இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் வார்த்தை உலகின் இருளை அகற்றும் விளக்கு என்றும், தாமே உயிருள்ள வார்த்தை, செயல்படுவேன் என்றும் கூறுகிறார். ஒரு கணம் மனம் வருந்தினாலும் மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும், இதயங்களைத் திறந்து தம்மிடம் வரும்படியும் அனைவரையும் அழைக்கிறார். அன்னை மரியாவும் ஞானத்தின் குரலைக் கேட்கச் சொல்கிறார்.

Show Notes

அத்தியாயம் 99: நானே உயிருள்ள வார்த்தை; நான் நிச்சயம் செயல்படுவேன்! - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் வார்த்தை உலகின் இருளை அகற்றும் விளக்கு என்றும், தாமே உயிருள்ள வார்த்தை, செயல்படுவேன் என்றும் கூறுகிறார். ஒரு கணம் மனம் வருந்தினாலும் மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும், இதயங்களைத் திறந்து தம்மிடம் வரும்படியும் அனைவரையும் அழைக்கிறார். அன்னை மரியாவும் ஞானத்தின் குரலைக் கேட்கச் சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 24/08/1989 - என் திருப்பெயர் அன்பு; சங்கீதம்
02:10 28/08/1989 - விளக்குத் தண்டின் மீது என் விளக்கு
03:45 29/08/1989 - நானே உயிருள்ள வார்த்தை; செயல்படுவேன்
13:53 04/09/1989 - துன்புறுத்தலில் ஆறுதல்; அன்னையின் செய்தி
19:14 05/09/1989 - வெற்றுப் பேச்சைத் தவிர்; உத்தமமாய் இரு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #உயிருள்ளவார்த்தை #இறைவனின்மன்னிப்பு #ஞானத்தின்குரல்

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 99 ஆகஸ்ட் 24, 1989 இயேசுவா? நான்தான்; சிறியவளே, உன்னிடமிருந்து ஒரு கனிவுள்ள பார்வை, ஒரு சிறு புன்சிரிப்பு, என் இருதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! பிற்பாடு: வசுலா, என்னை வாழ்த்திப் போற்று; மலரே, என்னோடு இருப்பதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? என் திருப்பெயர் மீண்டும் மகிமைப்படுத்தப்படும் என்பதை அறிந்துகொள்; ஆம், என் ஆண்டவரே, நீர் செய்துள்ளவற்றில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், உமது பெரும் சாதனைகள் எங்கள் எல்லோருக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கின்றன. அப்படியானால், என் குழந்தாய், என் திருப்பெயர் அன்பு என்று எல்லோரும் அறிந்துகொள்ளுமாறு, பூமி முழுவதிலும் என் திருப்பெயரை அறிவி; ஆண்டவரே, தாவீதின் ஒரு சங்கீதத்தை, திருப்பாடலை, நான் உமக்கு வாசித்துக் காட்ட என்னை அனுமதியும். அது... நான் தன்னிச்சையாகத் திறந்தேன். "அரசராகிய யாவேக்கு ஸ்துதியின் பாடல்" என்று அழைக்கப்படுகிறது. நீ இந்த சங்கீதத்தை எனக்கு வாசித்துக் காட்டும்படி நான்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன், என் வசுலா, என்னைப் பார்த்தபடி, அதை வாசி; நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், நான் அந்த சங்கீதத்தை ஆண்டவருக்கு வாசித்தேன். வா, ஜெபி, உபவாசமிரு; என் வார்த்தையை வாசி; திவ்விய நன்மையில் என்னைப் பெற்றுக்கொள்; ஜெபமாலை