வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 30. ஏப்ரல் 27, 1987. வசுலா, ஆண்டவராகிய நான் உன் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்; இயேசு அங்கே புன்னகைத்துக் கொண்டும், தமது தோற்றத்தை நான் உணரச் செய்து கொண்டும் இருந்தார். அவர் தமது இரு கரங்களாலும் தமது மேற்போர்வையைப் பிடித்துக் கொண்டிருந்தார். அதை விலக்கித் திறந்து, தமது இருதயத்தை எனக்குக் காட்டினார். அவருடைய நெஞ்சம் ஒளி பொருந்தியதாய் இருந்தது. என் இருதயத்திற்குள் பிரவேசி, அதை ஊடுருவு, அது உன்னை மூடிக்கொள்ளவிடு; என் இருதயம் உன் இருதயத்தைப் பரவசப்படுத்தட்டும், அதற்குத் தீமூட்டி, அது என் சமாதானத்தையும், நேசத்தையும் பிரதிபலித்தபடி சுடர் விட்டெரியவிடு; வா, நாம் ஒன்றாய் இருப்போம்; உன் பரிசுத்த நண்பராக நாம் இருக்கவிடு; நீ சித்தமாய் இருக்கிறாயா, மகளே? அவரை என்னால் அணுக முடியாது என்று நான் உணர்கிறேன். அவரை அணுக நான் யார்? நான் எவ்வளவு தகுதியற்றவள் என்பதை நான் உணர்ந்தேன். நன்றியற்ற பாவிகளின் சிறு கூட்டமாகிய நாம் எவ்வாறு கடவுளுடன் பேச அனுமதிக்கப்பட முடியும்? நன்மைகளைக் கேட்பதோ, உரையாடுவதோ ஒருபுறம் இருக்கட்டும். நாம் எவ்வளவு அருவருப்புக்குரியவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும் இருக்கிறோம் என்றால், இது நான் நோய்வாய்ப்பட்டிருப்பது போல் உணரச் செய்கிறது. என் வாய் மீது ஒட்டு நாடா போட நினைக்கிறேன். நான் அவரது பிரசன்னத்தில் இருந்தபோது, அந்த பிரசன்னத்தின் மீது எனக்குள்ள மரியாதையின் காரணமாக, என் மனதைக் கொண்டு அவருக்கும் எனக்கும் இடையே ஒரு திரையை இட்டு வைத்தேன். மகளே, என்ன செய்துவிட்டாய்? குறிப்பு: இயேசு அதிர்ச்சி அடைந்தவராக தோன்றினார். ஏன் மகளே, ஏன்? உமக்கு மரியாதை தர, ஆண்டவரே. நீ உண்ண வேண்டும் என நான் விரும்புகிறேன்; அவருடைய கரத்தில் அப்பம் இருப்பதை நான் பார்த்தேன். என் அப்பத்தை எடுத்துக்கொள், சிறியவளே. என் அப்பத்தை எடுத்துக்கொள்ள இந்தத் திரையை நீ அகற்ற வேண்டியிருக்கும், வா; நான் இந்தத் தடுப்பை எடுத்து விடுகிறேன்.... இதோ, என் அப்பத்தை எடுத்துக்கொள், நெருங்கி வா; நான் நெருங்கிச் சென்றேன்; அவருடைய கரத்திலிருந்து அவரது அப்பத்தை நான் எடுத்துக்கொண்டேன். உனக்கு உணவளிப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை நீ உணர்கிறாயா? இயேசு அன்பு நிறைந்தவராகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். என் மகிழ்ச்சியை உன்னால் உணர முடிகிறதா, வசுலா? உன் பலவீனங்களையும், உன் பரிதாப நிலையையும் நான் என் பலத்திலும், என் இரக்கத்திலும் நிர்மூலமாக்கி விடும்படி, அவற்றை என்னிடம் கொண்டுவா; சின்னப் புறாவே, சுதந்திரமாகப் பற, ஆனாலும் எப்போதும் என்னிடம் திரும்பி வந்து, என் அப்பத்தைப் பெற்றுக்கொள், நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே. இதற்குப் பின், ஒரு