இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 32. மே 7, 1987. நான் உன்னை நேசிக்கிறேன்; இது நான்தான், உன் மணவாளர்; என் மலரே, நான் உன்னை சுத்திகரிப்பேன், நான் தொடர்ந்து உன்னை என்னில் ஊறிப்போகச் செய்வேன்; என் ஒளியைக் கொண்டு உன்னை உயிர்ப்பிப்பேன், என் பலத்தைக் கொண்டு உன்னை உண்பிப்பேன்; வசுலா, நான் என் முள்முடியை நீ அணிய அனுமதிப்பதன் மூலம் உன்னை கௌரவப்படுத்துவேன்; இயேசுவே, நீர் எப்படி என்னை நம்ப முடியும்? நான் உன்னை நேசிக்கிறேன்; என் கிரீடத்தை அணிந்திருப்பதன் மூலம், நான் பெற்றுக்கொண்ட கேலி பரிகாசத்தை நீ புரிந்துகொள்வாய், ஏனெனில் விரைவில் நீயும் பரிகசிக்கப்படுவாய்; மறக்காதே, நீ துன்பப்படப் போகும் அளவுக்கு நானும் துன்பப்படுவேன், ஏனெனில் நான் உன்னில் இருக்கிறேன், நீ என்னில் இருக்கிறாய்; நான் உன்னோடு என்னை இணைத்திருக்கிறேன், நாம் ஒன்றாய் இருக்கிறோம்; வா, நேசமே, நாம் என் வேலைகளைத் தொடர்வோம்; நான் இறுதி வரைக்கும் போதுமான பலத்தை உனக்குத் தருவேன்; இந்தச் செய்தியில், இயேசு என்னை தயாரிக்கிறார் என்பதைப் பிற்பாடு நான் புரிந்துகொண்டேன். நான் பரிகசிக்கப்படுவேன், எள்ளி நகையாடப்படுவேன், குறைந்தபட்சம் அவர் என்னோடு இருக்கிறார். நாங்கள் ஒன்றாக இந்த ஏளனங்களைப் பகிர்ந்து கொள்வோம். என் அப்போஸ்தலத்துவத்திற்காக இந்த உலகத்தில் தள்ளிவிடப்பட்ட பிறகு, பரிகாசமும் துன்புறுத்தல்களும் ஆரம்பமாகும். இயேசுவே, "நான் உம்மை நேசிக்கிறேன்" என்று நூறு தடவைகள் கூட என்னால் சொல்ல முடியவில்லை, அதற்குள் ஓராயிரம் தடவைகள் அதைச் சொல்லும்படி என்னிடம் கேட்கிறீரே! வசுலா, ஆ, வசுலா, நேசத்துடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் என்னிடம், "நான் உம்மை நேசிக்கிறேன்" என்று சொல்கிறது என்பதை நீ அறியாயா? அந்த முறையிலும் நீ உன் நேசத்தை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கிறாய்; நீ உன் வாழ்வில் செய்யும் எல்லாவற்றையும் எனக்கே செய்வாயாக; வா, அலங்கரி! செழித்து வளரு! ஒளிவீசு! மணம் வீசு! நேசத்தின் மலர் வளையங்களால் என்னை அலங்கரி; உன் மலர் இதழ்கள் ஒவ்வொன்றும் என் முள் முடியில் உள்ள ஒரு முள்ளுக்கு மாற்றாக இருக்கட்டும்; எவ்வளவு அதிக இதழ்களோ, அவ்வளவு குறைவான முட்கள் என்னை குத்திக் கொண்டிருக்கின்றன; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை நேசி, என்னை நேசிக்க மற்றவர்களுக்குக் கற்றுக் கொடு; அவர்களுக்கு என் விண்ணப்பத்தைக் காட்டு; உம் உதவியைக் கொண்டு நான் அவர்களுக்குக் காட்டுகிறேன், என்னால் அதிகம் செய்ய இயலாது. என்னை நேசி, என் காயங்களை ஆற்று; எனக்காக சிந்தப்படுகிற கண்ணீர்த் துளிகள் என் காயங்களை ஆற்றும் தைலமாக இருக்கட்டும்; வசுலா, மலர் வளையங்கள் அடக்கச் சடங்குகளுக்காக மட்டும் செய்யப்படுவதில்லை - அவை மணவாளிகளுக்காகவும் செய்யப்படுகின்றன; ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மலர் வளையத்தை உன்மீது வைக்க என்னை அனுமதி; மே 8, 1987. இயேசுவே, இன்று எனக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கிறது, உம்மிடமிருந்து எனக்கு வரும் இரண்டு வார்த்தைகள் என்னை மகிழ்விக்கும்! இரண்டுதானா? என்னை நேசி; மே 9, 1987. 