ஜெபி; என்னை ஆராதி, நாங்கள், நாம்? என்றென்றும். பிற்பாடு அந்த இரவில்: என் ஆண்டவரே, நாம் போய் ஓய்வெடுக்கலாமா? ஆம், நாம் ஓய்வெடுக்கலாம், ஆனால் ஒரு நிபந்தனை, நான் உன் இதயத்தில் ஓய்வெடுக்கிறேன், நீ என் திரு இருதயத்தில் ஓய்வெடு; இது நான் புன்னகைக்கவும் மகிழ்ச்சியால் துள்ளவும் செய்தது. சரி, என் ஆண்டவரே! இயேசுவே, நான் உம்மை வாழ்த்துகிறேன். மலரே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; வா; ஆகஸ்ட் 28, 1989 என் ஆண்டவரே, தயவுசெய்து இந்தக் கேள்விக்கு வேதாகமத்திலிருந்து பதில் தாரும். நீர் உம் பணிப்பெண்ணை ஏற்கனவே இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர் என்பதால், உம் செய்தி எப்படிப் பரப்பப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்? அது பகுதி, பகுதியாகப் பிரிக்கப்பட வேண்டுமா, அல்லது நீர் எனக்குத் தந்தது போல முழுமையாகப் பரப்பப்பட வேண்டுமா? மார்க் 4 ஆம் அதிகாரம், இறை வார்த்தைகள் 21 முதல் 23 இல் பதில். என் வசுலா, ஒவ்வொரு ஆன்மாவும் என்னைக் கண்டு, என்னை உணர்ந்து, என்னிடம் திரும்பி வரும்படியாக, என்னுடைய வார்த்தை ஒளி வீசிப் பிரகாசிக்கும் ஒரு விளக்கைப் போல் இருக்கிறது; பார்த்தாயா? இந்த உலகின் மீது பாரமாக விழுந்து கிடக்கிற இந்தக் கொடிய இருளை அகற்ற நான் விரும்புகிறேன்; என் விளக்கை நீ உன்னுடைய படுக்கைகளின் கீழ் அல்லாமல் ஒரு விளக்குத் தண்டின் மீது வைக்கும்படி, அதை நான் உன்னிடம் தருகிறேன்; என் ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு நன்றி. மலரே, வா, உன்னை ஏற்றுக்கொண்ட வீட்டை நான் ஆசீர்வதிக்கிறேன், என் குழந்தைகளை நான் ஆசீர்வதிக்கிறேன்; நான் அளவற்ற விதமாக அவர்களை நேசிக்கிறேன்; நான் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன்; என் சிலுவையையும் உன் தோள்களின் மீது சுமந்துகொள்; என் சிலுவையையும் உன் தோள்களின் மீது சுமந்துகொள்; என் சிலுவையையும் பகிர்ந்துகொள்; நீ இதை எனக்காகச் செய்வாயா? அன்பு உன்னை அன்பு செய்கிறது; ஆகஸ்ட் 29, 1989 ஆண்டவரே, உம் வார்த்தையைக் கேட்கும்படி என் இதயத்தை ஆயத்தப்படுத்தும். அன்பின் ஆண்டவரே, இரக்கத்தின் ஆண்டவரே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். உம் பெரும் அன்பில் எனக்கு பதில் தாரும். இறைவா, என் மீது ஒளிர்ந்தருளும், உம் ஒளியைக் கொண்டு என்னை உயிர்ப்பியும்! ஆமென். நானே அறுவடையின் ஆண்டவர்; இந்தச் செழிப்பான அறுவடையைச் செய்வதற்கான வேலையாட்களை நீ என்னிடம் கேட்டிருப்பதால், நான் உனக்கு உதவியாளர்களை அனுப்புவேன்; இப்போது எனக்கு இன்னும் அதிக நெருக்கமாக வா, என்னை அணுகி வா; குறிப்பு: யூதா 9 ஆம் அதிகாரம். நானே உயிர்ப்பும், வாழ்வுமாக இருக்கிறேன்; வழிபாட்டின் நாள் இப்போது தொலைவில் இல்லை என்று நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்; உங்கள் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள், இன்னும் பூமிக்கடியில் கிடப்பவர்களையும், தங்கள் பாவங்களால் புதையுண்டிருப்பவர்களையும் நான் மீண்டும் உயிரோடு