வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 70. மே 19, 1988 ஆண்டவரே, உம்முடைய சமாதானம் மற்றும் அன்பின் செய்தி, லூருது மற்றும் பாத்திமா செய்திகளைப் போல மனம் திரும்பி தவம் செய்வதற்கான ஒரு நினைவூட்டுதலாக இருக்கிறது என்பதுதான் திருச்சபையின் அதிகாரிகள் அதற்குச் செவி கொடுக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம், இந்தச் செய்திக்குள் செல்லவும் அவர்கள் தாங்கள் கடமைப்பட்டவர்களாக உணராமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும், அவர்களுக்கு வேலைப்பளு இருக்கிறது. இது ஒரு வெறும் நினைவூட்டுதலாக இல்லை என்றாலும் கூட, இது ஒன்றிப்பிற்கும், இரஷ்யாவின் மனம் திரும்புதலுக்கும், இராயப்பரின் ஆசனத்திற்கும் உரிய செய்தியாக இருக்கிறது. வசுலா, நான் வார்த்தையானவர், நித்திய வார்த்தையானவர், என் வார்த்தை நித்திய வாழ்வாக இருக்கிறது; நான் பல்வேறு கருவிகளின் வழியாக ஒவ்வொரு நாளும் என் நேசத்தைப் பற்றி என் படைப்புக்கு நினைவுபடுத்தவும், மனந்திரும்பி தவம் செய்யும்படி உங்களை அழைக்கவும் தீர்மானிக்கிறேன் என்றால், என்னால் பேசப்படும் வார்த்தைகளில் எதையும் மறுத்துத் தள்ள தூசியும் சாம்பலுமாய் இருக்கிற எந்த ஒரு சிருஷ்டிக்கும் அதிகாரமில்லை; ஆண்டவராகிய நான், உன் தேவைகளை அறிந்திருக்கிறேன்; உன் மீது என் இரக்கம் பெரிதாக இருக்கிறது! குறிப்பு: நம் ஆண்டவர் இந்த வாக்கியத்தை நிஜமாகவே மிக மிக அதிகமாக வலியுறுத்திக் கூறினார்! வா, என் பிரசன்னத்தை உணர்ந்து பார்; சரி, ஆண்டவரே. நாங்கள், நாம்; மே 24, 1988 ஆண்டவரே! நான்தான்; தாகமாயிருப்பவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள், வாருங்கள்! வந்து பருகுங்கள்! நான் ஒருநாளும் வற்றிப் போகாத என் கிணற்றிலிருந்து முடிவில்லாத தண்ணீரைக் கொண்டு உங்களை நிரப்புவேன்; குறிப்பு: இயேசு சற்று இடைவிடை விட்டபின் என்னை உற்றுநோக்கினார். வசுலா, என்னை அலட்சியம் செய்யாதே! நான் முழு பிரமாணிக்கம் உள்ளவன்; என் அருகிலிரு; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, ஆம், புனித மாமரியே. ஆண்டவரே, உமக்கு நன்றி. உம் திருப்பெயர் வாழ்த்தப்படுவதாக. ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! மே 25, 1988 இன்று காலையில் நான் மிக அதிக வேலை பரபரப்பில் இருந்தேன். ஆண்டவரைப் பகுத்தறிவதும், சேர்ந்து பேசுவதும் சற்று சிரமமாக இருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு, நான் என் மதிய உணவை உண்பதற்காக வராதாவில் உட்கார்ந்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஆண்டவர் என்னோடு மேசை அருகில் அமர்ந்திருப்பதையும், நான் சாப்பிடுவதை அவர் கவனித்துக் கொண்டிருப்பதையும் நான் திடீரென்று என் அந்தரங்கக் கண்களால் பார்த்தேன். "இது நன்றாக இருக்கிறதா?" என்று அவர் கேட்டார். "ஆம், ஆண்டவரே, நன்றாக