வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 54. நவம்பர் 24, 1987 வசுலா, நான் மார்க்ரீட் மரியம்மாளிடம் சொன்ன வார்த்தைகளை நீ வாசிக்கும்படிச் செய்வேன்; குறிப்பு: புனித மார்க்ரீட் மேரி அலாகோக், 1647 முதல் 1690 வரை. இவள் பிரெஞ்ச் மினவுதல் சபைச் சகோதரி, இயேசுவின் திரு இருதயத்தின் காட்சிகள் பெற்றவள். "என் எதிரிகளையும், என்னை எதிர்க்க முயற்சிக்கிற எல்லோரையும் மீறி நான் ஆட்சி புரிவேன்" என்று நான் சொன்னேன், ஆகவே, நம்பிக்கையோடு இருங்கள், அன்பிற்குரியவர்களே; வசுலா, அச்சிஷ்ட தமத் திருத்துவம் எப்படி இருக்கிறது என்று நீ மீண்டும் ஒருமுறை வரைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், சரி ஆண்டவரே. தமத் திருத்துவத்தை புரிந்துகொள்வதில் எனக்கு பிரச்சனைகள் இருந்தபோது, ஆண்டவர் எனக்கு தந்த காட்சிக்குப் பிறகு இது நடந்தது. ஒன்றிலிருந்து மற்றொன்று வெளியே வந்து கொண்டிருந்த ஒளியின் காட்சி. அதன் பின் ஒரு ஒளி மற்றொன்றிலிருந்து வெளிவந்து அதை மூன்றாக ஆக்கியது. சுதன் பிதாவில் இருக்கும்போது அவர்கள் ஒருவராய் இருக்கிறார்கள். பரிசுத்த தமத் திருத்துவம் ஒன்றாக, ஒரே சாராம்சமாக இருக்கிறது. அவர்கள் மூவராக, மூன்று ஆட்களாக இருக்கலாம், ஆனால் மூவரும் ஒருவராய் இருக்கிறார்கள். கடவுளின் ஒருமை. இதன் விளைவாக, ஒரே சர்வேசரன். கடவுள் மூன்று ஆட்களில் இருக்கிறார், தேவ சாராம்சத்தின் ஐக்கியத்தில் ஒருவராய் இருக்கிறார். நவம்பர் 25, 1987 இயேசு என் அருகில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். இயேசுவே, நீர் இங்கே இருக்கிறீரா? இருக்கிறேன்; நீ என்னைப் பகுத்தறிந்து விட்டாய்; வசுலா, நீ காண்கிறாய், நீ எனக்குத் தருகிற அந்தச் சின்ன விசுவாசத்திற்காக, ஒரு கடுகு மணியையும் விட மிகச்சிறிய ஒரு விசுவாசத்திற்காக, நீ என்னைக் காணும்படியும், என்னை உணரும்படியும், என்னோடு எழுதும்படியும் செய்ய என்னால் முடியும்; வா, நான் உன் பரிசுத்த தோழராக இருப்பேன்; பிற்பாடு: நேசமே, நீ பயப்பட வேண்டியதில்லை, ஏனெனில், நீ பிறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே என் திட்டங்களை நான் வகுத்து விட்டேன்; நேசமே, நித்தியத்திலிருந்தே நீ எனக்கு ஊழியம் செய்வாய் என்று நான் அறிந்திருந்தேன்; என்ன சொல்வது, என்ன செய்வது என்பதைப் பற்றி உன் மனதைக் குழப்பிக்கொள்ளாதே, ஏனெனில், ஆண்டவராகிய நான் என் வார்த்தைகளை உன் உதடுகளில் வைப்பேன்; நான் உன்னை வழிநடத்துகிறேன்; நீ என்னில், என் அன்பில் இருக்கிறாய்; நான் உன்னை திருநிலைப்படுத்தி இருக்கிறேன்; நீ ஆசீர்வதிக்கப்படுகிறாய், நான் உன்னை இரத்தம் வடிக்கிற என் திருவுடலின் உள் ஆழங்களுக்குள்ளேயே வழிநடத்துகிறேன், என் சித்தத்தைச் செய்வதில், என் ஆசைகளை நிறைவேற்று; பகுத்தறியும் திறனைப் பெற்றுக் கொள்வதில், உனக்கு வரப்பிரசாதத்தைத் தருவதன் மூலம் நான் உனக்கு உபகாரம் செய்வேன்; என்னில் நிலைத்திரு; அன்புக்குரிய ஆத்துமமே, உன் எல்லா பலவீனங்களையும் எனக்குத் தா, அவை எல்லாவற்றையும் எனக்குத் தா; என் பலம் அவற்றை அழிக்கட்டும்; நீ என்னை மகிமைப்படுத்தியபடி, நான் உனக்கு நியமித்திருக்கிற எல்லாப் பணிகளையும் நிறைவேற்றுவாய்; என்னை நம்பு, நான் உன்னை ஆதரிப்பேன்; என் கரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு, நான் என் இருதயத்தில் உன்னை வைத்திருப்பது போல, என்னை உன் இதயத்தில் வைத்துக்கொள்; மற்றவர்களை நிரப்பும்படியாக, என் இருதயத்திலிருந்து உன் இதயத்தை நிரப்பிக்கொள்; ஆண்டவராகிய நான் உனக்கு உணவளிப்பேன்; என்னை நம்பு, நம்பிக்கையோடு இரு; வா, வா, நேசமுள்ள ஆன்மாவே, என்னில் ஓய்வெடு; ஆண்டவராகிய நான் உன்னையும், உன் எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிக்கிறேன்; வசுலா, என் கரத்தைப் பிடித்துக்கொள், என் கரத்தைப் பிடித்துக்கொண்டு என் பின்னே வா; இயேசு என் ஆவியை வழிநடத்தினார். நான் அவரால் இழுக்கப்பட்டு, அவரைப் பின் சென்றேன். அவர் என்னைப் புனித இராயப்பர் பேராலயத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர் தம் கரத்தை நீட்டி, தமது சுட்டு விரலால் ஒரு தனிமையான உருவத்தைச் சுட்டிக்காட்டினார். அது திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர். அவர் அங்கே தனியாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகத் தோன்றினார். பார்த்தாயா, வசுலா, அவர் காத்துக் கொண்டிருக்கிறார்; அவர் காத்துக் கொண்டிருக்கிறார்; பிதாவே, உம்முடைய திட்டங்கள் நிறைவேற்றப்படுவனவாக. ஆமென். என் செய்திகள் அவருக்குக் கையளிக்கப்பட்டு, எழுதப்பட்டிருக்கிற எல்லாமும் நிறைவேற்றப்பட வேண்டும்; நேசமே, வா, காலம் அண்மையில் உள்ளது; அஞ்சாதே, நான் உன் முன் இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்; நான் தொடங்கியதும், ஆசீர்வதித்ததுமான காரியத்தை நானே முடிப்பேன்; வா, நேசமானவர் உன்னை நேசித்து வழிநடத்துகிறார்; உன் கரத்தை என் கரத்தில் வைத்துக்கொள், நாங்கள் நாம்? சரி, ஆண்டவரே, ஒன்றாக. இயேசுவே, நான் உம்மை எவ்வளவாக நேசிக்கிறேன்! தம் கரத்தில் தம் இருதயத்தைத் தாங்கி, அதை நமக்குக் கையளித்தபடி வருகிற நேசமான இயேசு, தமது மிகக் கனிவுள்ள இருதயத்தோடு, நாம் சாத்தானின் வலைகளை அறுத்து, அவற்றிலிருந்து தப்பிக்க நமக்கு உதவுமாறு மீண்டும் வருகிறார். ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்! நேசமே, இதையெல்லாம் பார்த்துக்கொண்டு, எப்படி என்னால் உன்னை விட்டு விலக முடியும்? நான் என் முழு இருதயத்தோடு உன்னை நேசிக்கிறேன்; என் முழு இருதயத்தோடு உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன்; நான் அவரது திரு இருதயத்தை உணர்ந்தேன். இயேசு நம் மீது எவ்வளவு அன்புள்ளவராக இருக்கிறார் என்பது விளக்க முடியாததாக இருக்கிறது. நவம்பர் 28, 1987 சிறியவளே, என் தோட்டத்தை அழகுபடுத்து; இப்போது உள்ளது போல, அதில் இவ்வளவு வறட்சியை நான் ஒருபோதும் கண்டதில்லை; வறட்சி அதன் மீது ஆட்சி புரிகிறது; வறண்ட காற்றுகள் அதன் மீது வீசி, எஞ்சி உள்ளதையும் வறண்டு போகும்படி செய்து கொண்டிருக்கின்றன; என் மலர்களுக்கு நீர்ப்பாசனம் தேவையாயிருக்கிறது, இல்லாவிடில் ஒவ்வொரு