எழுப்புவேன்; என் அரசை விரிவுபடுத்துவேன், இப்போது தரிசாகவும், பார்வைக்கு புலம்புதலுக்கு உரியதாகவும் கிடக்கும் என் நிலங்களை நான் புதுப்பிப்பேன்; "பால் குடிக்கும் பிள்ளையைத் தாய் மறப்பாளோ, அல்லது தன் உதரத்தின் மகனைச் சீராட்டி வளர்க்கத் தவறுவாளோ? அப்படியே தாய் தன் குழந்தையை மறந்தாலும், நான் ஒருபோதும் உங்களை மறக்கமாட்டேன்" என்ற வேதாகம வார்த்தைகளை நான் திரும்பவும் சொல்வேன்; குறிப்பு: திவ்ய நற்கருணை. நான் உங்களுக்காக ஒரு புதிய வானகத்தையும், புதிய வையகத்தையும் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன், அன்பானவர் உங்களிடம் திரும்பி வந்து, உங்களில் எஞ்சியிருப்போர் நடுவில் அன்பாகவே உயிர் வாழ்வார்; நீங்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் சந்திக்கிற இந்த பிரேதங்கள் அனைத்தையும் நான் உயிர்ப்பிப்பேன்; காற்றைப் போல, நான் உங்கள் ஆயர்களைப் புதிய மேய்ச்சல் நிலங்களுக்குத் திரும்ப அடித்துக்கொண்டு வருவேன்; அவர்கள் தங்கள் ஆயனுக்குரிய கோலைக் கொண்டு, பழைய நாட்களில் இருந்ததுபோல் என் மந்தையை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள்; ஏனெனில் அவர்களுடைய கொடிய தன்மை என் சொந்த இல்லத்திற்குள்ளேயே நுழைந்து, அநேகரை ஏமாற்றிவிட்டது என்றாலும், அவர்களுடைய பாவங்கள் கடவுளற்ற நிலையை நாடெங்கும் பரப்பிவிட்டன என்றாலும், இன்றாவது அவர்கள் தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள் என்றால், நான் அவர்களை மன்னிக்கவும், மறக்கவும் தயாராக இருக்கிறேன்; என் கோபத்தை நான் விலக்குவேன், அது ஒருபோதும் இல்லாதிருந்தது என்பதுபோல் ஆகிவிடும்; ஆனால் இன்றைய நாள் வரையிலும் கூட, என் திரு இருதயம் அன்பில்லாமையாலும் உங்கள் யுகத்தின் ஏராளமான பாவங்களாலும் உடைகிறது, என் இருதயத்தைக் குத்தித் துளைத்து, மோட்சத்தை நாணச் செய்த பாவங்கள் அவை, என் தேவாலயத்தைக் கறைப்படுத்தி, என் பரிசுத்தப் பெயரை அவசங்கை செய்த பாவங்கள் அவை; இருந்தாலும், நீங்கள் எனக்கு காட்டும் ஒரே ஒரு கனிவுள்ள பார்வையை, ஒரேயொரு கணநேர மனவருத்தத்தை, தயக்கமுள்ள ஒரு பெருமூச்சை, ஒரு இலேசான தீர்மானத்தைப் பார்த்து, உங்கள் காலத்தின் குற்றங்களை மன்னித்துவிட நான் தயாராக இருக்கிறேன்; என் திருமுகத்தைப் பார்த்து நீங்கள் செய்யும் ஒரு புன்னகை போதும்; நான் உங்களை மன்னித்து, உங்கள் பாவங்களை மறந்து விடுவேன்; என் காயங்களைக் கூட நான் பார்க்கவும் மாட்டேன்; நீங்கள் ஒரேயொரு கணம் மனம்வருந்தினால் போதும், நான் உங்கள் சகல அக்கிரமங்களையும், பாவங்களையும் என் பார்வையிலிருந்து அழித்து விடுவேன்; அந்த உங்கள் மனவருத்தத்தைக் கண்டு மோட்சம் முழுவதும் விழாக் கொண்டாடும், ஏனெனில் உங்கள் புன்னகையும், கனிவுள்ள பார்வையும் தூபத்தைப் போல் என்னால் ஏற்றுக்கொள்ளப்படும், இந்த மனவருத்தத்தின் அற்பமான ஒரு கணப்பொழுது ஒரு புதிய பாடலைப் போல் என்னால் கேட்கப்படும்; இன்று நான் என் அன்பின் நிமித்தமாக, உங்களை மீட்க, இரக்கத்தால் நிரம்பியவராக, உங்கள் மீது