இருக்கிறது, ஆண்டவரே, உமக்கு நன்றி" என்று நான் சொன்னேன். அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது. அதன்பின் அவர் என்னிடம், "உன் உணவை நான் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?" என்று கேட்டார். "ஆம், ஆண்டவரே, ஆசீர்வதியும்" என்று பதில் கூறினேன். ஆகவே, இயேசு என் உணவை ஆசீர்வதித்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரையில் அவர் என்னோடு தங்கியிருந்தார். அதன்பின் அந்த உணவுக்காக நான் அவருக்கு நன்றி கூறினேன். நான் சாப்பிடுவதற்கு முன் என் உணவை ஆசீர்வதிக்கும்படி என்னால் அவரிடம் கேட்க முடியும் என்று எனக்குக் காட்டியதற்காக இந்த நன்றி. அன்புக்குரியவளே, என் ஆசீர்வாதங்களைக் கேட்க முயற்சியெடு; நான் உன் உணவை ஆசீர்வதிப்பேன்; சரி, ஆண்டவரே, எனக்குக் கற்பித்ததற்காக உமக்கு நன்றி. வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; நான் இறுதி வரையில் உன் பரலோக போதகராக இருப்பேன்; இயேசுவே, ஆண்டவரே, உமக்கு நன்றி. நான் புனித பிரான்சிஸிடம் மன்றாடினேன்; அவரிடம் ஜெபித்தேன். நான் அவரிடம் ஜெபிக்கும்போது, அவர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா? எதுவும் கேட்கப்படாமல் போவதில்லை; அனைத்தும் விண்ணகத்தில் கேட்கப்படுகிறது; உன் ஜெபத்தை அவர் கேட்டிருக்கிறார்; புனித பிரான்சிஸ் உன் பக்கத்தில் இருக்கிறார்; வா, நாங்கள், நாம்? ஆம், என் இறைவா, ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக. மே 31, 1988 இயேசுவா? நான்தான்; பரிசுத்த ஜெபமாலை நன்கு சொல்லப்பட்டது; ஆண்டவரே! பரிசுத்த அன்னையே, எனக்குக் கற்பித்ததற்காக உங்களுக்கு நன்றி. நான் வழக்கமான மூன்று ஜெபங்களையும், ஒரு முழு ஜெபமாலையையும் ஜெபித்தேன். இந்த முறை அதை நான் ஜெபித்து முடித்துவிட்டேன். இந்நாட்களில் பரிசுத்த ஜெபமாலை ஜெபிக்க உன் நேரத்தை அர்ப்பணி; சரி, ஆண்டவரே? நான் கேபிரியேலின் வீட்டிற்குக் கூட்டிவரும் பணி, ஹோம் பிரிங்கிங் மிஷன் என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது புனித மாமரியையோ, அல்லது பரிசுத்த ஜெபமாலையையோ குறிப்பிடவில்லை. வசுலா, தவறாக வழிநடத்துகிற தீப்பந்தம் என்று ஆண்டவராகிய நான் அழைப்பது இதைத்தான் என்பது அறியப்பட்டிருப்பதாக; இந்தப் பிரிவுகளுக்காக ஜெபி; ஆண்டவராகிய நான் என் தலையிலிருந்து என் திருவுடல் பிரிக்கப்பட்டிருப்பதை அனுமதிக்க மாட்டேன், மகளே, நான் உனக்குச் சொல்லிக் கொண்டிருந்த வேர்கள் இல்லாத மிதக்கும் அரசுகள் இவைதான்; நான் இப்போது உனக்கு ஒரு பிரிவைப் பற்றிய சாட்சியத்தைத் தந்திருக்கிறேன்; என் பரிசுத்த இதயம் எப்படி உணர்கிறது என்பதை உனக்குச் சொல்லத் தேவையில்லை; வசுலா, என் பரிசுத்த இதயத்தை உன்னை ஒருபோதும் கைவிடாத இந்த இதயத்தைப் பற்றித் தியானி; நான் இறுதிவரை உன் பரிசுத்த போதகராக இருப்பேன்; என் கரத்தை