இறைவனில் உண்மையான வாழ்வு

 இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 50, அக்டோபர் 18, 1987 மகளே, என் கரத்தைப் பிடித்துக்கொண்டு, என் பணிகளைத் தொடர்வாயா? ஆம், ஆண்டவரே. உம் கரத்தை விட்டுவிட நான் ஒருபோதும் விரும்பவில்லை. நான் முன்பு உனக்குச் சொல்லியுள்ளது உனக்குத் தெளிவாய் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; இது என்னிடமிருந்தே வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இராதபடி, நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளை நான் முன்னுரைப்பேன் என்று சொன்னேன்; இயேசுவே, நீர் தரக்கூடிய ஒரே ஒரு அடையாளம் நான்தான் என்று நீர் சொல்லவில்லையா? ஆம், நீ என் வேலைகளின் அடையாளமாக இருப்பாய் என்று நான் சொல்லியிருக்கிறேன், நீ பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே என் திட்டத்தை நான் வகுத்திருக்கிறேன்; மகளே, என் நீதியின் பனித்துளி உன்னில் சொட்டும்படி, திறந்தே இரு; என்னிடமிருந்து என் புண்ணியங்களை உறிஞ்சிக்குடி; நீ உத்தமமாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் மலர், என் தெய்வீகத்தின் வெள்ளைப் போலத்தின் மணம் வீச வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; வசுலா, என்னைப் பார்; நான் இயேசுவைப் பார்த்தேன். என் எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும்; வசுலா, இன்னும் அதிக நேரத்தை எனக்காக ஒதுக்குவாயா? என் நேரம் எல்லாமே உம் நேரம்தான். நான் உமக்காகவே வாழ்கிறேன். அப்படியானால், உன் விளக்கை மறுபடியும் ஏற்று, என்னிடமிருந்து எடுத்துக்கொள்; இயேசுவே, நான் என்ன சொல்ல முடியும்? நான் எதற்கும் தகுதி இல்லாமல் இருக்கும்போது, நீர் எனக்கு மிக அதிகமாகத் தருகிறீர். நீர் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறீர். நீர் எனக்கு தந்து கொண்டிருப்பதற்கு ஓரளவாவது ஒப்பானதாக இருக்கிற எதையும் கூட உமக்கு ஒப்புக்கொடுக்க என்னால் முடியாது. நீர் எனக்கு ஒளியைத் தருகிறீர். நீர் மரித்தவர்களிடமிருந்து என்னை எழுப்பினீர். நீர் என்னைக் குணமாக்கி, என் மீது உம் செயல்களைப் பொழிந்தீர். என்னை மகிமைப்படுத்து; வசுலா, உன்னை விடுவித்தவர் யார்? ஆண்டவரே, நீர் விடுவித்தீர். நான் ஒன்று சொல்லலாமா? அன்பே, சொல்; குறிப்பு: கடவுளின் குரல் சகிப்புத்தன்மையுள்ள ஒரு தந்தையின் குரல் போல் ஒலித்தது. என் இறைவா, உம் இரக்கத்தையும் உம் அன்பையும் வல்லமையையும் கொண்டு, நீர் எனக்குச் செய்திருக்கிறபடியே, என் சகோதரர்களுக்கும் செய்யும்.... அவர்களை விடுவியும்..... அவர்களை உம்மிடம் உயர்த்தும். நான் உம் அன்பை உணர்வது போல, அவர்களும் அதை உணரட்டும். ஆத்துமங்கள் உம்மை அணுகி வருவதைக் கண்டு நான் அக்களிக்க விரும்புகிறேன். அதன்பின் சகல கிறிஸ்தவர்களையும், நம் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையை மறுதலிப்பவர்களையும் ஒன்றுபடுத்தும். வசுலா, நீ பரித்யாகங்களைச் செய்ய சித்தமாயிருக்கிறாயா? ஆம், ஆண்டவரே. அந்த விதத்தில் நீர் என்னை பயன்படுத்த முடியுமானால். நேசமே, நான் உன்னிடமிருந்து என்ன ஆசிக்கிறேன் என்பதை உனக்குக் காட்டுவேன், என்னிடமிருந்து எப்போதும் பெற்றுக்கொள்; மலரே, நான் உன்னை நேசிக்கிறேன்; குறிப்பு: என் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது. ஏனெனில் பின்னாளில், என் சொந்த மக்கள் என் தாயாரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை உன் காதுகள் கேட்கும்போது, கண்ணீர் விட உன் கண்ணீர்த் துளிகளைச் சேமித்துவை; இதற்கு மேல் அவர்களை அனுமதியாதீர்; வசுலா, அந்த நாள் வரும்; என் திருச்சபை ஒரே ஒரு மொழியைப் பேசும் அந்த நாள் மிக அண்மையில் உள்ளது; ஆனாலும், இந்த மகிமையுள்ள நாளுக்கு முன் மேலும் பல மிகப்பெரிய திடீர் மாற்றங்கள் நிகழும்; மனிதனின் வீண் பெருமையாலும், பாவத்தாலும், நேசக் குறைவினாலும், என் திருவுடல் கிழிக்கப்பட்டதன் காரணமாகவும் இவை நிகழும் என்று நான் மீண்டும் உனக்கு சொல்ல அனுமதி, என் திருவுடலை நான் மகிமைப்படுத்தி ஒன்றுபடுத்துவேன்; அன்பு உங்கள் எல்லோரையும் ஒன்றாக இணைக்கும்; இதையும் எழுது, எல்லா அதிகாரமும் என்னிடமிருந்தே வரும்படியாக சிறியவளாகவே நிலைத்திரு; குறிப்பு: இயேசு இதை எல்லோருக்காகவும் தான் சொல்கிறார் என்று நான் நினைக்கிறேன். என் விருப்பங்கள் அசைவுறாதவை, அவை எப்போதையும் விட அதிக உறுதியாக நிற்கின்றன என்பது அறியப்படுவதாக; இயேசுவே, உம்முடைய எந்த ஆசைகள்? குறிப்பு: இயேசு பதில் சொல்லாமலே தொடர்ந்து பேசினார் என்று நான் நினைக்கிறேன். வசுலா, என் பிள்ளைகளிடம் பரப்ப வேண்டுமென நான் ஆசிக்கிற வார்த்தைகள் இதோ; "ஆண்டவராகிய நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன், என்னிடம் வாருங்கள்;" ஆண்டவரே, என்னை அவர்களிடத்தில் நடத்திச் சென்று, உம் வார்த்தைகளை அவர்களுக்கு நான் அறிவிக்கச் செய்யும். வசுலா, என் மீது சாய்ந்து கொள்; என் ஒளியில் வாழு, ஓய்வெடு; அக்டோபர் 19, 1987 கிரீஸில் இருந்தபோது, புனித லிசியையின் தெரேசாவின் சுயசரிதியை நான் வாசித்தேன். அவள் இடைவிடாமல் என் மனதில் இருந்தாள். நான் உள்ளூர் பேருந்தில் இருந்தபடி அவளைப் பற்றி ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன். அவளை அன்போடு நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் உன்னை நேசிக்கிறேன் என்ற கிரேக்க வார்த்தையையும் இரண்டு இதயங்களையும் நான் பார்த்தேன். அந்த ஒவ்வொரு எழுத்தும் ஓரடி உயரம் இருந்தது. அவை என்னிடமிருந்து 4 மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு பேருந்து நிலையத்தின் உச்சியில் எழுதப்பட்டிருந்தன. என் புலன்கள் இன்னொரு