ஆண்டவர் தம் பிள்ளைகளை அன்போடு தம்மிடம் திரும்பி வந்து ஒப்புரவாகும்படி அழைக்கிறார்; ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இதயத்தால் ஜெபிக்கச் சொல்கிறார். இறைவாக்கினர்களும் தம் திருவுடலின் பகுதி என்றும், விவிலியம் ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்றும் கூறுகிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 90. மார்ச் 29, 1989 ஸ்விட்சர்லாந்தின் வடபகுதியில் உள்ள கோர்டேட்டெல்லில் நடக்கவிருந்த கூட்டத்திற்காகத் தரப்பட்ட செய்திகள். சமாதானம் உங்களோடு இருப்பதாக; நான் ஆண்டவர், என் பிரசன்னத்தை உணருங்கள், என் பிரசன்னத்தைப் பகுத்துணருங்கள்; இன்று நான் என் ஊழியப் பெண் வழியாகப் பேசியபடி உங்களிடம் வருகிறேன்; நான் எப்போதும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உங்களோடு இருக்கிறேன்; என் திரு இருதயம் என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை உணர்வதில் அக்களிக்கிறது; என் ஆட்டுக்குட்டிகளே, என் கரங்களில் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டவும், தீயவனிடமிருந்து உங்களை மறைத்துக் கொள்ளவும் நான் எப்படி எப்போதும் விரும்பினேன்! நான் உங்களை அன்பு செய்கிறேன், ஒரு நித்திய அன்பால் உங்களை அன்பு செய்கிறேன்; நீங்கள் மோட்சத்தில் இருக்கும்போது மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பொறாமையுள்ள அன்பைக் கொண்டு நான் உங்களை அன்பு செய்கிறேன்; ஆயினும், என் ஆழங்காண முடியாத அன்பையும் மீறி, என் குழந்தைகளில் பெரும்பாலானோர் எனக்குத் தங்கள் முதுகைத் திருப்பிக் கொண்டனர்... அவர்கள் என் திருப்பாடுகளை மறந்துவிட்டார்கள்; பரிணாமத்தின் காரணமாக, என் பெயர் இப்போது அவர்களுக்கு அர்த்தமற்றதாகிவிட்டது; அவர்களுக்கு விக்கிரகங்களைக் கொடுங்கள்; அப்போது அவற்றை முதலில் ஆராதிப்பவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்; ஆனால் பரிசுத்தமானதை அவர்களுக்குக் கொடுங்கள்; அப்போது அவர்கள் அதை ஏளனம் செய்வார்கள்; உங்கள் பரிசுத்தராகிய நான் துன்பப்படுகிறேன், இந்த இருண்ட உலகின் கீழ்படியாமையாலும், அசுத்தத்தாலும், அக்கிரமத்தாலும் என் திருவுடல் கிழிக்கப்படுகிறது! ஆ, படைப்பே! என் துன்பக் கூக்குரல் மோட்சம் முழுவதையும் அசைத்து, என் தூதர்களை நடுநடுங்கவும், சாஷ்டாங்கமாக விழவும் செய்கிறது; என் மகள்களே, மகன்களே, நீங்கள் இன்னும் என் கூக்குரலைக் கேட்கவில்லையா? மேலிருந்து என் கூக்குரல்களுக்கு நீங்கள் காட்டும் செவிட்டுத் தனம் பசாசுக்களைக் கூட மலைத்துப் போகச் செய்கிறது...! இரத்தக் கண்ணீர்த் துளிகள் என் கண்களில் இரவும் பகலும், மணிக்கு மணி பெருக்கெடுக்கின்றன, நான் இடைவிடாமல் உங்களுக்காகக் காத்துக் கொண்டே இருக்கிறேன், நீங்கள் என் ஆவியை என்றென்றைக்குமாக கைநெகிழ்ந்து விட்டீர்களா? ஓய்வெடுக்க ஒரு