'பாத்திமா சூரியப் புதுமை' பற்றிய ஒரு செய்திப் படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, இதிலும் கூட அநேக மக்கள் சந்தேகப்படுபவர்களாக இருக்கிறார்கள் என நான் நினைத்துக் கொண்டேன். 'மனிதர்கள் ஒரு கூட்டமாக மனோவசியம் செய்யப்படுதல்' என்பது போல பலவிதமான பெயர்களில் அதை அழைக்கிறார்கள்! முற்காலங்களில் இவ்விதமான புதுமை விசுவசிக்கப்பட்டு, பரிசுத்த வேதாகமத்தில் எழுதவும் பட்டிருக்கும், ஆனால் இந்நாட்களில் இவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல ஆண்டுகளாகும். உம் செய்தியை யாரும் உம்மிடமிருந்து வந்ததாக நம்ப மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன், ஏனெனில் அதற்குத் திடமான தடையமோ அல்லது அதில் தீர்க்கதரிசனமோ இல்லை. ஒவ்வொரு உயர் அதிகாரத்திடமும் இந்த செய்தி சென்று சேர்ந்தாலும், உமது வேண்டுகோளை அவர்கள் கவனிக்கக்கூட மாட்டார்கள், உமது நீதியின் கிண்ணம் இப்போது முழுவதுமாக நிறைந்திருக்கிறது என்று நான் அறிவேன்! உலகம் உம்மை மிக அதிகமாக நோகச் செய்கிறது, ஆனாலும் அவர்கள் உமக்கு செவி கொடுக்க மாட்டார்கள். உன் கடவுளை விட உயர் அதிகாரம் ஏதும் உண்டா? இல்லை, என் கடவுளே, எதுவும் இல்லை. என்றாலும் அவர்கள் கவனிக்கவில்லை என்றால்? அவர்களில் சிலர் இது திருச்சபைக்கான ஒரு பிரச்சாரம் என்று நினைக்கலாம். நான் உயர் அதிகாரத்தில் உள்ளவர்களையும் திருச்சபைக்கு எதிரானவர்களையும் குறிப்பிடுகிறேன். இதெல்லாம் இட்டுக் கட்டப்பட்டவை என்று அவர்கள் நினைக்கக்கூடும். திருச்சபையால் இட்டுக் கட்டப்பட்டவை என்று! வசுலா, நான் மகா உன்னதர், எல்லா அதிகாரமும் என்னிடமிருந்தே வருகிறது; அவர்கள் நம்பவில்லை என்றால்? அவர்கள் தங்கள் பிடிவாதத்தின் காரணமாக கவனிக்க மாட்டார்கள் என்றால் என்ன நடக்கும் என்று நான் எழுத மாட்டேன்; நீ எனக்கு பயப்படுகிறாயா, சிறியவளே? எனக்குள்ளாகக் கடந்து சென்ற ஒரு பயத்தை கடவுள் உணர்ந்திருக்க வேண்டும்; 'நடக்கும்' என்ற வார்த்தை அவர் எழுதிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கடவுளின் இருதயத்தில் துயரத்தின் கூரிய வேதனை உணர்வு ஒன்றை நான் உணர்ந்தேன். நான் பயப்படுகிறேன், உமது கடும் கோபத்தை நினைத்து! நான் உங்கள் பாவங்களைப் பொறுத்துக் கொண்டு, அவற்றை மன்னிப்பேன், ஆனால் எனக்கெதிரான உங்கள் வெறுப்பை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்; நான் உங்களைப் படைத்தவர்; உங்கள் சுவாசம் என்னிடமிருந்து வருகிறது; நான் என் படைப்பு முழுவதையும் என் கரத்தில் வைத்திருக்கிறேன்; நான் அஞ்ஞானவாதத்தை அருவருக்கிறேன்! குறிப்பு: நாத்திகம். வசுலா, நான் உன்னை வழிநடத்த விடு; வா, என் குழந்தாய், என்னில் இளைப்பாறு; பிற்பாடு: எனக்கு மணஒப்பந்தமானவளே, நேசத்தின் ஒரு கோடி வார்த்தைகளைப் போல் உன் பெருமூச்சு எனக்கு இருக்கிறது; ஆம், நான் இன்று காலையில் நீ எனக்குத் தந்த உன் பெருமூச்சைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்; உண்மையாகவே, இன்று காலையில் நான் வெறுமனே இயேசுவைப் பற்றி அன்போடு சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் மிக அதிகமானவற்றைச் சொல்ல விரும்பினேன், ஆனால் சரியான வார்த்தைகளை கூட கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. ஒரு பெருமூச்சை மட்டுமே நான் தந்தேன்; ஆனால் என்னுடைய அந்த பெருமூச்சிலிருந்து அவர் நிறைய காரியங்களைப் புரிந்து கொண்டவராகத் தோன்றினார். வசுலா, என்னைக் கண்மூடித்தனமாக நேசி; நான் விரும்புகிறபடி உன்னைப் பயன்படுத்த விடு; நீ ஒன்றுமில்லாமையாக இருப்பதன் மூலம் நான் எல்லாமுமாக இருந்து, இவ்வாறு என் வேலைகளை முடிக்கும்படி முற்றிலும் ஒன்றுமில்லாமையாக இரு; உன்னைப் படைத்தது எனக்கு ஓர் இன்பமாக இருந்தது; என் தேவனே, உமக்குப் பிரமாணிக்கமாக இல்லாதிருப்பதன் மூலம் உன்னை ஏமாற்றி விடுவேனோ என்று நான் பயப்படுகிறேன். முதலில் நான் பிரமாணிக்கமாகத்தான் இருக்கிறேனா என்பது கூட எனக்குத் தெரியாது, நான் எப்போதாவது பிரமாணிக்கமாய் இருந்திருக்கிறேனா என்பது கூட எனக்குத் தெரியவில்லை என்றால், தொடர்ந்து பிரமாணிக்கமாக நிலைத்திருப்பது பற்றி நான் ஏன் பேசிக் கொண்டிருக்கிறேன்? நித்தியத்திலிருந்தே நீ பலவீனமானவள், பரிதாபத்துக்குரியவள் என்று நான் அறிந்திருந்தேன், ஆனாலும் நான் உன்னை நேசிக்கிறேன்; நீ பிரமாணிக்கத்தோடு என்னுடையவளாக நிலைத்திருக்கும்படி, நான் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்; இதெல்லாம் நான் அறியாதிருக்கிறேன் என்று நீ கற்பனை செய்கிறாயா? எனக்கு எல்லாம் தெரியும், அதனால்தான் நான் உன்னை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்தேன்; உன்னுடைய வாக்குக் கெட்டாத பலவீனமும் நிர்பாக்கியமும் தான் என்னை ஈர்க்கிறது; வா, இந்த வழிகாட்டுதல் என் மகத்துவத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறது; அதுவே உங்கள் அநீதிகளுக்குத் தீர்வாவது பற்றி நான் அகமகிழ்கிறேன்; வசுலா, மென்மையான வார்த்தைகளைக் கொண்டு எனக்கு முடிசூட்டு! என் வார்த்தைகளா, ஆண்டவரே? இத்தகைய மகத்துவமுள்ள பிரசன்னத்திற்கு முன் அவை என்ன மதிப்பைக் கொண்டிருக்க முடியும்? உன்னிடமிருந்து வருகிற கனிவும், நேசமும் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் என் பிரசன்னத்தில் தெய்வீகமானதாகிறது; என் செவிகளில் அது மேலானதாகிறது; என் சிறு கருவியே, எழுதுவதில் ஒருபோதும் களைத்துப் போகாதே; நீ செய்யும் சகலமும் என்னிடமிருந்தே வருகிறது; என் பலத்தைக் கொண்டு நான் உன்னை தாங்குகிறேன், நான் விரும்பும்போது உன்னை அழைக்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன், உன் ஆண்டவரை நீயும் நேசி; அவரது மகத்துவமிக்க மேன்மை என்னை முற்றிலுமாக அழித்துவிட்டதாக நான் மீண்டும் உணர்ந்தேன், மிக ஆழமான பெருங்கடலுக்குள் மூழ்குவது போல் அது இருந்தது. கடவுளால் ஆட்கொள்ளப்பட விரும்புவதும், அப்படி இருப்பதில் மகிழ்வதுமாகிய அற்புதமான உணர்வு! மே 10, 1987. வசுலா, நான் என் மன்னாவைக் கொண்டு என் மக்களுக்கு எப்போது உணவளித்தேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? நான் மோட்சத்திலிருந்து அதைப் பொழிந்தேன், அது மோட்சத்தில் உள்ள என் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து வந்தது; என் மக்கள் செங்கடலைக் கடந்து சீனாய்க்கு வந்து சேரும்படியாக, கடலை உயர்த்திப் பிடித்தவர் நான்தான் என்பது உனக்குத் தெரியுமா? ஆம், ஆண்டவரே. சிறியவளே, நாம் சர்வ வல்லபர்; அநேகருக்கு உணவளிக்கும்படி இந்த வழிகாட்டுதலைத் தொகுத்து ஸ்தாபித்தவர் நான்தான்; வசுலா, இந்த முறை உங்கள் அனைவருக்கும் இதை வெளிப்படுத்துகிறேன்! பார்த்தாயா? என் கடவுளே, இன்னமும் கூட இது என் ஆழ் மனதால்தான் செய்யப்படுகிறது என்ற பயம் எனக்கு இருக்கிறது...... நீயாக இதெல்லாவற்றையும் ஒருபோதும் செய்திருக்கவே முடியாது என்று உடனே உனக்குச் சொல்லவிடு! புதுமைகளை நீ விசுவசிக்கிறாயா? ஆம், விசுவசிக்கிறேன். அப்படியானால், இதையும் ஒரு புதுமை என்று நினைத்துக்கொள். நான் உன்னை நேசிக்கிறேன்; நான் உம்மை நேசிக்கிறேன், பிதாவே. நான் எப்படி உம்மைப் பார்க்கிறேன் என்று மக்கள் கேட்கும்போது, அவர்களுக்கு நான் எப்படி விளக்க முடியும்? உம்முடைய பிரசன்னத்தை நான் மிக அதிகமாக உணர்கிறேன், அது கற்பனைத் தோற்றம் இல்லை. நீ உன் ஆத்துமத்தின் கண்களைக் கொண்டு என்னைப் பார்க்கிறாய் என்று அவர்களிடம் சொல்; சில சமயங்களில், இயேசுவே, நான் உம்மைக் கற்பனை செய்து கொள்கிறேன் என்று நினைக்கிறேன், அது நீரல்ல என்று எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளும்படி, உம்மிடமிருந்து காட்சியிடமிருந்து என் கண்களைத் திருப்பிக் கொள்ள நான் விரும்புகிறேன்.... இப்படிச் செய்வதால் நீ என்னை நோகடிக்கிறாய், வசுலா; இந்த வரப்பிரசாதத்தை நானே உனக்குத் தந்திருக்கிறேன். குறிப்பு: அறிவுபூர்வமானக் காட்சிகளையும் அடையாளக் காட்சிகளையும் பெற்றுக் கொள்வதற்கான வரப்பிரசாதம். என் கொடையை ஏற்றுக்கொள், நான் உனக்குத் தருவதை ஏற்றுக்கொள்! ஆண்டவரே, சில சமயங்களில், குறிப்பாக வங்காள தேசத்தின் வெப்பத்தால் நான் முற்றிலும் சோர்ந்து போனவளாக உணர்கிறேன், என்னால் இன்னும் அதிக வேலை செய்ய முடிய வேண்டுமென நான் ஆசிக்கிறேன். சில சமயங்களில் நான் பல துண்டுகளாகப் பிரிகிற ஒரு அமீபா போல் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்! நான் என் வேலைகளைச் செய்து முடிப்பதற்கு உனக்குப் போதுமான பலம் தருகிறேன்; "நான் ஆண்டவருக்காக வேலை செய்வதால், ஒருபோதும் சோர்ந்து போகமாட்டேன், ஏனெனில் ஆண்டவர் தாமே என் பலமாக இருக்கிறார்" என்று லூக்காஸ் ஒருமுறை சொன்னார்; சிறியவளே, ஒரு தந்தை தன் குழந்தையைக் கையைப் பிடித்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வது போல, நான் உன்னை வழிநடத்தி இருக்கிறேன்; நீ என்னோடு சேர்ந்து எவ்வளவு சம்பாதித்திருக்கிறாய் என்று மதிப்புப் போட்டுப் பார்த்தாயா? நான் உண்மையில் ஏராளமானதைச் சம்பாதித்திருக்கிறேன். நான் வேதத்தை ஒருபோதும் அனுசரித்ததில்லை. அல்லது என் பள்ளி நாட்களுக்குப் பிறகு என் வீட்டில் ஒரு வேதாகமம் இருந்ததில்லை. என் 15 வயதில் என் மூத்த மகன் ஞானஸ்நானம் பெற்ற பிறகு நான் கோயிலுக்கே போனதில்லை என்ற நிலையில், நீர் எனக்கு அநேக காரியங்களைக் கற்றுத் தந்தீர். இப்போதும் நான் பெரிய ஞானி என்று நினைக்கவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம், நீர் யார் என்றும், என்னை நீர் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர் என்றும், உம்மை எப்படி நேசிப்பது என்றும் எனக்குக் கற்பித்தீர். நான் என் சொந்தத் தோட்டத்தின் கனியை உனக்குத் தந்திருக்கிறேன்; உன் சேமிப்பறைகளை என் கனிகளால் நிரப்ப நான் விரும்புகிறேன்; நான் ஒரு காரியத்தை அவரிடம் கேட்டேன், அதை நான் எழுத விரும்பவில்லை. எனக்குத் தெரியும், வசுலா, அது எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அப்படியே இருக்கட்டும்; என்னால் காதுகள் வரை புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை, இயேசுவோடு இதுபோல ஒரு சிறு மேலோட்டமான உரையாடலில் ஈடுபடுவது மிக நன்றாக இருப்பதாக நான் உணர்ந்தேன். ஒரு நல்ல நண்பரோடு பேசிக் கொண்டிருப்பது போல்தான் நான் அவரை உணர்ந்தேன். என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. நான் ஏறக்குறைய வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தேன். நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நானும் உற்சாகம் கொள்கிறேன்; ஆம், அவரும் சந்தோஷமாய் இருந்தார். அது அற்புதமானதாய் இருந்தது. வசுலா, இந்தத் தருணங்களை ஒரு தோழனிடம் பேசுவது போல நீ பேசுகிற இந்தத் தருணங்களை நான் எவ்வளவு அனுபவித்து மகிழ்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? வசுலா, நாம் செய்ய வேண்டிய வேலை இன்னும் இருக்கிறது; நேசமே, ஆசீர்வதிக்கப்படுவாயாக, நான் என் பிரசன்னத்தின் ஓர் அடையாளத்தை உனக்குத் தருவேன்; இயேசுவே, அது என்ன அடையாளம்? அதாவது, எங்கே? உன் வீட்டில் நான் பிரசன்னமாய் இருக்கிறேன் என்று உனக்கு நிரூபிப்பேன்; நான் உம்மை நேசிக்கிறேன், இயேசுவே. என்னால் உம்மை மகிழ்விக்க முடிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; பலிபீடமே! என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு, உன்னிலுள்ள என் தீச்சுவாலை ஆர்வத்தோடு பற்றி எரிந்து கொண்டிருக்கட்டும்;

மே 13, 1987. நேற்று, மே 12, மாலை மேல்மாடிப் படிக்கட்டின் சமதளத்தில் தூபத்தின் அடர்த்தியான நறுமணத்தால் நான் நிறுத்தப்பட்டேன். இந்த நறுமணம் இரண்டாவது மாடி வரை எட்டியது. எனக்கு வியப்பாக இருந்தது. அந்த மணம் கொசுவர்த்திச் சுருளின் மணத்தைப் போல் கொஞ்சம் கூட இல்லாமல் தூய்மையான ஆலய தூப வாசனையாக இருந்தது என்றாலும், நான் என் மகனிடம் அவன் கொசுவர்த்திச் சுருளை கொளுத்தி வைத்தானா என்று கேட்டேன். இல்லை என்று அவன் பதில் சொன்னான். நான் இந்த நிகழ்வை ஒதுக்கிவிட்டு மற்ற வேலைகளில் மும்முரமானேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நான் பென்சிலை எடுப்பதற்காக படிக்கும் அறைக்குப் போக விரும்பினேன். அங்குதான் நான் வழக்கமாக ஏதாவது எழுதுவேன். எனது படிக்கும் அறையில் நான் நுழைந்தபோது, மீண்டும் தூபத்தின் இனிமையான நறுமணம் என்னைக் கடந்து சென்றது. அது முழுமையாக என்னைக் குளிப்பாட்டியது! நான் அந்த குறிப்பிட்ட இடத்தை விட்டு விலகி, வேறு எங்காவது தூபத்தின் அந்த அடர்த்தியான இனிய நறுமணம் வீசுகிறதா என்று பார்ப்பதற்காகச் சென்றேன். இல்லை, நான் இரண்டாவது தடவை அதை முகர்ந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அந்த நறுமணம் இல்லை. அங்குதான் அது மறுபடியும் என்னைச் சூழ்ந்தது. என் நேசத்துக்குரியவளே, நான் என் நறுமணத்தால் உன்னை மூடிய அதே நேரத்தில் உன்னை ஆசீர்வதிக்கவும் செய்தேன்; ஓ, இயேசுவே, அது நீரா? ஆம், நீ என் பிரசன்னத்தை உணர்ந்தாய்; இதுவே என் அடையாளம்; குறிப்பு: முந்தின நாளில் தமது பிரசன்னத்தின் அடையாளம் ஒன்றைத் தருவதாக இயேசு முன்னுரைத்தார். தூப மணம் என்னிடமிருந்தே வருகிறது; அன்று மாலையிலே நான் மட்டும் இதில் நிச்சயமாக இருந்திருந்தால்! என் மலரே, என்னுடைய பிரசன்னத்திற்கான இன்னும் அதிக அடையாளங்களை நான் உனக்குத் தருவேன்; அதனால் விழிப்பாய் இரு; இயேசுவே, என் அன்பே, என் மூச்சே, என் வாழ்வே, என் மகிழ்ச்சியே, என் பெருமூச்சே, என் இளைப்பாற்றியே, என் பரிசுத்தத் துணைவரே, என் மீட்பரே, என் பார்வையே, என் சகலமுமே, நான் உம்மை நேசிக்கிறேன்! வசுலா, உருக்கமாக என்னை நேசி; என் திருவுடலில் உன்னை அழித்து வெறுமையாக்கு; மென்மையான சொற்களாலும், அன்புச் சொற்களாலும் என்னை அலங்கரி; என் வேதனைகள் குறைந்து போவதாக; உன் அன்புள்ள வார்த்தைகளில் என் திருக்காயங்களை ஊறச் செய்து, அவற்றின் வேதனையைத் தணிப்பாயாக; புனித