வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
பயப்படாதே, என் பாதை நேரான பாதை; எனது பாதை உன்னை என்னிடம் நடத்தி வரும்; நான் உன்னைச் சந்திப்பேன்; நீ என்னை அடையாளம் காண்பாய், ஏனெனில் நான் சமாதானத்தையும், நேசத்தையும் ஒளிர்விக்கிறேன்; என்னிடம் வா; உன்னால் என்னைக் காண முடிகிறதா? நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா? அஞ்சாதே; இருளில் வெறுமனே நின்று கொண்டிருக்காதே; பார், உன் உறுப்புகள் குணமாக்கப்படுகின்றன, உன்னால் மீண்டும் நடக்க முடியும், நீ மீண்டும் பார்வை பெற்றிருக்கிறாய்; குறிப்பு: இதெல்லாம் உருவகமானது. நான் உன்னைக் குணமாக்கினேன்; நான் உன் அவமானத்தைக் குணமாக்கினேன்; உன் பாவங்கள் என்னால் கழுவப்படுகின்றன; என்னிடம் நடந்து வர உன் உறுப்புகளையும், என்னைக் காண உன் கண்களையும், என்னைச் சந்திக்க உன் விசுவாசத்தையும் பயன்படுத்து; நானே உன் இரட்சகர்; நானே உன் சமாதானம்; இயேசுவாகிய நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; செப்டம்பர் 27, 1986. சமாதானம் உன்னோடு இருப்பதாக; வசுலா, என்னிடம் வா, நானே உன் இரட்சகர், உன் சமாதானம்; நான் பூமியின் மீது உடலோடு உங்கள் மத்தியில் வாழ்ந்தேன்; நான் கடவுளால் ஜெனிபிக்கப்பட்ட அவரது திருச்சுதன்; என்னிடம் வந்து உன் தலையை என் மீது சாய்த்துக்கொள்; நானே உன்னைத் தேற்றுகிறவர்; நிர்பாக்கியம் உள்ளவளாக நீ உணரும்போது, நான் உன் அருகில் இருக்கிறேன் என்பதை நினைத்துக்கொள்; இந்த ஜெபத்தை என்னோடு சேர்ந்து சொல்; தந்தாய், எனக்குத் துணை புரியும், நித்திய மாசற்ற தண்ணீர் பாயும் இளைப்பாற்றியின் மேய்ச்சல் நிலங்களுக்கு என்னை இட்டுச் செல்லும், எனக்கு வழியைக் காட்டும்படி என் ஒளியாயிரும்; உம்மோடு உம் பக்கத்தில் நான் நடப்பேன்; என்னை ஒளிர்விக்கிற உம்மோடு நான் பேசுவேன்; நேச தந்தாய், நான் சமாதானத்தைக் கொண்டிருக்குமாறு, உம் அன்பை உணரும்படி எனக்குள் நிலைத்திரும்; உம் அடிச்சுவடுகளில் நான் உம்மைப் பின் செல்வேன்; உம்மோடு நான் நிலைத்திருப்பேன்; எனக்கு அறிவூட்டும், என்னை நேசியும்; இங்கேயும், இதன்பின் என்றென்றும் என்னோடு இரும்; ஆமென்; இந்த ஜெபத்தை எனக்குக் கற்பிக்க இயேசு எழுந்தருளி வந்தார். செப்டம்பர் 28, 1986. இன்று இயேசு என்னைப் பற்றிய ஒரு தெளிவான காட்சியை, அறிவுசார்ந்த காட்சியை எனக்குத் தந்தார். நான் இருந்த சுற்றுப்புறம் ஒரு சதுப்பு நிலம் போலத் தோன்றியது. என்னைச் சுற்றிலும் யாருமில்லை. என் ஆவி தொலைந்து போனதாகக் தோன்றியது. என்னைத் தேடிக் கொண்டிருந்த இயேசுவைக் காய்ந்து போன மரங்களின் மத்தியில் நான் கண்டேன். நான் இங்கிருக்கிறேன்; நான்தான், இயேசு; நான் உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன்; வா, திரும்பிச் செல்லும் வழியை நான் உனக்குக் காட்டுகிறேன்; நான் சொல்வதைக் கேள்; இயேசுவாகிய நானே வழியாக இருக்கிறேன்; நீ தொலைந்து போனதாக உணரும் ஒவ்வொரு தடவையும் என்னைக் கூப்பிடு; நான் உன்னிடம் வந்து உனக்கு வழிகாட்டுவேன்; நானே வழி; செப்டம்பர் 30, 1986. மகளே, உனக்கு சமாதானம் உண்டாவதாக; இயேசுவே, தயவுசெய்து, நான் உம்மை உணர்ந்து எழுத எனக்கு ஒளி தாரும். குறிப்பு: கடவுளின் பிரசன்னத்தை நான் உணர்வது அவசியம்; வசுலா, உதட்டளவு வேண்டுதல் என்பது பொருளற்றது; என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். நான் இந்த ஜெபத்தை இயேசுவிடம் நேசமின்றியும், சிந்தனையின்றியும், உண்மையாகவே அதை உணராமலும் கேட்டேன். நான் நிஜமாகவே ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து, என் ஆன்மாவை அவரை நோக்கி உயர்த்தியபடியும் அதை மறுபடியும் கேட்டேன். இந்த முறை நீ செய்தது போல என்னை உணர்ந்து கூப்பிடு; குறிப்பு: கடவுளின் பிரசன்னத்தை அறிந்திருத்தல். கடவுளாகிய நான் உணருகிறேன்; நான் அனைத்தையும் உணர்கிறேன்; என் மீது ஆசை கொண்டு என்னை நேசித்து நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் உணர்ந்து சொல்கிற உன் ஆன்மாவின் உள்ளாழங்களில் இருந்து வரும் நேசத்தை உன் அழைப்பிலிருந்து நான் பெற்றுக்கொள்ள வேண்டும்; கடவுளாகிய நான், இருக்கிறேன், நான் உணர்கிறேன்; வெறும் உதட்டளவிலான எந்த அழைப்பும் புதையுண்டதாகவே இருக்கும்; கல்லறைகளின் அதிகபட்ச சப்தங்களாக உதட்டளவு வேண்டுதல்கள் உள்ளன; நான் உயிரோடும் உணர்வோடும் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்; என் குழந்தைகள் எல்லோரும் எனக்கு மகிழ்ச்சி அளித்தபடி வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அக்டோபர் 5, 1986. தாங்கள் "கடவுளோடு பெற்ற அனுபவங்களை" அறிக்கையிட்டுள்ள அநேக மனிதர்கள் பற்றிய ஒரு புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் "வல்லுனர்கள்" இது கடவுள் அல்ல என்பதால் இவர்கள் எல்லோரும் தாங்கள் பெற்ற அனுபவத்தை மறந்துவிட வேண்டும் என்றும் இவர்களிடம் கூறுகிறார்கள்; மிக மேலாக உயர்த்தப்பட்ட ஆத்துமங்கள் மட்டுமே கடவுளிடமிருந்து இத்தகைய அனுபவங்களைப் பெற முடியும் என்றும், ஒருவர் மிக மேலான விதத்தில் உயர்த்தப்பட்டிருக்கவும் வேண்டும் என்றும் அவர்கள் இவர்களிடம் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் இவர்களில் ஒருத்தியல்ல. நன்மையிலிருந்து தொலைவானவள். கடவுளோடு எழுதும் இப்படிப்பட்ட சந்திப்புகளை நிறுத்திவிட நான் முடிவு செய்தேன்; இந்தக் காரியம் முழுவதையும் நான் "மூட்டை கட்டியும்" விடலாம். கடவுளை அடைவதற்கு நீ ஒரு புனிதையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வது சரி என்பது போலத் தோன்றுகிறது. கடவுள் மிகத் தொலைவில் இருக்கிறார் என்று நான் நம்பும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். ஆகவே இந்தக் காரியம் முழுவதையும் விட்டுவிடுவேன். இவ்வளவு மாதங்களாக "எந்த ஆற்றலைக்" கொண்டு