வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 51. அக்டோபர் 26, 1987 24 ஆம் தேதி இரவில், புனித மாமரி ஒரு பெரிய சுரூபமாக என் ஊன்றிவிட்ட சகோதரிக்கு தந்த காட்சியின் பொருளை இன்னும் அதிகமாக நான் புரிந்து கொள்ளும்படி கடவுள் எனக்கு ஞான வெளிச்சம் தந்தார். கடவுள் தமது உருவத்தையும், புனித மாமரியின் உருவத்தையும் குறிக்கிற சுரூபங்கள் தன் திருச்சபையில் இருக்க சித்தங்கொள்கிறார், அவற்றை அனுமதிக்கிறார் என்று உறுதிப்படுத்தும்படி இது நிகழ்ந்தது. அதன்பின், 25 ஆம் தேதி இரவில், கடவுள் தம்மை குறிக்கிற திரு உருவங்களை, அதாவது புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றைக் கொண்டு தமது தேவாலயங்கள் அலங்கரிக்கப்படுவதை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதைச் செய்ய நம்மை அனுமதிக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்ளும்படி என்னை மீண்டும் ஒளிர்வித்தார். என் திருச்சபை, என் திரு உருவத்தைத் தாங்கி இருக்க நான் அனுமதிக்கிறேன்; என் திரு உடலின் ஆடைகளைக் களையாதீர்கள், என்னை அலங்கரியுங்கள், என்னை அழகுபடுத்துங்கள், அது இருக்கிறபடியே அதை விட்டுவிடுங்கள்; குறிப்பு: திருச்சபை. ஆர்த்தடாக்ஸ் சபையினரும், கத்தோலிக்கர்களும் தங்கள் கோயில்களை அலங்கரிப்பது போல. வசுலா, நான் சொல்வதைக் கேள், நானே திருச்சபை, என்னை நம்பு; பிற்பாடு: நேசமே, நான் யாவே; மகளே, எழுது; ஓ படைப்பே, காலங்களின் முடிவைப் பற்றி உங்களை எச்சரிக்க, நான் புனிதர்களையும் இறைவாக்கினர்களையும் எழுப்பவில்லையா? என் இரகசிய எண்ணம் நிறைவேறும்படி, அதை அறிவிக்கிற ஒரு வானதூதரை என் பரலோக மண்டபத்திலிருந்து உங்களுக்கு நான் அனுப்புவேன் என்று நான் முன்னுரைக்கவில்லையா? என் வார்த்தைகளின் நிலையான தன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்படும்; என் வெளிப்பாட்டை அறிவிப்பதே என் தூதரின் அலுவலாக இருக்கும் என்று நான் முன்னுரைக்கவில்லையா? என் சாட்சியமே இறைவாக்கின் உணர்வாக இருக்கிறது; எனக்கு பிரமாணிக்கமாக இருக்கும் நீங்கள் எல்லோரும் அகமகிழ்ந்து களிகூருங்கள்! பிரமாணிக்கமற்றவர்களுக்கு, ஐயோ கேடு, என் ஆட்டுக்குட்டிகளை தேவ விசுவாசமற்றவர்களாகவும், தெய்வ பயம் இல்லாதவர்களாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் மாற்றி, சாத்தானின் வலைகளில் விழும்படி செய்த அவர்களது பொய்யான ஞானத்தின் காரணமாக, எனது வார்த்தை வாள்போல் அவர்கள் மேல் இறங்கி அவர்களை அழிக்கும்; வசுலா, நான் உனக்கு ஓர் எச்சரிக்கையின் காட்சியைத் தந்திருக்கிறேன், நான் சோதோம் குமோராவுக்கு செய்த காரியத்தின் ஒரு மறைமுகக் குறிப்பு அது, அவர்கள் என் எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பார்களாக, ஏனெனில் என் படைப்புகள் மனஸ்தாபப்பட்டு, தங்களைப் படைத்தவராக என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், என் வாள் அவர்களைத் தாக்கும் என்று நான் என் படைப்பிற்கு முன்னுரைத்திருக்கின்றேன்; என் அளவற்ற இரக்கத்தால் தான் உங்களை எச்சரிக்க நான் பூமியின் மீது இறங்கி வருகிறேன்; குறிப்பு: உருவகப் பேச்சு