வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 25. மார்ச் 17, 1987. வசுலா, இப்போது நீ என் சிலுவையைச் சுமந்து கொள்வாயா? உம் சித்தப்படி அதைச் சுமந்து கொள்கிறேன், இயேசுவே. உணர்ந்து பார், அது எவ்வளவு பாரமானது என்பதை உணர்ந்து பார்; நான் இளைப்பாற வேண்டியுள்ளது; என்னைப் பின் செல், எனக்கு இன்னும் அருகில் வா, நான் என் விலையேறப்பெற்ற சிலுவையை உன் மீது இறக்கி வைப்பேன்; அன்றைய நாளின் பிற்பகுதியில், சொல்ல முடியாத அளவு துயரத்தை நான் உணர்ந்தேன். வருத்தம் தோய்ந்த மனநிலையிலும், ஆறுதல் தேவைப்படும் நிலையில், அது கிடைக்கவில்லை என்று நான் உணர்ந்தேன். என் மிகப் பெரும் சுமையை நீ உன் மீது உணர்ந்தாய்; என் சிலுவையை ஒருபோதும் மறுக்காதே; என் சுமை பாரமாய் இருக்கிறது; வசுலா, நான் ஏன் என்னிடம் உன்னை உயர்த்துகிறேன் என்ற காரணத்தைத் தேடாதே; குறிப்பு: எனக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளும்படி கடவுள் எனக்கு நினைவுபடுத்துகிறார். நான் வந்து உன்னை விடுவிக்கும் வரையிலும், நான் விரும்புகிறதை எல்லாம் உன்னைக் கொண்டு செய்ய சுதந்திரம் உள்ளவராக என்னை விட்டுவிடு; நேசமே, உன் வழிகாட்டுதல் அதன் வேத சாட்சியத்தைக் கொண்டுள்ளது. அதில் உண்மையைக் கண்டடையத் தேடுவதாலும், அதைக் காணாததாலும், அது உன்னை மரண வேதனைக்கு உள்ளாக்குகிறது; எனக்காகத் துன்பப்படு, துன்பம் உன் ஆத்துமத்தைச் சுத்திகரிக்கிறது; எனக்கு உன்னைப் பலியாக ஒப்புக்கொடு; உண்மையைக் கண்டுபிடிக்க முயலாதே; வெறுமனே விசுவாசி; குறிப்பு: இது ஓர் உண்மையான வழிகாட்டுதல் தானா என்று கண்டுபிடிக்க நான் முயன்று கொண்டிருந்தேன். உன்னில் சுதந்திரமாக நான் செயல்படவும், உன் வழியாக என் வார்த்தையை வெளிப்படுத்தி, அதன் மூலம் என் குழந்தைகளை நான் குணப்படுத்தவும் என்னை விட்டுவிடு; என் மீட்கும் அன்பில் விசுவாசம் கொள்; என் சிலுவை பாரமானது, ஆம், அதை உன்னிடம் ஒப்படைக்க அநேக முறை வருவேன்; நீ என் மணவாளியாகவும், என் நேசமாகவும், என் மலராகவும் இருக்கிறாய்; அதை எனக்காகச் சுமப்பதன் மூலம் நீ எனக்கு இளைப்பாற்றியைத் தருகிறாய்; உன்னிடம் ஊதும் என் வெளிப்பாடுகளுக்குள், என் ஆன்மாவின் ஆழத்திலிருந்து வெளிப்படும் துயரங்கள், வேதனைகள், மற்றும் துன்பங்கள் ஆகியவற்றின் மிகக் கசப்பான பாடுகள் இருக்கின்றன; வந்து, மேலும் ஒரு தடவை, என் இருதயம் சொல்வதைக் கவனித்து கேள், அது எப்படி கிழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து பார்; அது எப்படி உங்கள் எல்லோரையும் தேடுகிறது என்று உணர்வாயாக! பின்பு, இதற்கு மேல் அவரால் தாங்க முடியாத நிலையில், துயரம் நிறைந்த ஆன்மாவிலிருந்து, அதன் ஆழத்திலிருந்து, துயரத்தால் மரிப்பது போன்ற கதறல் வெளிவந்தது. படைப்பே, என் பிதா தம் சொந்தக் கரத்தால் படைத்த படைப்பே! ஏன், ஏன் நீ எனக்கு இவ்வளவு அதிகமான துயரத்தைத் தருகிறாய்? அதன்பின் அவர் என்னிடம் திரும்பினார். தமது முகமும், பேசும் தொனியும் கடுமையாயிருக்க, அவர் இப்படிச் சொன்னார்: நான் உன்னிடம் வருவதற்கு முன், நீ எப்போதாவது என்னை நினைத்திருக்கிறாயா! என்னில் குற்ற உணர்வு. இல்லை, நான் நினைத்ததில்லை. கடுமை குறையாமல். நான் உன்னைத் தேடிக் கண்டுபிடித்திருக்கவில்லை என்றால், நீ என்னிடம் வந்திருப்பாயா? இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. இன்னும் கூடுதலான குற்ற உணர்ச்சி. இப்போது நீ என்னை நேசிக்கிறாய்; ஆம், ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன்; என் வழிகாட்டுதல் உன்னை மாற்றிவிட்டது, இல்லையா? ஆம், மாற்றிவிட்டது. குறிப்பு: அங்கே நான் ஒன்றுமில்லாமை என்று உண்மையாகவே உணர்ந்தேன். என் தகுதிகளுக்காக அவர் என்னை நெருங்கி வரவில்லை. ஏனெனில், தொடக்கத்தில் நான் கிட்டத்தட்ட அவரை நிராகரித்தேன்! நீ என் குழந்தைகளை ஒன்று கூட்டி, அவர்களை போஷிப்பாயா? நான் ஆதரவற்றவளாக உணர்ந்தேன். என் இறைவா, என்னால் எப்படி முடியும், எந்த வழியைக் கொண்டு?! நான் என் நன்றியைக் காட்டி, அவரை மகிழ்விக்க விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. வசுலா, என்னை நம்பு, நான் உன்னை வழிநடத்தவிடு; என் குழந்தைகளை நான் ஒன்று கூட்ட விடு; நீ ஆதரவற்றவள் என்பதை நான் அறிவேன்; நீ பலவீனமானவள் என்பதை நான் அறிவேன்; பார், என்னாலன்றி உன்னால் எதுவும் செய்ய முடியாது; என் செய்தியை நான் முடிக்கும் வரையிலும், என் கருவியாக உன்னைப் பயன்படுத்த நீ என்னை இப்போது அனுமதிப்பாயா? ஆம், இயேசுவே, இந்தச் செய்தி உம்மிடமிருந்து வருவதாக இருந்தால். நான் இயேசு, ஒருபோதும் சந்தேகப்படாதே; எழுதுவதில் சோர்ந்து போகாதே; என் உதடுகள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும், என் காயங்களை உனக்கு உணர வைக்கும்; நான் என் எதிரியின் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்தலத்திற்குள் என்னோடு உன்னை இழுத்துச் சென்று, ஆன்மாக்கள் எப்படித் துன்பப்படுகிறார்கள் என்று உனக்குக் காட்டுகிறேன்; குறிப்பு: அவர் எனக்கு நரகத்தைக் காட்டியபோது. என்னை ஆழமாகக் காயப்படுத்துகிற என் எல்லாத் துன்பங்களையும் நான் உன் மீது ஊற்றுகிறேன்; நீ என் குருவாக இருக்கிறாய், ஆகவே, என் குருவே, நீ என்னோடு நடப்பாய்; நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்; நாம் ஒன்று சேர்ந்து என் சிலுவையைப் பகிர்ந்து கொள்வோம்; நாம் ஒன்று சேர்ந்து துன்பப்படுவோம்; நாம் ஒன்று சேர்ந்து முயல்வோம்; நீ என்னிலும், நான் உன்னிலும் இளைப்பாறுவோம்; மார்ச் 18, 1987. என்னை நேசிக்கவும், என்னை அடையாளம் கண்டுகொள்ளவும் நான் உனக்குக் கற்பித்தேன்; என் இருதயத்தின் பரம இரகசியங்களைப் பொழிந்து, வாக்குக் கெட்டாத என் இரக்கத்தை உனக்குக் காண்பித்து, என் வெளிப்பாடுகளின் ஆதாரமாக நீ இருக்குமாறு உன்னை சுத்திகரித்து, என் வரப்பிரசாதத்தை உலகிற்குக் காட்டி, இவ்வாறு என் விண்ணகப் பணிகளை நான் உனக்குக் காட்டினேன்; உண்மையில், நான் உன் மீது என் தணியாத நேசம் முழுவதையும் உன் மீது பொழிந்து, என் குழந்தைகளை எந்த அளவுக்கு என்னால் நேசிக்க முடியும் என்று அவர்களுக்குக் காட்டினேன்; குறிப்பு: நான் ஒரு மாதிரியைப் போல் இருக்கிறேன். இருந்தாலும், அவர்களில் எஞ்சி உள்ளவர்களை விட நீ எந்த விதத்திலும் வேறுபட்டவள் இல்லை என்றும், இந்த வழிகாட்டுதலை நீ மறைத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் நான் உனக்கு நினைவுபடுத்துகிறேன்; என் செய்திப் பொழிவுகள் இந்த உலகத்தை மூட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஏனெனில் இதுவே என் சித்தம்; வசுலா, நான் விரும்புகிறபடி உன்னில் செயல்பட என்னை அனுமதி; இப்போது வந்து எனக்கு ஆறுதல் கொடு, ஆம், என்னை நேசிப்பதின் மூலம்; நான் யாவே என் மீதுதான் நீ சாய்ந்து கொண்டிருக்கிறாய்; என்னிடம் தான் நீ வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறாய்; நீ உன் ஜெபங்களில் என்னிடம் தான் மன்றாடுகிறாய்; ஆகவே, நீ வேறு யாரையும் இன்றி என்னை மட்டும் ஆராதிக்கிறாய் என்பதால், கவலைப்படாதே; குறிப்பு: இந்த எழுத்துக்கள் கடவுளிடமிருந்து வராதவையாக இருக்கலாம் என்று நான் கவலைப்படும் நேரங்களுக்காக. என் குழந்தைகள் எல்லோரும் என்னிடம் திரும்பி வரவேண்டும் என்பதே என் விருப்பம்; மகளே, இந்தச் செய்திக்காகவே நான் உன்னை வளர்த்து வந்திருக்கிறேன்; வசுலா, நீ என் வார்த்தையை நிறைவேற்றுவாயா? எனக்காக தொடர்ந்து வேலை செய்ய சித்தமாய் இருக்கிறாயா? ஆம், என் ஆண்டவரே, நீர் யாவே தான் என்று நான் அடையாளம் கண்டுகொள்ளும் போதெல்லாம். சிறியவளே, நான் யாவே! சிறியவளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; மேலும் வளர்வாயாக; எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; என் செய்தியை நான் கொடுத்து முடிக்கும் வரை, உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; சிறியவளே, உன் தந்தை யார்? இந்த கேள்வியைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டேன். நீர்தான். உலகிற்கு செய்தி. குறிப்பு: இது மார்ச் 8, 1987 அன்று தடைப்பட்ட செய்தியின் தொடர்ச்சியாகும். நான்தான்; நீ என் விதையாக இருக்கிறாய், நீ என்னுடையவள்; என் குழந்தைகள் என்னை விட்டு அகன்று போய்விட்டனர், அவர்களுடைய இதயங்கள் சுய கர்வத்தால் உறைந்து போயிருக்கின்றன, அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள்; நீங்கள் ஏன் என்னை எதிர்க்கிறீர்கள், உங்களைத் துயரப்படுத்தக்கூடிய எதை நான் செய்துவிட்டேன், உங்கள் பேரில் நான் கோபமாய் இருக்கிறேன் என்று எப்போதாவது குறிப்பால் காட்டியிருக்கிறேனா? என்னை எதிர்கொள்ள ஏன் திகிலடைகிறீர்கள்? நேசத்துக்குரியவர்களே, உங்கள் பாவங்களைப் பற்றி நான் உங்களைக் குற்றஞ்சாட்டமாட்டேன்; நான் இப்போதே உங்களை மன்னிக்கிறேன்; உங்கள் முகத்திற்கு எதிராக நான் கதவை மூடமாட்டேன்; ஒரு கோடி முறை உங்களை மன்னிக்க என்னால் முடியும் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், விரித்த கரங்களோடு நான் உங்களுக்கு முன்பாக நின்று என்னிடம் வரும்படியும், நான் உங்களுக்குத் தரவேண்டியுள்ள இந்த நேசத்தை உணருமாறும் உங்களிடம் கேட்கிறேன்; உங்கள் இதயத்தைத் தூண்டி எழுப்ப என்னை அனுமதியுங்கள்; வந்து என்னை அறிந்து கொள்ளுங்கள்; என்னை தவிர்ப்பவர்களும், எனக்குப் பயப்படுகிறவர்களும், என்னை அறியாதவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்; எனக்கு இன்னும் நெருக்கமாக வாருங்கள். அப்போது, நான் நேசமும், தயாளமும், முழு இரக்கமும் நிறைந்த தேவனாய் இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்; என்னை அறிவதற்கு முன்பே என்னைப் புறக்கணிக்காதீர்கள். நன்மை, தீமையை அறிந்து, நன்மையைத் தேர்ந்துகொள்ள தேவையான ஒரு பயனுள்ள வரப்பிரசாதத்தை என் அதியபரிதமான அன்பு உங்களுக்குத் தருகிறது; தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை நான் உங்களுக்குத் தந்திருக்கிறேன், என்றாலும் உங்களை மேன்மையுள்ள பிறவிகளாக ஆக்கக்கூடிய குணங்களையும் நான் உங்களுக்குத் தந்திருக்கிறேன்; நான் உங்களுக்குக் கொடைகளைத் தந்திருக்கிறேன்; உங்கள் மீது நான் பொழிந்திருக்கிற கொடைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் அறிவையும், இதயத்தையும் கொண்டு நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு நான் அருளச் செய்திருக்கிறேன்; என்னை ஏற்றுக்கொண்டு, என்னைப் பற்றி இன்னும் நன்றாக அறிந்து கொள்ளும்படியாக முன்னே வாருங்கள்; நேசிக்க உங்களுக்கு உதவும்படி நான் உங்கள் இதயங்களை ஒளிர்வித்திருக்கிறேன்; இந்த அருளை உங்களுக்குத் தந்திருக்கிறவர் நான்தான்; இந்த வரப்பிரசாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நான் முன்பு எப்படி இருந்தேன் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொண்டேன். ஆனால், ஆண்டவரே, சிலருக்கு உம்மை அறிந்து கொள்ளும் வாய்ப்பே கிடைக்கவில்லை, யாரும் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை, இது உண்மையில் அவர்களுடைய தவறு இல்லை, அல்லவா? ஆக, அவர்களால் எப்படி உம்மைப் பற்றி நினைக்கக்கூட முடியும்? வசுலா, நீ சொல்வது உண்மையே! மகளே, என் திருச்சபை புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது; நான் என் திருச்சபையை ஸ்திரப்படுத்த வந்திருக்கிறேன்; இல்லாவிடில், பெரும் கூட்டமான மக்கள் இழக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள்; வசுலா, என் பக்தியுள்ள மக்களுக்கு ஒரு செய்தியைத் தரும்படி நான் திரும்பி வருவேன்; என்னிடமிருந்து அகன்று சென்ற என் பிள்ளைகளைப் பற்றிய என் ஆசைகளை நான் நிறைவேற்றுவேனாக; நானே நேசத்தின் ஆதாரமாக இருக்கிறேன்; இந்த ஆதாரத்திலிருந்து சகல படைப்பையும் மூடுகிற அளவற்ற நேசம் பாய்ந்து வருகிறது; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் என் நேசத்திற்குப் பதில் நேசம் காட்டுவது மட்டுமே; நான் மிக எளிதில் கோபம் கொள்ளும் கடவுள் என்று எண்ணி உங்களில் அநேகர் அஞ்சுகிறீர்கள், அதனால் என்னை அணுக அஞ்சுகிறீர்கள்; மற்றவர்கள் நான் எட்டப்பட இயலாத தூரத்தில் இருப்பதாகவும், என் மகிமையை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டு மட்டும் இருப்பதாகவும், உங்களைப் பற்றி நான் ஒருபோதும் அக்கறை கொள்வதில்லை என்றும், என் மீது பக்தி உள்ளவர்கள் மீது மட்டும் நான் என் கண்களைத் திருப்பி உள்ளதாகவும் நம்புகிறார்கள்; இவ்வாறு எனக்குப் பிடித்தவர்களை தனிப்பட்ட விதமாக தேர்ந்துகொள்கிற ஒரு கடவுளாக என்னை அவர்கள் உருவகம் செய்து கொள்கிறார்கள்; நீங்கள் எவ்வளவு அதிக பலவீனமாகவும், அதிகம் இழிந்தவராகவும் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகமாக நான் உங்களைத் தேடுகிறேன் என்றும், உங்களை நேசிக்கிறேன் என்றும் நீங்கள் அறியவில்லையா? நான் பரிசுத்தர், ஆனாலும் உங்களோடு அன்யோனியமானவராய் ஆக நான் ஆசிக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், உங்களுடைய பரிசுத்த நண்பராக என்னை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்; ஊதாரி மகனின் உவமை உனக்குத் தெரியுமா, வசுலா? ஆம், அதில் கொஞ்சம் தெரியும். அவன் பாவம் செய்திருந்தான். ஆனாலும், அவனுடைய தந்தை அவனை எப்படி ஏற்றுக்கொண்டார்? மிகுந்த மகிழ்ச்சியுடனா? அதைவிட அதிகமாக, அவர் அவனை மிகுந்த நேசத்தோடு ஏற்றுக்கொண்டார், இந்த நிகழ்வை அவர் கொண்டாடினார்; எனக்குப் பிரியமானவர்களே, என்னை துயரப்படுத்தாதீர்கள், என்னிடம் திரும்பி வாருங்கள்; நான் உங்களை மறுதலிக்க மாட்டேன்; நான் என் அணைப்பில் உங்களை வரவேற்பேன்; பயமின்றி என்னிடம் திரும்பி வாருங்கள்;