மட்டத்தில் இருக்க, அவள் இதை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பதை நான் அறிந்திருந்தேன். அது அவளுடைய செய்தியாக இருந்தது. மகளே, என் திட்டங்கள் நீ பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே வகுக்கப்பட்டு விட்டன என்பதை நீ உணர்கிறாயா? பொறுத்திரு, நீ காண்பாய்; இப்போது ஓய்வெடு, என்னிடமிருந்து எப்போதும் ஊட்டம் பெற்றுக்கொள்; நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவே, என் அன்பே, நான் உம்மை நேசிக்கிறேன். மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; நீ எதிலும் குறைவுபடாதபடி நான் பார்த்துக் கொள்வேன்; உன் ஓய்வை வேறெங்குமின்றி என் இருதயத்தில் மட்டும் தேடு; ஆண்டவரே, திருமதி எக்ஸின் மகனுக்கு யாராவது உதவி செய்யக்கூடுமா என்று நான் உம்மிடம் கேட்கிறேன். நான் சொல்வதைக் கேள், நேசத்தின் வேலைகள் அவனை விடுவிக்க வல்லமையாக இருக்கின்றன; ஆண்டவரே, யாரால்? வசுலா, உங்கள் எல்லோராலும். இயேசுவே, என் நேசரே, உம்முடைய தெய்வீக கரத்தால் பங்களாதேஷ் சமுதாயத்தை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென நான் உம்மிடம் கேட்கிறேன். அவர்கள் எல்லோரையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென நான் உம்மிடம் கேட்கிறேன். அவர்களை ஆதரித்து தாங்கும். வசுலா, என் நேசத்தை தொட்டிலில் இட்டு சீராட்டும்படி அவர்களிடம் சொல், ஏனெனில் அது அவர்களுக்குள் இருக்கிறது; நான் என் நேசத்துக்குரியவர்களின் மத்தியில் இருக்கிறேன்; மகளே, என் கரத்தால் நான் அவர்களை ஆசீர்வதிப்பேன்; நான் திருமதி எக்ஸின் மகனுக்காக ஜெபித்தேன். நீ கேட்பதை விசுவசி; சிறியவளே, என்னில் விசுவாசம் கொள்; இயேசுவே, அவனிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை உம்மால் காண முடிகிறதா? முடிகிறது; அவன் உம் அருகில் இருக்க வேண்டும் என்று நீர் விரும்ப மாட்டீரா? மிகுந்த ஆவலோடு நான் அவனை விரும்புகிறேன்; நேசமே, சாத்தானுடைய பிடி அவன் மீது இருக்கிறது; "நான் அவனை போக விடமாட்டேன்!" என்று சாத்தான் அலறுவதை நான் கேட்டேன். அவன் கோப வெறியோடு இருந்தான். ஆண்டவராகிய இயேசுவே, நான் அவனுக்காக துன்புற வேண்டும் என்று நீர் விரும்பினால், அவனை உம் அருகில் கொண்டு வாரும். நான் அவனுக்காக துன்புறுவேன். நான் என்ன செய்யலாம்? ஒருவேளை இரண்டு நாட்களுக்கு நான் தண்ணீர் குடிக்காமல் இருக்கட்டுமா? ஸ்விட்சர்லாந்தின் காலநிலை அளவுக்கு மீறி வறட்சியானதாக இருக்கிறது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறது. வசுலா, அவனுக்காகத் துன்புறு, என் சிலுவையை நீ சுமந்திருக்கும்போது எந்த பானத்தையும் பருகாதே; இதை ஒரு பரித்யாகமாக நான் செய்வேன். நேசத்திற்குரியவளே, பிற்பாடு நீ புரிந்து கொள்வாய்; உன் சகோதரன் மீது அக்கறை கொள், அவனுக்காகப் பரித்யாகம் செய்; நான் அவனை நேசிக்கிறேன்; இயேசுவே, அப்படியே செய்வேன். அக்டோபர் 21, 1987 இன்று என்னை அதைரியப்படுத்தும் செய்தி எனக்கு கிடைத்தது. லயோனைச் சேர்ந்தவரும், நான் நம்பி இருந்தவருமான கத்தோலிக்க இறையியல் வல்லுநர் ஒருவர், நான் கத்தோலிக்க சமூகத்தை சேராதவள் என்பதை அறிந்ததும், அவருடைய ஆர்வமெல்லாம் குளிர்ந்து போய்விட்டது. நான் கடவுளை அனுபவித்து உணர்கிறேன் என்று அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் இது அதற்கும் அப்பாற்பட்டதாக இருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில், கடவுள் திருச்சபையின் அதிகாரிகளுக்கும் பாப்பரசருக்கும் செய்திகள் தருவது போலவே, எங்கள் எல்லோருக்கும் செய்திகள் தருகிறார் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் வாஸ்தவம்தான். அவர் ஏன் நம்ப வேண்டும்? ஒரு பேச்சுக்கு சொல்வதென்றால், நான் எங்கிருந்தோ வந்தவள். நான் ஒருமுறை சொன்னது போல, நான் அவர்களில் ஒருத்தியாக இருந்திருந்தால், நான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பேன். அவர்கள் இந்தச் செய்தியை மேலெழுந்த வாரியாக. கடவுள் மிகத் துல்லியமாக எங்களுக்குக் கற்பிக்க முயற்சித்துக் கொண்டிருப்பது இதுதான். ஒருவருக்கொருவர் வித்தியாசம் பாராட்டாமல் இருப்பது. நாம் எல்லோரும் ஒரே அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம். கடவுளின் அதிகாரத்தில் பிறகு ஏன் ஒரு வேறுபாட்டை கொண்டுவர வேண்டும்? ஒரு மனிதனின் குணத்தைப் பற்றியும் கூட வித்தியாசம் பாராட்டுவது. நான் துறவர அங்கி அணியவில்லை. ஆனால் அது ஒரு பிரச்சனை இல்லை. அது ஏன் என்று நான் கடவுளிடம் கேட்க முடியுமா? நான் இருக்கிறபடியே கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். நான் அப்படியே இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். வசுலா, நான் பூமியில் உடலோடு வாழ்ந்து கொண்டிருந்தபோது அனுபவித்த அதே காரியங்களை நீயும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்; வசுலா, போதிப்பதற்கு யார் எனக்கு அதிகாரம் கொடுத்தார்கள் என்று பரிசேயர்கள் என்னிடம் கேள்வி கேட்டதை நினைவுபடுத்திக்கொள்; ஆம், ஆண்டவரே. அன்பே, என் செய்தி என்னிடமிருந்து வருகிறது; எல்லா அதிகாரமும் என்னிடமிருந்தே வருகிறது; நீ எனக்கு சொந்தமாக இருக்கிறாய்; எந்தக் கணத்திலாவது உன் அதிகாரம் மனித குலத்தால் உனக்கு தரப்படும் என்று நான் எழுதியிருக்கிறேனா? சிறியவளே, ஞானத்தை நோக்கி உன் தலையை சாய்த்துக்கொள்; நான் வேதனையும் துக்கமும் உள்ளவளானேன். கண்ணீர் பொங்கி வழிந்தது. இந்நிலையிலிருந்து மீள்வதற்காக சிறிது நேரம் எழுதுவதை நான் நிறுத்த வேண்டி இருந்தது. என் பலிப்பொருளே, நான் உன்னை என் இருதயத்தின் பலிப்பொருளாகவும், உன் ஆத்துமத்தின் இனிய வாதியாகவும், என் சரீரம் மற்றும் என் ஆன்மாவின் பலிப்பொருளாகவும் இருக்கும்படி