விட்டுவிடாதே; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. நாங்கள், நாம்? ஆம், புனித மாமரியே, கடவுளுக்கு மகிமை உண்டாவதாக. ஜூன் 1, 1988 பரலோகத்தில் இருக்கிற நம் பிதாவைப் பற்றி ஒரு கிரேக்க இளம்பெண்ணிடம் மீண்டும் பேசிக் கொண்டிருக்கையில், 'அப்பா' என்ற வார்த்தை மீண்டும் என் வாயில் வந்தது, கிரேக்க மொழியில்: 'ஓ, பாபாஸ்'. வசுலா, என்னை பாபா, அதாவது அப்பா என்று அழை; அன்போடு இந்த வார்த்தையை, அழைப்பின் இந்த வடிவத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்; நான் உன் பரலோக பிதாவாக இருக்கிறேன்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, என்றென்றும். ஜூன் 2, 1988 இறைவனின் நாள். நான் இப்போது மூன்றாவது தடவையாக முழு ஜெபமாலை ஜெபித்தேன், நாம் ஜெபிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிற மூன்று ஜெபங்களையும் தான். ஆண்டவரா? நான்தான்; என் வசுலா, நிலையாய் இருப்பதன் மூலம், பசாசு பலவீனமடைகிறது; குறிப்பு: பரிசுத்த ஜெபமாலை ஜெபிப்பதன் மூலமும், புனித மாமரி இயேசுவின் சித்தத்திற்குக் கீழ்படிவதன் மூலமும் அவர்களை மகிழ்விக்க கடுமையாக முயல்வது. தீமை நலிவடைகிறது; பரிசுத்த ஜெபமாலையைக் கற்றுக்கொள், என் திருச்சபையை அழகுபடுத்து; பரிசுத்த ஜெபமாலையை ஜெபிக்காத ஆர்த்தடாக்ஸ் சபையினரும், புரொட்டஸ்டன்ட் சபையினரும், மற்ற சபையினரும் அதைக் கற்றுக்கொண்டு, அதன் மூலம் பரிசுத்த திருச்சபையை வளப்படுத்தி, பசாசை அப்புறப்படுத்தி, அதை நசுக்கிவிட வேண்டும் என்று ஆண்டவர் இந்த வார்த்தைகளால் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்; பிரமாணிக்கமின்மையாலும், கீழ்படியாமையாலும், திருச்சபையில் ஊடுருவி இருக்கிற தப்பறையும், விசுவாச மறுதலிப்பும் குறைந்து போகும். ஆம், வசுலா, அன்பு அதிகரிக்கும், தீமை குறையும்; இது என்னால் சொல்லப்படவில்லை என்று சொல்லி வாதிடுபவர்களுக்காக, குறிப்பு: ஜெபமாலை ஜெபிக்கக் கற்றுக்கொள்வது. அவர்களுடைய வாதம் எவ்வளவு அர்த்தமற்றதாக இருக்கிறது என்று நான் உனக்குக் காட்டுவேன்; அவர்களுடைய பக்தியார்வம் தவறாக வழிநடத்தப்படுகிறது, அவர்கள் என் நீதியைக் காண்பதாகத் தோன்றவில்லை; தங்கள் சொந்தக் கருத்துக்களை மட்டுமே அவர்கள் அறிவிக்கிறார்கள்; என்னை மறுதலிக்க அவர்கள் தயாராய் இருப்பார்கள்; குறிப்பு: இதில் கடவுளால் எழுதப்பட்டுள்ள பல காரியங்கள் தங்களுக்குப் பொருந்தவில்லை என்பதால், இந்த எழுத்துக்கள் கடவுளிடமிருந்து வரவில்லை என்று அறிவிப்பது. என்னை வெளிப்படுத்த நான் தேர்ந்து கொண்ட பரிதாபத்திற்குரிய கருவியால் வியப்படைந்து, நீ என்னிடமிருந்து வரவில்லை என்று அவர்கள் உன்னை மறுதலிப்பார்கள்; பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்; வேதாகமம் சொல்கிறது: என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டடைந்தார்கள்; என்னை ஆலோசிக்காதவர்களுக்கு நான் என்னை