நாள் முழுவதும் அவருடைய அன்பு என் மீது இருந்ததை நான் உணர்ந்தேன். இதை நான் என்னவென்று அழைப்பேன்? பரவச நிலை என்றா? இப்படி இருப்பதன் மூலம் நான் வழக்கத்தை விடவும் அதிகமாக அவருடைய பிரசன்னத்தை உணர்ந்தேன். பிற்பாடு: நாம் ஊடுருவிச் சென்ற பரிசுத்த தேவாலயத்தை நீ கண்டிருக்கிறாய், என் பரிசுத்த தேவாலயம் எப்படி என் செராபின்களால் காவல் காக்கப்படுகிறது என்பதை உன் கண்கள் காண நான் அனுமதித்தேன்; இன்று என் பரிசுத்த தேவாலயத்திற்குள் நான் எதைக் கொண்டிருக்கிறேன் என்று நான் காட்டுவேன்; என் பரிசுத்த எழுத்துக்களின் மீது வீசப்படுகிற இந்த பலமான ஒளிக்கதிரை உன்னால் காண முடிகிறதா? ஆம், ஆண்டவரே! இவை நான் உன்னைப் படைப்பதற்கு முன்பே என்னால் எழுதப்பட்ட மிகப் பரிசுத்த எழுத்துகளாக இருக்கின்றன; என் பரிசுத்த புத்தகம் என் மோட்சங்கள் மற்றும் என் முழுமையான படைப்பு ஆகியவற்றின் இரகசியங்களையும், திறவுகோல்களையும் தன்னில் கொண்டுள்ளது; என் பரிசுத்த புத்தகத்துக்கு அருகில், என் பரிசுத்த எழுத்துக்களை ஆர்வத்தோடு காவல் காக்கிற இரண்டு அதிதூதர்களை நான் வைத்திருக்கிறேன்; வா, நான் இன்னும் அதிகமாக என் மகிமையை உனக்குக் காட்டுவேன், சிறியவளே; கடவுள் என்னை ஓரிடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே நான் மன அமைதியற்றவளாக உணர்ந்தேன். இந்த நெருப்பு மலையைக் காண்கிறாயா? அது அழகானதாக, ஆனால் அச்சம் ஊட்டுவதாகத் தோன்றியது. அதன் பக்கவாட்டிலிருந்து அதன் இரண்டு ஆறுகள் பாய்கின்றன, அவை முழுவதும் நெருப்பால் ஆனவை; அது பாய்ந்தோடும் எரிமலைக் குழம்பு போல, ஆனால் அதைவிடத் தெளிவான சிவப்பு நிறமாகத் தோன்றியது. ஆண்டவராகிய நான், என் தீர்வையின் நாளில், தீய ஆன்மாக்களை நல்ல ஆன்மாக்களிடமிருந்து பிரிப்பேன்; அதன்பின், சாத்தானைப் பின் சென்றவர்கள் எல்லோரும் அந்த இரண்டு நெருப்பாறுகளில் வீசியெறியப்படுவார்கள்; இவ்வாறு, நீதிமான்களின் கண்களுக்கு முன்பாகவே அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; வசுலா, உன் கண்கள் என் மோட்சங்களில் இன்னும் அதிகமானவற்றைக் காண நான் அனுமதிப்பேன், ஏனெனில் அங்கே என் பரிசுத்த தேவாலயத்திற்கு பின்னால் இன்னும் அதிகமானவை இருக்கின்றன; படைப்பே, என் சித்தம் செய்யப்படுவதாக, ஏனெனில் நான் சர்வேசுரனாக, யாவே சாபோவத்தாக இருக்கிறேன், உன்னில் சுதந்திரமாக செயல்பட என்னை அனுமதி; நான் என் இந்த வேலையில் முழுமை அடையும் வரையில் நாம் ஒன்றாகச் சேர்ந்து பணி செய்வோம், நான் அதைச் செய்ததும், என் பரிசுத்த புத்தகத்தோடு மீண்டும் வந்து, அதில் நீ எழுத இருக்கும் ஒரு பகுதியை நீ வாசிக்க அனுமதிப்பேன்; இவ்வாறு, என் சமாதானம் மற்றும் நேசத்தின் செய்தியை நான் முத்திரையிடுவேன்; நடு இரவில் சிலுவையிலிருந்து வந்த இயேசுவின் உரத்த