ஆண்டவர் தம்மிடம் வரும் எந்த ஜெபத்தையும் மறுக்க மாட்டார்; இருதயத்திலிருந்து வரும் பெருமூச்சையும் கவனிப்பார் என்கிறார். புனித மிக்கேல் அனைவரையும் ஆண்டவரிடம் திரும்பி மனம் வருந்தவும், சகோதரர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபிக்கவும் அழைக்கிறார். மாமரி இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும், அன்பால் நிரப்பப்படவும் கேட்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 88. பிப்ரவரி 27, 1989 சமாதானம் உன்னோடு இருப்பதாக; புனித மிக்கேல். ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக; புனித மாமரி. ஓ நான் ஆண்டவர், நான் சொல்வதைக் கேள், இப்போது என்னிடம் வா, இந்த ஆன்மாக்களை எனக்கு ஒப்புக்கொடு; குறிப்பு: நான் ஆண்டவரிடம் வந்து, தங்களுக்காக ஜெபிக்கும்படி என்னிடம் கேட்டிருந்த எல்லா ஆன்மாக்களையும் அவருக்கு ஒப்புக்கொடுத்தேன். நான் ஏனோ வறட்சியாக உணர்ந்தேன். நான் எந்த ஜெபத்தையும் ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்; அது வறுமையிலிருந்து வெதுவெதுப்போடு வந்தாலும், நான் அது சொல்வதைக் கேட்பேன்; உன் பலவீனத்தை நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் என் பலம் உங்களைத் தாங்கும்; உன் விசுவாசம் வளரும்படி ஜெபி; நான் உன்னிடம் அந்த எல்லா ஆன்மாக்களையும் அனுப்புகிறேன், என் சித்தத்தை உய்த்துணர ஜெபி, இடைவிடாமல் ஜெபி; கேள், உனக்குக் கொடுக்கப்படும்; கேள், ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்திவிடாதே; நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; நீ எனக்குத் தருவது வெறும் பெருமூச்சாக இருந்தாலும், இருதயத்திலிருந்து வரும் வரைக்கும், நான் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வேன்; ஆகவே, நீ கேட்பதில் நம்பிக்கையோடிரு, அப்போது நான் அதை நூறு மடங்காக உனக்குத் தருவேன், நான் உன்னை மன்னிப்பேன், நீ கேட்கும் உதவியை எந்த தந்தைதான் தம் குழந்தைக்குத் தரமாட்டார்? ஆண்டவரே, சில சமயங்களில் தங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யாத தந்தையரும் இருக்கிறார்களே! இந்த தந்தையர் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்; அவர்கள் என்னுடையவர்களாக இருந்திருந்தால், அவர்கள் என்னை நேசித்திருப்பார்கள், இவ்வாறு அவர்கள் தங்கள் சந்ததியை நேசித்து, அவர்களுக்கு உதவி செய்திருப்பார்கள்; உன் ஆன்ம வளர்ச்சியில் உனக்கு உதவி செய்ய நான் இங்கே இருக்கிறேன்; நான் உனக்கு என் உணவைத் தர ஒருபோதும் மறுக்க மாட்டேன்; வா, ஞானம் உனக்குக் கற்பிக்கும்; பிப்ரவரி 28, 1989 நான் முற்றிலும் வறட்சியுள்ளவளாக, அபாயகரமான முறையில் வறட்சியுற்றவளாகவும், குளிர்ந்து போனவளாகவும் உணர்ந்தேன். என் வசுலா, என் அன்பைப் பற்றி நீ எப்படி சந்தேகம் கொள்ள முடிந்தது? என் விரல் உன்மீது இருக்க அனுமதி; ஞானம் உனக்குக் கற்பிக்கும்; உன்னை வழிநடத்திக் கொண்டிருப்பவர் யார் என்பதை நினைவில் கொள், சிந்தி! குளிர்ந்தவைகளும், என்னை அன்பு செய்யாதவையுமான மற்ற இருதயங்களை உஷ்ணப்படுத்தும்படி, உன் அன்பின் சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள என்னை அனுமதி; நான் இந்த விண்ணக வேலைகளை உனக்கு ஏற்கனவே கற்பித்திருக்கிறேன், இல்லையா? ஆம், ஆண்டவரே, நீர் கற்பித்திருக்கிறீர். என்றாலும், இது நிகழும்போது எனக்குக் கவலை தருகிறது. நான் எந்நேரமும் உன் அருகில் இருக்கிறேன், மகளே, நீ அஞ்ச வேண்டியதில்லை; வா, நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. அப்படியானால், நீ சொல்வது எனக்கு எப்படிக் கேட்காமல் இருக்கும்? வா, நான் என் பிரசன்னத்தை உனக்கு நினைவுபடுத்துவேன்; மார்ச் 1, 1989 மறு ஒன்றிப்பிற்கான புனித மிக்கேலின் செய்தி. வசுலா, கடவுளுக்கு மகிமை உண்டாகுக! ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! ஆண்டவரின் இரக்கம் அளவற்றது, ஆண்டவருடைய அருள் உன்மீது இருக்கிறது; விழித்தெழுங்கள்! சத்தியத்தைக் கைவிட்டுவிட்டவர்களாகிய அனைவரும் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், திரும்பி வந்து, மனம் வருந்துங்கள்! உங்கள் சகோதரர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபியுங்கள், ஆண்டவரின் எச்சரிப்புகளுக்கு செவிகொடுங்கள்; சமாதானம், சமாதானம், கடவுளோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள்! புனித மிக்கேலாகிய நான் உங்களைக் காக்கும்படி உங்கள் அருகில் இருக்கிறேன்; இடைவிடாமல் ஜெபியுங்கள், உங்கள் ஜெபங்களை இந்தத் தவக்கால நாட்களில் முன் எப்போதையும் விட அதிகமாகத் தேவைப்படுகின்றன; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன், ஆமென்; மார்ச் 3, 1989 மறு ஒன்றிப்பிற்கான மாமரியின் செய்தி. என் அன்புக்குரியவர்களே, சமாதானம் உங்களோடு இருப்பதாக; இன்று அன்பானவரோடு நீடித்து நிலைத்திருக்கும்படி நான் உங்களிடம் கேட்கிறேன்; நான் உங்கள் எல்லோரையும் ஊக்கப்படுத்த விரும்புகிறேன், கடவுளுக்கு பிரமாணிக்கமாக நிலைத்திருப்பதன் மூலம் அவரை மகிமைப்படுத்துங்கள்; உங்களை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்; இப்போது மினுமினுப்பாக எரிந்து கொண்டிருக்கிற இந்தத் தீச்சுடர் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு கண்ணும் காணும்படி ஒர் உயிருள்ள தீபந்தமாக ஆவதாக; உங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருங்கள், உங்கள் இருதயங்களை முழுவதுமாக ஆண்டவருக்குத் திறந்து, அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்; தமது இரக்கமுள்ள அழைப்புகளை உங்களுக்கு அனுப்புவதற்காக ஆண்டவரைப் போற்றுங்கள்; புதிய வெளிப்பாடு எதையும் எதிர்பார்க்காதீர்கள்; அவருடைய அழைப்புகள் தெய்வீக சத்தியத்தின் ஒரு நினைவூட்டுதல் மட்டுமே, பரிசுத்தமாக வாழ்வது எப்படி என்பதன் நினைவூட்டுதல், கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதன் நினைவூட்டுதல் மட்டுமே; கடவுள் அடிப்படை சத்தியங்களை உங்களுக்கு நினைவூட்டுகிறார்; ஆகவே, உண்மையானதும், மாசற்றதுமான அனைத்தையும் கொண்டு உங்கள் மனங்களை நிரப்புங்கள்; சோதிப்பவன் வந்து உங்களை ஏமாற்றி விடாதபடி, உங்களுக்குள் வெறுமையான இடத்தை விட்டு வைக்காதீர்கள்; ஆகவே, இறைவனின் தெய்வீக அன்பைக் கொண்டு உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள், ஏனெனில், நீங்கள் அன்பு செய்வதற்காகவே படைக்கப்பட்டீர்கள்; சமாதானத்திற்காக ஜெபியுங்கள், உங்கள் சகோதரர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபியுங்கள்; உங்கள் நடுவே இன்னும் பெரிதான ஓர் அன்பு இருக்குமாறு ஜெபியுங்கள்; நான் உங்களுக்கு உதவி செய்ய, உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறேன், உங்களுக்காக நான் பரிந்து பேசுவேன், ஆகவே, தயங்காமல் என்னிடம் வாருங்கள்; நான் எப்போதும் உங்களுக்கு உதவி செய்யும் உங்கள் அன்னையாக இருக்கிறேன்; அன்புடன் ஆண்டவரிடம் வாருங்கள், அவர் தம் சமாதானத்தைக் கொண்டு உங்களை நிரப்புவார்; அன்புடன் கேளுங்கள், அப்போது பெற்றுக் கொள்வீர்கள்; அன்போடு ஜெபியுங்கள், அப்போது உங்கள் ஜெபம் கேட்கப்படும்; என் சமாதானத்தைக் கொண்டிருங்கள், எங்கள் செய்திகளின்படி வாழ வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்; நான் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன், ஆமென்;