என் கரங்கள் எழுதியதோ, அதே ஆற்றலைக் கொண்டு எழுத என் கரங்களை இறுதி முறையாக விட்டுவிட்டேன். என் அன்புக்குரிய வசுலா, என்னை விட்டுச் செல்லாதே. என்னை சந்திப்பவளாகவும், என்னிடமிருந்து கற்றுக் கொள்பவளாகவும் இரு; நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்; கடவுளாகிய நான் உன்னில் வாழ்கிறேன்; சர்வ வல்லபரான, நித்திய சர்வேஸ்வரன் நானே என்பதை நம்பு; இல்லை, இது அப்படி இருக்க முடியாது. கடவுளாக இருக்க முடியாது. தெரிந்தவர்கள் இது கடவுள் அல்ல என்று எனக்கு மெய்ப்பிப்பார்கள். தகுதியுள்ள, மிக மேலான மாசற்ற ஆத்துமங்களுக்கு மட்டுமே கடவுள் இத்தகைய வரப்பிரசாதங்களைத் தந்து அவர்களைச் சென்றடைகிறார்.
நான் எட்டப்பட முடியாத தொலைவில் இல்லை! வசுலா, நான் யாரையும் மறுப்பதில்லை; என் குழந்தைகள் என்னிடம் வராதபடி அதைரியப்படுத்துகிற எல்லோரையும் நான் குற்றம் சாட்டுகிறேன்; என்னோடு இருக்க அல்லது என்னால் ஏற்றுக்கொள்ளப்பட என் குழந்தைகள் மாசற்றவர்களாகவும் தகுதி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறவர்கள் என் திருச்சபையை அழித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்; என்னைக் கண்டடைந்தவனும், ஆனால் மற்றவர்களால் அதைரியப்படுத்தப்படுவனுமாகிய மனிதன் யாராயினும், அளவற்ற பலமாய் இருக்கிற நான் என் பலத்தைத் தந்து, அவனைத் தாங்குவேன்; தங்களை நிபுணர்கள் என்பவர்களும் ஒவ்வொரு சாத்தியத்தையும் தடை செய்து என் எல்லா வரப்பிரசாதங்களையும் மதியாமல், என்னிடமிருந்து என் குழந்தைகளை வெளியே இழுத்து, அவர்களை ஆறுதலற்றவர்களாகவும், உதவியற்றவர்களாகவும், குழப்பமுற்றவர்களாகவும் விட்டுச் செல்கிற மனிதர்களை ஏன், ஏன் நான் கொண்டிருக்கிறேன்? என்னால் தரப்படும் என் எல்லா ஆசீர்வாதங்களும் ஏன் மறுதலிக்கப்படுகின்றன? நான் கொடுத்த ஆசீர்வாதங்கள்? நான் அளவற்ற செல்வமாக இருக்கிறேன்; மகளே, நீ கடைசியாக என்னைக் கண்டடைந்திருந்தபோது, நான் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தேன்; நான் உன்னை அச்சப்படுத்தி விரட்டி விடாதபடி கவனமாய் இருந்தேன்; ஒரு தாய் தன் பச்சிளங் குழந்தையைக் கையாளுவது போல மென்மை உள்ளவராக நான் உன்னைக் கையாண்டேன்; நீ என்னை அணுகி வரும்படி நான் செய்தேன்; என் நேசமிக்கவளே, உன்னை அழைப்பதிலும் உன்னை சந்திப்பதிலும் உன்னை என் அருகில் கொண்டிருப்பதிலும், நான் கொண்டுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்வதிலும் நான் மகிழ்ச்சியால் நிரம்பி இருந்தேன், என் பிரியமே; இப்போது, கடவுளாகிய நான் எட்டப்பட முடியாதவராய் இருக்கிறேன் என்றும், தகுதியுள்ள ஆத்துமங்கள் மட்டுமே என்னை அடைய முடியும் என்றும் உனக்கு அறிவிக்கப்பட்டதால், இதற்குத் தேவைப்படுகிற அந்தத் தர நிலைக்குக் கீழாக நீ இருக்கிறாய் என்பதாலும் என்னை விட்டு விலகிச் செல்ல யோசித்துக் கொண்டிருப்பதாக இப்போது என்னிடம் வந்து சொல்கிறாய்! நான் எந்த