கூக்குரலால் நான் எழுப்பப்பட்டேன். அது கடும் வேதனையும், துன்பமும், வலியும், துக்கமும், கசப்பும் நிரம்பியதாக இருந்தது. அது ஒரு மிகப் பலமான முனகலைப் போல் ஒலித்தது! நீடித்த முனகலாக. ஏப்ரல் 29, 1987, மறுநாள் காலையில். நான் ஆண்டவராகிய இயேசு; நீ என் கூக்குரலைக் கேட்டாய், அது நான்தான்; அது உன்னை எழுப்பியது, குறிப்பு: அது உன்னை எழுப்பியது என்ற வார்த்தைகள் உருவகமானவையா? நான் என் சிலுவையின் மீதிருந்து பலத்த குரல் எழுப்பினேன்; அது நான் என் மாம்சத்தில் இருந்தபோது, நான் எழுப்பிய என் கடைசி பலத்த கூக்குரலாக இருந்தது, அது என் ஆத்துமத்தின் உள்ளாழங்களிலிருந்து எதிரொலித்து, துன்பங்களும், வலிகளும், கசப்பும் நிறைந்த கூக்குரலாக இருந்தது; அது மோட்சத்தில் உள்ள சிகரங்களை ஊடுருவியது; அது பூமியின் அஸ்திவாரங்களை அசைத்து, தேவாலயத்தின் திரைச்சீலையைக் கிழித்தது போல, என்னை நேசித்தவர்களின் இதயங்களைப் பாதியாகக் கிழித்தது; அது மரித்தோரை அவர்களது கல்லறைகளின் மீதிருந்த மண்ணை அகற்றி அவர்களை எழுப்பியது போல, தீமையை அழித்து, என்னைப் பிரமாணிக்கமாகப் பின் சென்றவர்களை எழுப்பியது; பெரும் இடிமுழக்கம் மேலே உள்ள வானங்களையே கூட அசைத்தது; ஒவ்வொரு சம்மனசும் நடுங்கியபடி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, முழு மௌனத்தில் என்னை ஆராதித்தனர்; என் அருகில் நின்று கொண்டிருந்த என் திருமாதா, என் கூக்குரலைக் கேட்டு, முழங்கால்களில் விழுந்தார்கள், அவர்களது திருமுகம் கண்ணீரால் மூடப்பட்டிருந்தது, அவர்கள் அந்த எனது கடைசிக் கூக்குரலைத் தன் ஜீவியத்தின் கடைசி உறக்கத்தின் நாள் வரையிலும் தன்னோடு சுமந்து கொண்டிருந்தார்கள்; அவர்கள் துன்பப்பட்டார்கள்... நான் கசப்புற்றிருக்கிறேன்; துர்குணம், சட்டத்திற்கு உட்படாமை, மற்றும் சுய கர்வம் என்பன போன்ற உலகத்தின் அநேக அக்கிரமங்களால் இன்னும் துன்பப்படுகிறேன்; என் கூக்குரல் நாளுக்கு நாள் அதிக சத்தமானதாக வளர்ந்து கொண்டிருக்கிறது; நான் என் சிலுவையில் தனியாக விடப்பட்டேன், என் தோள்களின் மீது உலகத்தின் பாவங்களைச் சுமக்கும்படி தனியாக, துன்பப்படும்படியும் தனியாக மரிக்கும்படியும் நான் தனியாக விடப்பட்டேன், என் இரத்தத்தைச் சிந்தினேன், அது உலகம் முழுவதையும் மூடி, என் நேசர்களாகிய உங்களை இரட்சித்தது; அதே கூக்குரல் இப்போது பூமியின் மீது கடந்த காலத்தின் எதிரொலி போல் இருக்கிறது, நான் கடந்த காலத்தின் நிழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா? என் பழி வீணானதாய் இருந்ததா? அப்படியானால், சிலுவையிலிருந்து நான் எழுப்பிய கூக்குரலைக் கேட்காமல் இருக்க உங்களால் எப்படி முடிகிறது? நீங்கள் ஏன் உங்கள் காதுகளை மூடிக்கொண்டு, அதைப் புறக்கணிக்கிறீர்கள்? ஆண்டவரே, இந்தச் செய்தி யாருக்காக? என் கூக்குரலைக் கேட்கச் செவிகள் உள்ள எல்லோருக்காகவும்; அவர் தன்னந்தனியாக