இறங்கி வருகிறேன்; என் அருளின் பரிசுத்த ஆவியானவர் மூடுபனியைப் போல் இருப்பார், அவர் இந்தப் பூமி முழுவதையும் மூடிக்கொள்வார்; நான் மிக அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மீதுள்ள என் வரப்பிரசாதங்களை நான் பெருகச் செய்வேன், என் வார்த்தை பலரால் வெளிப்படுத்தவும், கேட்கவும் படும், நான் உங்கள் காட்சிகளை அதிகரிப்பேன், அதனால் என் அருளின் பரிசுத்த ஆவியானவரை அலட்சியம் செய்து, அவரை அடக்கி ஒடுக்கி விட முயல்பவர்கள் ஒரு தாற்றுக்கோலுக்கு எதிராக உதைப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்; அவர்களுடைய முயற்சிகள் வீணாகும், ஏனெனில் ஆண்டவராகிய நான் உங்களை உயிர்ப்பிக்கவும், நீங்கள் வாழும் இந்தப் பாலைவனத்தை பண்படுத்தவும், உங்களை ஏமாற்றும் காணல் நீர்களை ஒரு பாலைவனச் சோலையாக மாற்றவும் எண்ணுகிறேன்; உங்கள் இறைவனாகிய நான் உங்கள் முன்னால் நின்று, என் பரிசுத்த ஆவியை இன்னும் அழிக்க முயல்பவர்களிடம் இதைக் கேட்கிறேன்; உங்களால் காலத்தின் அடையாளங்களை எப்படி அறியாமல் இருக்க முடிகிறது? என் அடையாளங்களையும் அற்புதங்களையும் அங்கீகரிக்கப்படாதவையாக விட்டுவிட நீங்கள் முடிவு செய்துள்ளது எப்படி? ஏன் திரும்பத் திரும்ப நீங்கள் என் வார்த்தைகளை முடக்கிவிட்டு, என் இறைவாக்கினர்களைத் திரும்பத் திரும்பத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இருளை ஒளிர்விக்கிற அந்தச் சிறியத் தீச்சுடரைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள், அதைக் கூட அணைத்துவிட ஏன் இவ்வளவு ஆவலாக இருக்கிறீர்கள்? உங்கள் வனாந்தரத்திலும், வறட்சியிலும் என் அருளைக் கொண்டு வளரும் ஒவ்வொரு மலரையும் மிதித்து அழித்துவிட ஏன் விரைகிறீர்கள்? உங்கள் இறைவனாகிய நான் மௌனமாகவும், இறந்தவராகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது எப்படி? ஆகவே, நான் யார் என்று இனி உங்களுக்குச் சொல்வேன், நான் யார் என்று உங்களுக்கு நினைவூட்டுவேன்; நானே வார்த்தையாகவும், உயிருள்ளவராகவும் இருக்கிறேன், நான் செயல்படுவேன்; நான் பூமியில் இருக்கையில், என் அப்பங்களையும், என் மீன்களையும் பலுகச் செய்து, பெருங்கூட்டமான மக்களுக்கு உணவளித்தேன்; மோயீசன் ஆயிரக்கணக்கானவர்களோடு பாலைவனத்தைக் கடந்து செல்கையில், அவர்களுக்கு உண்ண எதுவுமில்லாதிருந்த போது, மோட்சத்தின் சேமிப்பறைகள் திறந்து, மன்னாவைக் கொண்டு அவர்கள் அனைவருக்கும் உணவளித்தேன்; இன்றும் அதுவே நிகழ்கிறது, பூமி பாழ்பட்டுக் கிடப்பதாலும், அது உங்களுக்கு உணவளிக்க போதுமான அப்பத்தை விளைவிக்க முடியாததாலும், அன்புக்குரியவர்களே, நான் என் அருளின் ஆவியைக் கொண்டு பட்டினியால் வாடுபவர்களும், அசட்டை செய்யப்படுபவர்களுமான உங்களுக்கு உணவளிக்கும்படி என் அப்பத்தைப் பெருகச் செய்வேன்; உங்கள் நாட்களில் இது; என் பரிசுத்த ஆவியின் பொழிதல் என்று அழைக்கப்படுகிறது; நீங்கள் என்னால் நேரடியாக உணவூட்டப்படுவீர்கள்; ஏனெனில் நான் என் அப்பத்தை தொடர்ந்து பழுகச் செய்யவும், ஒருவனும் பசியாய் இருக்க விடாமல் இருக்க எண்ணுகிறேன்; வரப்பிரசாதத்தின் இந்தக் காலங்களில் என் குழந்தைகள் என்னிடம் வர முடியாமல் தடுக்க முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! ஆகவே, இன்னும் சந்தேகப்படுபவர்களே, உங்கள் மனதையல்ல, உங்கள் இதயங்களைத் திறங்கள்; என் போதனைகள் ஆரோக்கியமானவை, குணமாக்குபவை; அஞ்சாதீர்கள், இதய எளிமையில் விசுவசியுங்கள்; தீர்ப்பிடாதீர்கள், என் ஆவியோடு என்னால் அனுப்பப்பட்ட என் தூதர்களைத் துர்ப்பிரயோகம் செய்யாதீர்கள்; மிக்கேல் அதிதூதரும் கூட மோயீசனின் மரித்த உடலைக் குறித்து பசாசுடன் வாதிட்டபோது, அவதூறான வார்த்தைகளில் அவனை வெளிப்படையாகக் குற்றஞ்சாட்ட, அவர் துணியவில்லை, அவர் சொன்னதெல்லாம், ஆண்டவரே, உன்னை தண்டிப்பாராக என்பது மட்டுமே, யூதா வசனம் 9. என்னில் நம்பிக்கை கொள்ளுங்கள், விசுவாசம் கொள்ளுங்கள், என்னை அன்பு செய்யுங்கள், நான் பரிசுத்தராயிருப்பதால், நீங்களும் பரிசுத்தராக வாழுங்கள்; உபவாசம் இருங்கள், பரிகாரம் செய்யுங்கள், மனம் வருந்துங்கள், ஒவ்வொரு நாளும் எனக்கு உங்களை அர்ப்பணியுங்கள்; என் கரங்களுக்குள் உங்களைக் கையளியுங்கள், நான் உங்களை ஒளித்தூண்களாக மாற்றுவேன்; இடைவிடாமல் ஜெபியுங்கள், உங்கள் இதயத்தைக் கொண்டு ஜெபியுங்கள்; பரிசுத்தத் தனத்தில் என்னை உட்கொள்ளுங்கள்; என் அருள் வரங்கள் உங்கள் மீது பொழியும், ஆராதனை நேரத்தில் வந்து என்னை ஆராதியுங்கள், மிக அதிகமான உங்கள் பாவங்களை சங்கீர்த்தனம் செய்யுங்கள்; உங்கள் கடவுளாகிய என்னை மகிழ்வியுங்கள், என்னோடு நடங்கள்; என் கட்டளைகளை அனுசரியுங்கள், இடமோ வலமோ பாராதீர்கள்; உத்தமமாக இருங்கள்! என் மோட்சமாக இருங்கள்! ஓ, படைப்பே, உன் இறைவனாகிய நான் உன்னை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை மட்டும் நீ அறிந்திருந்தால், என் பாதச் சுவடுகளில் என்னைப் பின் செல்ல நீ தயங்கியிருக்க மாட்டாய்! ஆறுதலை வேறு இடத்தில் ஏன் தேடுகிறாய்? என் புனித இருதயம் உன் காயங்களுக்குத் தைலமாக இருக்கிறது, என் புனித இருதயம் உன் இல்லமாக இருக்கிறது; என் கண்கள் உங்கள் அனைவர் மீதும் இருக்கிறது; நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்; நான் உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறேன்; நான் இந்தச் செய்தியை வாசிக்கும் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; என் அன்பின் பெருமூச்சை உங்கள் நெற்றியின் மீது விட்டுச் செல்கிறேன், அன்பு உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறது; ஒன்றாயிருங்கள்; என் ஆண்டவரே, உமக்கு நன்றி, நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். செப்டம்பர் 4, 1989 துன்புறுத்தப்படுகிறேன். கலாபனைக் காலங்களில் என் ஆன்மா உம்மில் தன் கதகதப்பான புகழிடத்தைக் கண்டடைகிறது, கொந்தளிக்கும் புயல் மீண்டும் ஓயும் வரையிலும், உம் பரிவுள்ள, எவ்வளவோ ஆறுதல் தருகிற குரலைக் கேட்கும்படி நான் என் செவியை மோட்சத்தை நோக்கித் திருப்புகிறேன், நான் பயப்படத் தேவையில்லை, என் அருகில் உம் பரிசுத்த