ஆத்மாவையும் மறுப்பதில்லை; அனைத்திலும் அதிக ஈனமான ஆத்மாக்களுக்கும் கூட, நான் என் வரப்பிரசாதங்களை வழங்குகிறேன்; என்னை இந்த முறையில் சந்தித்து சந்தோஷப்படுத்து; மகளே. நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நான் உன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன்; என்னிடமிருந்து நீ உணவு உட்கொள்கிறாய்; வசுலா, இன்று இராயப்பனின் முதல் திருமுகத்தை வாசி; கவனத்தோடு வாசி, அதன்பின் நான் அதை உனக்கு விவரித்துக் கூறுவேன்; முதல் அதிகாரத்தை வாசி; விசுவாசத்தோடு வாழு; விசுவாசத்தைக் கொண்டிருப்பது எப்படி என்று இராயப்பன் கற்பிக்கிறான்; விசுவாசத்தால் மலைகளை நகர்த்த முடியும் என்றும் "விசுவாசம்" என்ற வார்த்தையைக் கொண்டு நான் பலவற்றைப் புரிந்து கொள்ளும்படியும் இயேசு செய்தார்; அதாவது, நீங்கள் விரும்பினால் கண்மூடித்தனமாக விசுவாசிக்க வேண்டும். அக்டோபர் 10, 1986. நானே ஒளி; இயேசுவாகிய நான் உன்னை எச்சரிக்க விரும்புகிறேன்; தீமையினால் இட்டு வைக்கப்பட்டுள்ள கன்னிகளுக்குள் ஒருபோதும் விழுந்து விடாதே; உனக்கு அமைதியின்மையை கொண்டுவரும் எந்தச் செய்தியையும் ஒருபோதும் நம்பாதே; தீமை உன்னை தடுத்துவிட ஏன் மிகக் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்; குறிப்பு: சிலுவை அணுகி வருவதற்கு முந்திய செய்திகள். மகளே, என் முந்திய செய்திகளைக் கண்டனம் செய்யும் எந்த ஒரு செய்தியும் தீமையிடமிருந்தே வருகிறது; பசாசு மீண்டும் ஒருமுறை உன்னைத் தடுத்து நிறுத்தவும் உன்னை அதைரியப்படுத்தவும் முயற்சி செய்கிறது; அன்பு மற்றும் சமாதானத்தின் அழைப்புகளைத் தாங்கி நான் இழந்த ஆன்மாக்கள் என்னிடம் திரும்பி வர வழிகாட்டுகிற எல்லா செய்திகளும் தந்தையிடமிருந்தும் என்னிடமிருந்துமே வருகின்றன என்று உன் இரட்சகராகிய நான் உனக்கு உறுதி கூறுகிறேன்; ஆகவே, அதைரியப்படாதே, என்னில் விசுவாசம் கொள்; உன் இதயத்தைக் கவலை கொள்ள செய்கிற எந்த செய்தியிலும் நம்பிக்கை வைக்காதே; நானே சமாதானம், நீ சமாதானம் உள்ளவளாக உணர வேண்டும்; அக்டோபர் 16, 1986. உனக்கு சமாதானம் உண்டாவதாக; நேசம் உள்ளவளே, இளைப்பாறு; இன்னும் அதிக சுமைகளை உன்மீது சுமத்திக் கொள்ளாதே; நீ எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறாய் என்பதை என்னால் உணர முடிகிறது; நான் உம்முடைய பிரசன்னத்தை உணர்ந்தேன்! இயேசுவே, உன் பிரசன்னத்தை நீர் வலியுறுத்திக் கொண்டிருந்தீரா? ஆம், நீ புரிந்து கொள்ளும்படி, நான் என் பிரசன்னத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தேன்; வசுலா, நான் உன் திறனை முழுமையாக அறிவேன்; அன்று நான் மிகவும் களைப்பாக இருந்தேன், ஆனாலும் வாசிப்பதையும் எழுதுவதையும் நிறுத்த என்னால் முடியவில்லை. இயேசுவின் பிரசன்னத்தை எல்லா இடங்களிலும் நான் உணர்ந்தேன். அவர் என்னிடம் ஏதோ சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். அக்டோபர் 22, 1986. கடவுளாகிய நான், உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்; மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; என்னில் விசுவாசமாயிரு; இரண்டு மாதங்களில் நான் சொல்வதை நீ தெளிவான விதத்தில் கேட்பாய்; குறிப்பு: நிறைவேறிய ஒரு முன்னறிவிப்பு. ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடைய குரலை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நீ விரும்புகிற ஆதரவை நான் உனக்குத் தருவேன்; உன்னை வழிநடத்துவதே என் நோக்கம்; என் சித்தப்படி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நீ பெருமளவுக்கு முன்னேற்றம் அடைவாய்; ஏனெனில் இதுவே என் சித்தம்; நானே உன் போதகர்; என் எல்லாப் போதனைகளும் உன் ஆன்மாவை ஒளிர்விக்கும்; என் அருகில் இரு; வசுலா, நீ துயரம் உள்ளவளாக உணரும் போதெல்லாம் என்னிடம் வா, நான் உன்னைத் தேற்றுவேன்; ஏனெனில் நீ என் நேசத்துக்குரியவளாக இருக்கிறாய்; என் குழந்தைகளில் யாரையும் நிர்பாக்கியமான நிலையில் காண ஒருபோதும் நான் விரும்புவதில்லை; அவர்கள் என்னிடம் வரவேண்டும்; நான் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; அக்டோபர் 23, 1986. வசுலா, எந்த வீட்டுக்கு நீ அதிகமாய் தேவைப்படுகிறாய்? நீயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இயேசுவே, எது அதிக முக்கியமானது, உம் வீடா, என் வீடா என்று நீர் என்னிடம் கேட்கிறீர் என்றால், "உம் வீடு" என்றுதான் நான் சொல்வேன்; தேர்ந்து கொள்ள வேண்டுமானால், உன் வீட்டைத்தான் நான் தேர்ந்து கொள்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; இயேசு மிக மகிழ்ச்சி அடைந்தவராகத் தோன்றினார்! சிறியவளே, நான் உன்னை வழிநடத்துவேன்; வா, என் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்செல்; நான் உனக்கு உதவி செய்வேன் என்பதை மறவாதே; நீ என் சீடப் பெண்ணாக இருப்பாய்; என்னை வெளிப்படுத்த நான் உனக்கு உதவுவேன்; நான் பரிசுத்தராய் இருக்கிறேன்; நான் பரிசுத்தராய் இருக்கிறேன்; ஆகவே, நீயும் பரிசுத்தமாயிரு, பரிசுத்த வாழ்வு நடத்து; நான் உனக்கு என் ஆதரவைத் தருவேன்; வசுலா, எனக்காக பணிபுரிய நீ சித்தமாய் இருக்கிறாயா? உன் பெயரை மறுபடியும் சொல்லும். இயேசு கிறிஸ்து; ஆம், நான் உமக்காக பணிபுரிவேன். நான் உன்னை நேசிக்கிறேன்; நீ விரும்பும்போது என்னைக் கூப்பிடு; கடவுளுக்காக வேலை செய்வது என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை உண்மையில் புரிந்து கொள்ளாமலே, நான் சம்மதித்துக் கொண்டிருந்தேன். நான் கடவுளை நேசிப்பதால், அவரை மகிழ்விக்க விரும்பினேன். என் இயலாமையை நான் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை! நான் சொல்வதைக் கேள். என் கதறல்களுக்குச் செவி கொடு, என் கதறல்களுக்குச் செவி கொடு, என் சிலுவையை உன்னால் காண முடிகிறதா? இந்தக் காட்சியை