தெரேசம்மாளின் நூலை வாசித்ததன் மூலம் இப்படிப்பட்ட நறுமணங்கள் இருக்கின்றன என்பதை நான் கண்டுபிடித்தேன். புனித தெரேசம்மாள் கூறுவது போல, அவை பசாசிடமிருந்து வருவதாக இருந்தால், சகிக்க முடியாத துர்வாடை அடிக்கும். விசித்திரமான முறையில், இந்தத் தூப நறுமணம் இயேசுவிடமிருந்தே வந்தது என்பதைக் காட்ட, இன்று எனக்குத் தரப்பட்ட மற்றொரு சாட்சியத்தைப் போல, இது இருந்தது. நான் மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன்! மே 14, 1987. இன்று என்ன ஒரு மகிழ்ச்சி! காட்சிகள் பெற்றுள்ள புனித அவிலா தெரேசம்மாளின் வாழ்க்கை வரலாற்றை நான் வாசித்தபோது, அவள் நரகத்தைப் பற்றி வர்ணிப்பதை வாசிக்க நேர்ந்தது. கடவுள் நரகத்தைப் பற்றி எனக்குத் தந்த காட்சியின் வர்ணிப்பும், அவளது வர்ணனையும் ஒத்திருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவள் இப்படி வர்ணிக்கிறாள்: "இருண்டதும், நெருக்கமாக அடைப்பட்டதுமான இடம்; அதன் தரை அசுத்தமான, துர்நாற்றம் வீசும், சேறான தண்ணீர் நிறைந்திருந்ததாகத் தோன்றியது." ..ஆம், அந்த இடம் முழுவதும் ஒரு குகை போல் தோன்றியது. தாழ்வான கூரை.. என் வர்ணனையை 1987 மார்ச் 7ல் காணலாம்.

மே 15, 1987. வா, உன்னைக் கையளி; நீ உன்னைக் கையளிப்பதைக் கேட்பதில் நான் இன்பம் காண்கிறேன்; ஏனெனில் நீ உன்னைக் கையளிப்பது என் இருதயத்தை மகிழச் செய்கிறது; சிறியவளே, நான் உன்னை பயன்படுத்தும்படி என்னிடம் கேள்... தந்தாய், நான் உமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளவளாக இருப்பேன் என்றால், என்னைப் பயன்படுத்தும்! நான் உன்னை நேசிக்கிறேன்; வா, நீ எழுத விரும்புகிறாயா? நான் எழுதுவது உமக்கு விருப்பமானால், நான் எழுதுவேன். அப்படியானால், எழுது; யாவேயாகிய நான், உன்னை ஒளிர்விக்க சித்தம் கொண்டேன் என்பது அறியப்படட்டும்; உனது ஒரே புகலிடம் நானே; என் இருதயம் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் பாதாளமாக இருக்கிறது; சிறியவளே, நான் உன்னை ஒளிர்வித்தது போலவே, என்னிடம் வருபவர்களையும் நான் ஒளிர்விப்பேன்; வசுலா, வா; எனக்கு அதிக நெருக்கமாக இரு; குறிப்பு: இப்போது இயேசு என்னோடு பேசிக் கொண்டிருந்தார். என்னை ஏற்றுக் கொள்வாயா?.. நான் மௌனம் காத்தேன். என்னை மனம் நோகச் செய்யாதே; மௌனம். என்னோடு இரு, உன்னையே சுத்திகரித்துக்கொள்; என்னை நேசி; மௌனம். அன்பே, என்னை மனம் நோகச் செய்யாதே.... மௌனம். நீ என்னைப் பெற்றுக் கொள்வாயா?.... என்னை மகிழ்ச்சியால் நிரப்பு; என்னோடு இரு; என்னை நேசி; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னிடம் இன்னும் அடிக்கடி வா, என்னை அடிக்கடிப் பெற்றுக்கொள்; நீ என்னோடு ஜெபிப்பாயா? குறிப்பு: "ஓ, மறுபடியுமா? வேண்டாம், வேண்டாம்" என்று நான் சொல்வது போல் உணர்ந்தேன். என்னை காயப்படுத்தாதே; நான் அதற்கு