வெளிப்படுத்தினேன்; குறிப்பு: இசையாஸ் 65 ஆம் அதிகாரம் ஒன்றாம் வசனம். ஆகவே, ஆண்டவராகிய நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மனதை அல்ல, உங்கள் இதயங்களைத் திறங்கள்! என் பரிசுத்த இதயத்தின் வசுலா, நான் உன்னிடம் இரகசியமாய்ச் சொல்வதை நீ கேட்டிருக்கிறாய், குறிப்பு: இரண்டு இரவுகளுக்கு முன், நான் பரிசுத்த வேதாகமத்தில் ஒன்று மற்றும் இரண்டு திமோத்தேயு திருமுகங்களை வாசிக்க வேண்டும் என்று என் காதில் கிசுகிசுப்பாகக் கூறினார். உன் காலத்தின் கடைசி நாட்களுக்கென்று முன்னுரைக்கப்பட்டிருக்கின்ற எல்லாவற்றையும் ஒன்று மற்றும் இரண்டு திமோத்தேயு திருமுகங்களில் நான் உனக்கு காட்ட விரும்புகிறேன்; என் படைப்பு தரம் தாழ்ந்து விட்டது; அது சோதோமியர்களை விடக் கீழான நிலைக்குள் விழுந்துவிட்டது; இருள் சாத்தானால் அனுப்பப்பட்ட ஒரு ஆபத்தான மூடுதுகிலைப் போல அவர்கள் மீது வந்தது; சாத்தான் பல கள்ளப் போதகர்களையும், கள்ள இறைவாக்கினர்களையும் அனுப்பி இருக்கிறான், இவர்கள் இன்று தத்துவ ஞானிகளைப் போலத் தோன்றுகிறார்கள்; உன் ஆண்டவராகிய என்னிடமிருந்து வராதப் போதகங்களைக் கற்பிக்கிறார்கள்; என் குழந்தைகள் தங்கள் அறியாமையால் குருடாக்கப்பட்டவர்களாக, சாத்தானால் விரிக்கப்பட்டுள்ள இந்த வலைகளுக்குள் விழுகிறார்கள்; திமோத்தேயுவின் பின்வரும் பகுதிகள் ஒரு எச்சரிக்கையாக பொதுவில் வாசிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: ஒன்று திமோத்தேயு அதிகாரம் நான்கு, இறைவார்த்தைகள் ஒன்று முதல் 16 முடிய, மற்றும் ஆறாம் அதிகாரம் 20 மற்றும் 21 ஆகிய வசனங்கள், மற்றும் இரண்டு திமோத்தேயு அதிகாரம் 2:14 முதல் 26 முடிய உள்ள இறைவார்த்தைகள். இந்த இறைவாக்குகள் சிறப்பாக உங்கள் காலங்களுக்கென்று கூறப்பட்டவை; அதன்பின் இரண்டு திமோத்தேயுவில் மூன்றாம் அதிகாரம் ஒன்று முதல் 17 முடிய உள்ள இறைவார்த்தைகள். இந்தப் பகுதி உங்கள் காலத்தின் நிலையை முன்னறிவிப்பதை இங்கே காணலாம்; ஏனெனில் இவை காலங்களின் முடிவுக்கு முந்திய கடைசி நாட்களாக இருக்கின்றன; ஒரு மனம் திரும்புதலுக்காக உங்கள் ஜெபங்களை நீங்கள் இரு மடங்காக்க வேண்டும் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்; மனஸ்தாபப்படுவதும், என்னிடம் திரும்பி வர விருப்பம் கொள்வதுமாகிய எந்த ஆன்மாவிற்காகவும் என் திரு இருதயம் திறந்திருக்கிறது; மலரே, என்னோடு நீ எழுதுவதற்கு முன் உண்மையின் ஆவியானவரையும் என் பிரசன்னத்தைப் பகுத்தறிதலையும் எப்போதும் தேடு; அன்பு உன்னை நேசிக்கிறது; அது உன்னை வழிநடத்தும், வா, என்னுடைய திரு இருதயத்தில் இளைப்பாறு; நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்; நாங்கள், நாம்? நாங்கள், நாம். ஆம், ஆண்டவரே. ஆம், பரிசுத்த அன்னையே. ஜூன் 3, 1988 என் ஆண்டவரா. நான்தான்; வசுலா, ஒருபோதும் அதைரியப்படாதே; மிகப் பிரியமான ஆன்மாவே, நான் உன் மீது