மேய்ச்சல் நிலம் கூட இல்லாததும், உங்களுக்குப் புத்துணர்வு தரும் ஒரு நீரோடை கூட ஓடாததுமாகிய இந்த நாச வனாந்தரத்தில் என் குரல் எதிரொலிக்கிறது; நான் மேலேயுள்ள என் சிம்மாசனத்திலிருந்து என் பழைய மேய்ச்சல் நிலங்களுக்குள் இறங்கி, அவை அலட்சியம் செய்யப்பட்டு, தரிசாகிப் போயிருப்பதைக் காண்கிறேன்; என் சொந்தக் கரத்தால், எவ்வளவோ அதிக அன்போடு நான் நட்டு வைத்த என் மலர்ச் செடிகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வாடிப் போகின்றன; என் மலர்ப்பாத்திகள் அலட்சியப்படுத்தப்பட்டு, காய்ந்து போகின்றன; என் கிணறுகள் இப்போது ஒரு வெறுமையான, தூசி மிகுந்த, இருண்ட குழிகளாக மட்டுமே இருக்கின்றன, விரியன் பாம்புகள் அங்கே கூடுகட்டியுள்ளன; என் தோட்டக்காரர்கள் எங்கே போய்விட்டார்கள்? அவர்கள் ஏன் என் தோட்டத்தை அலட்சியம் செய்துவிட்டார்கள்? நான் திரும்பி வரும்போது, ஒரு மலரையாவது காண்பேனா? என் ஆவி அன்பில்லாமையாலும், விசுவாசமின்மையாலும், சமாதானமின்மையாலும் நசுக்கப்படுகிறது; என் திரு இருதயத்தின் குழந்தைகள் இந்த வனாந்தரத்தில் என் கூக்குரலைக் கேட்கிறார்கள்; அவர்கள் என் குரலை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்; குறைந்தபட்சம் காலங்களையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! என்னோடு இன்னும் ஒப்புரவாகாத நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், இப்போது வந்து ஒப்புரவாகுங்கள்; உங்கள் அக்கிரமங்கள் நித்தியம் முழுவதையும் ஊடுருவி, உங்களை என்னிடமிருந்து பிரித்துவிட்டன; தீமை எதுவும் செய்யாதீர்கள், அப்போது தீமை எதுவும் உங்களுக்கு நேரிடாது; ஒவ்வொருவருக்கும் நல்லவர்களாக இருங்கள், ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், உங்கள் எதிரிகளை மன்னியுங்கள்; நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிற என் வார்த்தைகளை நான் திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் உங்களில் எத்தனை பேர் அவற்றை நடைமுறையில் அனுசரிக்கிறீர்கள்? ஆனால் உங்களில் எத்தனை பேர் அவற்றை நடைமுறையில் அனுசரிக்கிறீர்கள்? உங்கள் இதயத்தைக் கொண்டு ஜெபியுங்கள்; எனக்கு அன்பு தேவைப்படுகிறது; வந்து உங்கள் இதயத்திலிருந்து வரும் ஜெபங்களைக் கொண்டு என்னை அலங்கரியுங்கள்; அன்பின் பாதாளமாக இருக்கிற என் திரு இருதயத்திடம் வந்து, அதிலிருந்து முகந்து, உங்கள் இதயங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்; நான் மிக அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன், மிகப் பிரியமான ஆன்மாக்களே, காலம் பறந்து கொண்டிருக்கிறது, என்னிடம் திரும்பி வாருங்கள்; சமாதானம்! சமாதானம்! சமாதானம்! மக்களினங்களிடம் சமாதானத்திற்காகக் கதறுங்கள், ஒன்று சேர்வதற்கு சமாதானம், அன்பு செய்வதற்கு சமாதானம், என்னை மகிமைப்படுத்துவதற்கு சமாதானம்! என் காட்சிகளைக் கண்டுள்ளவர்களின் ஒவ்வொரு காட்சியும் உண்மையாகும் நாள் வந்து கொண்டிருக்கிறது, ஏனெனில் நான் கூறுவதை எப்போதும் நிறைவேற்றுகிறேன்; என் அன்புக்குரியவர்களே, என் இராயப்பனுக்காக ஜெபியுங்கள்; பிதாப்பிதாவுக்காக ஜெபியுங்கள்; என் எல்லாக் குருக்களுக்காகவும் ஜெபியுங்கள்; குறிப்பு: குருக்கள் என்று சொல்வதில், இயேசுவின் திரு இருதயம் அவர்கள் மீதுள்ள ஒரு தனிப்பட்ட அன்பினால் விரிவடைந்தது, ஆனால் அதே சமயம், ஒரு வேதனை உணர்வுப் பூர்வமான அவருடைய திரு இருதயத்தை ஊடுருவியது. அவருடைய வேதனையை உணர்ந்தபோது, அது என் இருதயத்தையும் ஊடுருவியது. என் கண்கள் கண்ணீரால் நிரம்பின. நானும் என் பிதாவும் ஒன்றாயிருப்பது போல், என் ஆடுகளும் ஒன்றாய் இருக்கும்படி ஜெபியுங்கள்; என் ஆட்டுக்குட்டிகள், நான் திரும்பி வரும் வரையில், என் இராயப்பனின் தலைமையின் கீழ் ஒரே கிடைக்குத் திரும்பி வந்து சேரும்படி ஜெபியுங்கள்; ஓ, நீங்கள் மட்டும் கேட்டு கீழ்ப்படிவீர்களானால்! இப்போது பரலோக மந்திரத்தை ஜெபிப்பீர்களா? நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன், என் இராச்சியம் வரும், என் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படும்; குழந்தைகளே, சமாதானத்தின் கனிகளைக் கொடுங்கள்; ஆண்டவராகிய நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன், ஆசீர்வதிக்கிறேன்; இதே மறு ஒன்றிப்பிற்காக நம் பரிசுத்த அன்னையிடமிருந்து செய்தி: அன்புக்குரியவர்களே, இயேசுவுக்கு ஆறுதல் தாருங்கள், இயேசுவுக்கு ஆறுதல் தாருங்கள், ஒருவரோடு ஒருவர் சமாதானமாய் இருங்கள், ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்; கடவுளுக்கு பிரமாணிக்கமாக இருங்கள், அவரிடம் முழுமையாக உங்களைக் கையளித்து விடுங்கள்; அன்பாய் இருப்பவரிடம் தான் நீங்கள் உங்களை கையளிக்கிறீர்கள், அதன் மூலம், அவர் தமது அன்பாலும் சமாதானத்தாலும் உங்களைப் போஷிக்க, அவரை அனுமதிக்கிறீர்கள்; ஆண்டவரும், நானும் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறோம்; நான் உங்களை நேசிக்கிறேன்; ஆண்டவரும், நானும் இந்த அறையில் உள்ள அனைத்து பக்திப் பொருட்களையும் ஆசீர்வதிக்கிறோம்; மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; உங்களையே அன்பின் கரங்களில் விட்டுவிடுங்கள், அன்பானது உங்களை எப்போதும் வழிநடத்தும்; நான் உங்களை நேசிக்கிறேன், என் ஆசீர்வாதங்களைக் கொண்டிருங்கள்; ஏப்ரல் 1, 1989 இயேசுவா? நான்தான்; அன்பு. உங்களை வழிநடத்த விடுங்கள்; ஞானிகள் கூறுவதைக் கேட்காதீர்கள், அவர்கள் என் காலத்திலிருந்த மறைநூல் வல்லுனரைப் போன்றவர்கள்; அன்பானவருக்காக அன்பைக் கொண்டு நற்செய்தியை அறிவியுங்கள்; அவர்கள் என் அளவற்ற அன்பை உணர்வார்களாக; நான் உமக்காக ஏங்குகிறேன், ஆண்டவரே! சிறியவளே, என் திரு இருதயம் உன்னை உணர்வதிலும், "ஆண்டவரே, உமக்காக நான் ஏங்குகிறேன்" என்று நீ சொல்வதைக் கேட்பதிலும் அக்களிக்கிறது; இது பக்தியின் கனியாக இருக்கிறது; என் பிரதிபலிப்பாக, என்னுடைய நகலாக இரு; பிதாவின் மீது ஆசைகொள்; நான் பூமியின் மீது இருந்தபோது, பிதாவுக்காக ஏங்கினேன்; இடைவிடாமல் ஜெபித்தேன்; என் தந்தையோடு அன்பின் ஐக்கியத்தில் இடைவிடாமல் தொடர்பு கொண்டிருக்க, நான் ஏங்கினேன்; மாணவியே, நான் உன்னை ஞானத்தோடு மேலே உயர்த்திய உன் ஆசிரியராக இருக்கிறேன்; ஆகவே, என்னை மகிழ்ச்சியால் நிரப்பு, என்னோடு இடைவிடாத தொடர்பு கொண்டிரு; என்னை முதலாவதாகக் கொள், என்னை எப்போதும் ஆசி; நான் உனக்குத் தந்துள்ள இந்த முறையில் என்னை சந்திக்கும் போது, மகிழ்ச்சி கொள்; எனக்கு நெருக்கமாகவே இருந்துகொள், நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்புதான்; ஆண்டவரே, எங்களைப் போல், பூமியின் மீது எங்களில் ஒருவராக இருந்த பின், நரகத்திற்குச் செல்கிற ஆன்மாக்களைப் பற்றி நான் பரிதாபப்படுகிறேன். அவர்களை நரகத்திற்கு வெளியே கொண்டுவந்து, அவர்களை மாற்ற ஏதாவது ஒரு வழி இருக்குமானால்... நன்மை அல்லது தீமையை தேர்ந்துகொள்ளும் சுதந்திரத்தை நான் அவர்களுக்குத் தந்திருந்தேன், ஆனால் என் அன்பின் வேண்டுகோள்களையும், அழைத்தல்களையும் மீறி, அவர்கள் தீமையைத் தேர்ந்துகொண்டார்கள்; ஆனால், ஆண்டவரே, ஏன் அவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கக்கூடாது... குழந்தாய், அவர்கள் என்னை முழுமையாக நிராகரித்து விட்டதை நீ புரிந்து கொள்ளவில்லை; கடைசி வரை, நான் அவர்களை நேசித்திருக்கிறேன்; சாத்தானால் வழிநடத்தப்பட்டு, அவனைப் பின் செல்வதை அவர்கள் தேர்ந்து கொண்டார்கள், அவர்களுடைய மரணத்திற்குச் சற்று முன்பு கூட, நான் அவர்களுக்கு முன் இருந்திருக்கிறேன், ஆனால், அவர்கள் மனமொத்து, அற்பத் தயக்கம் கூட இல்லாமல், சாத்தானைப் பின் சென்றார்கள்; அது முழுக்க முழுக்க அவர்களுடைய தேர்வுதான், எப்போதைக்குமாக, அவர்கள் நரகத்தைத்தான் தேர்ந்து கொண்டார்கள்; ஓ, ஆண்டவரே, நான் எப்போதும் உமது சித்தத்தை செய்யவிடும். வசுலா, என் கரத்தை ஒருபோதும் விட்டுவிடாதே; நித்திய முழுமைக்கும், நாங்கள், நாம், அன்பின் ஒவ்வொரு துளியும் பயன்படுத்தப்படுகிறது, ஆன்மாக்களின் அழிவின் பாதையினின்று, அவர்கள் மீட்க எனக்கு அன்பு தேவை; வா; ஏப்ரல் 2, 1989 ஆண்டவரா? நான்தான்; குழந்தைக்குரிய விசுவாசத்தோடு என்னை நோக்கிப் பார், என் திருச்சபையை அழகுபடுத்து; ஆண்டவரே, இந்தக் காலத்தின் இறைவாக்கினர்களையும், உம்மிடமிருந்து வரும் வார்த்தையையும் ஏற்றுக்கொள்வது ஏன் சிலருக்கு மிக மிகக் கடினமாக இருக்கிறது? நான் மிகவும் அதிகாரப்பூர்வமாக உனக்குச் சொல்கிறேன், என் ஆடுகள் என் குரலை அடையாளம் கண்டுகொள்கின்றன; ஆனால் ஆண்டவரே, பெரும் பாவிகள் மனந்திரும்புகிறார்கள், குணப்படுத்தப்படுகிறார்கள் என்று வேத உண்மைகளை சந்தேகிப்பவர்களுக்கு நிரூபித்துக் காட்ட