வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 33. மே 16, 1987. நேற்று இரவு, ஒரு விருந்து முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நான் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றேன். அப்போது தூப நறுமணம் என் மூக்கை மீண்டும் துளைத்தது. நான் புரிந்துகொண்டேன். வசுலா, நீ தூபத்தின் நறுமணத்தை முகரும்போது, அது இயேசு கிறிஸ்துவாகிய நான்தான்; என் பிரசன்னத்தை நீ உணர வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; வசுலா, நான் கவனம் சிதறும் அளவுக்கு, அளவு கடந்த விதமாக உன்னை நேசிக்கிறேன்; அந்தோ! என் இருதயத்தில் பொங்கி வழிகிற இந்த அன்பு, பற்றி எரிகிற அன்பின் ஆர்வமிக்க தீச்சுவாலை மிகக் குறைவாகவே புரிந்துகொள்ளப்படுகிறது; அதிலிருந்து முகந்து கொள்ள வருபவர்கள் மிகச்சிலரே... மிகச்சிலர் மட்டுமே... இயேசுவே, அநேக மக்கள் உம்மை அணுகி வருவது எப்படி என்று அறியாமல் இருக்கிறார்கள். இதை நான் நிச்சயமாகச் சொல்வேன். அவர்கள் என்னிடம் வந்து, என்னோடு பேசலாம்; அவர்கள் சொல்வதை நான் கேட்கிறேன்; எந்த ஒரு உரையாடலையும் மணிக்கணக்காக என்னால் ரசிக்க முடியும்; அவர்கள் தங்கள் நண்பர்களில் ஒருவராக என்னை மதிக்கும்போது, அது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி தருகிறது; நேற்றிரவு, ஒரு மனிதர் என்னிடம் எல்லாப் பெண்களும் மதலேன்களைப் போல் இருக்க ஆசிக்கின்றனர் என்று சொன்னார். இல்லை, எல்லோரும் அல்ல; சரி, உம்மை நேசிப்பவர்கள் ஒருவேளை அப்படி இருக்கலாம். அப்படி இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்; இயேசுவே, நான் விரைந்து செல்ல வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்கே? கீழே அடுப்பைக் கவனிக்க. குறிப்பு: நெருப்புப் பற்ற வைத்திருந்த அடுப்பை நான் மறந்து போயிருந்தேன். அப்படி என்றால், வா, நாம் போகலாம்; இயேசுவே, நீர் என்னிடம் வருவதற்கு முன், ஒரு புராணக் கதையைப் போல், உம்மைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் எவ்வளவு நிஜமானவர் என்பதை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. என் கண்களில் நீர் வெகுதூரத்தில் இருந்தீர், ஒரு புத்தகத்தில் உள்ள கதையைப் போல! எனக்குத் தெரியும், வசுலா, எனக்குத் தெரியும், நான் இன்னமும் கூட அநேகருக்கு ஒரு புராணக் கதையாகத்தான் இருந்து வருகிறேன்; நாம் அடுத்த முறை சந்திக்கும் போது, கெத்சமனியில் என்னைப் பார். அந்த இரவில் நான் அனுபவித்த கடும் வேதனைகளையும், என் துன்பங்களையும், அச்சங்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்; மகளே, வா, உன்னில் நான் இளைப்பாற அனுமதி; மறுநாள். வா, வந்து நான் உனக்குச் சொன்ன இடத்தில் என்னைப் பார்.; ஓ, கெத்சமனியே! அச்சங்களையும், கடும் வேதனைகளையும், குருத்ரோகங்களையும், கை விடுதல்களையும் தவிர வெளிப்படுத்த உன்னிடம் வேறு என்ன இருக்கிறது! கெத்சமனியே! நீ மக்களிடமிருந்து தைரியத்தைப் பறித்துவிட்டாய்; உன்னுடைய அசைவற்ற சூழலில் என் அவஸ்தைகளை நித்தியத்திற்குமாக அந்தரத்தில் தொங்கவிட்டு விட்டாய்; கெத்சமனியே, இதுவரை நீ வெளிப்படுத்தாத எதை வெளிப்படுத்தப் போகிறாய்? பரிசுத்தத்தனத்தின் அசைவற்ற நிலையில் உன் கடவுள் காட்டிக் கொடுக்கப்படுவதை நீ கண்டாய்; நீ என்னைக் கண்டாய்; நேரம் வந்திருந்தது; வேதாகம வார்த்தைகள் நிறைவேற வேண்டியிருந்தது; மகளே, அநேக ஆத்துமங்கள், நான் வெறுமனே ஒரு புராணக் கட்டுக்கதை என்பது போலத்தான் என்னை விசுவாசிக்கின்றன என்பது எனக்குத் தெரியும்; நான் கடந்த காலத்தில் மட்டுமே இருந்தேன் என்று அவர்கள் நம்புகிறார்கள்; அநேகருக்கு நான் இப்போது காலத்தாலும், பரிணாம வளர்ச்சியாலும் மறைக்கப்பட்டிருக்கிற ஒரு கடந்து போகிற நிழலைத் தவிர வேறு ஒன்றுமில்லை; நான் சரீரத்தோடு பூமியின் மீது இருந்தேன் என்றும், இப்போதும் உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்றும் வெகு சிலர் மட்டுமே உணர்கிறார்கள்; நடந்து முடிந்தவையும், இனி நடக்க இருப்பவையுமாகிய எல்லாம் நானே! அவர்களுடைய அச்சங்களை நான் அறிவேன்; அவர்களுடைய கடும் வேதனைகளை நான் அறிவேன்; அவர்களுடைய பலவீனங்களை நான் அறிவேன்; கெத்சமனியில் இந்த பலவீனங்களை எல்லாம் நான் காணவில்லையா? மகளே, அன்பு கெத்சமனியில் ஜெபித்தபோது, ஓராயிரம் பேய்கள் நடுக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டன; அச்சம் கொண்ட பசாசுகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தன; நேரம் வந்துவிட்டது; அன்பு, அன்பை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தது; ஓ, கெத்சமனியே, காட்டிக் கொடுக்கப்பட்டவரின் சாட்சியே, கைவிடப்பட்டவரின் சாட்சியே, எழுந்து சாட்சியம் கூறு, அத்தாட்சி கொடு; மகளே, யூதாஸ் என்னைக் காட்டிக் கொடுத்தான்; ஆனால் யூதாசைப் போல இன்னும் எத்தனை பேர் என்னை இன்னும் காட்டிக் கொடுக்கிறார்கள்! அவனது முத்தம் அநேகருக்கு மத்தியிலும் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கும் பரவும் என்று நான் அந்நேரம் அறிந்திருந்தேன்; அந்த முத்தம் மீண்டும் மீண்டும் எனக்குத் தரப்பட்டு, என் பாடுகளைப் புதுப்பிக்கும், என் இருதயத்தைப் பிளக்கும்; வசுலா, நான் ஆறுதல் படுத்தப்படுமாறு, வா; உன் இதயத்தில் இளைப்பாற என்னை அனுமதி; மறுநாள். வசுலா, நீ எழுதுவாயா? ஆம், இயேசுவே, அது உமக்கு விருப்பமானால். மகளே, என் கெத்சமனி வாதைகளில் என்னை நேசி; என்னவர்களில் ஒருவனால், என் நேசர்களில் ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன்; இன்று என் கடந்த கால வாதைகளை நினைவுபடுத்தும் அவமானங்களை நான் இன்னமும் பெற்றுக் கொண்டிருக்கிறேன்; என் இருதயம் வீங்கி கசப்பால் நிரப்பப்படுகிறது; எனக்குப் பிரச்சனைகள் இருந்தன. திடீரென, தொடர்ந்து எழுதும் நம்பிக்கை என்னிடம் குறைந்து போயிற்று. இயேசுவா? நான்தான்; சிறியவளே, எழுது; என் அவஸ்தையின் வியர்வை பெரிய இரத்தத் துளிகளாக என்னிடமிருந்து வெளியே பொங்கி வந்தது; நான் திடீரென்று, தீய ஆவியால் கிட்டத்தட்ட சோதிக்கப்பட்டுவிட்ட அந்த நேரத்தை நினைவு கூர்ந்தேன்... வெட்கப்பட்டேன். பலவீனம் என்னை ஈர்க்கின்றது; ஏனென்றால், நான் உனக்கு என் பலத்தைத் தர முடியும்; வா, உன் அன்பை எனக்குக் கொண்டு வா. என் மீது சாய்ந்துகொள்; நான் சாய்ந்து கொண்டேன். ஆம்! அப்படித்தான்! இயேசு மகிழ்ச்சி அடைந்தார். இங்கே, என்னிடமிருந்து உணவு அருந்து, என் இருதயத்திலிருந்து உன் இதயத்தை நிரப்பிக்கொள்; என்னை நேசி. என்னைப் பற்றி நினை, என்னவளாக இரு, முற்றிலும் என்னவளாக இரு; என்னை ஆராதி, என்னை மட்டுமே ஆராதி; என்னை ஏற்றுக்கொள்ள நான் உன்னை அழைக்கிறேன், ஆம், சிறிய வெண்ணிற திவ்விய அப்பத்தில்.. வந்து என்னைப் பருகு; தூய்மையாக்கிக்கொள்! நான் உன்னை நேசிக்கிறேன்; நீ என்னை ஏற்றுக்கொள்ளும்படி நான் பார்த்துக் கொள்வேன்; ஒருபோதும் என்னை மறுதலியாதே! என்னை விரும்பு, என்னை மட்டுமே விரும்பு; திவ்விய நற்கருணைப் பேழையில் நான் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பேன்; நான் உனக்குக் கற்றுத் தந்துள்ளது போல, உன் ஆன்மாவின் கண்களால், நீ என்னைக் காண்பாய்; இயேசுவே, உம் செயலில் குறுக்கிட்டது என் தவறுதான். நீர் தொடர்ந்து பேச விரும்புகிறீரா? விரும்புகிறேன்; எனக்குச் செவி கொடு; அந்த இரத்தத் துளிகளை மண் உறிஞ்சிக் கொண்டது; ஆனால் இன்று மண் முன் எப்போதையும் விட அதிகமாக வறண்டிருப்பதால், அதற்கு நீர் பாய்ச்சுவது தேவைப்படுகிறது; அது சமாதானத்தை ஆசிக்கிறது, அன்பிற்காகத் தாகமாய் இருக்கிறது; இயேசு திடீரென்று பேசுவதை நிறுத்திக் கொண்டார். என்னைத் துயரப்படுத்தாதே; மாறாக, நீ மீண்டும் என்னோடு ஜெபிப்பாயா? என்னை நேசி, வசுலா; வா. "ஓ, பிதாவே! நிறைவேற்றப்பட வேண்டியதை நிறைவேற்றும்; உமது வார்த்தைகள் உமது குழந்தைகளின் இருதயங்களை ஊடுருவி, ஆசீர்வதித்து, தூய்மையாக்குவனவாக; பிதாவே, உம் இருதயம் விரும்புகிறபடி செய்யும்; உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக, ஆமென்;" எனக்காகத் தொடர்ந்து வேலை செய்ய நீ சித்தமாய் இருக்கிறாயா? நான் அப்படிச் செய்வது கடவுளுக்குச் சித்தமானால், நான் அவருக்காகத் தொடர்ந்து வேலை செய்வேன். இது என் சித்தம்; அப்படியானால், நான் தொடர்ந்து வேலை