எவ்வளவு துன்பப்பட்டார் என்றும், இன்னமும் எப்படித் துன்பப்படுகிறார் என்றும் அறிந்து, நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். என் தேவனே, ஏப்ரல் 23 தேதியிட்ட உமது செய்தியில் நான் எப்படி இருக்க வேண்டும் என நீர் விரும்புகிறீரோ அப்படியே, அதாவது உம்முடைய பலியாக, உம்முடைய இலக்காக இருக்கச் சம்மதிக்கிறேன். உமக்காக உம் சிலுவையைச் சுமக்க என்னை அனுமதியும். நான் உமக்கு இளைப்பாற்றித் தருவேனாக. நான் உம்மைத் தேற்றுவேனாக. நான் தனியாக இல்லை. நான் முன்பு சொன்னது போல, நான் உம்முடன் இருக்கிறேன்! குறிப்பு: நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏப்ரல் 7, 1987, அன்று நான் கூறியதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன், சின்னப் புறாவே, என் சகல வரப்பிரசாதங்களையும் கொண்டு உனக்குச் சலுகை செய்தேன்; என் சொந்த விருப்பங்களுக்காகவும், என் சொந்த மகிமைக்காகவும் நான் உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; உனக்கென எதையும் வைத்துக் கொள்ளாதே, என் சொந்த விருப்பங்களில் மட்டும் கவனமாய் இரு; என்னை மகிமைப்படுத்து, எனக்காக வேலை செய், உன் துன்பங்களோடு, என் துன்பங்களையும் சேர்த்துக்கொள்; முழு உலகமும் உம்முடைய திருப்பெயரை வாழ்த்தி ஸ்துதிக்க வேண்டுமெனவும், அதன் குரல் உம்மை வந்தடைய வேண்டுமெனவும் நான் விரும்புகிறேன். ஐக்கியம் என் திருச்சபையைப் பலப்படுத்தும்; ஐக்கியம் என்னை மகிமைப்படுத்தும்; வசுலா, என்னை நேசி; நீர் விரும்புகிறபடி உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத் தாரும், ஆண்டவரே. கற்றுத் தருவேன்; நான் உன்னைக் கைவிடமாட்டேன்; என் சிலுவையைச் சுமப்பதில் சோர்ந்து போகாதே; நான் உன் அருகில் இருக்கிறேன், நீ அதைப் பகிர்ந்து கொள்கிறாய், நேசமே; பாரிசில் உயிர்ப்பு விழாவின் போது, ஆர்த்தடாக்ஸ் சபையின் பெரிய துறவற மடத்துத் தலைவர் செய்தியைப் பார்த்துவிட்டு, "இது ஒரு புதுமை" என்று சொன்னபோது, நானும் கூட, கடவுள் நமக்கு ஒரு செய்தி தருவது எவ்வளவு அற்புதமானது, எவ்வளவு அழகானது என்றுதான் நினைத்தேன், ஆனால் மறுபுறம், அது எவ்வளவு பயங்கரமானது. ஏனெனில், ஒரு பரிதாபத்திற்குரிய கடவுளை, ஒரு துன்புறும் கடவுளை அது காட்டுகிறது. கடவுள் கடும் அவஸ்தையில், மகிழ்ச்சியற்றவராகவும், அநேகரால் கைவிடப்பட்டவராகவும் ஒரு செய்தியைத் தருகிறார். இது ஒரு சோகமான செய்தி. இயேசுவே, நான் கொஞ்சமாவது கற்றுக் கொள்கிறேனா? என் திருப்திக்காகக் கேட்கவில்லை, மாறாக, குறைந்தது எந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்பதையாவது தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். அதாவது, நான் கொஞ்சமாவது முன்னேறி இருக்கிறேனா என்றுதான் கேட்கிறேன்! வசுலா, இயேசுவாகிய நான் உனக்கு முன்பாக இருக்கிறேன், நீ உண்மையாகவே வளர்கிறாய்; நான் மரித்தோரிடமிருந்து உன்னை எழுப்பி, உனக்கு உணவளித்தேன்; நீ என் அப்பத்தை உண்கிறாய்; என் ஒளி உன்மீது பிரகாசிக்கிறது; நான் உன் ஆசிரியராக இருக்கிறேன். நீ ஞானத்திடமிருந்து கற்றுக் கொள்கிறாய்; இயேசுவே, அநேக தடவைகள் சிறியவளாக இருக்கும்படியும், ஒன்றுமில்லாமையாகவே நிலைத்திருக்கும்படியும் நீர் எனக்கு நினைவூட்டுகிறீர். இப்போதோ, நான் வளர்ந்திருக்கிறேன் என்று சொல்கிறீரே? ஆம், நீ ஆவியிலும், நேசத்திலும், எளிமையிலும், தாழ்ச்சியிலும், பிரமாணிக்கத்தக்கத்திலும் வளர வேண்டும்; எல்லாப் புண்ணியங்களும் உன்னில் வளர்வனவாக; இருந்தாலும், வீண் பெருமையிலும், துர்குணத்திலும், என் கண்களில் எல்லாவித அருவருப்பான, வெறுப்புக்குரிய பழக்க வழக்கங்களிலும் நீ ஒன்றுமில்லாமையாக வேண்டும்; நீ உத்தமமானவளாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்;
ஏப்ரல் 30, 1987, இயேசுவே, இறந்து கொண்டிருக்கும் ஓர் ஆளுக்காக ஒரு சிறப்புச் செய்தி தர நீர் சித்தமாய் இருக்கிறீரா என்று இன்று நான் உம்மிடம் கேட்பேன். இறந்து கொண்டிருப்பவளா?
குறிப்பு: என் வார்த்தைகளைக் கேட்டு இயேசு சற்று ஆச்சரியப்பட்டவர் போலத் தோன்றினார். அவள் இறந்து கொண்டிருக்கவில்லை, அவளது ஆன்மா விடுவிக்கப்படும், அவள் விடுவிக்கப்பட்டு, உயிர் வாழ்வாள்! அவள் என்னிடம் வருவாள், அவளுடைய ஆன்மா சுதந்திரமானதாகும்; எழுது, நான் ஒவ்வொரு ஆத்துமத்தையும் எப்படித் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களிடம் கூறு; நான் எப்படி பசித்தவர்களுக்கு உணவளிக்கிறேன், எப்படி நோயாளிகளைக் குணமாக்குகிறேன் என்று கூறு; நானே வாழ்வு மற்றும் உயிர்ப்பின் உயிர் தரும் மருந்தாக இருக்கிறேன் என்று அவள் அறிந்து கொள்வாளாக; இயேசு ஒரு தனி காகிதத்தில் இந்தப் பெண்ணுக்காக ஒரு செய்தியை என்னிடம் தந்தார். மே 1, 1987. கடவுளாகிய நான் என் வேலைகளை நிறைவேற்ற உனக்கு உதவும்படி போதுமான பலத்தை உனக்குத் தருவேன்; என்னை ஒருபோதும் மறுதலிக்காதே; உன் சொந்த விருப்பங்களை அல்ல, ஆனால் என் விருப்பங்களையேத் தேடு; உன்னைப் பயன்படுத்தவும், நான் உன்னை விடுவிக்க வரும் வரையிலும், உன் வழியாக பூமியின் மீது இறங்கி, என் வார்த்தையை வெளிப்படுத்தவும் எனக்கு சுதந்திரம் கொடு; வசுலா, நான் உன் முடிவை முன்னறிவிப்பேன்; எனது தெரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாக்கள் அனைவரும் இந்த நேரத்தைப் பற்றி ஒருபோதும் பயந்ததில்லை; என் பரம ரகசியங்களில் இன்னும் ஐந்தை நான் உனக்கு வெளிப்படுத்துவேன், இப்போது வந்து என் ஐந்து காயங்களையும் முத்தமிடு; நான் முத்தமிட்டேன். முதலில் அவரது கரங்களையும், அதன்பின் அவரது பாதங்களையும், அவரது விலாவையும். ஆயனும் தமது ஐந்து திருக்காயங்களோடு தொடர்புள்ள விதத்தில் ஐந்து பரம ரகசியங்கள் என்று இயேசு