தனிப்பூவும் வாடிவிடும்; என் மொட்டுக்கள் மலரும் பருவம் வரை பிழைத்திருக்க முடியாது, அவை ஒன்றன் பின் ஒன்றாகக் காய்ந்து போகும்; ஓ, அவர்கள் மட்டும் கேட்பார்கள் என்றால்! என் கடவுளே, ஒரு முடிவை எட்டுவது ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது? இந்த முடிவுக்கு வருவது ஏன் இவ்வளவு கடினமானதாக இருக்கிறது? அது ஏன் மாதக் கணக்கிலும் வருட கணக்கிலும் காலம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது? ஒருவரை ஒருவர் நேசிப்பதும், ஒரு குடும்பமாக ஒன்றிணைவதும் உண்மையாகவே இவ்வளவு சிக்கலானதா? நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும், பரித்தியாகம் செய்வது, தானம் செய்வது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவும் எங்களுக்குக் கற்பிப்பவர்கள் இவர்கள்தானே? ஒன்றிணைவதற்கு வருடக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறதா? அவர்கள் உண்மையாகவே சிறப்பு பொதுச்சங்கங்களையும் கூட்டங்களையும் நடத்த வேண்டியுள்ளதா? ஓர் இறுதியான சங்கத்தை ஒன்று கூட்டி, கரங்களை இணைத்து, நீர் ஒரு காலத்தில் இராயப்பருக்குத் தந்த அதிகாரத்தை அவருக்குத் தந்து, உம்மை மகிழ்வித்து, நீர் புன்னகைக்கும்படி செய்ய அவர்களால் ஏன் முடியவில்லை? என் குழந்தாய், உன் எளிமையை நான் எவ்வளவு நேசிக்கிறேன்; நீ சிந்திக்கும் விதம் குழந்தைத்தனமாய் இருக்கிறது; குழந்தைகள் என் பலவீனமாக இருக்கிறார்கள்! பார், குழந்தைகள் சண்டையிடும்போது, அவர்களது சண்டைகள் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை, ஏனெனில் துர்க்குணம் அங்கே இல்லை, ஆனால் மகளே, இவர்கள் குழந்தைகள் இல்லை, இவர்கள் முன்பு ஒரு காலத்தில் தாங்கள் கொண்டிருந்த மாசற்றத்தனத்தைத் தொலைத்துவிட்டார்கள்; அவர்கள் தங்கள் எளிமையையும், தங்கள் பரிசுத்தத்தனத்தையும் தொலைத்துவிட்டார்கள்; மாசற்றத்தனத்திற்குப் பதில் துர்க்குணத்தையும், எளிமைக்குப் பதில் வீண் பெருமையும், பரிசுத்தத்தனத்திற்கு பதிலாக அசுத்தத்தனத்தையும், தாழ்ச்சிக்குப் பதிலாக சகிப்புத்தனமற்ற பிடிவாதத்தையும் கட்டி எழுப்புகிறார்கள்; பார், குழந்தாய், இயேசுவாகிய நான் எப்படி இருக்கிறேன் என அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டும்படி இறங்கி வருவதன் காரணம் இதுதான்; நான் வெறும் கால்களோடும், தாழ்ச்சியோடும் வருவேன்; நான் என் சொந்த இல்லத்திற்குள் நுழைந்து, என் ஊழியனின் பாதங்கள் அருகில் முழந்தாளிட்டு, அவற்றைக் கழுவுவேன்; குறிப்பு: இயேசு உவமைகளில் பேசினார். என் வசுலா, அழாதே, இதெல்லாம் ஒற்றுமைக்காகத்தான்; நான் உன்னைப் பயன்படுத்தவிடு; இம்முறை இது இயேசுவாகிய நான்தான் என்பதை அவர்கள் மறுக்க முடியாது; ஏனெனில் வெகுகாலத்திற்கு முன்பே இந்த நிகழ்வை முன்னுரைத்திருக்கிறேன்; குறிப்பு: மிகுந்த ஏக்கத்தோடு தேடப்பட்ட ஒருமைப்பாடு. நான் என் ஊழியன் 23 ஆம் அருளப்பரின் மனதில் தூண்டி எழுப்பியவற்றில் ஒரு பகுதியை வாசிக்க நான் உன்னை அனுமதித்திருக்கிறேன், ஆனால் மீதமுள்ளவை... மீதமுள்ளவையா, ஆண்டவரே? பின்வரும் காலங்களில் என் திருச்சபை உட்பட வேண்டி இருக்கிற மாபெரும் துன்ப துரிதங்களைப் பற்றி அவருடைய காதில் நான் கிசுகிசுப்பாகக் கூறினேன்; இயேசுவாகிய நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; என்னில் என் அன்பில் நிலைத்திருங்கள்; நவம்பர் 29, 1987 வசுலா, இப்போது இன்னும் அதிகமாக எனக்காகப் பலியாக நீ தயாராக இருக்கிறாயா? ஆண்டவரே, நீர் விரும்புகிறபடியெல்லாம் என்னைப் பயன்படுத்தலாம். நான் என்னைக் கையளித்துவிட்டேன். நான் என்னை ஒவ்வொரு நாளும் கையளித்துக் கொண்டிருக்கிறேன்; என்னில் நிலைத்திரு; என் நேசத்தில் நிலைத்திரு; மகளே, உன் துன்ப சோதனைகள் எண்ணற்றவையாக இருக்கும்; குறிப்பு: கடவுள் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தார். உன் கடவுளாகிய எனக்காக இன்னும் நீ அதிகமாக பரித்தியாகம் செய்வாயா? குறிப்பு: அந்த எச்சரிக்கைக்குப் பிறகு, கடவுள் என் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் மீண்டும் கேட்டார். என் தேவனே, என் வாழ்வை உம் கரங்களில் எடுத்துக்கொண்டு, உம் இருதயம் விரும்புகிறபடி செய்யும். எனக்கு மிகப் பிரியமான மணவாட்டியே, அப்படியானால் என் சிலுவையை ஒரு தடவைப் பார்; நான் பார்த்தேன், இயேசுவோடு ஒரு மிகப் பிரம்மாண்டமான இருண்ட நிறமுள்ள மரச்சிலுவை இருந்தது. நான் அதன் மீது ஆணிகளால் அறையப்பட்டு, என் பிதாவை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தேன்; உனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை நீ பார்க்கிறாயா? ஆண்டவராகிய நான் அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன்; அப்போது உன் ஆத்துமம் தாங்கக்கூடிய எல்லாத் துன்பங்களையும் நீ சுமப்பாய், சிறியவளே, நான் உன் தாங்கும் சக்தியை அதிகரிப்பேன்; பிதாவே, உம் நேச இருதயம் விரும்புவதை உமக்கு அதிக மகிமை தரும் எதையும், என்னிடம் செய்தருளும். உம்மிடமிருந்து வருவதெல்லாம் என்னைத் திருப்திப்படுத்துகிறது. எனக்குக் கீழ்படிந்திரு; என்னை மகிழ்வி; கீழ்படிதல் பசாசை நாதியற்றவனாகச் செய்கிறது, அவனை அலறியோடச் செய்கிறது; நவம்பர் 30, 1987 இயேசுவா? நான்தான்; இயேசுவாகிய நான் என் முழு திருச்சபையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்றாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்; நேசமே, எனக்குப் பிரமாணிக்கமாய் இரு; என்னை நம்பு; நம்பிக்கையோடு இரு; டிசம்பர் 1, 1987 நான் எவ்வளவு இரக்கமுள்ளவராய் இருக்கிறேன் என்பதை உலகிற்குக் காட்டும்படி நான் உன்னைத் தேர்ந்து கொண்டிருக்கிறேன்; என் குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்போது எங்கே இருக்கிறார்களோ, அங்கே உன்னைக் கண்டுபிடித்து, உன்னைத் தூக்கிக்கொள்ள நான் வந்திருக்கவில்லை என்றால், நீ இன்றும் மற்றவர்கள் இருக்கிற அதே இடத்தில்தான் இருந்திருப்பாய்; நான் என் மட்டற்ற இரக்கத்தின் காரணமாக உன்னை எச்சரிக்க விரும்புகிறேன்; அப்படியே உன்னை என்னிடம் ஈர்த்துக் கொள்ளவும், உன் அஸ்திவாரங்களை உனக்கு ஞாபகப்படுத்தவும், நான் உன்னிடம் வருகிறேன்; கடவுளின் படைப்பினிடையே இந்த சமாதானம் மற்றும் அன்பின் செய்தியும் திருச்சபையை