பிரசன்னம் என்னைத் தேற்றுகிறது, உம் பிரமாணிக்கத்திற்கு மாற்றாக இருக்கக்கூடியவன் ஒருவனுமில்லை, இப்போது நீரே என் எஜமானர், உன்னதர், ஆண்டவர்களுக்கெல்லாம் ஆண்டவர், என் மீட்பர், ஆகவே நான் உம்மிடம் என்னை முழுமையாகக் கையளிக்கிறேன், உம் தெய்வீகக் கரங்களில் என் ஆன்மாவையும், என் இதயத்தையும் நான் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென். என் குழந்தாய், ஞானம் உன் ஆசிரியராகவும், உனக்குக் கற்பிப்பவராகவும் இருக்கிறது; வா, நீ வேறு எங்கும் கண்டிராத ஆறுதலைப் பெற்றுக்கொள்வதற்காக உன் அப்பாவின் கரங்களுக்குள் விழு, உன் நம்பிக்கையை என்னில் வை, உன் துயரங்களை எனக்கு ஒப்புக்கொடு; நான் அவற்றை நன்றாகப் பயன்படுத்துவேன்; வா, நான் உன் ஒளிப் பீடமாக இருக்க விடு; நான் உன்னை கண்காணிப்பேன் என்று சொன்னேன்; உண்மையில் என்னைத் துன்புறுத்துபவர்களாக இருக்கிற உன்னைத் துன்புறுத்துபவர்களின் காட்டாறுகள் தங்கள் கொந்தளிக்கும் அலைகளில் உன்னை அடித்துச் சென்றுவிட நான் விட்டுவிடமாட்டேன்; என் குழந்தாய், எவ்வளவு அதிகம் அவர்கள் உன்னைத் துன்புறுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக ஆண்டவராகிய நான் உன்னை உயர்த்தி, உன்னை ஆசீர்வதிப்பேன்; ஒருபோதும் இதை மறக்காதே; என்னைச் சார்ந்திரு; உன் ஜெபங்கள் தூபங்களைப் போல் இருக்கட்டும்; கடவுளற்றவர்களைப் பிடிக்கும் தூண்டில் இறையாக நான் உன்னைப் பயன்படுத்த அனுமதி; இந்த எல்லாப் பரித்யாகங்களும் வீணாய்ப் போகாது; என் புனித இருதயம் உன் இல்லமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்; நாங்கள், நாம்? என் ஆண்டவரே, நாங்கள், நாம். நல்லவளாயிரு; ஜெபக்கூட்டத்திற்கான நம் பரிசுத்த அன்னையின் செய்தி. சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக; கடவுள் மட்டுமே ஞானமாக இருக்கிறார்; இந்தப் பாலைவனத்தில் உங்களைக் கூவி அழைக்கிற ஞானத்தின் குரலைக் கேளுங்கள், உங்கள் செவிகளைத் திறந்து, அவருடைய குரலை அடையாளம் காணுங்கள்; நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக, அவரிடம், அன்பிடம் திரும்பி வந்து, அவருடைய பாதச் சுவடுகளில் அவரைப் பின் செல்லும்படி உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்; என் திருமகன் உங்கள் பலவீனத்தையும், உங்கள் பாவங்களையும் அறிந்திருக்கிறார்; ஆனால் நீங்கள் உங்களை அவருடைய கரங்களில் முழுமையாக ஒப்புவித்துவிட்டு, அவரையே நம்பி இருப்பீர்கள் என்றால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை; நீங்கள் இருக்கிறபடியே, அவரிடம் வந்து, உங்கள் சித்தத்தை அவருக்கு ஒப்புக்கொடுங்கள்; உங்கள் அன்பை அவருக்குத் தாருங்கள்; உங்கள் துன்பங்களையும், துயரங்களையும், கடும் வேதனைகளையும், உங்கள் பிரச்சனைகளையும் அவருக்குக் கையளியுங்கள், எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புக்கொடுங்கள்; அவரை நம்புங்கள்; நீங்கள் அவருடைய சமாதானத்தைக் கண்டடையக்கூடிய, அவருடைய புனித இதயத்தின் உள்ளாழங்களுக்குள் உங்களை இட்டுச் செல்ல, அவரை