எவற்றைக் குறிப்பிடுகிறார் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் சரியான நேரம் வரும்போது, அவரே எனக்கு அதை அறிவிப்பார் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, நான் கேட்காமல் இருக்கக் கற்றுக்கொண்டேன். வசுலா, நீ இன்னும் சற்று அதிகமாக வளர்ந்த பிறகு, நான் என் இரகசியங்களை உன்னிடம் சொல்வேன்; குறிப்பு: வரும் காலங்களில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இயேசுவின் ஐந்து காயங்களுக்குள் ஊடுருவிச் செல்ல நான் கற்றுக்கொண்டேன். இவையே அந்த ஐந்து பரம இரகசியங்கள் ஆகும். என் உபகாரங்களை மன்றாடிக் கேள், அப்போது நான் அவற்றைத் தந்தருள்வேன்; என் தேவனும் பிதாவுமானவரே, நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். அது ஒரு சில பிரிவுகளைக் கொண்டது; அதுவும் விருப்பங்களுக்காகவும், மகிமைக்காகவுமே; உம் செய்தி உலகத்தின் எல்லைகளைச் சென்றடைந்து, அநேக இதயங்களை உம்மிடம் இழுத்து வருவதாக, உமது சித்தம் செய்யப்படுவதாக, உம்முடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுத்தப்படுவதாக, தீமை தன் பிடியை இழந்து, என்றென்றைக்கும் நசுக்கப்படுவதாக. இதுவே நான் இப்போது விரும்புவது, நீர் ஒரு வேண்டுதலுக்காக என் குரலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும், அதுவும் மகிமைக்காகவே தவிர, வேறு எதற்காகவும் இருக்காது. என்னிடமிருந்து கேட்கப்படும் எந்த ஒரு உபகாரமும் உமது மகிமைக்காகவே இருக்கும். என்னிடமிருந்து வரும் உதவிக்கான எந்த ஒரு கூக்குரலும், சர்வ வல்லவ தேவனாகிய உம் சொந்த விருப்பங்களுக்காகவே. எனக்காக எதுவும் இல்லை. நான் கேட்கும் பலம் முழுவதும், எல்லாம் வல்ல தேவனே, உம் சொந்த விருப்பங்களுக்காகவே. சிறியவளே, உன் பாதங்களை என் பாதச் சுவடுக்குள் வைத்து என்னைப் பின் செல். இது நான்தான், இயேசு. இயேசுவா? நான்தான், அன்பே, என்னை மணவாளர் என்றும், தந்தை என்றும் கூட அழை; நான் உன்னை நேசிக்கிறேன்; வா, நாம் பணியாற்றுவோம், குறிப்பு: இயேசு இதையெல்லாம் எத்தகைய கருணையோடும், அமைதியோடும் சொன்னார் என்றால், கடவுள் மட்டுமே இம்முறையில் பேச முடியும். என்னைப் பக்திப் பற்றுதலோடு நேசித்து, என்னைக் காயப்படுத்தும் மற்றவர்களுக்காகப் பரிகாரம் செய்; என் தேவனே, நானே பாவத்தோடு கூடிய கெட்ட பெண்ணாக, மற்ற எல்லோரும் இருக்கிற அதே நிலையில் இருக்கிறேன் என்றால், நான் எப்படி ஒரு புறாவாக, 'தீய உலகத்திற்கு' மேலாக பறந்து செல்ல முடியும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீர் சொன்னது போல, நான் 'எல்லாவற்றையும் காணவும்', எல்லாவற்றையும் கேட்கவும் முடியாதவளாக இருப்பேன். ஏனெனில், உம்மைக் காயப்படுத்துபவர்களை விட நான் நல்லவள் இல்லை....
வசுலா, என்னில் இரு; பரிசுத்தத்தனத்தை அடையப் பாடுபடு; நான் அளிக்கும் என் பரிசுத்தத்தனத்தைப் பெற்றுக்கொள்; என்னிடமிருந்து முகந்துகொள், என்னிடமிருந்து உறிஞ்சிக் குடி, என்னைக் கிரகித்துக் கொள்; நான் அளவற்ற செல்வமாக இருக்கிறேன், ஒவ்வொரு ஆன்மாவும் என்னிடமிருந்து முகந்து கொள்ள முடியும்; எனக்கு நீர் இவ்வளவு அதிகமான வரப்பிரசாதங்களைத் தந்திருக்க, நான் வீணாகிப் போகக்கூடும், தீமை எளிதாக என்னைச் சோதிக்க முடியும்! நான் எப்போதும் உன் பரிதாப நிலையையும், உன் கடந்த காலத்தின் நிழல்களையும் உனக்கு நினைவுபடுத்துகிறேன்; நீ எப்படி என்னை ஆசித்தாய், நான் உன்னை நெருங்கி வந்தபோது, எப்படி என் மாபெரும் நேசத்தை நிராகரித்தாய் என்பது பற்றியும், நான் எப்படி உன்னை மரித்தவளாக இருளில் இறந்தவர்களுக்கு மத்தியில் கண்டுபிடித்தேன் என்பதைப் பற்றியும், இரக்கம் மற்றும் நேசத்தின் காரணமாக நான் எப்படி உன்னை உயிர்ப்பித்து, என் நெஞ்சோடு உன்னைத் தூக்கி அணைத்துக் கொண்டேன் என்பது பற்றியும், நான் உனக்கு நினைவூட்டுவேன்; வா, நாம் ஜெபிப்போம், சொல்; "என் பிதாவே, நான் எங்கெல்லாம் செல்ல வேண்டுமென உம் சித்தம் விரும்புகிறதோ, அங்கெல்லாம் என்னை வழிநடத்தும், உம் ஒளியில் வாழ என்னை அனுமதியும். என் இதயம் பிரகாசிக்குமாறும், என்னை நெருங்கி வருவோரை வெப்பப்படுத்துமாறும், அதை வெப்பப்படுத்தும்; என் ஒன்றுமில்லாமையையும் மீறி, இந்த எல்லா வரப்பிரசாதங்களையும் எனக்குத் தருவதற்காக, உமது நாமம் வாழ்த்தப்படுவதாக, நீர் எனக்கு செய்துள்ள நன்மைக்காகவும், நீர் எனக்கு காட்டியுள்ள இரக்கத்திற்காகவும், உம் இருதயத்தின் அருகில் என்னை உயர்த்தியதற்காகவும், உம்முடைய திருநாமம் வாழ்த்தப்படுவதாக, ஆமென்." நாம் திரும்பவும் சொல்வோம்: நான் உனக்குத் தந்து கொண்டிருக்கிற எல்லா வரப்பிரசாதங்களும் என் சொந்த விருப்பங்களுக்காகவே; உனக்கென நீ எதையும் வைத்துக் கொள்ளாதே; என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு என்னை மகிமைப்படுத்து; உம்மை மகிமைப்படுத்த என்னால் இயல வேண்டும் என்றும், உலகமும் திருப்பெயரை வாழ்த்தி ஸ்துதிக்க வேண்டும் என்றும், அவர்களது ஜெபங்கள் தூபத்தைப் போல் எழும்பி, உம்மை வந்தடைய வேண்டும் என்றும், அவர்களது ஸ்துதி புகழ்ச்சிகள் உம் கதவில் ஒரு தட்டுதலைப் போல, மோட்சத்தில் எதிரொலிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நேசம் தீமையை வெற்றிக்கொள்ளும்; உன் முழு ஆன்மாவோடும், முழு மனதோடும் என்னை நேசி; நான் உனக்கு எல்லாமுமாக இருக்க விடு; ஆண்டவராகிய நான் இறுதிவரை உனக்குத் தேவையானதை தருவேன்; அப்படியானால், நான் ஒன்றுமில்லாமையாக இருக்கிறேன் என்றாலும், என்னை எடுத்துக்கொண்டு என்னை கொண்டு நீர் விரும்புவதைச் செய்யும். நான் உம்முடையவள். வா, இந்த முழு அர்ப்பணத்தின் வார்த்தைகளை கேட்டு, நான் எப்போதும் அக்களிப்பேனாக; நான் உன்னை நேசிக்கிறேன், மகளே; பிதாவே, நான் உம்மை நேசிக்கிறேன்.