வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 41, ஜூலை 21, 1987 ஸ்டாக் ஹோம். இன்று 'ஜெகோவா சாட்சிகள்' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இரண்டு பெண்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களை நான் உள்ளே அனுமதித்தேன். எங்களுக்கு மொழிப் பிரச்சனை இருந்தது. அவர்கள் மிகுந்த தீர்மானம் உள்ளவர்களாக இருந்தார்கள். எப்படியோ, கத்தோலிக்க வேதத்தை அவர்கள் தாக்கினார்கள்! ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களோடு திரும்பி வருவதாக அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நோக்கத்தை அறிந்துகொள்ள, அவர்களுக்கு செவிமடுப்பேன். கடவுள் எனக்காக எழுதிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வந்தார்கள். அதன்பின் என் மகன் வந்தான். நாங்கள் இந்த வெளிப்பாடுகளைச் சுருக்கமாகக் காட்டினோம். அவர்கள் இருவரும் நகைத்தார்கள். 'பசாசு' என்ற வார்த்தை எனக்குப் புரிந்தது. நான் அவர்களை அனுமதித்தேன்; சீக்கிரத்தில் நான் பரிகாசம் செய்யப்படுவேன் என்று கடவுள் என்னிடம் சொல்லவில்லையா, அந்தப் பரிகாசத்தை நான் உணரும்படி தமது முள்முடியை அவர் எனக்குத் தரவில்லையா? மே 7, 1987 அன்று முன்னறிவிக்கப்பட்டது. இது தொடக்கமட்டுமே என்று நான் பயப்படுகிறேன்... வசுலா, நான் உன் அருகில் இருக்கிறேன், பயப்படாதே; ஜூலை 22, 1987 வசுலா, இந்த எல்லா ஆத்துமங்களையும் உன்னால் பார்க்க முடிகிறதா? எல்லோரும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; இயேசுவுக்குப் பின்னால் ஆன்மாக்களை ஒரு கூட்டமாகக் கண்டேன். இயேசுவா? நான்தான்; ஆம், அவர்கள் ஆன்மாக்கள்தான்! நான் அந்த ஆன்மாக்களைப் பார்த்தபோது, உடனடியாக மற்றொரு காட்சி எனக்குத் தோன்றியது; பல வருடங்களுக்கு முந்தைய காட்சி. எனக்கு அப்போது 17, 18 வயது இருந்திருக்க வேண்டும். உதாரணமாக, எங்கள் வரவேற்பறையில் அடிக்கடி அநேக ஆன்மாக்கள் தரையில் அமர்ந்திருந்ததை நான் காண்பது வழக்கம். அவர்கள் ஒருவருக்கொருவர் அமைதியாய் இருக்கும்படி, சைகை காட்டியபடி, ஒரு உரையைக் கேட்க வந்தவர்கள் போல என்னைச் சுற்றி இருப்பார்கள். அந்நேரத்தில் நான் வழக்கமாக அவர்களை 'இறந்த மனிதர்கள்' என்றுதான் சொல்வேன். இந்த இறந்த மனிதர்களை நான் ஏன் காண்கிறேன் என்று நான் வியந்து கொண்டிருந்தேன், ஆனாலும் அவர்கள் எனக்கு எந்தத் தொந்தரவும் ஒருபோதும் தந்ததில்லை என்பதாலும், என்னைச் சுற்றிலும் மற்ற காரியங்களால் நான் சீக்கிரத்தில் ஈர்க்கப்பட்டு விடுவேன் என்பதாலும், நான் அவர்கள் மீது அதற்கு மேல் கவனம் செலுத்தவே இல்லை. இது அடிக்கடி நடந்தது. ஒரு சர்வசாதாரணமான காரியமாகவே