அனுமதியுங்கள்; இந்த சமாதானம் உங்கள் ஆன்மாவுக்கு மிக அதிகம் தேவையாய் இருக்கிறது; கலக்கத்தையும், பிரிவுகளையும், குழப்பத்தையும் தூண்டி விடுபவனாகிய தீயவனுக்கு எதிராக, எப்போதும் நீங்கள் விழிப்பாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், அவன் முன் எப்போதையும் விட அதிகமாக, இப்போது கடவுளின் மீட்புத் திட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றான்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் கூட, அவன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான், அவர்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றான்; ஆனால் ஆண்டவரின் திருப்பெயரைக் கூவி அழைப்பவர் யாராய் இருந்தாலும், அவருடைய குரல் கேட்கப்பட்டு, அவர் விழுந்து விடாதபடி காப்பாற்றப்படுவார், ஆனால் தீயவனுடைய குரலைக் கேட்பவர்கள், கடவுளிடமிருந்து வரும் நீதியை அடையாளம் கண்டுகொள்ள தவறிவிடுவார்கள்; அவர்கள் அன்பின் குரலை அடையாளம் கண்டுகொள்ளத் தவறிவிடுவார்கள்; நற்செய்தியைக் கொண்டு வருபவர்களின் காலடிச் சத்தம் வரவேற்கப்பட வேண்டிய சத்தமே என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; அன்புக் குழந்தைகளே, உங்கள் இருதயத்தோடு ஜெபியுங்கள், இப்போது பல மக்களினங்களின் மீது பொழியப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆவிக்கு நல்வரவு கூறுங்கள்; அன்பின் திரும்பி வருதலின் நாட்கள் எப்படி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், வரப்பிரசாதம் எப்படி உங்களில் மிகப் பலரின் மீது தங்குதடையின்றி பொழியப்படுகிறது என்பதையும் உணருங்கள்; நீங்கள் உங்களைப் படைத்தவரை அன்பு செய்யும்படி, அன்பிற்காக, அன்பின் காரணமாகவே படைக்கப்பட்டீர்கள் என்பதையும், இருப்பதெல்லாமே அவராலும், அவருக்காகவுமே உண்டாக்கப்பட்டன என்பதையும் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதோடு, நான்கு என் செய்தியை முடிப்பேன்; ஆகவே, அவரைப் போற்றித் துதியுங்கள், ஆகவே, அவரைப் போற்றித் துதியுங்கள். உங்களைப் படைத்தவருக்கு மகிமையை செலுத்துங்கள்; உங்கள் அன்னையாகிய என்னை மகிழ்வியுங்கள், எங்கள் செய்திகளைத் தியானித்து, எங்கள் செய்திகளின் படி வாழுங்கள்; நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன், உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்கின்றேன்; உங்கள் பரிசுத்த அன்னையாகிய நான், உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்; செப்டம்பர் 5, 1989 என் ஆண்டவரே, நேற்றிரவு நான் நடத்திய பயனற்ற உரையாடலைப் பற்றி சிந்திப்பதில் பல மணி நேரங்களை நான் செலவிட்டிருக்கிறேன். பிற்பாடு, உம்மை அணுகி வரவும் கூட, நான் மிகவும் அச்சப்படுகிறேன். வெட்கத்தின் காரணமாக, உம்மை எதிர்கொள்ளவும் நான் துணியவில்லை. உம் நிமித்தமாக, நான் என்ன சொல்லிவிட்டேன்? ஒன்றுமில்லை. நான் உம்மைக் கைவிட்டேன். நான் உம்மை மகிமைப்படுத்தவும் இல்லை. உம்மை துதிக்கவும் இல்லை என்றாலும், வேறெதிலும் அன்றி, என் ஆண்டவராகிய உம்மில் மட்டுமே