! நானே உன் தலைமைக் குரு, ஆனாலும் நான் உங்கள் பரிசுத்தராகவும், உங்கள் சகோதரராகவும், உங்கள் தோழராகவும், உங்கள் மணவாளராகவும் கூட இருக்கிறேன், நான் உங்கள் சிருஷ்டிகராக இருக்கிறேன், நீங்கள் அனைவரும் என் வித்தாக இருக்கிறீர்கள்... வசுலா, நான் இந்த கூட்டங்களில் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்; நீ ஆற்றும் உரைகள் என்னிடமிருந்து வரும், உன் வார்த்தைகள் என் வாயினின்று வரும்; குறிப்பு: கடவுள் எனக்கு சரியான வார்த்தைகளைத் தருவார் என்பது இதன் பொருள். என் பழத்தோட்டத்திற்கு நீர் பாய்ச்சப் போகிறேன் என்றும், என் தோட்டத்திற்கு நீர்ப் பாசனம் செய்யப் போகிறேன் என்றும் நான் உனக்கு சொல்லவில்லையா? நான் உங்கள் அனைவருக்கும் மேலாக காலைப் பனியைப் பரப்பி, உங்கள் அனைவரையும் என் சமாதானம் மற்றும் அன்பின் பனித்துளியாக இருக்கச் செய்வேன்; ஆகவே, படைப்பே, என்னை எதிர்க்காதே, நான் உன்னை அழகுபடுத்த எண்ணுகிறேன்! தங்களை எனக்குத் திறந்து, என் சமாதானம் மற்றும் அன்பின் பனித்துளி தங்களில் ஊடுருவ அனுமதிப்பவர்கள் பேறு பெற்றவர்கள்; எனக்குப் பிரமாணிக்கமாக இருப்பவர்களும், என்னை நேசிப்பவர்களும் பேறு பெற்றவர்கள், ஏனெனில் நான் எனக்கு இன்னும் அதிக நெருக்கமாக அவர்களை இழுத்து, என் அன்பால் அவர்களை மூடுவேன்; நீங்கள் என் சாயலாகப் படைக்கப்படுகிறீர்கள், நீங்கள் இந்தச் சாயலில் உங்களில் பலர் மறந்து போய்விட்ட அந்தச் சாயலில் வாழ அழைக்கப்படுகிறீர்கள், ஆனாலும், தலைமைக் குருவாகிய நான் என் தெய்வீகத்தைப் பற்றியும், என் பரிசுத்தத்தையும் பற்றி உங்களுக்கு நினைவுபடுத்துவேன்; நான் பரிசுத்தராய் இருக்கிறேன் என்று உங்களுக்கு நினைவுபடுத்துவேன்; இயேசுவா? நான்தான்; நீங்கள் பரிசுத்தராக வாழும்படி, நான் பரிசுத்தராய் இருக்கிறேன் என்று உங்களுக்கு நான் நினைவுபடுத்துவேன்; நான் அன்பாய் இருக்கிறேன், என் அளவற்ற அன்பின் காரணமாக, நான் உங்களுக்கு பூக்கோளத்தைச் சுற்றிலுமுள்ள பல்வேறு இடங்களில் எச்சரிக்கைகளையும், அடையாளங்களையும் தந்து கொண்டிருக்கிறேன்; பிதா, என் திருப்பெயரால் அனுப்புகிற தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவியானவர் அனைத்தையும் உங்களுக்குக் கற்பித்து, நான் உங்களுக்குச் சொல்லியுள்ள அனைத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார் என்று நான் சொல்லவில்லையா? புனித மாமரி: மலரே, என் சமாதானத்தைக் கொண்டிரு; இப்போதுக் கவனமாய் இரு, கீழ்படிதல் உள்ளவளாயிரு, நீ பயப்பட எதுவும் இருக்காது; ஓ, வசுலா, இயேசு உன்னை அளவற்ற விதமாக நேசிக்கிறார்; அவர் உன்மீது அக்கறை கொள்கிறார்; நீயும் அவரும், அவருடைய திருச்சிலுவையைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்; இயேசு ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டார்; ஆம், நான்தான், வந்து, ஓய்வெடு; நான் உன்னோடு இருக்கிறேன்; நாங்கள், நாம்? இயேசுவா, கூட்டத்திற்காகத் தரப்பட்ட செய்தியின் தொடர்ச்சி. நான்தான்; நான் சிலுவையில் அறையப்பட்ட உங்கள் ஆண்டவர்; என் ஆன்மாவின் குழந்தைகளே, என் இதயத்தின் அன்பர்களே, அன்பு ஆழ்ந்த விதமாகத் துன்புறுகிறது; நான் எப்படி உணர்கிறேன் என்று புரிந்துகொள்; நான் கைவிடப்பட்டதாகவும், மறக்கப்பட்டதாகவும், என் சொந்த மக்களாலேயே துரோகம் இழைக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்; நான் இன்று என் சிலுவையின் மீதும், என் இரண்டாவது திருப்பாடுகளிலும் இருக்கிறேன்; பூமி முன் எப்போதையும் விட அதிகம் வறண்டிருக்கிறது, அன்பிற்குரியவர்களே, இதன் விளைவாக நீங்கள் துன்பப்படுகிறீர்கள்; நீங்கள் பலிப் பொருட்களாக இருக்கிறீர்கள்; உங்களில் பலர் பட்டினியாய் இருக்கிறீர்கள், மற்றவர்கள் தீயவனால் இடையறாமல் ஏமாற்றப்படுகிறார்கள், நான் உங்கள் அனைவரையும் பார்த்து எப்படி பரிதாபப்படுகிறேன்! என் இருதயம் என் சிலுவையிலிருந்து இதையெல்லாம் கண்டு இரத்தம் வடிக்கிறது; என் கண்கள் இரத்தக் கண்ணீரால் நிறைந்துள்ளன; நான் உங்கள் அனைவருக்கும் மிகப் பல அடையாளங்களைத் தந்துக் கொண்டிருக்கிறேன், இருந்தாலும், மிகச் சிலர் மட்டுமே அதைக் கவனிக்கிறார்கள்; உங்களில் ஜெபங்களில் என்னிடம் வாருங்கள், நான் இங்கே இருக்கிறேன், நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்! உங்கள் இரட்சகரின் கரங்களுக்குள் வாருங்கள்; உங்கள் பாவங்களை என்னிடம் தாருங்கள், நான் உங்களைச் சுத்தமாக்கி, உங்களைக் குணமாக்குவேன், நான் உங்களைத் தெய்வீகமானவர்களாக ஆக்குவேன், ஏனெனில் நானே தெய்வீகம், நான் உங்களை உத்தமமானவர்கள் ஆக்குவேன்! நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள், எனக்கு அஞ்சாதீர்கள்; நான் நேசிக்கிற ஓர் இறைவனாக இருக்கிறேன், நான் பரிதாபத்துக்குரியவர்கள் மீது இரக்கம் நிறைந்தவராக இருக்கிறேன்! நான் தயவிரக்கம் நிறைந்த இறைவனாக இருக்கிறேன்! என்னிடம் ஜெபியுங்கள், என்னிடம் பேசுங்கள், தயங்காதீர்கள்! நான் உங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்... நான் உங்கள் அனைவர் மீதும் கொண்டுள்ள அன்பு மிக மேலானது, எந்த அளவிற்கெனில், பரிசுத்தர்களில் அதிபரிசுத்தரும், நித்தியரும், என் படைப்புகள் அனைத்தின் அரசருமான நான் உங்களை வந்தடைந்து, உங்கள் நோய்களை குணமாக்க என்னால் இயலும்படி, இவ்வளவு தூரம் உங்களை நோக்கிக் குனிகிறேன்; நான் எப்போதும், இறுதி வரையிலும், உங்கள் மத்தியில் இருக்கிறேன்; என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியைப் பரப்புபவர்கள் பேறு பெற்றவர்கள்! என்னிடம் வந்து என்னை தேற்றுபவர்கள் பேறு பெற்றவர்கள்; என்னோடு ஒன்றாய் இருங்கள்; என்றென்றும் என் அன்பில் நிலைத்திருங்கள்; அனைவரிலும் அதிக அன்பிற்குரிய குழந்தைகளே, நான் உங்கள் பரிசுத்த அன்னையாக இருக்கிறேன், நான் மனித குலம் முழுவதும் அன்னையாக இருக்கிறேன்; என் அன்பிற்குரியவர்களே, இயேசு மனித வார்த்தைகளுக்கு எட்டாத விதமாக துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார், அவர் இப்போது தமது இரண்டாவது திருப்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்! எங்கள் இதயங்களை உணருங்கள், அவை எப்படி துன்புறுகின்றன என்பதை உணருங்கள்... இன்று ஒரு பெரிய போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது; சாத்தான் கோபவெறியோடு தாக்கிக் கொண்டிருக்கிறான், அர்ச்சு. மிக்கேல் தேவ தூதர்களோடு அவனுடன் போர் புரிந்து கொண்டிருக்கிறார்; பூமி இந்த மாபெரும் போரின் அதிர்வுகளை உணர்கிறது; அன்பிற்குரியவர்களே, எனக்கு உங்கள் ஜெபங்கள் தேவைப்படுகின்றன, ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்... என் அன்பிற்குரியவர்களே, ஜெபியுங்கள், இந்த மறைவான இருளில் சுடர் வீசிப் பிரகாசிக்கிற ஒளியின் தேவதூதர்களைப் போல் இருங்கள்; ஆன்மாக்களின் மீட்பிற்காக ஜெபியுங்கள்; என் பிரியத்திற்குரியவர்களே, ஆன்மாக்களின் மனம் திரும்புதலுக்காக ஜெபியுங்கள்; நான் உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணுகிறேன்... ஒரு தாய், தன் குழந்தைகள் ஒரு நித்திய நெருப்பை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதைக் காணும்போது எப்படி உணர்வாள், அவளுடைய அன்பிற்குரியவர்களில் சிலர் இந்த நித்திய நெருப்பில் விழுவதைக் காணும்போது, அவள் எப்படி உணர்கிறாள் என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்... இதைப்பற்றித் தியானியுங்கள், அப்போது நீங்கள் இன்னும் நன்றாக என்னைப் புரிந்து கொள்வீர்கள்; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் உங்களை ஆசீர்வதிப்பதோடு, என் செய்தியை நான் முடிப்பேன்; வந்து, இயேசுவுக்கு ஆறுதல் கொடுங்கள்... என் ஆண்டவரா? நான்தான்; நீ ஜெபமாலை ஜெபிக்கையில், அதன் பரம இரகசியங்களை மீண்டும் வாழ்வதில், என்னை மகிழ்விக்க, நீ கடுமையாக முயல்வதைக் காணும்போது, நான் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தாய், பரிசுத்த ஜெபமாலையை இன்னும் மெதுவாக ஜெபிக்க, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடு; வேகமாக, உங்கள் உதடுகளிலிருந்து மட்டும் அதை ஜெபிப்பதில் எந்தப் பயனுமில்லை; ஒவ்வொரு ஜெபமும் இதயத்திலிருந்து வரவேண்டும்; நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை உணர்ந்து சொல்ல வேண்டும், ஆகவே, ஒவ்வொரு தேவ இரகசியத்தையும் தியானிப்பதற்கு, போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்; உமக்கு நன்றி, என் ஆண்டவரே.