தேர்ந்தெடுத்திருக்கிறேன்; வசுலா, மறுதலிப்புகள், கடும் வேதனைகள் மற்றும் துயரங்களின் வழியாக நீ என் உலக வாழ்வை அனுபவிப்பாய்; நான் அதை உன் ஆன்மா எவ்வளவு தாங்க முடியுமோ, அதற்கேற்ற சிறு அளவுகளில் உனக்குத் தருவேன்; நீ நம்பப்பட மாட்டாய்; குற்றம் சாட்டப்படுவாய்.; பரிகசிக்கப்படுவாய், மறுதலிக்கப்படுவாய், ஏற்கனவே இவற்றை நீ அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறாய்; வசுலா, இவை இன்னும் அதிகமாகும்; இருந்தாலும், மறுபுறத்தில் என் சமாதானம் மற்றும் நேசத்தின் செய்தியில் விசுவாசம் கொள்வோரை நான் உனக்கு தந்திருக்கிறேன்; அவர்கள் உன் சாட்சிகளாக இருப்பார்கள்; நீயும் கூட காட்டிக் கொடுக்கப்படுவாய் என்பதை நான் உனக்கு ஞாபகப்படுத்த என்னை அனுமதி; குறிப்பு: ஒருவனாலா. வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவராகிய நான் உனக்கு ஆதரவாக இருக்கிறேன்; என்னிடம் வந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்; என் சமாதானம் உன்னை சூழ்ந்து கொள்வதாக, வா, எல்லா அதிகாரமும் என்னிடமிருந்தே வருகிறது, மனிதரிடமிருந்து அல்ல; நீ என் ஒரே அதிகாரத்திற்கு கீழ்பட்டிருக்கிறாய்; என் இறைவா, உம்முடைய ஆதரவை எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி. சாட்சிகளையும் எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி. நான் இதற்கு மேல் என் குரலை உயர்த்த மாட்டேன். "என்னைக் கொண்டு உமக்கு விருப்பமானதை செய்யும். எனக்கு நீர் இன்பங்களை தந்தாலும் சரி, அல்லது துன்பங்களை தந்தாலும் சரி, நான் ஒரே விதமாக உமக்கு நன்றி கூறுவேன். நான் வீசேறியப்பட நீர் விரும்பினால், நான் வீசேறியப்படுவேனாக. நீர் என்னை அனைத்து சீராட்ட விரும்பினால், நான் அதற்கு தகுதியானவள் அல்ல. உம் இருதயம் எதை அதிகமாக விரும்புகிறதோ, அதைச் செய்யும். நான் உம்முடையவள்" என்ற என் வார்த்தைகளை நான் காப்பாற்றுவேன். சரி,என் வார்த்தைகளை நான் உன்னில் ஆழமாகப் பதிக்கும்படி, இளகியவளாகவே இரு; என் பிரசன்னத்தையும் என் அன்பையும் நினைவில் வைத்திரு; அக்டோபர் 22, 1987 பின்னிரவு 2:30 மணிக்கு தாகத்தால் காய்ந்து வறண்டு போன வாயோடும் உதடுகளோடும் நான் படுக்கை விட்டு எழுந்தேன், இயேசு என்னிடம், "இப்போது எழுந்து தண்ணீர் குடி, இரண்டு நாட்கள் முடிந்துவிட்டன" என்றார். நான் போய் கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். அதிகமாக அல்ல. ஏனெனில் என்னால் அதிகம் குடிக்க முடியவில்லை. காலையில் என் ஆத்துமம் கற்பனைக்கு அப்பாற்பட்ட துக்கத்தோடு அவருக்காக ஏங்கியது. அவருடைய வீட்டில் வாழ்பவர்களிடையே இருக்கக்கூடிய சலுகையை எனக்கு தர மறுத்து, அவர் ஏன் என்னை எழுப்பிவிட்டார்? அவர்கள் மட்டும் தங்கள் சலுகையை அறிந்திருந்தார்கள் என்றால், அந்த ஆசையை என்னில் புகுத்திவிட்டு உள்ளே நுழைய விடாமலும், அவருடைய சமாதானத்தால் சூழப்படாமலும் தடுத்து, அதற்குப் பதிலாக, நான் பரதேசத்திலும், இவ்வளவு அதிக சோதனைக்கு மத்தியிலும் இருக்கும்படி செய்தார்.... ஓ மகளே! என் ஆன்மாவின் ஆசீர் பெற்றவளே, என் இருதயத்தின் ஆசீர் பெற்றவளே, எனக்குள் இருந்து என் வேதனையும் வெளியே கசிகிறது; ஆனால் வசுலா, நீ மனுக்குலத்தின் மத்தியில் தங்கியிருந்து, அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றே நான் உன்னைப் படைத்தேன்; பிரியம், பைத்தியமாக மாறும் அளவுக்கு, வார்த்தை கெட்டாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, வார்த்தைகளுக்கு எட்டாத இழி நிலையில் இருப்பவளே, நேசமே, உன்னைப் பலியாக்கு; இழி நிலைக்கு மத்தியிலும், கடவுளற்ற மக்களுக்கு மத்தியிலும் இரு, ஏனெனில் நீ என் வலையாக இருக்க வேண்டியுள்ளது; உன் பரிசுத்தப் பிதா, உன் மீன்பாட்டில் அக்களிக்கட்டும்; என் இருதயம் இந்த முறை மகிழ்ச்சியால் நிரம்பட்டும்; ஆன்மாக்களை என்னிடம் ஈர்த்துவா; உன் கண்ணீர்த் துளிகளைப் பத்திரப்படுத்து; ஏனெனில் என் தாயைப் பற்றி சொல்லப்படுகிற அசுத்த நிந்தைகளை உன் காதுகள் கேட்கிறபோது, கண்ணீர் எதுவும் மீதம் இருக்காது! இயேசுவே, அவர்களுடைய நாவுகள் நிந்தை, அவமானங்களைப் பேச வரும்போது, அவை அவற்றை உச்சரிக்க அனுமதிக்காதிரும். வசுலா, ஆண்டவராகிய நான் அவர்களை மன்னிப்பேன், ஏனெனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது; ஆண்டவரே, அவர்கள் எப்போதாவது அறிந்து கொள்வார்களா? ஒருவேளை அவர்கள் செவி மடுப்பார்கள் என்றால், அறிந்து கொள்வார்கள், ஒவ்வொரு படைப்பும் அறிந்து கொள்ளும்; உன் மனதில் உள்ள கேள்விக்கு என்னை பதில் சொல்லவிடு; ஆனால் ஆண்டவரே, "ஒருவேளை..... என்றால்" என்று நீர் சொல்கிறீர், செவி மடுக்காதவர்கள் சிலர் இருப்பார்கள் என்பதுதான் அதன் அர்த்தம். நான் வெகுவாகத் துக்கப்படும்படி, தங்கள் செவிகளை மூடிக்கொள்ளும் சிலர் இருப்பார்கள்! கேட்க மறுப்பவர்கள் இந்த முறை தப்புவிக்கப்பட மாட்டார்கள்; வா, எழுந்து என்னைப் பின் செல்; குறிப்பு: இயேசு எனக்கு பக்கத்தில் நின்று கொண்டு என்னை எழுந்திருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார். அக்டோபர் 23,1987 பரிசேயர்கள் இயேசுவை ஒருபோதும் விசுவசிக்காமல் இருந்தபோது, இயேசு எப்படி உணர்ந்திருக்க வேண்டும் என்றும், தாம் உண்மையாகவே கடவுளுடைய திருக்குமாரனாக இருப்பதை அவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளச் செய்வது, அவருக்கு எவ்வளவு கடினமானதாக இருந்திருக்க வேண்டும் என்றும், இன்று காலையில் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் அவர்களால் எவ்வளவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். அவர்களது காலத்தில் அது சாத்தியமாய் இருந்தது என்பதை புரிந்து கொள்வது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது; இப்படிப்பட்ட ஒரு புதுமையை அவர்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொண்டிருக்கவோ, ஏற்றுக் கொண்டிருக்கவோ முடியாது. இப்போது மட்டும் எத்தனை பேர் என் செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்கிறார்கள், அல்லது அதை நம்புகிறார்கள்? நம்பாதவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள், நம்புகிறவர்கள் ஒரு சிலரே. என் செய்தியைக் கேட்டு நம்பி முழுமையாகப் புரிந்து கொண்டவர்களில் யாருடைய எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறது, என் ஆடுகளின் எண்ணிக்கையா அல்லது என் ஆட்டுக்குட்டிகளின் எண்ணிக்கையா? இங்கே ஆடுகள் என்பது குருநிலையினரையும், ஆட்டுக்குட்டிகள் என்பது பொதுநிலையினரையும் குறிக்கிறது. யார் கேட்பதற்கு அதிக சித்தமாய் இருக்கிறார்கள்? உம் ஆட்டுக்குட்டிகள் அதிக சித்தமாய் இருக்கிறார்கள் என்று எனக்குக் கிடைத்த தற்போதைய அனுபவத்தின்படி நான் கண்டுபிடிக்கிறேன். இன்று நேற்றைப் போலவே இருக்கிறது; மகளே, காலங்கள் மாறிவிடவில்லை; இன்று என்பது நேற்றைப் போல இருக்கிறது; நான் பூமியின் மீது உடலோடு இருந்தபோது, சிலர் இன்னொரு இறைவாக்கினர் என்று என்னை விசுவசித்தார்கள், மிகச்சிலரே, நான் மெசையா என்று விசுவசித்தார்கள்; பரிசேயர்கள் நான் இப்படிச் சொன்னதைக் கேட்டபோது, அவர்கள் அதை தேவ நிந்தை என்று சொல்லி என்னைக் கல்லால் எறிந்து கொள்ள விரைந்தார்கள்; வசுலா, மக்கள் எதை விசுவசிக்கிறார்கள் என்பதைப் பற்றி நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்? நீ என்னிடமிருந்து வருகிறாய், இன்று நான் உன்னை என் சமாதானம் மற்றும் அன்பின் தூதராக அனுப்புகிறேன்; நான் என் திருச்சபையை ஒன்றுபடுத்த வருகிறேன்; ஆனால் இன்று நேற்றைப் போலவே இருந்து கொண்டிருக்கிறது; அதிகாரிகள் குழப்பமடைவார்கள் என்பதை நான் உனக்குச் சொல்லவிடு; இந்தச் செய்தி நேரடியாக என்னிடமிருந்து இறங்குகிறது என்பதை முழுவதுமாக நம்ப மறுப்பார்கள், சிலர் உன்னை ஏளனம் செய்வார்கள்; அவர்கள் உன்னை நுணுக்கமாக ஆராய்வார்கள், மற்றவர்கள் உன் தரப்பு வாதத்தைக் கூற, உனக்கு ஒரு நிமிடம் கூட ஒதுக்க மாட்டார்கள், சிலர் என் செய்தியைத் தவறாக புரிந்து கொள்வார்கள், ஏனெனில் இது மீண்டும் அவர்களது ஞானத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது; இதோ, நான் என் இருதயத்தை என் கரத்தில் ஏந்தி, அதைக் கையளித்தபடி, பூரண இரக்கமுள்ளவராக வருகிறேன்; பலவீனமானவளும், இழிந்தவளுமாகிய உன்னை என் கருவியாக பயன்படுத்தி, பூமியின் மீது இறங்கி வரவும், உங்களை ஒன்றுபடுத்தவும், உன் வழியாக என்னை வெளிப்படுத்துகிறேன்; ஆனால் நான் உண்மையாகவே உனக்கு சொல்கிறேன், அவர்கள் மட்டும் முழுவதும் என்னிடமிருந்து வரும் என் நேசத்திற்குரிய ஜோஹானசின் அகத்தூண்டுதலுக்குள் உற்றுப் பார்த்திருப்பார்கள் என்றால், குறிப்பு: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் ஒரு புதுப்பித்தல் நிகழக்கூடிய ஒரு இரண்டாவது பெந்தேகோஸ்துக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். கடவுளின் படைப்பின் புதுப்பித்தல், கடவுளின் திருச்சபையின் புதுப்பித்தல், திருச்சபை ஒருமைப்பாட்டை பிறப்பிக்கும்படியான ஒரு உயிர்ப்பித்தல். நேரம் அண்மையில் உள்ளதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்; அவருடைய வார்த்தைகளைத் தேடி இருப்பார்கள், ஏனெனில் அவரால் சொல்லப்பட்ட ஒவ்வொரு இறைவாக்கும் உண்மையில் என்னிடமிருந்தே வருகிறது; சிறியவளே, நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதை அவர்கள் எல்லோரும் காணட்டும்; என் கடவுளே, நேச தந்தாய், நான் சில நேரங்களில் எல்லா மறுதலிப்புகளையும், பரியாசங்களையும், செவிட்டுத் தன்மையையும், நிராகரிப்புகளையும் எதிர்கொள்ளப் பயப்படுகிறேன். ஏனெனில் இது உண்மையாகவே நீர்தான் என்று நான் உண்மையாக நம்புகிறேன். உமது மட்டற்ற இரக்கம் மற்றும் அன்பின் காரணமாக, நீர் எங்களிடம் மீண்டும் இறங்கி வந்து, எங்களை ஒன்றுபடுத்தும்படி எங்களுக்கு உதவி செய்கிறீர். எங்களை இரட்சிப்பதற்காக, உம் திருச்சபையை புதுப்பிப்பதற்காக என்று இவர்கள் உண்மையாகவே உணர்ந்தால், எவ்வளவோ களிகூருவார்கள். என் மீதமே, அஞ்சாதே; அவர்கள் உன்னை ஏளனம் செய்கிறார்கள் என்றால், என்னையே அவர்கள் ஏளனம் செய்வார்கள்; உன்னை அவர்கள் மறுதலிக்கிறார்கள் என்றால், என்னையே மறுதலிக்கிறார்கள்; அவர்கள் உனக்கு செய்வதெல்லாம், எனக்கே செய்து கொண்டிருப்பார்கள்; குறிப்பு: என் எல்லாத் துயரங்களையும், கடும் வேதனைகளையும் கடவுள் பகிர்ந்து கொள்கிறார் என்று அவர் எனக்கு நினைவுபடுத்துகிறார். இது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. நீ பகுத்துணர்வதைப், பகுத்துணர்வதில் உன் ஆத்துமம் மகிழ்ச்சியாய் இருக்கிறது, ஏனெனில் என் கண்களில் பெரும் மதிப்புள்ளவர்களாக இருந்த பல ஆத்துமங்கள், நீ பகுத்துணர்ந்ததைப், பகுத்துணர விரும்பியும், ஒருபோதும் இயலாதிருந்தார்கள்; நீ கேட்பதைக் கேட்க விரும்பியும், நீ உணர்வதை உணர விரும்பியும், ஒருபோதும் அதைக் கேட்காமலும், அதை உணராமலும் இருந்தார்கள்; வசுலா, உன் மீது என் வரப்பிரசாதம் தங்கியிருக்கிறது; பிதாவே, அனைவரிலும் அதிக ஈனமான உம்முடைய படைப்பை கண்ணோக்கி, என் மீது அந்த எல்லா வரப்பிரசாதங்களையும் பொழிந்ததற்காக, நான் உம்மை வாழ்த்துகிறேன், என் மீது ஒளிவீசி, பிரகாசிப்பதற்காக, எல்லாம் வல்ல கடவுளுக்கு மகிமை உண்டாவதாக, எனக்கு நெருக்கமாகவே இருந்துகொள்; ஏனெனில் நீ இன்னும் பல துன்ப சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்; நாங்கள், நாம்; ஆம், ஆண்டவரே, நாம், நாங்கள்.