நான் இன்பம் காண்கிறேன். ஆண்டவரே, உம் மீதுள்ள அன்பினால், நான் ஏங்கி தவிக்கிறேன். என் தேவனே, என் இதயத்தை மாசற்றதாகவும், சோதனைக்கு உட்படாமலும் காத்துக்கொள்ளும். என் வசுலா, நான் உன் மீது கொண்டுள்ள இந்த அன்பை உணர்ந்து பார்... என் இரக்கம் பெரிது, என் தயவு, என் கோபத்தை வென்றுவிட்டது; மகளே, என் வழிகள் புனிதமானவை, ஆகவே, நான் பரிசுத்தராய் இருப்பதால், நீயும் பரிசுத்தமாய் இரு; உன் உரையாடல்கள் என் செவிகளுக்கு இசைபோல் இருக்கட்டும்; என் குழந்தாய், ஞானமே உன் ஆசிரியராகவும், உனக்குக் கற்பிப்பவராகவும் இருக்கிறது; வெற்றுப் பேச்சைச் தவிர், பயனற்ற உரையாடல்களைத் தவிர், பலனுள்ளவளாக இரு, என் போதனைகளில் இருந்து பேசு; நான் உன் ஆலோசகர், என்னிடமிருந்து எப்போதும் அறிவுரை வரும்; என்னுடைய மாணவர்கள் உத்தமமாய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஆகவே, உத்தமமாய் இரு; புரணி வெற்றுப் பேச்சு என்பன போன்று, உங்களை கீழே இழுக்கிற எல்லா காரியங்களையும் வெறுத்து ஒதுக்கு; நான் உன்னை அன்பு செய்கிறேன், நீ உத்தமமாய் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; என் பிரசன்னத்தை உணர், என் பிரதிபலிப்பாக இருப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து, எனக்காகப் பேசு; என் கரத்தில் இருக்கிற ஒரு மாணவன் பரிசுத்தமாக நிலைத்திருப்பதோடு, தன் குருவின் குரலைக் கேட்கவும் வேண்டும்; என் அருள்வரம் உன்மீது இருக்கிறது, நீ என் கட்டளைகளை அனுசரித்துப் பின்பற்ற வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; தொடக்கத்திலிருந்தே, நான் எப்படி உன்னை என் புனித இருதயத்தில் வைத்திருக்கிறேன் என்பதை புரிந்துகொள்; என் ஆவி உன்மீது உள்ளது, அன்புக்குரியவளே, நான் உன்னை ஆசீர்வதித்தேன்; தைரியம் கொள், இதெல்லாம் வீணாகாது; நீ செய்ய வேண்டியதெல்லாம், என்னை நேசிப்பதும், என்னை ஆராதிப்பதும், உன் கரத்தை பயன்படுத்த என்னை அனுமதிப்பதும் தான்; நீ என் எதிரொலியாக இருக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; ஆண்டவரே, நீர் சொல்வதன் அர்த்தம் என்ன? ஜெபக்கூட்டங்களில், நீ என் செய்திகளை வாசிக்க வேண்டும் என்று கூறுகிறேன்; நான் மகிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்; நான் உனக்குத் தரும் எல்லாவற்றையும் அடிக்கடி தியானித்து ஏற்றுக்கொள்; மலரே, என் சிலுவையோடு நான் உன்னிடம் வருகிறேன், நான் சற்று நேரம் இளைப்பாற வேண்டியுள்ளது, எனக்காக என் சிலுவையைச் சுமந்து கொள்வாயா? என் ஆண்டவரே, மன உவப்போடு சுமந்து கொள்வேன். நான் உனக்கு என்ன தருகிறேன் என்பதை நினைவில் கொள்; என் சிலுவை விலைமதிப்பு மிக்கது, என் சிலுவையை உயர்த்து, பிற்பாடு, உன் தோள்களில் இருந்து அதை எடுத்துக் கொள்வதற்காக நான் திரும்பி வருவேன்; என் குழந்தாய், நான் பயன்படுத்தக்கூடியவர்களாய் இருக்கும் ஆன்மாக்களில் நான் இன்பம் காண்கிறேன்; எனக்கு எதையும் ஒருபோதும் மறுக்காதே; எப்போதும் ஆயத்தமாகவும், உன் இறைவனாகிய நான் பயன்படுத்தக்கூடியவளாகவும் இரு;