முறை. நான் உண்மையின் ஆவியானவர் பேசுகிறேன்; படைப்பே, என் சபைகளுக்கு நான் சொல்ல வேண்டியுள்ளதைக் கேள்; அசையாமல் நின்று கொண்டிருக்காதே, என் எச்சரிக்கையை அறிவி; நான் கதவைத் தட்டியபடி வாசல் அருகில் நிற்கிறேன், யாராவது என் குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், ஆண்டவராகிய நான் அவனுக்கு அருகிலிருந்து அவன் உணவைப் பகிர்ந்து கொள்வேன்; அஞ்சாதே, நான் என் வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்; நான் உனக்கு முன்னால் நிற்கிறேன்; ஆண்டவரே, ஒருவேளை நீர் எனக்குத் தனிப்பட்ட விதமாக உம் எச்சரிக்கையை அனைவருக்கும் அறிவிக்கும்படி குறித்துக் காட்டுகிறீரா? ஆம் என்றால், ஒளிநகல்களையும் விட அதிகமாக எப்படி, ஆண்டவரே? நான் உன்னிடமிருந்து கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; உன் மீது என் வார்த்தைகளைச் செதுக்கவிடு; என் செய்தியைப் பரப்ப வேண்டியவர்களை நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டேன்; வா, நான் உன்னோடு இருக்கிறேன்; என்னை உணர்ந்து பார், என் பிரசன்னத்தை உணர்ந்து பார், ஆம், என்னை நேசி; குறிப்பு: நான் இயேசுவை பகுத்துணர்ந்தேன். நான் உம்மை நேசிக்கிறேன், இயேசுவே. நாங்கள் உம்மை எப்படி நேசிக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அப்படியே இன்னும் அதிகமாக உம்மை நேசிக்க எனக்கு கற்றுத் தாரும். நான் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன்; அக்டோபர் 27, 1987 இறுதியாக என்னுடன் தொடர்பு கொண்ட கத்தோலிக்க இறைவல்லுநர். நான் அவரது சமூகத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதால் என்னில் கொண்டிருந்த ஆர்வத்தை முறித்துக் கொண்டார். வசுலா, நீ அவர்களைச் சேர்ந்தவள் இல்லை என்பது வாஸ்தவமே; நீ எனக்குச் சொந்தமானவள்; நான் உன்னை படைத்தவரும் பரிசுத்த பிதாவுமாக இருக்கிறேன்; குறிப்பு: இயேசு வசுலாவிடம் தாம் அவளுடைய தந்தை என்று சொல்கிறார் என்றாலும், தமது திருத்துவத்தின் தெய்வீக ஆட்களோடு இதை குழப்பிக்கொள்ளக்கூடாது. கடவுளின் திருமகனான இயேசு, பிதாவாகிய சர்வேசுவரனைப் போலவும், பரிசுத்த ஆவியான சர்வேசுவரனைப் போலவும் நம் பிதாவாக இருக்கிறார். நாம் பரிசுத்தத் தமத்திருத்துவத்தால் படைக்கப்பட்டோம். "தம் பிள்ளைகள்" என்று தமது சீடர்களை இயேசு அழைக்கும்போது, இயேசுவே தமது உறவை அவர்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறார். அருளப்பர் 13 ஆம் அதிகாரம் 33 ஆம் வசனம் மற்றும் 21 ஆம் அதிகாரம் ஐந்தாம் வசனம். நீ என் அதிகாரத்திற்கு உட்பட்டவள்; ஆண்டவரே, நாங்கள் உம் அதிகாரத்தின் கீழ்தான் இருக்கிறோம். கிறிஸ்துவே திருச்சபையின் தலைவராக இருப்பதால். குறிப்பு: அங்கே ஒரு கணம் அமைதி நிலவியது. இயேசுவின் குரல் மிக ஏமாற்றம் உள்ளதாகவும், துயரமானதாகவும் ஒலித்தது. இக்காரியத்தைப் பற்றி பேசியதற்காக நான் குற்ற உணர்ச்சி கொண்டேன். ஆனால் ஏதாவது ஒரு கிறிஸ்தவ சபையில் சேர்ந்திருக்க வேண்டும் என அமைப்பு உள்ளதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அனைவரும் என் பார்வையில் ஒரே மாதிரிதான்; என் திரு உடல் பிரிந்திருப்பதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை; நீங்கள்தான் என் உறுப்புகளைப் பிரித்து