சம்மதித்தேன். நேச பிதாவே, உமது திருச்சுதனின் இரத்தத்தால் என்னைப் பரிசுத்தமாக்கி அருளும்; தந்தாய், உமது திருமகனின் திருச்சரீரத்தால் என்னைப் பரிசுத்தமாக்கி அருளும்; நேச பிதாவே, என்னை இப்போது சோதிக்கும் அசுத்த ஆவியைத் துரத்தி அருளும், ஆமென்; இயேசு இதை எழுதிக் கொண்டிருந்தபோது, நான் இந்த ஜெபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இயேசுவின் ஜெபத்திற்குப் பிறகு, நான் விழித்துக் கொண்டது போலத், திடீரென உணர்ந்தேன். இன்றைய செய்தியின் தொடக்கத்திலிருந்து என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதை நான் உணர்ந்தேன். இயேசு திவ்ய நன்மை வாங்க என்னை அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் புரிந்து கொள்ளாதது போல நடித்துக் கொண்டிருந்தேன். வேண்டாம் என்று பதில் சொன்னது போலவும் நான் உணர்ந்தேன். அவரை நான் காயப்படுத்திக் கொண்டிருந்தேன். இருந்தாலும், மறுமொழி கூற மனமின்றி இருந்தேன். அவர் அதை வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தேன். இயேசு என்னைக் காப்பாற்ற ஓடி வந்தார். நான் விழ இருந்தது போல் உணர்ந்தேன். ஓர் அசுத்த ஆவி என்னை இழுத்துக் கொண்டிருந்தது போல நான் உணர்ந்தேன். அவருடைய ஜெபத்திற்கு பிறகு, அவர் என்னோடு சேர்ந்து ஜெபித்தார். "நேச பிதாவே, என்னை இப்பொழுது சோதிக்கும் அசுத்த ஆவியைத் துரத்தி அருளும்" என்ற வார்த்தைகள் வந்தபோது, அந்த அசுத்த ஆவி என்னைப் பிடித்திருந்த பிடியை விடுவது போல எனக்குத் தோன்றியது. இயேசு என் கரத்தை எவ்வளவு பலமாக அழுத்தினார் என்றால், என் கை மிகப் பாரமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதே சமயத்தில், அவரது மிகுந்த வல்லமையுள்ள பலம், மிகப் பலமுள்ள ஒரு இராட்சதனைப் போல என்னை தாங்கிக் கொண்டிருந்ததையும் நான் உணர்ந்தேன். ஜெபத்திற்கு பிறகு, நான் விழித்தெழுந்தது போல் இருந்தது. என்னை இன்னும் அதிகமாக நெருங்கி வா; உன்னை அர்ச்சித்துக்கொள்; நான் உன்னை நேசிக்கிறேன்; உன் வீழ்ச்சிகளை நான் தாங்கிக் கொள்வேன்; நீ இழக்கப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; ஒரு மலரின் அழகைப் பாதுகாக்க, அதற்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், உரம் இடுவதும் தேவையாய் இருக்கிறது; நானே உனது பிரமாணிக்கமுள்ள கண்காணிப்பாளராக இருக்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன். தீய ஆவி என்னை பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததை இயேசு பார்த்துவிட்டார். நான் அதை உணரவில்லை. தீய ஆவி என்னை இழுத்துக் கொண்டிருந்தபோது, நான் அறிவிலி போல் உணர்ந்தேன். இயேசு மிக விரைவாக வந்து என்னை காப்பாற்றினார். தீய ஆவியின் பிடி விலகியபோதுதான் நான் விழ இருந்ததை உணர்ந்து கொண்டேன். நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை!