வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 21. பிப்ரவரி 14, 1987. புனித பெர்னார்தின் "மிகவும் இரக்கமுள்ள தாயே" என்ற ஜெபத்தை வாசித்த பிறகு புனித மாமரிக்கு ஒரு சிறு ஜெபம். எல்லா வழிகாட்டுதலும் கடவுளிடமிருந்தே வருகிறது; வசுலா, நான் சொல்வதை உன்னால் கேட்க முடிகிறதா? வசுலா, மீண்டும் கேள், இது நான்தான், புனித மாமரி; வசுலா, அஞ்சாதே; இது எல்லாம் உண்மையாகவே நிகழ்கிறது என்று உணர்வதில் உனக்கிருக்கும் சிரமங்களை நான் அறிவேன், ஆனாலும், கடவுளை நம்பும்படி நான் உன்னிடம் கேட்கிறேன்; உன் விசுவாசத்தை அதிகரி; குழந்தாய், அவர் உன்னில் பணியாற்றுகிறார்; அவருக்கு உன்னைக் கையளிக்க நீயே தடையாக இராதே, அவர் கரங்களில் உன்னை விட்டுவிடு அவர் உன்னிடம் கேட்பதைச் செய்; நான் உனக்கு உதவி செய்தபடி உன் அருகில் இருக்கிறேன்; சமாதானத்தோடு இரு, ஏனெனில் அவர் உன்னை வழிநடத்துகிறார்; வசுலா, நீ சோதனையை எதிர்த்து நிற்க இயலும்படி பலமுள்ளவளாகுமாறு, இயேசு உன்னை உருவாக்குகிறார்; அவர் உன்னைப் போஷிக்கிறார், உன்னிடம் குறைவுபடும் எல்லாவற்றையும் நிறைவு செய்கிறார்; மகளே, உன்னை அவரிடம் கையளிப்பதில் உனக்கு நீயே தடையாக இராதே; ஏன் ஞானம் உன்னை வளர்த்து வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்; இது எனக்காக மட்டுமில்லையா? இதெல்லாம், மற்றவர்களுக்கும் உரியதா? ஆம், நீ கடவுளின் ஊழியக்காரியாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு வருகிறாய்; கடவுளின் ஊழியக்காரியாக இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியாது. கடவுள் உனக்குப் போதித்திருக்கிறார், அவர் தம்மை நேசிக்க உனக்குக் கற்பித்திருக்கிறார்; அவரை நம்பு, ஏனெனில் அவருடைய செல்வங்கள் எண்ணற்றவை; அவருடைய இரக்கம் ஆழங்காண முடியாதது; வாக்குக் கெட்டாத கனிவோடு அவர் உன்னை நேசிக்கிறார், நேசமுள்ள கண்களோடு உன்னைக் கண்காணிக்கிறார்; ஒவ்வொரு விண்ணக வார்த்தையையும் என்றென்றைக்கும் உயிர் வாழ்கிறது; நான் உங்களை அதிகமாக நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நான் உனக்குக் கற்றுத் தருவேன், சமாதானமாய் இரு; பிற்பாடு; வசுலா, நான்தான் இயேசு; என்னைச் சந்திப்பதற்கு நான் உனக்குப் பலம் தந்து கொண்டிருக்கிறேன்; என்னோடு முன்னேறு, ஏனெனில் என்னால் தரப்பட்ட வார்த்தைகளை அநேகர் வாசித்து அவற்றால் பயனடையுமாறு அவற்றை ஸ்தாபிப்பேன்; மகளே, என்னால் தரப்படும் வழிகாட்டுதல் ஸ்தாபிக்கப்படும்போது, நீ என்னைச் சந்திக்க நான் உன்னை ஆயுத்தம் செய்வேன்; உன்னை என் அருகில் கொண்டிருக்க நான் ஏங்குகிறேன்; வசுலா, என்னைப் பார்; குறிப்பு: நான் இயேசுவின் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை நேராகப் பார்த்தார். இந்த முறையில் என்னைச் சந்திப்பது உனக்கு மகிழ்ச்சிதானா? ஆம், இந்த தனிப்பட்ட வரத்திற்கு நான் சற்றும் தகுதியற்றவள். வசுலா, நான் தருவதை ஏற்றுக்கொள், மிக ஈனமான ஆன்மாக்களுக்கும் கூட நான் தருகிறேன்; வசுலா, நான் ஞானத்தை அறிஞர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் கொடுக்காமல் குழந்தைகளுக்குக் கொடுக்கிறேன் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன்? ஏனெனில் குழந்தைகள் என் பலவீனமாக இருக்கிறார்கள்; அவர்கள் தங்களை உருவாக்க என்னை அனுமதிக்கிறார்கள்; சிறிதளவு தெரிந்தவர்களையும் ஒன்றுமே தெரியாதவர்களையும் தகுதியற்றவர்களையும் நான் தேர்ந்துகொண்டேன்; வசுலா, நான் உனக்குத் தேவையானதை தருவேன்; ஏனெனில் நான் செல்வமிக்கவன்; என்னோடு இருக்கும்போது, உனக்கு எதுவும் குறைவுபடாது; நான் உன்னை நேசிக்கிறேன்; நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நீ என்னை எவ்வளவு மகிழ்விக்கிறாய் என்பதை நீ உணர்கிறாயா? இறுதியாக, உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியை உணர்கிறேன்; காணாமற்போன தன் குழந்தையைக் கண்டுபிடித்ததில் ஒரு தகப்பன் அக்களிக்க மாட்டானா? நீ காணாமல் போயிருந்தாய், என் இருதயம் துயரத்தால் முழுவதுமாகக் கிழிக்கப்பட்டது; என்னை அவநம்பிக்கையில் விட்டுவிட்டு நீ வழி தப்பி அலைந்தாய்; நான் உன்னை தேடிச் சென்று உன்னைக் கண்டுபிடித்தேன்; அப்படி இருக்க, உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் எப்படி நான் மகிழாதிருப்பேன்? வசுலா, என் அருகில் நீ கற்றுக்கொள்வாய்; என்னை மகிமைப்படுத்த உனக்கு உதவுமாறு நான் எல்லா புண்ணியங்களையும் உனக்குக் கற்றுத் தருவேன்; என் குழந்தாய், நீதியின் பனித்துளியை உறிஞ்சிக்கொள்ள கற்றுக்கொள்; என்னை மகிமைப்படுத்த கற்றுக்கொள்; ஞானத்திடமிருந்து கற்றுக்கொள்; நான் உன்னை நேசிக்கிறேன்; இப்போது சமாதானமாய்ப் போ, நீ விரும்பும்போது என்னைக் கூப்பிடு; நாம் சேர்ந்து ஜெபிப்போம், நாங்கள் ஜெபித்தோம். இப்போது என் தோழியாய் இரு; என்னை உன் இதயத்தில் வைத்துக்கொள்; பிப்ரவரி 15, 1987. நான் உம்மை நேசிக்கிறேன். ஆனால் தவறான விதத்தில் நான் உம்மை நேசிக்கக்கூடும். எது சரி, எது தவறு என்று எனக்கு தெரியாது; நான் உம்மை ஆராதிக்கிறேன். வசுலா, நேசம் நேசம்தான்; எந்தக் கட்டுப்பாடுமின்றி நீ என்னை நேசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் உன்னை அன்யோனியமாக நேசிக்கிற உனது பரிசுத்த தந்தையாக இருக்கிறேன்; என்னை நெருங்கி வந்து அன்யோனியமாக என்னை நேசி; நான் உன்னுடன் அன்யோனியமாக இருக்க விரும்புகிறேன்; அஞ்சாதே, உன் நேசம் முழுவதும் எனக்கு வேண்டும்; வசுலா, நீ இன்று மனஸ்தாபப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் இப்போது உம்மிடம் மனம் வருந்த வேண்டுமா? ஆம், மனஸ்தாபப்படு, நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; குறிப்பு: நான் மனஸ்தாபப்பட்டேன். ஆம், மகளே, நான் உன் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறேன்; ஏனெனில் அவை நிறைய இருக்கின்றன; வசுலா, என் போதகர்களுக்கு மனஸ்தாபப்பட கற்றுக் கொடுத்தவர் நான்தான் என்பதை நீ அறிவாயா? அவை என் போதனைகள்; என் பிள்ளைகள் அவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் செய்வதற்கான அதிகாரத்தை நான் அவர்களுக்கு தந்திருக்கிறேன்; குழந்தாய், நானே அதை எழுதினேன்; குறிப்பு: பாவ சங்கீர்த்தனம் செய்வது என்ற வார்த்தையை அழித்துவிட நான் முயன்றேன். ஆனால் என் கரம் கடவுளால் தடுக்கப்பட்டது. நான் பாவ சங்கீர்த்தனத்தை எதிர்ப்பவளாக இருந்தேன். வசுலா, எனக்கு எதையும் மறுக்காதே; நான் உன்னிடமிருந்து பல காரியங்களை எதிர்பார்ப்பேன்; உன் கடவுளும் இரட்சகருமானவரைப் பின் செல்ல நீ ஆயத்தமாய் இருக்கிறாயா? அது உம்மிடமிருந்து வருகிறது என்று நான் காண்பது வரையிலும், நான் உம்மைப் பின் செல்வேன், உம்மை நான் அன்பு செய்கிறேன் என்பதால் நான் உம்மை பின் செல்வேன். வசுலா, ஒருபோதும் எனக்கு அஞ்சாதே, என்னை நம்பு; இன்னும் பெரிய துன்ப சோதனைகளை எதிர்கொள்ள நான் உன்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்; என்னைப் பின் செல்ல நீ தயாராய் இருக்கிறாயா? உம்முடைய உதவியைக் கொண்டு நான் தயாராய் இருப்பேன். அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னை ஆதரித்தபடி உன் அருகில் இருக்கிறேன்; மகளே, உன்னை முழுவதுமாக என் கரங்களில் விட்டுவிடு; நேசமே, ஆன்மாக்களைக் குணப்படுத்த நான் உன்னைப் பயன்படுத்த விடு; அன்பின் சங்கிலிகளைக் கொண்டு என்னோடு உன்னைக் கட்டி வைத்துக்கொள்ள விடு; நீ முழுவதும் என்னுடையவளாக இருப்பதாக என்னை உணரவிடு; உன் சிருஷ்டிகராகிய நான் உன்னைச் சொந்தமாகக் கொண்டிருக்க விடு; உன் நேசத்திற்காக நான் ஏங்கி இருக்கிறேன்; என் நேசம் இப்போது உன் இதயத்தைத் தூண்டுவதாக; முழுவதும் என்னுடையவளாக இரு; நான் உனக்காக ஏங்கினேன், ஏங்குகிறேன்; வசுலா, நீ எனக்காக ஏங்க மாட்டாயா? ஏங்குகிறேன். அல்லது ஏங்குவதாக நான் நினைக்கிறேனா? வசுலா, நேசமே, உன்னை எனக்குத் தருவதன் மூலம் நீ என்னை மகிமைப்படுத்துவதோடு உன்னையும் சுத்திகரிப்பாய்; இப்போது நான் என்னோடு உன்னை சேர்த்துக் கட்டுகிறேன்; மகா உன்னத தேவனாகிய நான் இறுதிவரை உன்னோடு இருப்பேன்; உண்மையாகவே நான் உனக்குச் சொல்கிறேன், நீ ஒன்றுமற்றவள், ஆதரவற்றவள், பரிதாபத்திற்குரியவள், பாவமுள்ளவள் என்று அறிந்தே தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; ஆனாலும், உனது எல்லாக் குறைகளையும் மீறி நான் உன்னை நேசிக்கிறேன்; உங்கள் அக்கிரமங்களையும் மீறி நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; ஆண்டவரே, நீர் இப்போது என்னை கட்டினீரா? ஆம்; கட்டிவிட்டேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; நேசத்தின் காரணமாகவே நீ எப்போதும் என் அருகில் இருக்க வேண்டும் என ஆசிக்கிறேன்; நேசமே, நான் சொல்வதைக் கேள்; என் கட்டுக்கள் அன்பின் கட்டுகளாக இருக்கின்றன; அவை புனிதத்தின் கட்டுகள்; நான் உன்னை நேசிக்கிறேன், என் குழந்தைகளை நான் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை என் குழந்தைகள் புரிந்து கொள்வார்களாக; என் இனிமைக்கு வரம்புகள் இல்லை; என் நேசம் என்னை ஏற்றுக் கொள்கிற ஒவ்வொரு ஆன்மாவையும் எரிக்கிற தீச்சுவாலையாக இருக்கிறது; மகளே, இப்போது போ, நானே உன்னை நடத்துகிறேன் என்பதை நினைவில் கொள்; உன்னை சுத்திகரித்தவர் யார் என்பதை நினைவில் கொள்; குறிப்பு: என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே நான் தயங்கினேன். மறந்துவிட்டாயா? நானே உன்னை அபிஷேகம் செய்யவில்லையா? ஆம், ஆண்டவரே, 13 ஆம் தேதியன்று. வசுலா, நானே என் அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் உனக்குத் தந்தேன்; குழந்தாய், உன்னைச் சுத்திகரிப்பதற்கான நேரத்தை நானே தேர்ந்தெடுத்தேன் என்பதை நினைவில் வை; குறிப்பு: உண்மை, ஏனெனில் கோவிலில் மற்றவர்களோடு பாடிக்கொண்டிருக்கையில் இயேசு தேவநட்கருணைப் பேழையில் இருந்ததை நான் முழுவதுமாக உணர்ந்தேன். அவரே எனக்கு திவ்ய அப்பத்தையும் பரிசுத்த திராட்சை ரசத்தையும் தந்தார். என்னை நேசி, நாம் சேர்ந்து பணி செய்வோம்; இந்தக் கோவிலில் நான் முதல் தடவை திவ்விய நன்மை வாங்கியதை இது எனக்கு நினைவுபடுத்தியது. இது ஞான ரீதியாகச் செய்யப்பட்டது. நான் குருவாகிய கார்ல் உடன் இருந்தேன். அவரிடம் நன்மை வாங்க கடவுளே என்னை அவரிடம் அனுப்பி இருந்தார். மறைபொருளான முறையில் இது கேட்கப்பட்டது என்பதால் எனக்கு நன்மை தரலாமா, கூடாதா என்பது பற்றி அவர் நிச்சயம் இல்லாமல் இருந்தார். அதன்பின் கால் என்னிடம் தாம் இது பற்றி கடவுளிடம் கேட்பதாகவும், ஜெபிப்பதாகவும், ஆனால் தாம் என்ன சொல்கிறார் என்பதை நான் கேட்கும்படி சத்தமாக ஜெபிக்கப் போவதில்லை என்றும், கடவுள் மூலம் என் கரம் பதில்களை எழுத நான் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். கடவுள் இப்படி எழுதினார். "நான் தருவேன்;" நான் கார்லிடம் அவர் என்ன கேட்டார் என்று கேட்டேன். அவர் அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டுமா என்று தாம் கேட்டதாக அவர் சொன்னார். அவள் செய்வாள் என கடவுள் பதிலளித்தார். குறிப்பு: இந்த முறை அசாதாரணமான விதத்தில் கார்ல் எந்தவிதத் தயக்கமும் இன்றி நான்கு நாட்களில் நன்மை வாங்க வரும்படி என்னிடம் கூறினார். இதற்கிடையே, மனஸ்தாபப்படுமாறு கடவுள் என்னிடம் கேட்டார். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே என்ன சொல்வதென அவர் எனக்கு விளக்கினார். நான் அவரோடு அப்படியே செய்தேன். அதன்பின் மறுநாள் நான் திவ்ய நன்மை உட்கொண்டேன். பிப்ரவரி 16, 1987. கடவுளன்றி என்னால் வாழ முடியாது என்று உண்மையாகவே நான் உணரத் தொடங்கினேன். அவர் உண்மையாகவே என்னை இணைத்துக் கொண்டார் என்று நான் நினைக்கிறேன். குழந்தாய், நான் யாவே; இது நான்தான், என்னிடம் திரும்பு; நான் உன்னை நேசிக்கிறேன்; நான் உன்மட்டில் கொண்டுள்ள இந்த மாபெரும் நேசத்தின் காரணமாக உன்னை ஏந்திக் கொண்டிருக்கிறேன்; அஞ்சாதே, குழந்தாய்; நான் சொல்வதைக் கேள்; நான் உன்மீது கொண்டுள்ள மேலான நேசத்தின் காரணமாக, நான் என்னோடு உன்னைக் கட்டுகிறேன்; என் மீது சாய்ந்துகொள், உனக்கு நான் தேவையாய் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நீர் இவ்வளவு அதிகமாக என்னை நேசிக்கிறீரா? ஓ, மகளே, என் நேசத்தை நீ உணர்ந்ததில்லையா? குறிப்பு: ஆம், நான் அதை உணர்ந்திருக்கிறேன் என்பது உண்மைதான். இது நம்ப முடியாதது. உன்மீது எனக்குள்ள நேசம் உன்னைச் சுட்டெரிக்க விரும்புகிறது; நீ என்னிடம் எவ்வளவு பற்றுள்ளவளாக இருக்கிறாய் என்பதை உணர்வதில் நான் மகிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்; என் பங்கிற்கு வற்றாத அன்போடு நான் உன்னை நேசிக்கிறேன்; நான் ஒருபோதும் உன்னை விட்டு அகலமாட்டேன்; ஆனால் நீயும் என்னை விட்டு அகலமாட்டாய் என்று நான் உறுதி செய்துவிட்டேன்; நம் ஐக்கியத்தை நான் உறுதிப்படுத்தினேன்; பார்த்தாயா?... உன்னை வெற்றி கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்; நாம் என்றென்றும் ஐக்கியப்பட்டிருக்க வேண்டுமென நான் ஆசித்தேன்; உனக்கு நான் தேவையாய் இருக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாய், எந்தக் கட்டுப்பாடும் இன்றி உன்னை நேசிக்கவும், உன்மீது அரசாளவும் என்னை நீ அனுமதிக்க வேண்டும் என்றும், நீ என்னோடும் நான் உன்னோடும் என்றென்றைக்கும் கட்டுண்டிருக்கவும் வேண்டும் என்றும் நான் ஆசிக்கிறேன்; உன்னைப் படைத்தவரும் நானே, உன்னை பராமரித்தவரும் நானே, உன்னை அர்ச்சித்தவரும் நானே; முதலாவதாக, உன்மீது கண்களைப் பதித்தவரும் நானே; என் பரிசுத்த ஆவியைக் கொண்டு உன்னை நிரப்பியவரும் நானே; வசுலா, உன்னை வளர்த்த உன் சர்வேசுவரனாகிய யாவே நானே; என்னோடு உன்னை இணைத்துக்கொள்ள நான் பயன்படுத்திய கட்டுகள் நித்தியமானவை; நான் மகா உன்னதராக இருப்பதால், என்னிடமிருந்து உன்னைப் பிரித்துக் கொள்ள இயலாதவளாக நீ இருப்பாய்; ஆண்டவரே, நான் உம்மை நேசித்தாலும், இது அச்சம் தருவதாக உள்ளது! உம் வல்லமையும் ஞானமும் மிக மேலானவையாக உள்ளன! ஏன், வசுலா, நீ எதற்காக அஞ்ச வேண்டும்? நான் உன் நேச ஆண்டவர் அல்லவா? நான் உன்மீது அக்கறையாய் இருப்பேன்; நீ வேதனையில் இருந்தால் நான் அதைத் தணிப்பேன்; என் ஆசீர்வாதங்களால் உன்னை மூடுவேன்; உன்னிடம் குறைவு படுவதை நான் தருவேன்; நானே அளவற்ற செல்வமாக இருக்கிறேன்; நீ என்னைக் கண்டு பயப்படத் தேவையில்லை; நாமே பூலோகத்தின் அஸ்திவாரங்களைத் தாங்குகிறவர்; நான் விரும்புகிற எதையும் செய்ய எனக்கு சுதந்திரம் கொடு; மிக மென்மையானவளும் பலவீனமானவளும் ஆகிய உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; நான் விரும்புகிறபடி உனக்கு செய்ய உன் இதயம் என்னை அனுமதிக்கும் என்று எனக்குத் தெரியும்; அஞ்சாதே, நானே உன் பரலோகப் பிதா; எந்த மனித புத்திக்கும் அப்பாற்பட்ட விதமாக நான் உன்னை நேசிக்கிறேன்; நான் யாவே, இதற்கு முன் நீ இதை கேட்டதில்லை என்றால், இப்போது நான் உனக்குச் சொல்கிறேன்; நான் பிரமாணிக்கமுள்ளவர் என்று அறியப்பட்டவர்; என் வார்த்தை உறுதி உள்ளது; குழந்தாய், என் வார்த்தை எழுதப்படும்படி நான் உன்னை மரணத்திலிருந்து உயிர்ப்பித்தேன்; என் பணிப்பெண்ணாக இருக்குமாறு நான் உன்னை வளர்த்து வந்திருக்கிறேன்; நீ என் பணிப்பெண்ணாக இருக்க வேண்டியுள்ளதால், நீ உருவாக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாய்; நான் எப்படி உணர்கிறேன், எப்படி செயலாற்றுகிறேன், என் நேசம் எப்படி இதயங்களைத் தூண்டி எழுப்புகிறது என்று நீ கற்றுக்கொள்ள வேண்டும்; வேறு எப்படி என் நேச குழந்தைகளிடம் சொல்ல உன்னால் முடியும்? வா, நான் உனக்குக் கற்பித்தபடி, என் பிரசன்னத்தை உணர்வாய்; சிறியவளே, உன்னை நான் நேசிக்கிறேன்; என்னை பகுத்துணர்வாய்; நீ என்னோடு அன்யோனியமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; வசுலா, நாளைக்கு என்னோடு இருப்பது எப்படி என்று என் குழந்தைகளுக்குக் கற்பிக்கிற ஒரு செய்தியை நான் உனக்கு எழுதத் தருவேன்; இப்போது போய் உன் மற்ற கடமைகளை நிறைவேற்று; சமாதானமாய்ப் போ; பிற்பாடு இயேசு வந்தார்: வசுலா, எழுது, நீ இப்போது என்னோடு இணைக்கப்பட்டிருக்கிறாய்; நீ என்னோடு பணி செய்வாய், என்னோடு துன்புறுவாய், எனக்கு உதவி செய்வாய், ஆம், என்னிடம் உள்ள எல்லாவற்றையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்வேன்; உன் பங்கிற்கு நீயும் அப்படியே செய்வாய்; இணைந்திருப்பது என்பது என்றென்றைக்கும் சேர்ந்திருப்பதாகும்; ஏனெனில் என் கட்டுக்கள் நித்தியமானவை, என் உயர்வான நேசம் என்றென்றைக்குமாக உன்னை என்னோடு கட்டுகிறது; என் நேசம் கல்லாளான இதயங்களையும் கூட தூண்டி எழுப்பி, அவற்றைப் பற்றி எரியச் செய்து, தன்னுள் அவற்றைக் கிரகித்துக் கொள்கிறது; மகளே, நான் வெற்றி பெற்றிருக்கிறேன்; நீ அஞ்சத் தேவையில்லை, நான் உன் இருதயத்தை வென்றுவிட்டேன்; நேசமே, நீ என்றென்றும் என்னுடையவளாய் இருப்பாய் என்பதை நான் உறுதி செய்துள்ளேன்; வசுலா, என் இருதயத்தின் ஆழங்களுக்குள் உன்னைத் திணித்துக்கொள்ள நான் எவ்வளவு ஏங்கினேன்; என் நேசத்தின் சுவாலைகள் அனைத்தும் உன்னை முழுமையாக எரித்து, உன் கடவுளாகிய எனக்காக நீ முழு பரவச நிலையில் இருக்க செய்வதாக; இதை செய்யும் அளவுக்கு நீர் என்னை நேசிக்கிறீரா? நான் உனக்காக என் உயிரைக் கையளிக்கவில்லையா? நேசத்தின் காரணமாக