ஒன்றுபடுத்துவதும், அவர் நம்மீது தமது நீதியைப் பற்றியதையே செய்வதற்கு முன், அவர் செய்யும் கடைசி முயற்சிகள் என்று நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். மகளே, இப்போது நீ எவ்வளவு நன்றாக என்னைப் புரிந்து கொள்கிறாய்; நீ எனக்குப் பயப்படுகிறாயா? நாம் மனம் மாறவில்லை என்றால், அவர் நமக்குச் செய்யக்கூடிய காரியத்தைப் பற்றிய பயத்தை என்னில் கடவுள் உணர்ந்திருக்க வேண்டும். என் கடவுளே, நீர் எனக்குக் காட்டிய அந்தக் காட்சிக்குப் பிறகு நான் பயப்படுகிறேன். நான் அதில் ஒரு பகுதியைத்தான் உனக்குக் காட்டி இருக்கிறேன்; குறிப்பு: அனைத்திலும் அதிக மோசமானதெல்லாம் மறைந்திருக்கிறது என்பது பொருள். வசுலா, என் படைப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்; அதே தவறுகள் மீண்டும் நடக்கவிடக்கூடாது; எப்போது நடந்ததைப் போல, ஆண்டவரே? பாத்திமாவில் நான் அவர்களுக்கு என்னுடைய பெரிய புதுமையைத் தந்தபோது, என் சிருஷ்டிப்பை நான் எச்சரித்தேன், ஆனால் அவர்கள் என் எச்சரிப்புக்குக் குறைந்த அளவே செவிசாய்த்தார்கள்; அவர்கள் அதற்குப் பதிலாக சந்தேகப்படுவதிலும், வாதிடுவதிலும் காலத்தை வீணாக்கினார்கள், என் திருமாதாவின் வார்த்தைகளை முறைப்படி அவர்கள் ஒருபோதும் பரப்பவில்லை, இதனால் மிகச் சிலர்தான் அந்தச் செய்தியின் அவசரத்தை அறிந்து கொண்டார்கள்; அவர்கள் தங்கள் குற்றத்தைக் கொண்டு தங்கள் கரங்களை இரத்தக்கரையாக்கிக் கொண்டார்கள்; தங்களோடு மிக ஏராளமான ஆத்துமங்களை இழுத்துச் சென்றார்கள்; நான் அவர்களுடைய கடந்த காலப் பாவங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்துவேன்; குறிப்பு: நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்று கேட்காமலும், மனஸ்தாபப்படாமலும் இருந்தால் மட்டுமே கடவுள் நம் பாவங்களை நமக்கு நினைவுபடுத்துகிறார் என்பது வெளிப்படை. நாம் நம் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு, மன்னிப்புக் கேட்ட மாத்திரத்தில் நமக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. அதன்பின் கடவுள் நம் பழைய பாவங்களை மீண்டும் நமக்கு நினைவுபடுத்தவே மாட்டார். கரபந்தாலின் செய்தியின் அவசரத்தை நான் அவர்களுக்கு நினைவுபடுத்துவேன்; என் வேலைகளைப் பற்றி ஏன் சந்தேகம்? என் எச்சரிக்கையை என் படைப்புக்கு அறிவியுங்கள்; மிக மிகப்பெரிய பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும்; என் படைப்பு எச்சரிக்கப்பட வேண்டும், அது என்னில் விசுவாசம் கொள்ள வேண்டும்; என் அன்பைப் பற்றி அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்; குறிப்பு: கடவுளின் சமாதானம் மற்றும் அன்பின் இப்போதைய செய்திகள் உட்பட. பரப்புங்கள், என்னைப் பரப்புங்கள், என்னைத் தனிமைப்படுத்தி விடாதீர்கள்! இப்போது நீங்கள் என்னைத் தனிமைப்படுத்தி தொலைவாக்குகிறீர்கள், என்னைப் பாதுகாக்கவில்லை! என் கடந்த கால தற்காலச் செயல்களை வெளிப்படையாக அறிவியுங்கள், நான் சர்வ வல்லவர்; என் தலையில் உள்ள முட்கள் எல்லாம் அறிவின் திறவுகோலை கையில் வைத்திருக்கிற என் குருத்துவ ஆத்துமங்கள் தான், அவர்கள் தாங்களும் உள்ளே செல்வதில்லை, உள்ளே செல்ல விரும்புபவர்களையும் அனுமதிப்பதில்லை! இவர்களே என் முட்களாக இருக்கிறார்கள்! அந்த முட்கள் இப்போது என்னைக் கண்டுபிடித்து மனஸ்தாபப்பட வேண்டும்; அவர்களுடைய கைகள் அசைவற்றவையாக, கடந்த காலத்தின் புதிய இரத்தம் தோய்ந்தவையாக, எல்லா குற்றங்களுக்கும் கொடும் செயல்களுக்கும் பொறுப்பானவையாக இருக்கின்றன; அவர்கள் மனஸ்தாபப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்; அவர்கள் என் திருமாதாவின் கரபந்தால் செய்தியை வெளிப்படையாக எதிர்த்து நின்றார்கள்; அது பரப்பப்பட்டிருக்க வேண்டிய விதத்தில் அதைப் பரப்பவே இல்லை; அதன் அவசரத்தை அலட்சியம் செய்துவிட்டார்கள்; குறிப்பு: விவரிக்க முடியாத அளவுக்கு துயரத்திற்குள்ளான இறைவன் முனகினார். ஓ வசுலா, எனக்குக் கிடைத்திருப்பவை என்ன? கற்கள்தான், அவர்களது இதயங்கள் கல்லாகிவிட்டன; உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் இதயங்களைத் திறங்கள்! கரபந்தால் பாத்திமாவின் தொடர்ச்சியாக இருக்கிறது! உங்கள் தவறுகளைத் திரும்பவும் செய்யாதீர்கள்; இராயப்பா,
குறிப்பு: தொலைவில் இருப்பதால் கேட்க முடியாத ஒருவனை நோக்கிக் கூக்குரலிடுவது போல, இறைவன் உரத்த குரலில் கூக்குரலிட்டார்... அதன்பின் அவர் இறந்து கேட்பவரைப் போலத் தோன்றினார். இராயப்பா, என் எதிரொலியாக இரு! இராயப்பா, என் ஆடுகளை மேய், என் அன்பனே, என்னை மறுபடியும் மறுதலிக்காதே; இராயப்பா, என் எதிரொளியாக இரு. "இராயப்பா, என் ஆடுகளை மேய். என் அன்பனே, என்னை மறுபடியும் மறுதலிக்காதே" என்று ஆண்டவர் சொன்னபோது, அவர் அதை சொன்ன விதத்தைக் கேட்டு நான் அங்கேயே அப்போதே இறந்திருக்கக்கூடும். வா, என்னை உனக்கு உதவி செய்யவிடு; என்னில் இளைப்பாறு; நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். மேற்கொண்டு நான் நானாக இருக்கவில்லை. இயேசு என்னைத் தாங்க முயன்று கொண்டிருந்தார். நான் மீண்டும் தன்னுணர்வு அடைந்ததும், அவரிடம் இப்படிக் கூறினேன்: "இயேசுவே, நான் இப்போது விலகிச் செல்வேன்." கடவுள் கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தார். கெஞ்சிக் கேட்கும் குரலில் அவர் இதைச் சொன்னார்: "வசுலா, ஆம், ஆம், நேசத்தினால்; என் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன். இவ்வளவு துயரத்தோடு உம்மை காண்பதையும், நீர் சொல்வதைக் கேட்பதையும் விட, நான் ஒரு கோடி தடவைகள் மரித்திருக்கலாம். எனக்கு ஆயிரம் உயிர்கள் இருந்தால், உம் மகிமைக்காக ஒன்றன் பின் ஒன்றாக அவை ஒவ்வொன்றையும் தந்து, உம் காயங்களை குணப்படுத்தி இருப்பேன். என் படைப்பு நேசத்திடம் திரும்பி வந்து என்னை எல்லாம் வல்லவராக ஏற்றுக்கொண்டு ஒன்றுபடும்போதுதான் என் காயங்கள் குணமாகும்; வா, நாம் என் துயரத்தை பகிர்ந்து கொள்வோம்; இயேசுவே, இன்னும் மிக அதிகமாக பரிகாரங்கள் செய்யவும், உம்மை மகிமைப்படுத்தவும் என்னால் முடிய வேண்டுமென நான் விரும்புகிறேன். என் அருகிலேயே தங்கியிரு; என்னிடம் உள்ள எல்லாவற்றையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்வேன்; வா;"