நிகழ்த்துபவர் இயேசுவாகிய நான்தான்; குறிப்பு: ஒரு பிரம்மாண்டமான இருண்ட சிலுவையை நான் கண்டேன். நான் அழைக்கிறேன், நான் உங்களை மதிப்பதால் துன்பப்படுகிறேன், என் பிரியமுள்ளவர்களே, நீங்கள் சிதறுண்டு இருப்பதையும், பசாசு உங்களுக்காக இட்டு வைத்துள்ள ஆபத்துகளை அறியாமல் இருப்பதையும் நான் காண்கிறேன்; நீங்கள் என்னை விட்டு இவ்வளவு தொலைவாக இருப்பதைக் கண்டு என் இருதயம் கடும் வேதனையால் கிழிக்கப்படுகிறது! ஒரு மாத காலமாக இயேசு தமது சிலுவையின் காட்சிகளை எனக்குத் தந்து கொண்டிருந்தார். நான் என் தலையை எங்கு திருப்பினாலும், எந்த திசையில் பார்த்தாலும், ஒரு பிரம்மாண்டமான இருண்ட பழுப்பு நிற சிலுவை நின்று கொண்டிருந்தது. நான் சாப்பிடும்போது, தட்டிலிருந்து என் கண்களை உயர்த்தினால், இந்த மிகப்பெரிய சிலுவை அங்கே இருந்தது. நான் என் கொசுவலைக்குள் இருந்து பார்த்தால், மீண்டும் சிலுவை தோன்றியது. நான் இன்னொரு அறைக்குள் உட்காரவோ, வேறு எதற்காகவோ போனால், சிலுவை என்னை பின்தொடர்ந்தது. அங்கே இருந்தது. ஒரு மாதமாக அது என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது போல இருந்தது. அதன்பின் மற்றொரு காரியம் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. எனக்கு நடந்து கொண்டிருக்கிற எல்லாமும் ஒருவேளை கடவுளிடமிருந்து வந்ததல்ல என்ற எண்ணம் தான் அது. ஆனால் அது பசாசிடமிருந்து வந்ததானால், அவன் எப்படி ஊமையாக இருக்க முடியும்? மக்கள் இதைப்பற்றி என்ன நினைப்பார்கள், எனக்கு என்ன நிகழும் என்பது பற்றி நான் அச்சப்படத் தொடங்கினேன். நான் பரிகசிக்கப்படுவேன்! மகளே, மகளே, சமாதானத்தில் வாழ்வாயாக! நான் சந்தேகப்பட்டேன். யார் இது? இயேசுவாகிய நான்தான். என் அருகில் நிலைத்திரு; நான் பல ஆண்டுகளாக உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறேன்; வசுலா, நீ என்னை நேசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்... இயேசுவே, நீர் முதல் முறை என்னை எப்போது அழைத்தீர்? நீ லெபனானுக்குப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்; உன் உறக்கத்தில் நான் உன்னை அழைத்தேன்; நீ என்னைக் கண்டாய்; நான் உன்னை அழைத்தபடி, என்னை நோக்கி உன்னை எப்படி இழுத்தேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? ஆம், எனக்கு நினைவிருக்கிறது. நான் மிகவும் அச்சத்திற்கு உள்ளானேன். அப்போது எனக்கு சுமார் 10 வயது. என்னை இழுத்த உம்முடைய வலிமையால் நான் அச்சப்பட்டேன். ஒரு பலமான நீரோட்டத்தைப் போல, சிறு காந்தத்தை இழுக்கிற காந்தத்தைப் போல, அந்த உணர்வு இருந்தது; நான் அந்த விசையை எதிர்த்து நிற்கவும், அதிலிருந்து என்னை இழுத்துக் கொள்ளவும் முயன்றேன். உம்மோடு ஒட்டிக்கொண்ட பின், நான் விழித்தெழுந்தேன். இயேசு, இந்தக் கனவை நினைவுபடுத்தியது எனக்கு விசித்திரமாக இருந்தது; என்னால் எப்படி அதை இன்னும் நினைவில் வைத்திருக்க முடிந்தது!