விட்டீர்கள்! நீங்கள் என் திரு உடலைப் பற்றி முடிவு செய்தீர்கள்! நீங்கள் என்னை முடமாக்கினீர்கள்; ஓ கடவுளே.... மகளே, என் திரு மாதாவுக்காக உன் கண்ணீர்த் துளிகளைச் சேமித்து வைக்கும்படி நான் உனக்குச் சொல்லவில்லையா? அவர் குரல் கண்டிப்பானதாக தொனித்தாலும், என்னைப் போலவே அவரும் துயரமாய் இருக்கிறார் என்பதை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. ஆம், ஆண்டவரே, ஆனாலும் நீர் மிகவும் காயப்பட்டவராகத் தோன்றினீர். நான் வெறும் மனிதப் பிறவிதான். வசுலா, இது ஏனெனில் நாம் என் கிண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதால்தான்; என் கிண்ணம் கசப்பாய் இருக்கிறது; பாப்பரசரிடம், உன்னை அனுப்புபவர் நானே என்று சொல்; நான் சொல்வதைக் கேள், நீ எந்த சபையைச் சேர்ந்தவள் என்று அவர்கள் கேட்டால், நீ என்னைச் சேர்ந்தவள் என்றும், நீ என் அதிகாரத்தின் கீழ் இருக்கிறாய் என்றும் சொல்; ஆண்டவரே, நான் வாதாட விரும்பவில்லை, ஆனாலும் நான் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்தவள் என்று நான் சொல்ல முடியாதா? ஆர்த்தடாக்ஸ்! கத்தோலிக்கர்கள்! புரோட்டஸ்டாண்டினர்! நீங்கள் எல்லோரும் எனக்கு சொந்தமானவர்கள்! நீங்கள் எல்லோரும் என் கண்களில் ஒன்றே! நான் எந்த வேறுபாடும் பாராட்டவில்லை, அப்படி இருக்க ஏன் பயப்படுகிறாய்? என் அன்புக்குரிய பாப்பரசர் அருள் சின்னப்பரைக் கேள், அவர் எந்த வித்தியாசமும் காட்டமாட்டார்; வசுலா, இதை அவரிடம் சொல்; "அன்புக்குரியவரே, ஆண்டவராகிய நான் உம் வாசலில் நின்று கதவைத் தட்டுகிறேன். நான் அழைப்பதை நீர் கேட்க மாட்டீரா? நீர் கதவைத் திறப்பீர் என்றால், நான் உம் வீட்டுக்குள் நுழைந்து, உம் அருகே அமர்ந்து, உம்மோடு உமது உணவைப் பகிர்ந்து கொள்வேன்; வெற்றியாளராக உம்மை எண்பியும், அப்போது நான் என் அரியனையைப் பகிர்ந்து கொள்ள உம்மை அனுமதிப்பேன்; நான் சொல்வதைக் கேளும், தேவ ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதைக் கேளும்;" நான் உன் மெய்ப்பராய் இருக்கிறேன், என்னைக் கொண்டிருக்கும்போது, நீ எதிலும் குறைவுபடுவதில்லை, பசும் புல்வெளிகளில் நீ படுத்திருக்க நான் உன்னை அனுமதிப்பேன், பிரியமுள்ள ஆத்துமமே, என் சரீரத்தின் மகிமைக்காக இளைப்பாற்றியின் நீர் நிலைகளுக்கு நான் உன்னை நடத்தி சென்று உன் ஆன்மாவை புதுப்பிப்பேன்; என் திருச்சபையின் மகிமைக்காக புண்ணியங்களின் பாதையில் உன்னை நடத்திச் செல்வேன், இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் வழியாக நீ கடந்து போக வேண்டி இருந்தாலும், உன்னை வாதிப்போரின் கண்களின் கீழ் நான் உனக்கு உணவளிப்பேன், நான் உன்னை அபிஷேகம் செய்தேன், நான் எப்போதும் உன்னை நிரப்புவேன்; ஏனெனில் நான் அன்பின் பாதாளமாகவும், அளவற்ற இரக்கமுள்ளவராகவும் இருக்கிறேன், வந்து என் இருதயத்தின் மத்தியில் வாழு; குறிப்பு: சங்கீதம் 23. ஓ ஆண்டவரே, நீரே என் ஒளியும் மீட்புமாய் இருக்கிறீர். நான் அஞ்ச தேவையில்லை. நீர் என் அடைக்கலமாய் இருப்பீர் என்பதை நான் அறிவேன். என் தேவனாகிய ஆண்டவரே, என் முழு இதயத்தோடு நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நான் உம் திருப்பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். நீர் என் மீது கொண்டுள்ள அன்பு மிகப்பெரியது. என் திறமையின்மையில் என் மீது தயவாயிரும். மலரே, சிறியவளாகவே நிலைத்திரு; ஆவியில் வளர்ச்சி பெறு, என் புண்ணியங்களில் இருந்து உறிஞ்சிப் பருகு; வா, நான் எப்போதும் என் வார்த்தைகளை உன் மீது பொறிப்பேன்; ஆம், ஆண்டவரே, உம்மோடு இருப்பதில் நான் மகிழ்கிறேன். நேசம் ஒருபோதும் உன்னைக் கைவிடாது; வா, நாம் நாங்கள்? ஆம், ஆண்டவரே. அக்டோபர் 30, 1987 நான் என் படைப்புகளுக்கு எண்ணற்ற அடையாளங்களைத் தந்து அவர்களை எச்சரித்திருக்கிறேன்; என் ஆசைகளை அறிவிக்கும் புனிதர்களை நான் எழுப்பி இருக்கிறேன்; ஆனால் அவர்கள் செவிமடுத்தார்களா? குறிப்பு: படைப்புகளாகிய மனிதர்கள். ஏதாவது மாறி இருக்கிறதா? ஆண்டவரே, ஒருவேளை இம்முறை அவர்கள் நம்புவார்கள் என்றால், ஒருவேளை மாறுவார்கள் என்றால், தங்கள் சொந்த விருப்பங்களைத் தேடாமல், உம் செய்திகளை வாசித்து, நம்பி, ஒன்றிணைவார்கள் என்றால், உம்மை மகிமைப்படுத்த முயல்வார்கள் என்றால்..... வசுலா, ஆ வசுலா, பலர் பயப்படுவார்கள், என் செய்தியை விசுவசித்து, அது நான்தான் என்று ஒப்புக்கொள்பவர்களும் கூட, தாங்கள் கேலி செய்யப்படுவது பற்றி அல்லது தங்கள் மேலதிகாரிகளுக்குப் பயப்படுவார்கள்; பலர் நான் தரும் மகிமையை விட மனிதர்களிடமிருந்து வருகிற மகிமையைப் பெரிதாக மதிப்பார்கள்; என்னை மகிமைப்படுத்து, என் செய்தியைப் பரப்பு; ஆண்டவரே, அவர்கள் வளைந்து கொடுப்பார்களானால்! அப்போது அவர்கள் மீது பாரமாக விழுந்து கிடக்கும் என் நீதியை நான் விலக்குவேன்; ஆனால் அவர்கள் இன்னமும் ஒருவரை நோக்கி ஒருவர் விஷ அம்புகளை எய்து, என் திருவுடலைக் கொடிய வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள்; அன்பில்லாததால், அவர்கள் மத்தியில் இணக்கமின்மை எப்போதும் அரசாளும்; வசுலா, அவர்கள் என் கட்டளையைப் பின்பற்றி, நான் அவர்களை நேசிப்பது போல, ஒருவரை ஒருவர் நேசித்து தங்களைத் தாழ்த்தி இருப்பார்கள் என்றால், இன்று என் சரீரம் நல்லிணக்கத்தில் ஆட்சி புரிந்திருக்கும்; அவர்கள் எப்போதாவது தங்களைத் தாழ்த்தி ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவி இருந்தார்கள் என்றால், குறிப்பு: இங்கே இந்தக் காரியம் சபைகளுக்கு இடையே நடைபெற வேண்டும் என்று இயேசு குறிப்பிட்டார் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நான் செய்துள்ளதை நீங்கள் கண்டு பாவிக்கும்படியாக நான் இதை உங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் தந்திருக்கவில்லையா? தாழ்ந்திருங்கள்! இணைந்திருக்கும்படியாகத் தாழ்ந்திருங்கள்! ஆத்துமமே, என் பிரியமுள்ள ஊழியர் அருள் சின்னப்பர், நான் சொல்வதைக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; நான் உண்மையில் அவருடைய கூக்குரல்களைக் கேட்டிருக்கிறேன், அவருடைய கூக்குரல்கள் மோட்சத்தை எட்டியுள்ளன, அவரது கூக்குரல்கள் பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கின்றன, அவருடைய கூக்குரல்கள் என் செவிகளை எட்டியுள்ளன! நான் இதை