செய்வேன். இருப்பினும், என்னுடைய இயலாமையை மறந்து விடாதீர். உன் இயேசுவாகிய என் மீது முழுமையாகச் சாய்ந்துகொள்; நீ எவ்வளவு ஆதரவற்றவளாக இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்; என்னை முழுமையாகச் சார்ந்திருக்கும் ஓர் எளிய குழந்தையை என்னோடு கொண்டிருப்பதை மட்டும்தான் நான் விரும்பினேன்; இயேசுவா? நான்தான்; உமது கெத்சமனிச் செய்தி முடிந்துவிட்டதா? இல்லை; நான் தொடர்வேன்; என் குழந்தைகள் உயிர்ப்பிக்கப்பட்டு, நான் அவர்கள் மத்தியில் இருக்கிறேன் என்பது அவர்களுக்குக் காட்டப்பட வேண்டும்; நான் ஆசீர்வதித்துள்ள என் செய்தியைக் கொண்டு அவர்கள் என்னைப் பார்ப்பார்கள், உணர்வார்கள்; என் நேசத்திற்குரியவர்களுக்காக இயங்குகிற என்னிடம் அநேகர் திரும்பி வருவார்கள்; இயேசுவே, நான் எப்படி எதையாவது செய்ய இயலும்? தம் குழந்தைகளுக்குத் தம் உதவி தேவைப்படும்போது, ஒரு தந்தை சாலையைக் கடக்க அதற்கு உதவி செய்ய மாட்டாரா? அப்படியே, இறுதி வரைக்கும் நான் உனக்கு உதவி செய்வேன்; உமது செய்தியைப் பரப்புவதன் மூலம் நான் சரியான செயலை செய்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. நான் தவறானதைச் செய்து கொண்டிருக்கிறேனா? இல்லை; நான் என் அப்பத்தை உனக்குக் கொடுத்தது போலவே, நீ அதை மற்றவர்களுக்குத் தந்து கொண்டிருக்கிறாய்; எனது அப்பம் இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும்;
மே 17, 1987. நான் புனித மிக்கேல் அதிதூதரின் ஜெபத்தை வாசித்தேன். அடுத்ததை படி; நான் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்பட்டவளாக, புனித பெர்னார்து எழுதிய மிகவும் இரக்கமுள்ள தாயே, புனித மாமரி என்ற ஜெபத்தை வாசித்தேன். என் நண்பர்கள் செய்திகளை வாசித்து மீண்டும் கடவுளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும்போது, சிலர் கடவுளிடமிருந்து திரும்பி வந்தார்கள். சிலர் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். சில சமயங்களில் துர்பாக்கியமான விதத்தில் அவர்களுடைய மகிழ்ச்சியில் என்ன நிகழ்கிறது என்றால், அவர்கள் அது பற்றி ஏதாவது ஒரு குரு- நண்பரிடம் பேசுவார்கள். அவரோ, அது கடவுள்தான் என்று நம்ப வேண்டாம் என்று எச்சரித்து விடுவார். உண்மையில், இங்கே என் எழுத்துக்களைப் பற்றி அறிந்திருக்கிற நான்கு குருக்களில் இருவர் என்னை அதைரியப்படுத்தினார்கள். இருவர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். ஆனாலும், என்னையும் மற்றவர்களையும் அதைரியப்படுத்தி அந்தக் குருக்கள் இருவரும் முதலிலிருந்து முடிவு வரை வாசித்துவிட்டு, அதற்குப் பின் முடிவு செய்ய வேண்டும் என்றே நான் விரும்பியிருப்பேன். அதன்பின் அவர்கள் அதை ஒன்றுமில்லாமையாக காண்பார்கள் என்றால், ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்று அவர்கள் என்னிடம் சொல்லி விளக்க வேண்டும். அதை வாசித்து அறியாமலும், ஒரு தடவைக்கு மேல் என்னோடு அது பற்றி விவாதிக்காமலும், அவர்கள் எப்படி இதைப்பற்றி கருத்துச் சொல்ல முடியும்? கடவுளின் தீச்சுடரைக் கொண்டு உன் இதயத்தை நிரப்பிக்கொள்; நான் உன்னை நேசிக்கிறேன்; நேசத் தாயாரே, கடவுளின் செய்தி அதைக் கடைபிடிக்காமலும், வாசிக்காமலும் இருக்கிற மனிதர்களாலும் கூட காலால் மிதிக்கப்படலாம் என்று நான் பயப்படுகிறேன்! பயப்படாதே, குழந்தாய், நான் கவலையால் வேதனைப்படுகிறேன்! எனக்குத் தெரியும், வசுலா, இயேசுவின் வேலைகளை நீ ஏற்றுக் கொள்வாயா? ஏற்றுக் கொள்கிறேன்.... வசுலா, நான் உனக்காக ஜெபித்திருக்கிறேன், அகாப்பி மௌ, குறிப்பு: 'அகாப்பி மௌ' என்பதற்குக் கிரேக்க மொழியில் என் அன்புக்குரியவளே என்பது பொருள். பொறுமையாய் இரு; இயேசுவின் மீது சாய்ந்துகொள்; நான் இயேசுவிடம் ஜெபித்தேன். என் மீது சாய்ந்துகொள்; உன் செய்தியைப் படித்துப் பார்க்காமலே அதை ஒடுக்கி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். பயப்படாதே, என்னை நேசி; உன் ஆத்துமத்தைச் சுத்திகரிப்பது என்னை மகிமைப்படுத்துகிறது, வா, நாம் போவோம்; நாம் நாங்கள்... நினைவில் வை, வேதனைப்படாதே; இயேசு நேற்று என்னை ஞாயிறு திருப்பலிக்குக் கூட்டிச் சென்றார். என்னால் மற்றவர்களைப் போல சரியான முறையில் திருப்பலியில் பங்கு கொள்ள முடியவில்லை. ஏனெனில் பூசை பாடல்களையும் அது நிறைவேற்றப்படும் முறையையும் பற்றி எனக்கு யாரும் ஒருபோதும் கற்றுத் தந்ததில்லை. நான் எப்போதும் மற்றவர்களை விட ஒருபடி பின்தங்கி இருக்கிறேன்; ஆனாலும், இயேசு அங்கே இருக்கிறார். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியும். அந்த அப்பம் ஆறுதல் தருவதாக உணர்ந்தேன். மே 18, 1987. இயேசு என்னிடம் கேட்டுக்கொண்டது போல, 6.30 மணிக்கு நான் திவ்ய நன்மை வாங்க சென்றேன். அப்பொழுது இயேசு என்னிடம் பேசத் தொடங்கினார். நான் திவ்ய அப்பத்தைப் பெற்றுக்கொண்டேன். என் வாயில் - அது சிதைக்கப்பட்டதும், கசையால் அடிக்கப்பட்டதால் உடலிலிருந்து பீய்ந்து வந்ததுமாகிய - மாம்சத் துண்டைப் போல் இருந்தது. குறிப்பு: திவ்விய நன்மை என்பது நாம் உட்கொள்ளும் சாதாரண அப்பமல்ல. மாறாக, அது உண்மையாகவே நாம் வாங்குகிற கிறிஸ்துவின் திருச்சரீரமாக இருக்கிறது என்று இயேசு எனக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார். நேற்று அப்பத்தை வித்தியாசமாக நான் உணர்ந்தது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இன்று அது வேறு வகையாக இருக்கிறது. இயேசு வேறு வேறான எண்ணங்களை எனக்கு தந்து கொண்டிருந்தார் என்று எனக்கு தோன்றியது. இயேசுவா? நான்தான்; என்னை நேசி, என் அருகில் வா; ஒவ்வொரு தடவை நீ என்னை உட்கொள்ளும் போதும், நான் உனக்கு வேறு வேறான பாதிப்புகளைத் தருவேன்; வசுலா, நீ என்னிடமிருந்து தொலைவாய் இருக்கும்போது என்னைத் துயரப்படுத்துகிறாய்; இது உண்மைதான். சில சமயங்களில் சந்தேக 'அலை' என்னை மூடும்போது, அது அவர் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அவரோடு பேசவோ, அவரைப் பார்க்கவோ மறுத்து விடுகிறேன். அவருடைய உருவத்தைத் தவிர்க்கிறேன். அவரோடு பேசுவதைத் தவிர்க்கிறேன். அவர் எனக்குக் கற்பித்த எல்லாவற்றையும் தவிர்க்கிறேன். என் கற்பனைதான் என்னை ஏமாற்றிவிட்டது என்று என்னை நானே உறுதிப்படுத்திக் கொள்ள முயல்கிறேன். அன்பே, நீ என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறாய்; நீ என்னைத் தடுக்கும் போதும், எனக்கு வெகுதூரமாக இருப்பதாகத் தோன்றும் போதும், என்னை நீ நோகச் செய்கிறாய்; இது எல்லாவற்றிற்கும் பின்னால் பசாசு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்; அவன் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறான்; நான் உனக்குத் தந்துள்ள எல்லா வரப்பிரசாதங்களும் உன் கற்பனை மட்டுமே என்று உன்னை நம்ப செய்ய விரும்புகிறான்; நீ என் பரலோகப் போதனைகள் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்; அவன் தன்னிடம் மீண்டும் உன்னை இழுத்துக்கொள்ள விரும்புகிறான்; நீ என்னிடமிருந்து வெகுதூரத்தில் இருப்பதாகத் தோன்றும் பொழுது, நான் பயப்படுகிறேன்; உனக்காகப் பயப்படுகிறேன்; ஓர் ஆயன் தன் மந்தையைச் சேர்ந்த ஓர் ஆடு வழிதவறி விட்டது என்று காணும்போது, அவன் வெறுமனே உட்கார்ந்திருப்பானா? ஒரு நல்ல ஆயன் அதனிடம் விரைந்து போய், அதைத் தூக்கிக்கொண்டு, அதைத் திரும்பக் கொண்டு வருவான்; நீ வழிதப்பி அலைவதை காணும்போது, நான் காத்திருக்க மாட்டேன்; நான் உன்னிடம் விரைந்து வந்து, உன்னைத் தூக்கிக் கொள்வேன்; நான் உன்னை எனக்கு நெருக்கமாக கொண்டு வருவேன்; சிறியவளே, நீ குளிர்ந்திருக்கும் போது, நான் உன்னை என் மேலாடையால் மூடுவேன்; நான் உனக்கு உணவளித்து, நீ வேதனைக்கு உள்ளாய் இருக்கும்போது, என் இருதயத்திற்கு நெருக்கமாக உன்னைத் தூக்கிக் கொள்வேன்; உனக்காக நான் என்னதான் செய்ய மாட்டேன்? இயேசுவா? நான்தான்; இந்த எல்லா வரப்பிரசாதங்களும் எனக்கு எதற்காக? ஏன்? நான் விரும்புகிறவர்களுக்குக் கொடுக்க என்னைச் சுதந்திரமாக விடு; ஆனாலும், நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை. வசுலா, நீ என்னை ஏற்றுக்கொள்வாய், நான் உன்னைப் பயன்படுத்த விடு; நான் உன்னை விடுவிப்பேன் என்று உனக்குச் சொல்லவில்லையா? எனக்கு புரியவில்லை. நான் அநேக ஆன்மாக்களை அவர்களுடைய