கொண்டுள்ள அன்பை நினைவில் கொள்; நான் உன் பலவீனத்தோடு உன்னை நேசிக்கிறேன்; நீ உடையக்கூடியவளாக இருக்கிறாய்; என் ஆவியானவர் உன்னை வழிநடத்த, அவரை அனுமதி; என்னில் என் பலத்தில் அழிந்து போ; என்னில் கரைந்து போ, இந்த முழு பணியும் என்னால் செய்யப்படுகிறது என்று அவர்கள் காணும்படியாக, எல்லாவற்றையும் நானே செய்ய என்னை அனுமதி; நீ வெறுமையாய் இருக்கிறாய்; வெறுமையாகவே இருந்து கொள், என் ஆவியானவர் உன்னில் வளர அவருக்கு இடம் கொடு; ஆம், ஒன்றுமில்லாமைக்குள் நான் என் உயிர் மூச்சை ஊதுவேனாக; உங்கள் எல்லோரையும் இரட்சிக்கவும், உங்களை ஒன்றிணைக்கவும், இந்த முறையில் உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; சரி, ஆண்டவரே. மலரே, இந்நாட்களில் போலியான வெளிப்பாடுகள், போலிக் கொள்கைகள் மற்றும் போலிக் காட்சிகளிலிருந்து உண்மையான வெளிப்பாடுகளையும் காட்சிகளையும் பிரித்தறிவதற்கு நான் உனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறேன்; போலியானது எல்லாம் சாத்தானிடமிருந்தே வருகிறது; பெஸ்கராவில் நடந்தது போல, அவன் சத்தியத்தைக் கறைப்படுத்தும்படி குழப்பத்தின் விதைகளை விதைக்கிறான்; குறிப்பு: நிறைவேறாத போலியான காட்சிகளும், போலியான முன்னுரைத்தல்களும். அவன் கோதுமை மத்தியில் களைகளை விதைத்து, உங்கள் எல்லோரையும் குழப்புகிறான்; மெத்தியூகோரியே காட்சிகளால் கடும் கோபம் கொண்டு, அவன் உங்கள் எல்லோரையும் குழப்பவும், இந்தத் தெய்வீக வேலைகள் என்னிடமிருந்து வந்தவை அல்ல என்று முத்திரையிடவும் முயல்கிறான்; மகளே, என் திருச்சபையில் ஒரு பிரிவினையைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதும், இராயப்பரை மறுதலிப்பதும், உன் பரிசுத்த மாதாவை மறுதலிப்பதுமாகிய ஒரு வெளிப்பாட்டை நீ வாசிக்கும் போது, அது உன் தேவனாகிய ஆண்டவராகிய என்னிடமிருந்து வரவில்லை என்பதை அறிந்துகொள், அவை முடிந்தவரை உங்களைப் பிரிப்பதற்கான தனது திட்டத்தை நிறைவேற்றும்படி என் உருவத்தை எடுத்துக்கொண்டு காட்சி அளிக்கிற என் எதிரியிடமிருந்து வருகின்றன; ஆண்டவராகிய நான் என் ஆடுகள் சிதறடிக்கப்படுவதை விரும்புவதில்லை; நீங்கள் எல்லோரும் இராயப்பரின் கீழ் ஒரே மந்தையாக இணைந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நீங்கள் எல்லோரும் ஒன்று கூட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; ஆண்டவரும், உங்கள் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவாகிய நான், என் இரண்டாம் வருகை வரையிலும் என் ஆட்டுக்குட்டிகளையும், ஆடுகளையும் மேய்க்கும்படியாகவும், அவற்றைப் பாதுகாக்கும் படியாகவும், இராயப்பனைத் தேர்ந்தெடுத்தேன்; இன்று இந்த இராயப்பனாக இருப்பவர் இரண்டாம் அருள் சின்னப்பர்; தேவ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேளுங்கள்; வசுலா, தன் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான், இதன் காரணமாக, அந்தச் சிவந்த