உனக்குச் சொல்லவிடு; இன்னும் ஒரு குறுகிய காலத்தில், ஒரே மந்தையும், ஒரே ஆயனும் உண்டாயிருக்கும்; நான் என் எல்லா ஆடுகளையும் இந்த மந்தையைச் சேராத ஆடுகளையும் வழிநடத்துவேன்; நேசம் உங்களை ஒன்றிணைக்கும், ஆனால் இதற்கு முன்பாக, மிகப்பெரும் துன்பங்கள் இருக்கும், வான மண்டலங்கள் முழுவதும் அசைக்கப்படும்! விழிப்பாயிரு, மகளே, என் போதனைகளை பரப்பு, அவையெல்லாம் என் புனித எழுத்துகளுக்குள் இருக்கின்றன; என் செய்தியைப் பரப்புதன் மூலம், நீ புரிந்து கொள்வாய்; இயேசுவே, ஓ புனித மாமரியே, அவர்கள் என்ன சொல்வார்கள்? புனித மாமரியே, என்னைப் புரிந்து கொள்ளுங்கள், அந்த அதிகாரமுள்ள மனிதர்களை எல்லாம் எதிர்கொள்ளும் நிலையில் நான் இல்லை. வசுலா, அஞ்சாதே; உன் திறமையின்மை இயேசுவை வசீகரிக்கிறது; சிறியவளாகவே நிலைத்திரு; புனித மாமரியே, அவர்கள் கேட்கவில்லை என்றால்? சிறியவளே, இந்தத் தேவ வெளிப்பாடு அவருடைய கடைசி எச்சரிக்கையாக இருக்கும்; அவர்கள் கவனிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ விரும்பவில்லை என்றால், அவருடைய கரம் அவர்கள் மீது விழுந்து அவர்களைத் தாக்க நான் அனுமதித்து விடுவேன்; வசுலா, நீ செய்ய வேண்டியது எல்லாம் அவரை நேசிப்பதுதான்; விழிப்பாய் இரு, ஏனெனில் சாத்தான் கடும் கோபமாய் இருக்கிறான், அவன் எல்லாவிதமான கன்னிகளையும் பயன்படுத்த முயற்சித்துப் பார்ப்பான்; பயப்படாதே, நான் உன்னைப் பாதுகாக்கிறேன்; புனித மாமரியே, என்னை ஊக்கப்படுத்துவதற்காக உங்களுக்கு நன்றி. என்னைப் பாதுகாப்பதற்காக உங்களுக்கு நன்றி. நான் உங்களை வாழ்த்தி போற்றுகிறேன். வசுலா, குழந்தாய், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நவம்பர் 3, 1987 வா, அன்பு உனக்குப் போதிக்கும்; "தந்தாய், எனக்கு அனுமதி தாரும்" மற்றும் "இது உம் சித்தமானால்" ஆகிய வார்த்தைகளைக் கேட்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்; உன் ஜெபங்களில் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள் என்னைக் கவர்கின்றன; கேளுங்கள், அது கொடுக்கப்படும், ஆனாலும் எப்போதும் இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொண்டு கேளுங்கள்; வா, வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை வாழ்த்திப் போற்ற என்னை அனுமதியும். அன்பே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நவம்பர் 5, 1987 என்னை நம்பு, நான் விரும்பும் இடத்திற்கு உன்னை நான் வழிநடத்தவிடு; உன் கரத்தை என் கரத்தில் வைத்துக்கொள்; பயப்படாதே, நான் என் காயப்பட்ட உடலின் உள்ளாழங்குளுக்குள் உன்னை வழிநடத்துவேன்; வசுலா, என் வார்த்தைகளை நிறைவேற்று; மகளே, பயப்படாதே; நீ என் தோட்டத்தை அழகுபடுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்; தந்தாய், நீதியுள்ளவரே, என் பயத்தை என்னால் மறுக்க முடியாது, எனக்கு உதவும், உம் பலத்தைப் பெற்றுக்கொள்ள என்னை அனுமதியும், உம் ஒளியில் உம்மில் வளர என்னை அனுமதியும், என்னை கைவிடாதேயும். உமக்குச் சித்தமானால், நீர் என்னை பயன்படுத்தவும். உம் ஆசைகளை நிறைவேற்றுவதில் நான் பங்கு பெறும்படியாகவும், என்னை தகுதி உள்ளவளாக்கும். என் பலவீனங்களையும் திறமையின்மைகளையும் உம் இரக்கத்தில் மன்னிக்கும்படி நான் உம்மிடம் கேட்கிறேன். என் சித்தமல்ல, உம் சித்தமே செய்யப்படுவதாக. நேசம் உனக்கு உதவி செய்யும்; ஆனாலும் என் வார்த்தை ஸ்தாபிக்கப்பட்டவுடன், நீ என்னிடம் வருவாய் என்பதை நினைவில் கொண்டிரு! அதற்கு மேல் உன்னை இந்தப் பரதேசத்தில் வைத்திருக்க என்னால் முடியாது; என் ஆன்மா உனக்காக ஏங்குகிறது! தந்தாய், நீர் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறீர்! உம் வார்த்தைகள் என் ஆன்மாவிற்கு எவ்வளவோ மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தருகின்றன! நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! நேசமே, ஆம், என்னை நேசி, என்னை ஆசி; உன்னை தேடிய இந்த இதயத்தை மகிழ்வி; விரைவில் நான் உன்னிடம் வருவேன்; ஆனால் நீ இந்த உலகத்தில் இருக்கும்போது என்னை பருகிக்கொண்டும், என்னை உண்டு கொண்டும், என்னை போற்றிக்கொண்டும், என்னை மகிமைப்படுத்திக் கொண்டும், நான் முழுமையாக மகிழ்ந்திருக்க, நீ என் அருகில் இரு; உலகம் உன்னை மறுதலிக்கிறது என்றால், அதேறியப்படாதே, ஏனெனில் நீ உலகத்திற்கு சொந்தமானவள் இல்லை, நான் உடலெடுத்து உலகில் இருந்தபோது, உலகிற்கு எவ்வளவு சொந்தமாய் இருந்தேனோ, அதைவிட அதிகமாக நீ உலகிற்குச் சொந்தமாய் இல்லை; நீ என்னிடமிருந்து வருகிறாய்; நான் உன் தந்தை, நீ என்னில் வாழ்வது போல, நான் உன்னில் வாழ்கிறேன், என் பெயரை கனப்படுத்து, என் திருவுடலை மகிமைப்படுத்து, என் அன்பில் நிலைத்திரு; நான் உன்னை அலட்சியம் செய்யவோ, கைவிடவோ மாட்டேன்; ஆகவே, நேசமே, யாருக்கும் பயப்படாதே; பரிசுத்தத் தனத்தில் கனிகளைப் பிறப்பிக்கும் என் விதைகளை விதை; பரிசுத்தமாய் இரு; ஏனெனில் நான் பரிசுத்தமாய் இருக்கிறேன்; "நான் உமக்கு செவிமடுக்கிறேன். யாவே என்ன சொல்கிறார்? கடவுளின் பிள்ளைகள் மட்டும் தம் மடமையைக் கைவிட்டார்கள் எனில், அவர்களுக்கும் பூமிக்கும், அவரது திரு உடலாகிய திருச்சபைக்கும் சமாதானமும், அன்பும் உண்டாகும் என்பதுதான் கடவுள் சொல்லும் வார்த்தைகளின் பொருள்; அவருக்கு அஞ்சுவோருக்கு, அவரது மீட்பு அண்மையில் உள்ளது, அப்போது மகிமை பூமியில் வாழும். அன்பும் இரக்கமும் இப்போது இறங்கி வரும். நீதியும் சமாதானமும் இப்போது நம்மை அணைத்துக் கொள்ளும்; நீதி எப்போதும் அவருக்கு முன் செல்லும். சமாதானம், அவரது பாதச் சுவடுகளைப் பின் செல்லும். சங்கீதம் 85 ஆம் அதிகாரம் 8 முதல் 13 வரையிலிருந்து எடுத்து, ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு. இந்த பத்தியை எழுத, கடவுள் என்னை வழிநடத்தினார். அன்பே, நான் என் பழத்தோட்டத்திற்கு நீர் பாய்ச்சப் போகிறேன், என் மலர் பாத்திகளுக்கு நீர் பாய்ச்ச எண்ணுகிறேன்; நான் சொல்வதைக் கேளுங்கள்; என் நீரோடை ஒரு நதியாக விரிவடையும், என் நதி சமுத்திரமாகப் பெருகும்; அங்கு ஒழுக்கம் சுடர் வீசிப் பிரகாசிக்கும்படி நான் செய்வேன்; என் ஒளி என் சரீரத்தை மகிமைப்படுத்தியபடி எங்கும் பறந்து செல்லும்படி அனுப்புவேன்; ஆகவே, வா, என் கரத்தைப் பிடித்துக்கொள், நான் உன்னை வழிநடத்தவிடு; மகளே, இன்று மேற்கொண்டு எதுவும் செய்யாதே, என் இருதயத்தில் இளைப்பாறு;