வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 19. பிப்ரவரி 1, 1987 வசுலா, இது நான்தான், இயேசு கிறிஸ்து; நான் உன்னை நேசிக்கிறேன்; எந்தச் செய்தியாவது, குற்றச்சாட்டுகளையோ, கடுமையான வார்த்தைகளையோ கொண்டிருந்தால், அது என்னிடமிருந்து வரவில்லை என்று அறிந்துகொள்; நானே அன்பு... அன்பு... அன்பு... என் இருதயம் நேசத்தின் பாதாளமாக இருக்கிறது; நான் உனக்குத் தரும் வழிகாட்டுதல், உனக்கேற்றபடி, சரிசெய்து கொள்ளப்பட்டது; இப்போதுதான், முதல் அடிகள் எடுத்து வைக்கிற தத்தி நடக்கிற குழந்தையாக உன்னை எண்ணிக்கொள்; தத்தி நடக்கும் ஒரு குழந்தை, நம்பிக்கையோடும், சுய தைரியத்தோடும் நடக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்; நடக்கத் தொடங்கும் ஒருத்திக்கு, நான் வழிகாட்டுகிறேன்; படிப்படியாக, நடக்க நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ என்னோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; நானே உனது தந்தையாய் இருக்கிறேன்; குறிப்பு: இசை 9:5. என்னோடு நடக்க, என் குழந்தையாகிய உனக்கு, கற்றுத் தருவேன்; உன் மனதில் எழுந்த வினாவுக்கு, இதுதான் என்னுடைய பதில்; நான் உங்கள் எல்லோரையும் ஒரே விதமாக நேசிக்கிறேன்; நீர் குறிப்பாக தெரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாக்களைக் குறித்தே பேசுகிறீர்; நீ தெரிந்து கொள்ளப்பட்டவள் இல்லையா? நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; மகளே, உன்னை என் அருகில் கொண்டிருக்க, நான் ஏங்கியிருக்கிறேன்; நீ என்னை நேசிக்க வேண்டும் என்று, நான் எவ்வளவு ஏங்கினேன்; என் நேசத்திற்குரிய குழந்தைகள் என்னை நேசிக்க வேண்டும் என்று, நான் எவ்வளவு ஏங்குகிறேன்; நான் அவர்களை அழைக்கிறேன்; அவர்கள் பதில் தருவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுடைய கதவுகளுக்குப் பின்னால் காத்திருந்தபடி, முழுப் பகலையும் இரவையும் செலவிடுகிறேன்; இடையறாமல் அவர்களைக் கண்காணிக்கிறேன்; என் கண்கள் அவர்களை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை; துக்கத்தால் நிரம்பியவனாக, நான் அவர்களைக் கண்காணிக்கிறேன்; தங்கள் ஆத்துமங்கள் எத்தகைய தரித்திர நிலையில் இருக்கின்றன என்பதையும், அவர்கள் தங்கள் ஆன்மாக்களை எப்படி சேதமாக்குகிறார்கள், எப்படி காயப்படுத்துகிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்களென்றால்! நான் உங்கள் அருகிலிருந்து என்னிடம் வரும்படி உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறேன்; பயப்படாதீர்கள்; நான் உங்களைக் கடிந்து கொள்ள மாட்டேன்; உங்கள் பாவங்களைப் பற்றி உங்களை கடிந்து கொள்வதற்காக நான் உங்களை அழைக்கவில்லை; ஒரு சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் கூட, என்னை சந்திக்கும்படி உங்களை அழைக்கிறேன்; பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களே, என்னிடம் வாருங்கள்; வந்து என்னைச் சந்தித்து, உங்கள் நேசப்பிதாவை அறிந்து கொள்ளுங்கள்; குறிப்பு: இசை 9:5. ஏனெனில், ஒரு பாலன் நமக்காகப் பிறந்தார், வியக்கத்தக்க ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன், நித்திய பிதா, சமாதானத்தின் அரசர் என அவர் அழைக்கப்படுவார். அவர்தாமே தமது சொந்த சரீரத்தைக் கொண்டு உங்களுக்கு உணவளிக்கிறார்; அவர் தமது சொந்த இரத்தத்தைக் கொண்டு உங்கள் தாகத்தைத் தணிப்பார்; குறிப்பு: அருளப்பர் 6: 48-51. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் உங்களைக் குணமாக்குவார்; நீங்கள் துயரப்படுகிறீர்கள் என்றால், அவர் உங்களைத் தேற்றுவார், நீங்கள் குளிர்ச்சியை உணர்ந்தால், அவர் தமது நேசத்தால் உங்களைப் போர்த்தி, உங்களுக்குக் கதகதப்பு உண்டாக்குவார்; என்னை மறுக்காதீர்கள்; நானே அன்பு, உங்கள் தீய தன்மையையும் மீறி, நான் உங்களை நேசிக்கிறேன்; நீங்கள் என்னை அவமானப்படுத்தினாலும் கூட, நான் உங்களை நேசிக்கிறேன்; நான் தயவிரக்கம் நிறைந்தவரும், உங்களை ஏற்றுக்கொள்ளவும், என் இருதயத்தில் வாழ உங்களை அனுமதிக்கவும், எப்போதும் ஆயத்தமாய் இருப்பவருமாகிய கடவுளாக இருக்கிறேன்; மகளே, பாவத்தின் கொடிய ஆழங்களில் அவர்கள் மேன்மேலும் ஆழமாக மூழ்கிக் கொண்டிருப்பதை அறியாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; அவர்களது அக்கிரமங்கள், அவர்களது ஆன்மாக்களை எவ்வளவாக சிதைத்துள்ளன என்பதை மட்டும் அவர்கள் அறிய முடியுமென்றால்! பூலோகத்தின் மீது உங்கள் வாழ்வு கடந்து போகும் ஒரு நிழல்தான், ஆனால் பரலோகத்தில் உங்கள் வாழ்வு நித்தியமானது; அங்கே நீங்கள் நித்தியமாக உங்கள் சிருஷ்டிகரின் மகிமையில், அவருக்கு அருகில் இருப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஏனெனில், நீங்கள் அவருடைய சொந்தக் குழந்தைகள் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த என்னை அனுமதியுங்கள்; வசுலா, என்னைத் துன்புறுத்துகிறவர்களும், என் திருப்பெயரைக் கலங்கப்படுத்துபவர்களுமாகிய அனைவரையும் பின்வரும் செய்தியில் நான் அழைப்பேன்; ஆகட்டும் ஆண்டவரே. பிப்ரவரி 2, 1987 ஓ மகளே, உங்கள் எல்லோரிடமிருந்தும் நான் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; என் பிதா அன்பின் காரணமாக உங்களைச் சிருஷ்டித்தார்; அன்பின் காரணமாகவே தம் ஏக திருச்சுதனை அவர் உங்களுக்குத் தந்தார்; நான் உங்களுக்காகப் பாடுபட்டு, அன்பிற்காகவே சிலுவையின் மீது மரித்தேன்; அன்பின் காரணமாகவே நீங்கள் சாகாதபடி நான் உங்களை இரட்சித்தேன்; அப்படியிருக்க, உங்களில் சிலர் ஏன், ஏன் என்னை வெறுக்கிறீர்கள்? ஏன் என்னைத் துன்புறுத்துகிறீர்கள்? என்னால் தரப்பட்ட சட்டங்களுக்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? நான் உங்களை சுதந்திரமாக வாழ விடாமல் தடுத்து, நீங்கள் கழகத்தில் விழச் செய்கிறேனா? உங்களுக்குக் கற்பிக்க ஒருவரும் இல்லாததால், ஒருவேளை நீங்கள் என்னைப் பற்றி கேள்விப்படாமல் இருக்கிறீர்களா? இதனால்தான் உங்கள் சொந்த சட்டங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு, உலக செல்வத்துக்காகவும், இன்பங்களுக்காகவும் ஏங்கிக்கொண்டு, உங்கள் சொந்த நாட்டங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா? குழந்தைகளே, அன்புக்குரியவர்களே, நீங்கள் என்னை வெறுக்கத் தொடங்கும் ஆரம்பம் இதுவே; என்னைப் பற்றி அறியாமல் இருப்பதே இதற்குக் காரணம்; ஆகவே, வந்து என்னைச் சந்தியுங்கள்; நான் அன்பாக இருக்கிறேன், என்னை விசுவசியுங்கள்; நீங்கள் என்னை அறியவில்லை என்று என்னிடம் சொல்வீர்கள் என்றால், நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களை நான் அறிந்திருந்தேன் என்றும், நான் உங்களை அபிஷேகம் செய்தேன் என்றும் நான் உங்களிடம் சொல்கிறேன்; நீங்கள் என்னை