பறவை நாகம் தன்னால் முடிந்தவரை அதிகமாக ஆன்மாக்களைத் தன்னோடு இழுத்துக் கீழே தள்ள முயல்கிறான்; அவன் பல மனங்களுக்குள், ஆன்மீகத்தாலும், பரிசுத்தத்தனத்தாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டிய அந்த மனங்களுக்குள், அவன் எல்லா வகையான தவறான வழிகளையும் அறிமுகப்படுத்தி, உண்மையிலிருந்தும், பரிசுத்தமான எல்லாவற்றிலிருந்தும் உங்களை விலக்கிவிட்டான்; என் அன்பர்களே, உங்களைச் சுற்றிலும் பாருங்கள்; நீங்கள் புரிந்து கொள்வீர்கள்; குழந்தைகளே, இந்தத் தவறான வழிகள் எல்லாம் உங்கள் ஆவியை நிரப்பி, பரிசுத்தமானது எதற்கும் அங்கே இடமிராமல் செய்யும்படியாக, சோதோம் கொமோரா காலங்களில் இருந்தது போல, அவை உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன; உங்கள் சிருஷ்டிகரும், கடவுளுமாகிய எனக்கு அங்கே இடமில்லாமல் போகும்படி அவை செய்துவிட்டன; ஆம், என் வசுலா, நான் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்; குறிப்பு: ஆண்டவர் மிகவும் சோகமாக இருந்தார்; என்னால் சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சோகமாக என்பது போதுமான வார்த்தை அல்ல. நான் மறக்கப்பட்டுவிட்டதாகவும், நேசிக்கப்படாமல் இருப்பதாகவும் உணர்கிறேன்; உங்கள் மீது கொண்ட அன்பிற்காக, சிலுவையின் மீது மரித்தவராகிய நான்; அன்பின் ஆவியாகிய நான், அவர்கள் என்னை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தாயா? இது எனக்குத் தகுதியானதா? என் தேவனே, நான் எனக்குள் நொறுக்கப்படுவதாக உணர்கிறேன். ஆண்டவரே, இது ஏன் இப்படி இருக்கிறது? ஆண்டவரே, ஓ ஆண்டவரே, தயவுசெய்து ஒரு புதுமையைச் செய்யும். நான் புதுமைகளைக் கேட்கக்கூடாது, என்றாலும் நான் உம்மை நேசிக்கிறேன், இதற்கு மேலும் நீர் காயப்படுவதைக் காண நான் விரும்பவில்லை. வசுலா, ஜெபி, ஜெபி, இந்த மனம் திரும்புதலுக்காக ஜெபி; சாத்தான் படுக்குழிக்குத் தன்னோடு உங்களை இழுத்துச் செல்லும்படி, என் படைப்பின் மீது தன் வேலைகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறான்; ஓ, படைப்பே! நீ எவ்வளவு பலவீனமாக இருக்கிறாய், நீ எவ்வளவு பயங்கர பலவீனமாக இருக்கிறாய்! திவ்விய நற்கருணையை மறுதலித்து, அதை வெறும் சடங்கு என்று அழைக்கிற, குறிப்பு: பலர் அதை வெறும் அடையாளம் என்று அழைக்கிறார்கள், அவர்கள் பரிசுத்த நற்கருணையில் இயேசுவின் உண்மை பிரசன்னத்தை விசுவாசிப்பதில்லை. அல்லது உங்கள் பரிசுத்த அன்னையின் மாசற்ற இதயத்தை மறுதலிக்கிற எந்த ஒரு வெளிப்பாடும் என்னிடமிருந்து வருவதில்லை; ஆண்டவராகிய நான் உங்களை அளவற்ற விதமாக நேசிக்கிறேன், இந்தப் போலி இறைவாக்கினர்களுக்கு எதிராக உங்களை மீண்டும் ஒருமுறை எச்சரிக்க நான் விரும்பினேன்; ஆண்டவரே! உமக்கு நன்றி. என்னை நேசி; ஆண்டவரே, நான் உம்மை ஆராதிக்கிறேன். நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே.