வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 63. மார்ச் 7, 1988 ஒரேயொரு கணம் மட்டும் என் மூடுதிரையை உயர்த்தும்படி நான் இறைவனிடம் கேட்டேன். நான் முழு வெளிப்பாட்டின் முன்பாகவும் நின்றபடி பார்த்தேன். திடீரென்று அதன் அளவாலும், அந்தப் பக்கங்களுக்குள், நான் தனியாக, இவ்வளவு குறுகிய நேரத்தில் ஒருபோதும் செய்திருக்க முடியாத அந்தப் பக்கங்களுக்குள் இருந்த பெரும் பணியால் நான் தாக்கப்பட்டேன். ஒரு வினோதமான உணர்வு எனக்குள் வந்தது. ஓர் அதிர்ச்சியைப் போன்ற உணர்வு! எல்லாவற்றையும் அதிக ஆழமாக நான் உணர்ந்து கொள்ளத் தொடங்கியது போல் அது இருந்தது. நான் மிகவும் சலனப்பட்டவளாக உணர்கிறேன். இயேசுவே, நாம் உண்மையாகவே சேர்ந்து பணியாற்றியிருக்கிறோமா? வசுலா, ஆம், நாம் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம! இப்போது நீ என்னை முத்தமிடுவாயா? நான் முழுவதும் நடுக்கமுற்றவளாக எழுந்து, கால் தடுமாறியபடி, பரிசுத்த அடக்கத்துகிலின் படத்தை நோக்கிச் சென்று, இயேசுவை முத்தமிட்டேன். பார்த்தாயா? நான் உன் கண்களின் மீது இட்டு வைத்த மூடுதிரையை ஒரு சிறிதளவு மட்டும் உயர்த்தும்போது, நீ எப்படி உணர்கிறாய் என்று பார்த்தாயா? வா, என் தேவ பராமரிப்பின் பணிகளைப் பற்றி ஒருபோதும் சந்தேகம் கொள்ளாதே, அவையெல்லாம் என் இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்காகவும், என் ஆட்டுக்குட்டிகளை ஒன்று கூட்டுவதற்காகவும் தான்; அவை என் மலர் பாத்திகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக; வா, ஆண்டவராகிய நான் எப்போதும் என் பிரசன்னத்தை உனக்கு ஞாபகப்படுத்துவேன்; வசுலா, நாங்கள், நாம்? ஓ, ஆம் ஆண்டவரே, நாங்கள் நாம். வா; மார்ச் 8, 1988 இராயப்பா, நான் இப்போது உன் வாசல்களிலேயே இருக்கிறேன்; என் திருச்சரீரத்தை மகிமைப்படுத்து; நான் என் ஆட்டுக்குட்டிகளையும், இந்தப் பட்டியைச் சேராத ஆட்டுக்குட்டிகளையும் கூட ஒன்று கூட்டுவேன்; நான் அழைக்கிறேன், அவை ஆயனின் குரலை அடையாளம் கண்டுகொள்ளும்; மணித்தியாலங்கள் பறந்து கொண்டிருக்கின்றன, என் இரண்டாம் வருகை இப்போது மிகவும் அண்மையில் உள்ளது; அன்பானது, அன்பாக உங்களிடம் திரும்பி வரும், பூமியின் மீது என் அரசு பரலோகத்தில் அது இருப்பது போலவே இருக்கும்; ஏனெனில், படைப்பே, நீதியும், அன்பும், சமாதானமும் மோட்சத்திலிருந்து உன்மீது பொழியப்படும்! வசுலா, இப்போது உன் கடவுளாகிய என்னை நீ எவ்வளவு சார்ந்திருக்கிறாய் என்பதை நீ அறிந்துள்ளதால், இனி அதிகமாக ஜெபிப்பாயா? நான் உன் எளிய வார்த்தைகளை நேசிக்கிறேன், என்னிடம் இப்படிச் சொல்: ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன், நான் உமக்காக சுவாசிக்கிறேன், உமக்காகப் புன்னகைக்கிறேன், உம்மில் நம்பிக்கை வைக்கிறேன், உம்மை விசுவசிக்கிறேன், நீரே என் மகிழ்ச்சி, என் பாக்கியமும், என் சமாதானமுமாக இருக்கிறீர்; ஆம், உன் பரிசுத்த தோழராகிய என்னிடம் இவற்றைக் கூறு, உன் நாட்களை என்னோடு பகிர்ந்துகொள்; என் நெருக்கமான பிரசன்னத்தை என் பிள்ளைகள் உணர வேண்டுமென நான் எவ்வளவாக விரும்புகிறேன்; நான் அவர்களுக்கு அருகில் எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லா நேரமும் பிரசன்னமாய் இருக்கிறேன்; அவர்கள் மட்டும் இதை உணர்வார்கள் என்றால், அவர்களது வீழ்ச்சி குறைவாக இருக்கும், அவர்களது பாவங்கள் குறைந்து போகும்; அவர்களிடம் சொல், அவர்கள் என்னோடு அன்யோனியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; வா, நான் உன்னை நேசிக்கிறேன், நீயும் உன் போதகரை நேசி; குறிப்பு: இங்கே சற்று நிறுத்திய பின், இயேசு ஒரு தீர்க்கதரிசனத்தைத் தந்தார். என் இல்லத்திற்குள் நீ பெரியவர்களை ஒன்று கூட்டி, அவர்களை ஆயுதமற்றவர்களாக்குவாய், என் வாயின் வழியாக நீ பேசி, என் முள்முடியை அகற்றிவிட்டு, அதனிடத்தில் அன்பு மற்றும் சமாதானத்தின் மலர் கிரீடங்களைக் கொண்டு உன் கடவுளுக்கு முடிசூட்டுவாய்; ஆண்டவராகிய நான் என் பரலோகத்திலிருந்து என் படைப்பின் மீது நல்லிணக்கத்தையும், அன்பையும், சமாதானத்தையும் பொழிவேன்; சிறு குழந்தாய், உன் இறைவனிடமிருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்; என் வசுலா, நான் உன்னை வழிநடத்தினேன், நானே உன்னை உருவாக்கினேன், இப்போது என் கரத்தோடு உன் கரத்தைக் கோர்த்தபடி, நீ என்னோடு இரத்தம் சிந்தும் என் சரீரத்திற்குள் வரவேண்டியவளாக இருக்கிறாய்; என்னைப் பின்பற்றி வா, மேலும் இதை நினைவில் வை: ஒருபோதும் இடமோ, வலமோ பார்க்காமல், உன் அலுவலை நிறைவேற்றும்படி நேராக நட; அஞ்சாதே, என் எதிரிகளைத் துரத்தி அடித்து, அவர்களை ஆயுதமற்றவர்களாகச் செய்ய உனக்கு உதவும்படி நான் உன் ஆன்மாவை அழகுபடுத்துவேன்; ஆண்டவராகிய நான் உங்கள் எல்லோர் மத்தியிலும் இருக்கிறேன், உங்கள் வாசல்களிலேயே நான் இருக்கிறேன்! நான் மூன்று கிரீடங்களை வைத்திருக்கிறேன், அவை சமாதானத்தின் கிரீடம், அன்பின் கிரீடம், மற்றும் நீதியின் கிரீடமாகும்; மார்ச் 9,1988 ஆண்டவரே, நீர் கேள்விப்பட்டீரா? பங்குக் குரு வாஸ்சிலி மாறிவிட்டார். இப்போது இதெல்லாம் பசாசிடமிருந்து வருகிறது என்று அவர் சொல்கிறார். தகுதியற்ற ஆன்மாக்களிடம் அன்றி, உம்மில் முதிர்ச்சி அடைந்த ஒரு விசுவாசத்தைக் கொண்டுள்ள ஆன்மாக்களிடம் மட்டுமே நீர் செல்கிறீர் என்றும் அவர் சொல்கிறார். என் குழந்தாய், என் அளவற்ற இரக்கத்திலும் என் அளவற்ற செல்வத்திலும் விசுவாசம் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ள மற்றொருவர் இதோ; அவருக்காக என் செய்தியை எழுது; நீ ஏன் என் மலரை ஏறி மிதிக்கிறாய்? நீ காண்பதற்குக் கண்களையும், கேட்பதற்குக் காதுகளையும் நான் உனக்குத் தரவில்லையா? நீ உணரவில்லையா? நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கடவுளின் அன்புக்குரிய திருச்சுதன்; இது நான்தான், இது உயரமான மரங்களை முறித்தெறிந்து, குட்டையான மரங்களை வளரச் செய்கிறவராகிய நான்தான்; என் இன்றைய பணிகளைக் கனிவோடு நேசி, என் தேவ பராமரிப்பின் பணிகளில் விசுவாசம் கொள்; என் குழந்தாய், என் பணிகளைக் கொண்டு உனக்கு ஞான வெளிச்சம் தரும்படி நான் அவற்றை உனக்குத் தந்திருக்கிறேன்; ஆண்டவராகிய நான் அளவற்ற செல்வமாக இருக்கிறேன்; அஞ்சாதே. என் ஆட்டுக்குட்டிகள் சிதறடிக்கப்படுவதை நான் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அவற்றைக் கண்டுபிடித்து, உணவளிக்க நான் வந்திருக்கிறேன், என் தோட்டத்தை அழகுபடுத்த நான் வந்திருக்கிறேன், இந்த வனாந்தரத்திற்கு நீர் பாய்ச்ச நான் வந்திருக்கிறேன்., என் மலரை மிதித்து நசுக்காதே, என்னிடம் வந்து மனஸ்தாபப்படு; சாத்தானின் குரலைக் கேட்காதே; படைப்பே, நான் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறேன், இந்தக் காரணத்திற்காக, உங்கள் எல்லோரையும் ஒன்று சேர்க்க நான் வந்திருக்கிறேன்! உன் கடவுளாகிய என்னோடு சேர்ந்து நடங்கள், என் இல்லத்தை, இன்று சேதமாகிப் போயிருக்கிற இந்த இல்லத்தைச் சரி செய்கிற என் செங்கற்களை அகற்றவோ அல்லது மிதித்து தள்ளவோ வேண்டாம்; இது ஆண்டவராகிய நான்தான் என்பதை ஒருபோதும் சந்தேகப்படாதே! வசுலா, என் மீது சாய்ந்து கொள், எனக்கு அருகில் இரு, என் கரம் உன் கரத்தைப் பற்றிக் கொள்வதாக; ஆண்டவராகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவராகிய இயேசுவே. அப்படியானால் வா; மார்ச் 10, 1988 இயேசுவா? நான்தான்; உன்னோடு சமாதானம் இருப்பதாக; வசுலா, எனக்காகத் தொடர்ந்து பணியாற்ற நீ மனதாய் இருக்கிறாயா? ஆம், இது ஆண்டவரின் விருப்பமாக இருந்தால், நான் தொடர்ந்து பணியாற்ற மனதாய் இருக்கிறேன். சிறியவளே, நானே ஆண்டவர்; இது உன்னை போஷிக்கிற இயேசுவாகிய நான்தான்; நீ என் தோட்டத்தை அழகுபடுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் திருச்சபையை நீ உயிர்ப்பிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என்னைப் பின்பற்றி வா, நான் உன்னில், உன் வழியாக செயலாற்றுவேன்; என் தாகத்தைத் தணி; பீடமே! என் குழந்தைகளின் இதயங்களை ஊடுருவிய பனிக் குளிருள்ள காற்றுகளை உஷ்ணப்படுத்தும்படி, என் தீச்சுவாலையைத் தொடர்ந்து பற்றி எரிவதாக வைத்திரு; ஓ யுகமே, நீ சோதமைப் போலத் தாழ்வாக வீழ்ச்சியுற்றாய்! உன் சந்ததி காயின்களின் சந்ததியாக இருக்கிறது! வெகு சிலர் மட்டுமே ஆபேல்களாக இருக்கிறார்கள்; உன் யுகம் இருதயத்தில் கரடு முரடானதாக வளர்ந்துள்ளது; படைப்பே, ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஏனெனில் அன்பு உங்கள் மத்தியிலிருந்து மறைந்துவிட்டது; நீங்கள் என்னை மறந்து விட்டீர்கள், என் இன்றைய தேவ பராமரிப்பின் பணிகளை நீங்கள் விசுவசிப்பதில்லை; ஆம், படைப்பே..... ஆசீர்வாதங்கள் வரவேற்கப்பட்ட அந்தப் புண்ணிய நாட்கள் இறந்து போய்விட்டன; இழிநிலையின் யுகமே, நான் உன்னை உயிர்ப்பிப்பேன்! உங்கள் இறந்த இதயங்களுக்குள் உங்களைக் குணப்படுத்துகிற என் உயிர்ச்சாற்றை நான் ஊற்றுவேன்! ஓ, நான் எவ்வளவாக உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்! எழுது; சரி ஆண்டவரே. கடவுளின் குரல் காயப்பட்டதாகவும், துயரமாகவும் ஒலித்தது. அவர் முழு இரக்கமுள்ளவரும், கனிவுள்ளவருமாக இல்லாதிருந்தால், அவர் எளிதாக நம்மை அடித்து வீழ்த்தி, நம்மை அழித்திருக்க முடியும். ஆனால் தமது அளவற்ற இரக்கம் மற்றும் எல்லையற்ற அன்பின் காரணமாக, அவர் நம்மீது பரிதாபப்பட்டு, நம்மை மன்னிக்கிறார், அவர் நம்மைக் குணப்படுத்துவார். ஆம், நீங்கள் எப்படி ஆகி இருக்கிறீர்கள் என்பதையும் மீறி, நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நான் எப்போதாவது உங்களைக் கைவிடுவேனா? ஒருபோதுமில்லை! மார்ச் 11, 1988 கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! மூன்று ஜெபங்களையும் வாசித்த பிறகு, மோட்சத்திலிருந்து பரலோக குரல்கள், 'கடவுளுக்கு மகிமை உண்டாவதாக; அப்படியே எழுதப்பட்டிருக்கிறது;' என்று சொல்வதை நான் கேட்டேன். இயேசுவா? நான்தான்; நான் உன் அருகில் இருக்கிறேன்; அன்புக்குரியவளே, ரஷ்யாவின் மனம் திரும்புதலுக்காக ஜெபி; ரஷ்யா, என் தெய்வீகக் கரத்தால் உயிர்ப்பிக்கப்படும், பரிசுத்தத்தனத்தின் இந்தச் சிகரத்தில், என் கரம் அவள் மீது அன்புடன் உயர்த்தப்பட்டு, குளிர்ந்துவிட்ட அவள் இதயத்தை உஷ்ணப்படுத்தி, அவளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் போது, அவள் மரணத்தின் அசைவில்லாத் தன்மையிலிருந்தும், தன் இருளின் உலகிலிருந்தும், என் சமாதானம் மற்றும் ஒளியின் உலகிற்குள் உயிர்த்தெழுவாள்; தன் இரட்சகரைத் தன் அருகில் கண்ணுற்று, ஒரு உரத்த கதறலுடன், அவள் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள்; நான் அவளை என்னிடம் உயர்த்துவேன், என் நேசத்தின் தீச்சுவாலை, அவளுடைய இதயத்தைப் பற்றி எரியச் செய்து, அவளைப் பரிசுத்தப்படுத்தி, தன் கடவுளாகிய எனக்காக, அவள் முழுமையான பரவசத்தில் ஆழ்ந்து போகச் செய்யும்; ஓ, ரஷ்யா, என் ரஷ்யா! ஆண்டவராகிய நான் எவ்வளவாக உன்னை நேசிக்கிறேன், குறிப்பு: இறைவன் மீண்டும் கடவுளன்றி வேறு எந்த மனிதனும் பேச முடியாத முறையில் பேசிக் கொண்டிருந்தார்; மிக அதிகமான அன்போடு......உன்னை இறந்தவளாகக் காண்பதில் நான் எவ்வளவாக அழுதேன்; அன்புக்குரியவளே, நான் உன்னை இழந்து போனபோது, உன்மீது கசப்புள்ளதும், துயரம் உள்ளதுமான கண்ணீர்த் துளிகளை ஏராளமாகச் சிந்தினேன்; பரலோகம் முழுவதும் உனக்காகத் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தது, என் அன்பிற்குரியவளே, ஏன், ஏன் என்னை நீ மறுதலித்து, நேசமும், கனிவும் நிறைந்த என் திரு இருதயத்தைக் குத்தித் துளைத்தாய்? நான் புனித மாமரியை என் அருகில் உணர்ந்தேன். என் குழந்தாய், சமாதானம் உன்மீது இருப்பதாக; நான் உன் பரிசுத்த அன்னை; உன் சகோதரிக்காக ஜெபி, ஏனெனில் ஆண்டவர் இன்று அவள் அருகில் இருக்கிறார், குளிர்ந்துவிட்டதும், இறந்திருப்பதுமான அவளுடைய இதயத்தை, அவரது தெய்வீகக் கரம் விரைவில் தொடும்; ஓ, படைப்பே! ஆண்டவர் வெகுவாக நேசிக்கப்படாதவளாகிய உன் சகோதரியை உயிர்ப்பிப்பார்; மகளே, எச்சரிக்கையாய் இரு, ஏனெனில் அவளுடைய மகிமையின் நேரம் அண்மையில் இருக்கிறது; பேத்ரோ! குறிப்பு: இரண்டாம் அருள் சின்னப்பர் அங்கே இருந்ததால், புனித மாமரி திடீரென்று தன் தலையை அவரை நோக்கி திருப்பினார்கள். அவருடைய பெயரை உச்சரித்தபோது, அவர்களுடைய குரல் மிக இனிமையாக, ஆனால் துயரமாக, அவர் மீதுள்ள ஒரு தனிப்பட்ட அன்பால் நிரம்பியதாக இருந்தது. என் மிகுந்த அன்பிற்குரிய பேத்ரோ! குறிப்பு: புனித மாமரி தன் கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றார்கள், என்றால், அவர்களால் முடியவில்லை. கதறி அழுதபடி, அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் ஏராளமாகக் கண்ணீர் சிந்தியபடி, மிக அதிகமாக அழுதார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து அழத் தொடங்கினேன். நம் பரிசுத்த அன்னைக்கு பேத்ரோ மீது ஒரு தாய்க்குரிய பலவீனம் இருந்ததே என்று நான் உணர்ந்தேன். ஆம், வசுலா; பல ஆண்டுகளாக ரஷ்யாவை அர்ப்பணிக்கும்படி நான் உம்மிடம் மன்றாடிக் கொண்டிருந்திருக்கிறேன்; குறிப்பு: பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பர். இப்போது ஆண்டவரும், வேத சாட்சிகளான அனைத்துப் புனிதர்களும் உம் மன்றாட்டுகளையும், கூக்குரல்களையும் கேட்டிருக்கிறார்கள்; அன்பிற்குரியவரே, உம் பரித் தியாகங்கள் வீணாய்ப் போகவில்லை; உம் கண்ணீர் துளிகள் அனைத்தும் வீணாக சிந்தப்படவில்லை, அந்தக் கண்ணீர்த் துளிகள் இயேசுவின் காயப்பட்ட திரு இதயத்திற்கு ஒரு தைலமாக இருந்தன; பேத்ரோ, ஆண்டவரை ஸ்துதித்துப் போற்றும்; இயேசு உன் கதவுகளைத் தட்டியபடி, அவற்றின் அருகிலேயே இருக்கிறார்; சமாதானம் உன்மீது இருப்பதாக; சமாதானம் உங்கள் எல்லோர் மீதும் இருப்பதாக, நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; மார்ச் 13, 1988 என் ஆண்டவரே, இந்தத் தனிப்பட்ட முறையிலும், மிக நெருக்கமாகவும் உம்மோடு இருக்க, தேவரீர் எனக்குத் தந்தருளி இருக்கிற எல்லா வரப்பிரசாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. ஆமென். வசுலா, இந்த வரப்பிரசாதங்கள் என் ஆவல்களுக்காகவும், என் மகிமைக்காகவும் உனக்குத் தரப்பட்டன; உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; உன் அலுவல் எதுவென்று பகுத்துணர்வாயாக; வா, நான் உனக்கு உதவுவேன்; வசுலா, நான் உன்னைத் தூண்டி எழுப்ப விரும்பினேன்; என் குழந்தாய், விசுவாசம் கொள்; என் ஜோகோனசைத் தூண்டி எழுப்ப நான் சித்தம் கொண்டேன், குறிப்பு: இரண்டாவது பெந்தேகோஸ்தேக்காக ஜெபித்தவரான பாப்பரசர் 23 ஆம் அருளப்பர், ஐக்கியத்தின் பாப்பரசர் என்றும் இவர் அழைக்கப்பட்டார். மேலும் ஒரு புதிய பெந்தேகோஸ்தே வேண்டுமென்று நான் கேட்கிறேன்; இந்தத் தூண்டுதல் ஞானத்திடமிருந்து இறங்கி வருகிறது, ஆண்டவராகிய நான் என் அஸ்திவாரத்தின் நிலங்களின் மீதே இந்த புதிய பெந்தகோஸ்தை ஸ்தாபிப்பேன்; நான் உங்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பேன், படைப்பே, ஒரே ஆயனின் கீழ் நீ ஒன்று கூடுவாய், அங்கே நான் என் அரசை நிறுவுவேன்; என் இல்லம் சமாதானத்திலும், அன்பிலும் அரசாளும், என் படைப்பு மீண்டும் பிறந்து வரும் மாசற்ற, கடுமதியற்ற குழந்தைகளைப் போல் அது திரும்பி வரும்; இது மாபெரும் திரும்பி வருதலாக, மறுபிறப்பாக, மேய்ப்பனின் அழைப்பாக, புதிய பெந்தேகோஸ்தேயாக, தொடக்கத்தில் கிறிஸ்துவம் இன்னும் மாசற்றதும், சுய ஆர்வமற்றதும் ஆகிய ஒரு பச்சிளம் குழந்தையாக தன் தொடக்க நிலைகளில் இருந்தது போல் இருக்கும்; ஆ, படைப்பே! பொறுத்திருந்து பார்; வசுலா; ஆண்டவரே, என்ன என்னை உணர்வாய், நான் உன் அருகில் இருக்கிறேன்; குழந்தாய், உன் சரீரக் கண்களால் என்னை காண முடியாவிட்டாலும், நீ இதை நம்புகிறாயா? ஆம், ஆண்டவரே, நான் நம்புகிறேன். ஏனெனில் என் ஆன்மாவின் கண்களைக் கொண்டு உம்மைக் காணவும், உம்மை உணரவும், உம்மைக் கேட்கவும், அப்படியே விசுவசிக்கவும் நீர் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறீர்.
உன் கண்கள் என்னைத் தேடுவதை நான் காணும்போது, உன்னை நான் எவ்வளவாக நேசிக்கிறேன்! ஏனெனில் ஆதரவற்ற, ஓர் ஒன்றுமில்லாமையாக இருக்கிற வெறும் குழந்தையை நான் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்; வசுலா, ஓநாய்களுக்கு மத்தியில் உன்னைக் கொண்டிருப்பதில், நான் உனக்காகப் பரிதாபப்படுகிறேன்; நான் உன் அருகிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்; குழந்தாய், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; இறுதிவரை நான் உன்னை வழிநடத்த என்னை அனுமதி, சரியா? இயேசுவே, நான் உம்மை காண்கிற இடத்தில் நீர் இருக்கிறீர் இல்லையா? அன்பிற்குரியவளே, நான் அப்படியே இருக்கிறேன், என் சமாதானத்தைக் கொண்டிரு; ஆண்டவரே, நாங்கள், நாம்? ஆம், நாங்கள், நாம்;