நான் என் உயிரைக் கையளித்தேன்; உன் இரட்சணியத்திற்காக, அன்பால், நான் என்னைப் பலியாக்கினேன்; அன்பால் என் இரத்தத்தை உனக்காகச் சிந்தினேன்; இப்போது, நீ என்னோடு கட்டுண்டிருப்பதை நான் உறுதி செய்துள்ளேன்; ஏன்? ஏனா? நான் முழுப் பிரமாணிக்கம் உள்ளவர் என்பதை நீ மறந்துவிட்டாயா? உன்னை என்னோடு சேர்த்து கட்டிக்கொண்டதால், நீயும் எனக்குப் பிரமாணிக்கமாக நிலைத்திருப்பாய் என்பதில் நான் நிச்சயமாய் இருப்பேன்; இப்போது நாம் இணைந்திருப்பதால், நாம் தொடர்ந்து சேர்த்து உழைப்போம்; சாத்தானின் தீப்பிழம்புகளால் விழுங்கப்பட வேண்டி இருக்கிற அநேக ஆன்மாக்களைக் குணப்படுத்த, நீ என் பேரில் கொண்டுள்ள நேசத்தை நான் பயன்படுத்துவேன்; நீயும் நானும் இந்த ஆன்மாக்களுக்கு உதவப் போகிறோம்; நீ செய்ய வேண்டியதெல்லாம் பக்தி ஆர்வத்தோடு என்னை நேசிப்பது மட்டுமே; நான் உன்னிடம் வந்து என் சிலுவையை உன்னிடம் ஒப்படைக்கிற நேரங்கள் வரும்; ஆனால் நான் ஒன்றுமில்லாமையாக இருக்கிறேன்! வசுலா, நீ ஒன்றுமில்லாமையாகவே இரு; உனக்குக் குறைவு படுகிற எல்லாமுமாக நானே இருப்பேன்; நான் போகும் இடமெல்லாம் நீ என்னைப் பின்தொடர்வாய்; ஒருபோதும் தனியே இருக்க மாட்டாய்; நீ இப்போது என்னோடு இணைக்கப்பட்டிருக்கிறாய்; குறிப்பு: எழுதிக்கொண்டிருந்தபோது, நான் இப்போது ஒன்றுமில்லாமையாகவே நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் ஏன் சொல்லுகிறார் என்று நான் வியந்து கொண்டிருந்தேன். நான் துரிதப்பட வேண்டும், மாற வேண்டும், அதிக பலமுள்ளவளாக வளர வேண்டும் என்றெல்லாம் அவர் கூறியபோது, அவர் என் சிந்தனைகளை வாசித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் உடனே பதிலளித்தார். அடுத்த வாக்கியம்: வசுலா, ஆன்ம வளர்ச்சி பெறு, ஏனெனில் என்னாலும் என் தந்தையாலும் தரப்படுகிற எல்லாச் செய்திகளையும் பரப்புவது உன் வேலை; ஞானம் உனக்குக் கற்பிக்கும்; ஆகட்டும், தந்தையே. நீ தந்தாய் என்று என்னை அழைப்பதைக் கேட்பது எவ்வளவு அழகாய் இருக்கிறது! தந்தாய் என்ற இந்த வார்த்தையை உன் உதடுகளிலிருந்து கேட்பதற்கு நான் ஏங்கினேன்; குறிப்பு: அந்த இரவில் ஜெபிக்கும் போது, தந்தாய் என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இறைவா என்று அவரை அழைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன். ஏன் என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. என் ஜெபங்களில் நான் அதிக சம்பிரதாயமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். பிப்ரவரி 17, 1987. வசுலா, ஏன் என்னைத் தந்தாய் என்று அழைப்பதைத் தவிர்க்கிறாய்? வசுலா, தந்தாய் என்று அழைக்கப்படுவதை நான் நேசிக்கிறேன்; குறிப்பு: இசை ஒன்பதாம் அதிகாரம், வசனம் ஐந்து. நானே மனுக்குலம் முழுவதற்கும் தந்தையாக இருக்கிறேன்; தந்தாய், நான் உம்மை நேசிக்கிறேன்; நானும் உன்னை நேசிக்கிறேன்;