ஒருவனால் முடிகிறது என்னும்போதும் கூட, இந்தக் கனிகளைக் கண்டும் அவர்கள் இவற்றை நம்பி ஏற்றுக் கொள்வதில்லையே. என் வசுலா, தங்கள் கண்களுக்கு முன்பாக இறந்தோரிலிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்தாலும் கூட, இவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... இவர்களுக்கு இசையாசின் இறைவாக்கு இன்னும் பொருந்துகிறது; குறிப்பு: இசையாஸ் ஆறாம் அதிகாரம், இறைவார்த்தை ஒன்பது முதல் பத்து வரை. நீங்கள் கேட்டும், கேட்டும் புரிந்து கொள்ள மாட்டீர்கள், கண்டும், கண்டும் உணர மாட்டீர்கள்; ஏனெனில் இந்த மக்களினத்தின் இதயம் கடினமாகிவிட்டது, கேட்பதில் அவர்களுடைய செவிகள் மந்தமாகிவிட்டன, தங்கள் கண்களால் கண்டும், செவிகளால் கேட்டும், இதயத்தால் புரிந்துகொண்டும் மனந்திரும்பி, என்னால் குணப்படுத்தப்பட முடியாதபடி அவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்; என் தீர்க்கதரிசிகளும் என் திருவுடலின் ஒரு பகுதிதான் என்பதைப் பலர் மறந்து போகிறார்கள்; நீங்கள் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும் என்பதற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அருட்கொடையை நான் உண்மையாகவே ஒதுக்கி வைத்திருக்கிறேன்; அனைவரிலும் அதிக பிரியத்துக்குரிய குழந்தாய், நான் அப்போஸ்தலர்களாக இருக்கும்படி சிலரையும், குருக்களாகவும், ஆசிரியர்களாகவும் இருக்கும்படி சிலரையும், கலக காலங்களில் இறைவாக்கினர்களாக இருக்கும்படி சிலரையும் உருவாக்கி இருக்கிறேன்; அப்படியிருக்க, உங்களில் மிக அநேகர் ஏன் ஆச்சரியப்பட்டு, என் இறைவாக்கினர்களை மறுத்துத் தள்ளுகிறீர்கள்? என் திருவுடலின் ஓர் உறுப்பு வெட்டப்பட்டுள்ள நிலையில், என் திருவுடல் எப்படி செயல்படும்? நான் முற்றிலும் களைத்துவிட்டேன், என் திருவுடல் இடைவிடாமல் கிழித்துப் பீய்க்கப்படுகிறது; மலரே, உன்னைத் துன்புறுத்துவோரை அன்போடு ஏற்றுக்கொள்; அவர்களைத் தீர்ப்பிடாதே; என் இறைவாக்கினர்கள் எப்போதுமே துன்புறுத்தப்படவும், தீர்ப்பிடப்படவும், கசையால் அடிக்கப்படவும், நசுக்கப்படவும், ஊர் ஊராக வேட்டையாடப்படவும், இழிவுபடுத்தப்படவும், சிலுவையில் அறையப்படவும் வேண்டும்; ஆகவே, பூமியின் மீது சிந்தப்பட்டுள்ள ஒவ்வொரு புனிதனுடைய இரத்தத்தையும் நீங்கள் தொடர்ந்து உங்கள் மீது இழுத்து விட்டுக் கொள்வீர்கள்; விவிலியம் ஒருபோதும் பொய் சொல்வதில்லை; நான் வார்த்தையாக இருக்கிறேன்; என் குழந்தாய், வா, நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகப் பரிகாரம் செய்யும்படி உன்னை உருவாக்கி இருக்கிறேன்; மலரே, ஜெபி; சிறியவளே, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஜெபங்கள் எவ்வளவு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதை அறிவாயா? ஜெபங்களைக் கொண்டு அவர்களுடைய நெருப்பை அணை; அவர்களுக்காகப் பரிகாரம் செய்; வா;