வெறுப்பதாக என்னிடம் கூறினால், நான் உங்களை நேசிப்பதாக உங்களிடம் கூறுகிறேன்; நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள் என்றால், நான் உங்களை மன்னித்திருக்கிறேன்; நீங்கள் என் திருப்பெயரை தூஷித்திருந்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு என் இரக்கத்தைக் காண்பித்திருக்கிறேன்; நீங்கள் என்னைக் காயப்படுத்தியே இருக்கிறீர்கள் என்றால், நான் இன்னமும் உங்களை நேசித்து, விண்ணகத்தில் என் அரசை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிறேன்; உங்கள் அக்கிரமங்களையும் மீறி, நான் உங்களை முழுமையாக மன்னிக்கிறேன்; வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; இளைப்பாறு, பிற்பாடு நீ எழுதும்படி நான் தொடர்ந்து கூறுவேன்; பிற்பாடு: நான் இங்கே இருக்கிறேன், இது நான்தான், இயேசு கிறிஸ்து; மகளே, நீ எழுதும்படி என் வார்த்தைகளை நான் உனக்குக் கூற அனுமதி; இப்போது நான் சொல்வதைக் கேட்டு என்னை பகுத்து உணர்ந்துகொள்; என்னைக் கண்டு அஞ்சுகிறாயா? என் கண்கள் உன்னை ஊடுருவிப் பார்த்து, உன் ஆன்மா செய்திருக்கிற எல்லாவற்றையும் காண முடியும் என்பதால், நீ என்னைத் தவிர்க்கிறாயா? எனக்கு அஞ்சாதே; ஏனெனில், நான் ஏற்கனவே உன்னை மன்னித்துவிட்டேன்; என் இரத்தம் உன் இரட்சணியத்திற்காகச் சிந்தப்பட்டது; நான் உடலோடு இந்த உலகத்தில் இருந்தேன்; நோயாளிகளைக் குணமாக்கிக்கொண்டும், இறந்தவர்களை உயிர்ப்பித்துக் கொண்டும், பாவிகள் மத்தியில் இருந்தேன்; நான் உங்களைக் கைவிட்டு விடவில்லை; ஏனெனில், நான் இன்னும் உங்களைக் குணப்படுத்திக்கொண்டு, உங்கள் மத்தியில் இருக்கிறேன்; குணமாக்கப்படும்படி என்னிடம் வாருங்கள்; நான் உங்கள் ஆன்மாக்களை என்னிடம் உயர்த்துவேன்; என்னை நேசிக்கவும், நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும், நான் உங்களுக்குக் கற்பிப்பேன்; நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்றால், என் பலம் உங்களைத் தாங்கும்; நீங்கள் தொலைந்து போயிருக்கிறீர்கள் என்றால், நான் அங்கே இருந்து உங்களுக்கு வழிகாட்டுவேன்; என் சட்டம், அன்பின் சட்டம், அதைக் கடைப்பிடிங்கள்; அதைக் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் இதயங்கள் என்னைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் அவற்றைத் திறப்பேன்; நான் உங்களைத் தூண்டுவேன்; எப்படி நேசிப்பது, எப்படி மன்னிப்பது, எப்படி பரிசுத்தமாய் இருப்பது, எப்படி பரிசுத்தமாய் வாழ்வது என்று நான் உங்களுக்குக் கற்பிப்பேன்; நானே நேசம், நானே சமாதானம், நானே இரக்கம், ஆகவே, அன்பர்களே, என்னிடம் வந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவர், நானே மன்னிப்பு; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; பிப்ரவரி 3, 1987 ஆண்டவரே, நான் வெற்றிடமாகவும், வெறுமையாகவும், வழக்கத்தைப் போல் இல்லாமலும், ஒரு கல்லைப் போல் குளிர்ச்சியாக உணர்கிறேன்! வசுலா, உன் கிளைகளைக் கழித்து, உனக்கு பலம் தருபவர் நான்தான்; நானே உன் மீது அக்கறையுள்ள பாதுகாவலர்; நான் உன் கிளைகளைக் கழிப்பதன் வழியாக, நீ மிகுந்த கனிகளைத் தரும் பொருட்டு உன்னைப் பலப்படுத்துகிறேன்; பிப்ரவரி 4, 1987 சிறியவளே, நான் ஏன் உன்னை நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? இதோ இன்னும் ஒரு காரணம்; ஏனெனில், நீ என் மலராக இருக்கிறாய்; உன் கிளைகளைக் கழித்துவிட என்னை அனுமதிக்கிறாய், உன்னைப் போஷிக்கவும், என் ஒளியை உன் மீது வீசவும் என்னை அனுமதிக்கிறாய்; நீ சமாதானம் மற்றும் நேசத்தின் கனிகளைத் தாங்கும்படி வளர, நான் உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; நானே உன் ஆண்டவரும் எஜமானருமாய் இருக்கிறேன்; பிப்ரவரி 5, 1987 நேச மகளே, நான் யாவே, என் திருச்சபையின் அதிகாரங்கள் என்னிடமிருந்தே வருகின்றன; நான் உனக்கு உணவூட்டுகிறேன்; மகளே, நான் உன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் எல்லாம் வல்லவர்; அஞ்சாதே; மகளே, கேள்; என் வார்த்தையை நிறைவேற்று; நீ என் பணிப்பெண்ணாக இருக்க வேண்டியுள்ளது என்பதால், என் ஒளியில் நீ இருக்கும்படி நான் வந்து தீமையிலிருந்து உன்னை விடுவித்தேன்; நான் உனக்குப் பலம் தருவேன்; நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; ஒருபோதும் சந்தேகம் கொள்ளாதே; என் சக்தியின்மை பெரிது; சூழ்நிலைகளுக்கு நான் பயப்படுகிறேன்; நீ அஞ்சத் தேவையில்லை; ஏனெனில், என் வல்லமை உன்னைச் சூழ்ந்து கொள்ளும்; என் ஆற்றல் உனக்கு உதவும்; என் எதிரிகளை ஏறி மிதிக்கத் தேவையான என் பலத்தை உனக்குத் தருமாறு என் வல்லமை உன்னை மூடிக்கொள்ளும்; உன் மீதே விழிப்பாய் இரு; ஏனெனில், இந்த வழிகாட்டுதல் என்னிடமிருந்து வரவில்லை என்று சொல்லி, அநேகர் உன்னை அதைரியப்படுத்த முயற்சி செய்வார்கள்; நீ எவ்வளவு சிறியவளாகவும், ஆதரவற்றவளாகவும் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்; ஆகவே, என் அருகில் இரு; ஞானம் உன்னை வழிநடத்தும்; எல்லா அதிகாரங்களும் என்னிடமிருந்தே வருகின்றன; ஞானம் என்னிடமிருந்தே வருகிறது என்பதைப் புரிந்துகொள்; கண்கள் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பார்களாக; யாவே சாபாவோத் ஆகிய நானே பேசுகிறேன் என்பதை இருதயமுள்ள அனைவரும் புரிந்துகொள்ளட்டும்; நான் ஒருபோதும் உன்னைக் கைவிட்டதில்லை; தரப்பட்டுள்ள என் வார்த்தையை மீண்டும் ஸ்தாபிக்கும்படி நான் ஞானத்தைத் தருகிறேன்; உங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து, உங்கள் பேரில் எனக்குள்ள நேசத்தை உங்களுக்கு நினைவுபடுத்த நான் வருகிறேன்; நீங்கள் இழக்கப்படுவதைக் காண நான் விரும்பவில்லை; விவேகமற்றவர்களுக்கு ஐயோ கேடு! காலம் அண்மையில் உள்ளதால், உங்களை சுத்திகரித்துக் கொள்ளுங்கள்; என் வார்த்தைகளைக் கவனியுங்கள்; ஏனெனில், நான் உங்களிடம் கேட்பதைச் செய்யும்போது, நான் உங்களை மன்னிப்பேன்; நீங்கள் சமாதானத்திலும் நேசத்திலும் வாழும்படி நான் உங்களை வழிநடத்துகிறேன்; ஏனெனில், நானே சமாதானம் மற்றும் அன்பின் கடவுளாக இருக்கிறேன்; பரிசுத்தமாய் வாழுங்கள்; மன்னிப்புக்காக ஜெபியுங்கள்; நான் உங்களை ஆசீர்வதிப்பேன்; நீங்கள் நேசத்தோடு நான் படைத்திருக்கிற என் பிள்ளைகள்; வாருங்கள், உங்கள் இதயங்களில் என் வார்த்தைகளை கட்டி வைத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில், யாவே ஆகிய நான் உங்களை வழிநடத்துகிறேன்; ஆண்டவரே, நான் ஆதரவற்றவள். எதையும் அறியாதவள். என் முன்னால் ஒரு பெரிய மலையை மட்டும் நான் நான் பார்க்கிறேன். பயப்படாதே வசுலா, ஏனெனில், என் வார்த்தையைப் பறைசாற்ற நான் எழுப்பிய முதல் ஆதரவற்ற தூதுவர் நீயல்ல; என்னில் விசுவாசம் கொள்; என்னை நம்பு; நான் உன்னை வழிநடத்துகிறேன்;