ஆகிவிட்டது. ஆனாலும் நான் இவற்றில் எதன் மீதும் அவ்வளவு அதிக கவனம் செலுத்தவில்லை. ஆம், வசுலா. அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்! ஆண்டவரே, எதற்காகக் காத்திருந்தார்கள்? நீ வளர்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்களுக்கு அது தெரிந்திருந்ததா? ஆம், அவர்களுக்குத் தெரிந்திருந்தது; நீ என்னை நேசிக்கும்படியாகவும், பரிகாரம் செய்யும்படியாகவும் நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்; என்னைப் பக்தி ஆர்வத்தோடு நேசிப்பது பரிகாரங்கள் செய்கிறது, அதனால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள இந்த ஆன்மாக்கள் குணமாக்கப்படுகிறார்கள், குறிப்பு: அதாவது, சுத்திகரிக்கப்படுகிறார்கள். சுத்திகரிக்கும் நெருப்பிலிருந்து பிடுங்கி அகற்றப்படுகிறார்கள், கடைசியாக, அவர்களால் என்னிடம் வர முடிகிறது; வசுலா, உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது, அவர்கள் எவ்வளவு அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்னைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டும், காண முடியாமல் இருப்பதென்றால்? எவ்வளவு அதிகமாக அவர்கள் உன்னைச் சார்ந்திருக்கிறார்கள் தெரியுமா! ஆ வசுலா, நீ அவர்களுக்கு உதவி செய்வாயா? ஆம், ஆண்டவரே. நான் இறுதியில் அவர்களை உம்மோடு காண ஆசிக்கிறேன்! என் சமாதானத்தைக் கொண்டிரு, ஆண்டவராகிய நான் அவர்களுக்கு எப்படி உதவுவது என்று உனக்குக் காட்டுவேன்; எப்போதும் என்னைத் தேடு; பரித்தியாகம் செய். ஒருபோதும் முறையிடாதே; என் ஆசைகளை நிறைவேற்ற நான் உனக்கு உதவி செய்வேன்; நேசமே, என்னை நேசி, ஏனெனில் உன் நேசம் அவர்களைக் குணமாக்குகிறது; இயேசுவே, அவர்கள் உம்மோடு வந்து சேர்ந்து விட்டார்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துவீரா? செய்வேன்; இயேசுவே, அந்த 'ஜெகோவா சாட்சியைப்' பற்றி நீர் என்ன சொல்கிறீர்? அவர்கள் விரும்புவதை எல்லாம் உனக்குத் தரட்டும்; என்னோடு சேர்ந்து அவர்களை உபசரி; நான் ஏன் அவர்களை உன்னிடம் அனுப்பினேன் என்பதை நீ புரிந்துகொள்வாய்; நேசமே, என் மீது சாய்ந்துகொள்; இயேசுவே, உமது சொந்த உலகத்தில் உள்ள யாரையாவது நான் சந்திப்பேனா? நான் உன்னை எடுத்து, எனக்குச் சொந்தமானவர்கள் மத்தியில் உன்னை வைப்பேன் என்பதை நான் உனக்கு இப்போதே சொல்லவிடு; மகளே, என் வரங்களில் எதற்காவது நீ தகுதி பெற்றிருந்தாய் என்றால், எல்லா 'வாசல்களும்' உனக்கு திறந்திருக்க, குறிப்பு: "வாயில்கள்". சாத்தானும் அவனுடைய தூதர்களும் உள்ளே ஊடுருவி, அவனுடைய இழிவான காரியங்களை எழுத அல்லது எனக்குத் தவறான வார்த்தைகளைத் தர அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம். என்றாலும், இதன் காரணமாக, பசாசுக்களை எப்படி அடையாளம் காண்பது என்று கடவுள் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார். சாத்தான் தன் இருத்தலால் ஒர் ஆன்மாவை அமைதியில் இருக்கச் செய்ய ஒருபோதும் முடியாது. இது அவன் விரும்பாமலே வெளிப்படுத்துகிற காரியமாக இருக்கிறது. உனக்குத் திறந்திருக்க, நீ கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லாமலே, நேசம் எப்படி உன்னை வழிநடத்துகிறது என்று உனக்குக் காட்டியிருப்பேன்; இதற்கு என்ன அர்த்தம்? அதாவது, நான் உனக்குத் தந்துள்ள இந்த வரங்களுக்கு நீ கொஞ்சமும் தகுதி பெற்றிருக்கவில்லை, என்னுடைய அளவற்ற நன்மைத்தனத்தின் காரணமாகவே, உன் நிர்பாக்கியத்தை நான் கண்ணோக்கினேன் என்று அர்த்தம்; இப்போதிலிருந்து, முன் எப்போதையும் விட அதிகமாக என்னை ஆசிப்பாயாக; நேசத்தின் செயல்களை எனக்குத் தருவதன் மூலம், ஒவ்வொரு வரத்தையும் நீ சம்பாதித்துக் கொள்வாய்; ஒவ்வொரு நேசச் செயலும், நீ அழித்துவிட்ட எல்லாவற்றையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும்; என் தேவனே, நான் எதை அழித்துவிட்டேன்? என்னால் தரப்பட்ட எல்லா நன்மையான காரியங்களையும் அழித்துவிட்டாய், அவற்றை தீமையாகவும் மாற்றிவிட்டாய்; என்னை மகிமைப்படுத்து, நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, இந்த நல்ல செயல்களைச் செய்ய நீர் எனக்கு உதவுவீரா? உதவுவேன்; நான் தந்த எல்லாமும் இலவசமாகக் கொடுக்கப்படவும் வேண்டும் என்பதை மறவாதே; நான் என் பீடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்; பிற்பாடு: நான் அவருடைய வரப்பிரசாதங்களில் எதற்கும் ஒருபோதும் தகுதி பெற்றிருக்கவில்லை என்று எனக்குக் காட்டினார். ஆகவே, இப்போது நான் சற்று அச்சத்தோடு அவரிடம் இரந்து மன்றாடியபடி திரும்பி வருகிறேன். ஆண்டவரே! இதோ இருக்கிறேன்; உம் ஒளியில் இருக்க என்னை அனுமதிப்பீரா? என் ஒளியில் இரு, அதில் தங்கியிரு; உம்மீது சாய்ந்து கொள்ள என்னை அனுமதிப்பீரா? நான் எப்போதும் உன்னை அனுமதிக்கிறேன்; குறிப்பு: "அனுமதித்தல்" என்ற வார்த்தை இதைப் பயன்படுத்தும்படி அவரால் எனக்குக் கற்பிக்கப்பட்டது. ஏனெனில் கடவுளும் அரசருமாக இருக்கிற அவர் எப்போதும் தம் படைப்பாகிய என்னிடம், இந்த முறையில் "இன்னின்ன காரியங்களுக்கு என்னை அனுமதி.." என்று எப்போதும் கேட்கிறார். உம் கரத்தைப் பிடித்துக் கொள்ளவும், உம் அருகில் இருக்கவும் என்னை அனுமதிக்கிறீரா? உன் தந்தையின் கரங்களுக்குள் வா; உம்மிடம் பேச என்னை அனுமதியும்! என்னோடு ஒன்றாய் இரு, என் எதிரே இரு; என் பிரதிபலிப்பாக இரு; என்னை உனக்காகப் பேசவிடு; உம்மால் நான் தேற்றப்பட அனுமதிப்பீரா? சிறியவளே, நானே உன்னைத் தேற்றுபவராக இருப்பேன்; வா, என்னை உணர்ந்து பார், என்னில் ஒரு பாகமாக இரு; ஒன்றாய் இரு, என்னில் கரைந்து போ; நான் உன்னை முழுவதுமாக ஆட்கொண்டு, உன்மீது ஆட்சி புரியவிடு; நீ என் இருதயத்திற்குள் ஊடுருவ, நான் உன்னை அனுமதிப்பேனாக, நெருங்கி வா; என்னில் இரு; நான் உன்னில் இருப்பேன்; நான் எவ்வளவோ உன்னை நேசிக்கிறேன், மகளே! கடவுள் மகிழ்ச்சி அடைந்ததாக நான் உணர்ந்தேன். ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். அவருடைய அன்பு முழுவதுமாக என்னை மூடுவதை நான் உணர்ந்தேன். இப்போது என்னோடு இரு; இங்கேயே இரு; குறிப்பு: நான் எழுந்து போகத் தயாராகிக் கொண்டிருந்தேன். வசுலா, எனக்கு எதையும் மறுக்காதே; நான் உரக்கக் கூக்குரல் இடுகிறேன், என் கூக்குரல் எதிரொலித்து, வானகங்கள் முழுவதையும் அசைக்கிறது; என் கூக்குரல் என்னை நேசிக்கிற ஆன்மாக்களால் கேட்கப்பட்டிருக்க வேண்டும்; அவர்கள் என் குரலைக் கேட்டிருக்க வேண்டும், இதை அவர்கள் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்று அவர்களிடம் கூறு; இது நான்தான், இயேசு, கடவுளின் பிரியகுமாரன்; அவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றும், ஒற்றுமை, சமாதானம், மற்றும் நேசத்தை வளர்க்க வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன்; அவர்கள் இரட்சணியத்தின் ஒரு போர் படை போல இருந்து, அழிக்கப்பட்டுள்ளவையும், திரித்துக் கூறப்பட்டுள்ளவையுமான எல்லாவற்றையும் சரிபடுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் கூக்குரல் என் காயப்பட்ட ஆத்துமத்தின் உள்ளாழங்களில் இருந்தே வருகிறது; மகளே, என்னை வாழ்த்திப் போற்று; நான் உம்மை வாழ்த்திப் போற்றுகிறேன். என் தேவனே, உம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவனவாக. எனக்குப் பிரமாணிக்கமாக நிலைத்திரு, என் சரீரத்திற்குள் ஒரு பகுதியாக இணைந்துகொள், என்னைப் பற்றிக்கொள்; ஜூலை 24, 1987 நான் வந்து என் மேசை அருகில் முழந்தாள் இடுகிறேன். இயேசு எனக்கு எதிரே சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவர் பேசப்போவதை எதிர்பார்த்தபடி நான் அவரைப் பார்க்கிறேன். நேசமே, என் மீது உள்ள உன் நேசத்தை அதிகரித்து, அதன் மூலம் ஆன்மாக்களைக் குணமாக்கு; என்னை நேசித்து, அவர்களை விடுவி; இப்போது நீ ஐந்து ஆன்மாக்களை என்னிடம் நடத்தி வந்திருக்கிறாய், எனக்கு ஆத்துமங்களைத் தருவதன் மூலம் என்னைத் திருப்திப்படுத்து; சாத்தானின் கதவுகளுக்கு அருகில் இருக்கிற பரிதாபத்திற்குரிய ஆன்மாக்கள் எல்லோரையும் இரட்சிக்க நான் விரும்புகிறேன், உங்கள் எல்லோரையும் நான் மிக அதிகமாக நேசிக்கிறேன்! பிற்பாடு: அகாப்பாமே, குறிப்பு: கிரேக்க மொழியில்: "என்னை அன்பு செய்." இயேசுவா? நான்தான், சிர்க்கா லீசாவிடம் என்னை இன்னும் அதிகமாக நேசிக்கும்படி சொல்; அவள் ஏன் என்னிடம் வருவதில்லை? நான் அவளது ஆலோசகராக இருக்கிறேன்; நானே உங்களைக் கண்காணிக்கிறவர்; நானே உங்களைத் தேற்றுகிறவர்; என் இருதயம் எப்பேர்ப்பட்ட நேசத்தின் பாதாளமாக இருக்கிறது என்பதை அவள் அறிவாளா? வசுலா, நான் அவளை நேசிக்கிறேன்; அவளுக்காகக் காத்திருப்பேன், "பதில் கொடு, ஆன்மாவே! என் கூக்குரலுக்குப் பதில் கொடு, உன் ஜெபத்தில் என்னிடம் மன்றாடு, உன்னை நேசிக்கிற இந்த இருதயத்திடம் பேசு; நான் காத்திருப்பேன்" என்றும் தொடர்ந்து அவளை அழைத்துக் கொண்டே இருப்பேன்; இயேசு மேலே உள்ள செய்தியை என் சிநேகிதி ஒருத்திக்காகத் தந்தார். ஜூலை 25, 1987 நான் உன்னை நேசிக்கிற உன் பரலோகப் பிதா; உன் சிருஷ்டிகராகிய என்னைத் தவிர வேறு யாரையும் தந்தை என்று அழைக்காதே; என்னிடமிருந்து கற்றுக்கொள்; வசுலா, நான் இன்னும் உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்று நான் சொல்லவில்லையா? நான் நேசமாய் இருக்கிறேன்; என் மந்தையை நான் இரட்சிக்குமாறு அதை நேசத்திடம் கூட்டி வா; அஞ்ஞானவாதத்தைக் குறை; நேசத்தைத் தூண்டு; குறிப்பு: நாத்திகம். நான் உனக்குத் தந்திருக்கிற அதே உணவை என் குழந்தைகளுக்குத் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவு; நான் உம் உதவியோடு உம் விருப்பங்களை நிறைவேற்றுவேன். என்னை வழிநடத்துவதற்கு ஒளியாயிரும்; பிற்பாடு: இன்று வரவிருக்கிற ஜெகோவா சாட்சிகளைப் பற்றிய சிந்தனை என் அமைதியைக் கெடுக்கிறது. அவர்களிடம் என்ன சொல்வது? எழுது; இயேசு தம் கரத்தால் இந்த குறிப்பேட்டைச் சுட்டிக்காட்டும் ஒரு சைகையைச் செய்தார். அவர்களை நேசி, நீ நான் என்ன செய்ய வேண்டும் என சொல்கிறேனோ, அதைச் செய், அவர்களை நேசி, அவர்கள் எல்லோரும் என் குழந்தைகள்; ஆனால் அவர்கள் எனக்குத் தவறான அறிவுரைகள் தருவார்கள் என்று நான் பயப்படுகிறேன். உலகம் முழுவதிலும் சரியான மதத்தைத் கடைபிடிக்கிறவர்கள் தாங்கள் மட்டும்தான் என்றும், கத்தோலிக்கர்கள், புரட்டஸ்டன்ட், சபையினரைப் போன்ற மற்ற எல்லோரும் 100% தவறானவர்கள் என்றும், அவர்களுடைய நம்பிக்கைகளால் மட்டும்தான் ஒருவன் மோட்சத்தை அடைய முடியும் என்றும் சொல்ல விரும்புவதாகத் தோன்றுகிறது. இயேசு அசைந்து கொடுக்காதவராகத் தோன்றினார். நேசமே, அவர்களை நேசி; சரி, ஆனால் அவர்கள் என்னைத் தவறாக வழிநடத்தத் தொடங்கினால் என்ன செய்வது? அவர்கள் உனக்குத் தவறாக வழிநடத்துவதாக அறிந்தால் நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? இல்லை. மகளே, பயப்படாதே, நான் உன்னை வழிநடத்துவேன்; என் தேவனே, உம்மோடு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்... ஏன்? குறிப்பு: இயேசு காரணங்களைக் கேட்க ஆவல் உள்ளவராகத் தோன்றினார். அவர் இதில் மகிழ்ச்சி அடைகிறார். ஏனெனில் நான் உம்மை நேசிக்கிறேன். ஏனெனில் நீரே என் மகிழ்வாக, என் இன்பமாக, என் புன்னகையாக இருக்கிறீர். நீர் என் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்கிறீர்; வசுலா, என்னை மகிழ்ச்சியால் நிரப்பு; வசுலா, என்னை நேசி; என் இருதயத்தின் இன்னும் அதிக ஆழமான உள்ளாழங்களுக்குள் இறங்கு; என் நேசம் முழுவதும் வேறு எதனாலும் அன்றி, நேசமானவரின் நேசத்தின் உயிருள்ள தீச்சுவாலையால் உன்னை முழுவதுமாகச் சுட்டெரிக்கக் கடவது, நேசமே, என்னில் இளைப்பாறு, நான் உன்னில் இளைப்பாறவிடு; என் மோட்சமாக இரு; ஜூலை 26, 1987 என் தேவனா? நான்தான்; சிறியவளே, கடவுளாகிய நான் இந்த விசேஷ பாதையை உனக்காகத் தேர்ந்தெடுத்திருக்காவிட்டால், வேறு யார் உன்னை இந்தப் பாதையில் வழிநடத்தி இருப்பார்கள்? தொடக்கத்தில் நான் மிகவும் தயங்கிக் கொண்டிருந்தேன், இது தீமையிடமிருந்து வருகிறது என்று பயந்து கொண்டிருந்தேன். நீ என்னை ஆராதித்தபோது, பசாசு பயந்தோடி இருப்பான்; அவனது முகத்திரை கிழிக்கப்பட்டு, அவனது அருவருப்பான திட்டங்கள் மனதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்; அவன் தாழ்ச்சியையும், நேசத்தையும், பக்தியையும் தாங்கிக் கொள்ள மாட்டான்; இதை எப்போதும் மனதில் கொண்டிரு; என் கரத்தைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறு, சோர்ந்து போகாதே, அடிக்கடி மனஸ்தாபப்படு; குறிப்பு: "மேலேறுதல்" என்பதற்கு இந்த இடத்தில் ஞானரீதியாக முன்னேறுதல் என்று அர்த்தம். இப்போது எப்படித் தொடர்ந்து என்ன செய்யப் போகிறாய்? ஆண்டவரே, என்னிடம் கேட்கிறீரா? ஆம், கேட்கிறேன்; எனக்கு உதவாவிட்டால் நான் தொடர்ந்து எதுவும் செய்ய முடியாது. நல்லது; என் விருப்பங்களுக்கு எதிராகப் போராடுபவன் தாற்றுக்கோலை உதைக்கிறவனாக இருப்பான்; ஜூலை 27, 1987 நான் ஒரு ஆறுதலற்ற உணர்வோடு வருகிறேன். கடவுள் முன்பு போல எனக்கு மிக நெருக்கமாக இல்லை என்று நான் உணர்கிறேன். வேதனைப்படாதே, என் வசுலா; நான் இதெல்லாவற்றையும் உனக்குத் தெளிவுபடுத்துவேன்; நான் உன் அருகில் இருக்கிறேன்; ஜூலை 28, 1987 நான் இன்னும் அந்த ஆறுதலற்ற உணர்வோடு தான் இருக்கிறேன். இயேசுவே, சில சமயங்களில் உம் கரம் என் தலையை வருடி சீராட்டுகிறது என்று நான் மக்களிடம் சொல்லும்போது, அவர்களைத் தவறாக வழிநடத்துவதாக மிகவும் பயப்படுகிறேன். ஒருவேளை நான் செய்வது தவறா? நான் செய்வது தவறா இருந்தால், அது பயங்கரமானதாய் இருக்கும்! வேதனைப்படாதே, என் இரட்சிக்கும் அன்பில் விசுவாசம் கொள்; இப்போதும் கடந்த காலத்திலும் நான் பல தடவைகள் உன்னைச் சீராட்டி இருக்கிறேன்; இல்லை, வசுலா, அது உன் கற்பனை அல்ல; இப்படிச் செய்வது இயேசுவாகிய நான்தான்; ஜூலை 29, 1987 நான் இன்னும் இந்த ஆறுதலற்ற உணர்வோடு தான் இருக்கிறேன். இயேசுவா? நான்தான்; என் கட்டுகள், நித்தியமான கட்டுகள் என்று நான் உனக்கு சொல்லியிருக்கிறேன்; நீ பயப்பட என்ன இருக்கிறது? நீ முன்பு போல பயன்படுத்தப்படாததால், குறிப்பு: கடவுளின் கருவியாக இருப்பது என்ற பொருளில் நான் குறைவான நேரமே உன்னோடு இருக்கிறேன் என்றோ, அல்லது நான் உன்னைக் கைவிட்டுவிட்டேன் என்றோ, அல்லது உன்மீது கோபமாய் இருக்கிறேன் என்றோ, நீ தவறாக நம்புகிறாய்; இல்லை; இல்லை, வசுலா, அதற்கு இவற்றில் எதுவும் காரணமில்லை; என் நேசம் மாறிவிடவில்லை, நான் உன்னை கைவிட்டு விடவில்லை, நான் தொடர்ந்து உன்னை ஏவித் தூண்டிக் கொண்டே இருப்பேன்; ஜூலை 30, 1987 நான் இன்னும் கவலைப்படுகிறேன். முன்பு போல ஏன் என்னால் கடவுளை உணர முடியவில்லை? இயேசுவா? நான்தான்; வா; என்னைப் பார்; ஆம், இயேசுதான்; நான் கடவுளின் கண்களுக்குள் பார்த்து, உருகினேன். நீ யாராய் இருக்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், நான் உன்னை உயர்த்தி என் இருதயத்தில் உன்னை வைக்கவில்லையா? வசுலா, என் வசுலா, நான் எப்போதாவது உன்னைக் கைவிடுவேனா? குறிப்பு: இதை அவர் எவ்வளவு மிகுந்த இனிமையோடு சொன்னார் என்றால், கடவுள் மட்டுமே இந்த முறையில் பேச முடியும். சிந்தித்துப் பார். நான் நேசமாக இருக்கிறேன், உன்னை நான் விடுவிக்க வரும் வரையிலும் என் நேசத்தை உனக்குள் ஊற்றுவேன்; ஏலா திப்லா மௌ, இமே, ஓ, கிறிஸ்டோஸ். கிரேக்க மொழியில் என் அருகில் வா. நானே கிறிஸ்து. இயேசு என்னைத் தேற்ற முயன்றார். நான் அதிக ஆறுதல் அடைந்தேன். ஜூலை 31, 1987 வசுலா, வா; நான் தனிமையைப் பற்றிய உன் காரணமில்லாத அச்சங்களைத் தெளிவுபடுத்துவேன்; ஞான இரகசியங்களை அறியும் திறனை நான் உனக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன், இதை என்னால் கைவிடப்படும் நிலையாக எடுத்துக் கொள்ளாதே; எழுது; நீ தியானத்தில் மேலும் உயரமான நிலையை அடையும்படி என் வரப்பிரசாதத்தை உனக்குத் தருகிறேன். அதே வேளையில், நான் இந்த உயர்ந்த நிலையை நீ எட்டும்படி உன் ஆத்துமத்தைச் சுத்திகரிக்கிறேன்; நான் உன்னோடு இருக்கிறேன், ஒருபோதும் உன்னை விட்டு தொலைவாக இருக்க மாட்டேன் என்பதில் நிச்சயமாக இரு; நான் என் பேரில் உனக்குள்ள நேசத்தைத் தூண்டி அதிகரித்து உன்னைப் பலப்படுத்துகிறேன்; என் பேரில் இன்னும் ஆழமானதொரு பக்தியும், அதிக முழுமையான நேசமே இதெல்லாவற்றினுடைய விளைவுகளாக இருக்கும்; வசுலா, நீ தியானத்தின் இந்த உயர்ந்த நிலையை அடைவதில் வெற்றி பெற வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்; நீ வளர வேண்டும்; நேசமே, எல்லா சந்தேகத்தின் நிழல்களையும் உன் மனதிலிருந்து அகற்றிவிடு, உன்னைத் துயரப்படுத்துகிற சந்தேக நிழல்கள் அனைத்தையும் அகற்றிவிடு; நீ முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உன் ஆன்மா உத்தமத்தனத்தையும், பரிசுத்தத்தனத்தையும் அடைய வேண்டுமென நான் விரும்புகிறேன்; மிக உயர்ந்ததும், மிக மென்மையானதுமாகிய இந்த ஒளிக்குள் உன் ஆத்துமத்தை முன்னேற்ற விரும்புகிறேன்; இவ்வாறு சுத்திகரிக்கப்படும் உன் ஆத்துமம் உத்தமத்தனத்தாலும், பரிசுத்தத்தனத்தாலும் பாதுகாக்கப்பட்ட புண்ணியங்களை எனக்கு ஒப்புக்கொடுக்க வல்லதாய் இருக்கும்; தியானத்திலிருந்து, நீ காட்சித் தியானத்தின் ஒர் உயர்ந்த நிலையைச் சென்றடைவாய்; இந்த வறட்சியும், "எல்லாம் போய்விட்டது" என்று உன்னை நினைக்கச் செய்யும் இந்த ஆறுதலற்ற உணர்வும் என் ஒளியின் ஒரு பகுதியை உன்னிடமிருந்து நான் விலக்கியதால் தான் ஏற்பட்டது; ஆனாலும், பயப்படாதே; நீ வித்தியாசத்தை உணர்கிறாய் என்பதில் மகிழ்ச்சியாய் இரு; என் ஒளியின் ஒரு பகுதியை விளக்குவதன் மூலம் என்னைத் தேடும் உன் ஆசையை நான் வலுப்படுத்துகிறேன், இவ்வாறு உன் அறிவில் அதிக மென்மையான ஒளியை நான் புகுத்துகிறேன்; இருந்தாலும், முழு ஒளியும் ஒருபோதும் விலக்கப்படாது, ஏனெனில், நீ என் ஒளியைக் கண்டு, அதைப் பின் செல்லவும், கால் இடறாமல் உன்னைத் தாங்குமாறும், உனக்காகக் கொஞ்சம் ஒளியை நான் எப்போதுமே விட்டு வைக்கிறேன்; முன் எப்போதையும் விட அதிக பக்தி ஆர்வத்தோடு என்னை நீ தொடர்ந்து தேடும்படியாக நான் இந்த ஞான சுறுசுறுப்பை உனக்குத் தருகிறேன்; என்னில் என் ஆசைகளைத் தேடு; வசுலா, நான் ஒருபோதும் உன்னை விட்டு விலக மாட்டேன்; ஏனெனில், நீ வளர்ந்து செழிப்புற வேண்டுமென விரும்புகிற உன் பரலோகப் பிதாவாக நான் இருக்கிறேன், இவை என் வழிகளாக இருக்கின்றன; பயப்படாதே, ஆனால் விழிப்பாய் இரு, ஒருபோதும் உறங்கி விடாதே; என்னிடமிருந்து தேடிக்கொண்டிரு; நீ கற்றுக்கொள்வாய்; நான் உன் ஆசிரியராக இருக்கிறேன்; வசுலா, என்னை நேசி; என்னைக் காணும்போது புன்னகை செய், என் கரத்தை உன்னிடம் நான் நீட்டும்போது, அதைப் பற்றிக்கொள்; என் சமாதானத்தைக் கொண்டிரு, என்னை நம்பு; வா, நான் உன்னை நேசிக்கிறேன். ஓ, பிதாவே, என்னைக் குழப்பத்திலிருந்து விடுவித்ததற்காகவும், இது எல்லாவற்றையும் எனக்கு விளக்கியதற்காகவும், நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உம் போதனைகளுக்காக, உமக்கு நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன்!