சங்கிலிகளிலிருந்து, தீமையின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்க விரும்புகிறேன்; உன்னை ஒரு கருவியாக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்; என் வேலைகளைத் தவறாக புரிந்து கொள்ளாதே; என் விண்ணப்பம் உனக்காக மட்டுமல்ல; என் சமாதானம் மற்றும் நேசத்தின் விண்ணப்பம் மனுக்குலம் முழுவதற்குமானது! சரி, ஆண்டவரே, என் நண்பர்கள் இதைப்பற்றி அறிய வரும்போது, நான் சற்று அசௌகரியமாக உணர்கிறேன், அதாவது, அவர்களில் சிலர் என்னை பார்த்து, "நீ சலுகை பெற்றவளாய் இருக்கிறாய்" என்று சொல்லும்போது, நான் அசௌகரியமாக உணர்கிறேன். மிக மோசமாக உணர்கிறேன். மகளே, உன் பரிதாப நிலையின் காரணமாக தேர்ந்து கொள்ளப்பட்டதற்காக, நீ மோசமாக உணர்வாய்; உன் தகுதிகளின் காரணமாக, நான் உன்னை தேர்ந்து கொள்ளவில்லை; உன் தகுதிகள் என்று ஒன்றுமில்லை என்றும், ஆண்டவருடைய திருவாய் நின்று வருவதெல்லாம் சத்தியம் மட்டுமே என்றும், நான் ஏற்கனவே உனக்குக் கூறியிருக்கிறேன்; அடிக்கடி வா, என்னிடம் மனஸ்தாபப்படு; என் மற்ற குழந்தைகளை விட, உனக்கு நான் அதிகமாக சலுகை செய்யவில்லை என்பதை நினைவில் வை; எனக்குத் தெரியும், இயேசுவே. அதனால்தான் நான் விரும்பும் போதெல்லாம் உம்மைக் கூப்பிடுகிற இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்கு தருவது பற்றி நான் தர்ம சங்கடப்படுகிறேன். வசுலா, வசுலா, அனைவரிலும் அதிக ஈனமானவர்களுக்கும் கூட நான் கொடுக்கிறேன்; என் இருதயம் எப்படி இரக்கம் மற்றும் மன்னிப்பின் பாதாளமாக இருக்கிறது என்பதைக் காண்பார்களாக; நான் மரித்தோரையும் கூட எப்படி உயிரோடு எழுப்புகிறேன் என்பதை உன் நண்பர்கள் காண்பார்களாக; என்னை மறுதலித்தவர்களையும் கூட நான் எப்படி நேசிக்கிறேன் என்பதை அவர்கள் காண்பார்களாக; இயேசுவா? நான்தான், அன்பே; என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னை நேசிப்பதாகச் சொல்; நான் உம்மை நேசிக்கிறேன், அது உமக்கு தெரியும். மகளே, உன் இழிந்த நிலையையும் மீறி நான் உன்னை நேசிக்கிறேன்; என்னோடு பேச நினைவுகொள்; நான் உன் மணவாளராக இருக்கிறேன்; என்னோடு பகிர்ந்து கொள், என்னைக் காணும்போது, என்னைப் பார்த்துப் புன்னகைப்பாயாக; ஆம், இயேசுவே. நான் உம்மோடு இருப்பதும் கூட உம்மை நோகச் செய்கிறது என்று நான் உணர்கிறேன். மீண்டும் மீண்டும் இதையே நான் சொல்கிறேன். என்னைப் பொறுத்துக் கொள்ள உம்மால் எப்படி முடிகிறது...? நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன்; என்னை உணர்ந்து பார், என் கண்களுக்குள், குறிப்பு: நான் அவரைப் பார்த்தேன். அவருடைய கண்கள் தீவிரமானவையாக, ஆனால் முழு அன்பால் நிறைந்தவையாக இருந்தன;
மகளே, நான் உன் பரிசுத்த பிதா என்பதை நினைவு கூர்வாயாக; நாம் இப்போது போவோம்;